Saturday 30 November 2013

ஜன்னல் ஓரம் ...
2012-ல் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆர்டினரி(Ordinary) படத்தை, ஜன்னலோரம் நின்று, பட்டும் படாமல் பார்த்துவிட்டு, தமிழில் முயற்சித்திருக்கிறார் கரு.பழனியப்பன். ஆர்டினரி படத்தின் ஜீவனே கதையோடு பயணிக்கும் நகைச்சுவைதான். அதில் மொத்தமாக கோட்டை விட்டுவிட்டு உப்பு சப்பில்லாத வெகு ஆர்டினரி படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

ஆர்டினரி கதைதான்.  பார்த்திபனும், விமலும் முறையே அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள். இவர்கள் தங்கியிருக்கும் பண்ணைக்காடு என்கிற கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேசின் மகளுக்கும்( மனிஷா யாதவ் ), விமலுக்கும் ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது.இது ஒருபுறமிருக்க, தன் நண்பனின் மகளை(பூர்ணா)த் தத்தெடுத்து வளர்த்து வரும் ராஜேஷ், அவரையே தன் மகனுக்கு மனம் முடிக்க எண்ணுகிறார்.

சூரத்தில் வேலைபார்க்கும் ராஜேசின் மகன்,திருமணத்திற்காக பண்ணைக்காட்டிற்கு வரும்பொழுது பார்த்திபன் & விமல் ஓட்டிவரும் பேருந்தில் அடிபட்டு இறந்துவிடுகிறார். துரதிஷ்டவசமாக அந்த பேருந்தை இயக்கிய 'நடத்துனர்' விமல் மீது கொலைப்பழி விழுந்து சிறைக்கு செல்கிறார். ஆனால் ராஜேசின் மகனை விமல் பேருந்து ஏற்றி கொல்லவில்லை என்பது பிற்பாடு தெரியவர,அவரை உண்மையிலேயே கொன்றது யார்..? எதற்காக கொன்றார் ..? என்பதற்கான பதில்தான் இறுதியில் சொல்லப்படும் ஒரேயொரு டிவிஸ்ட் .

அழுத்தமான கதையில்லைதான்.  வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே மலையாளத்தில் கல்லா கட்டியிருக்க வேண்டும். அதையே தமிழில் எடுக்கும்பொழுது நகைச்சுவைக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா...?.  ஒரு இடத்தில்கூட சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை இயக்குனர். திரைக்கதை -யிலும் எந்த சிரத்தையும் எடுத்தமாதிரி தெரியவில்லை. `வசனங்களிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

பார்த்திபன்,விமல், விதார்த், ரமணா, யுவராணி, ராஜேஷ், சிங்கம் புலி, சந்தானபாரதி என பெரிய பட்டாளமே இருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்தாது பெரும் குறை. அதிலும் பார்த்திபனுக்கு ஹீரோவுக்கு இணையான பாத்திரப்படைப்பிருந்தும் அவரது அக்மார்க் நக்கல் பெரிதாக இல்லை. படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறது அந்த அரசுப்பேருந்து. அக்கிராமத்திற்கு வரும் ஒரே பேருந்து என்பதால் அது அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம். அதற்காக சில கேரக்டர்கள் தொடர்ந்து அதே பஸ்ஸில் பயணிப்பதாகக் காட்டுகிறார்களே..அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா...? குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி.

பூர்ணாவை மைனா ரேஞ்சுக்கு காதலிப்பதாக விதார்த் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சியில் அவரைக் கொல்ல மனமில்லாமல்தான் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். அப்படியிருக்க, ஒரு காட்சியில் பூர்ணா சேலை மாற்றும்பொழுது ஜன்னல் வழியாக அவருக்குத் தெரியாமல் காமப் பார்வையோடு ரசிப்பது ஏன்..?

ராஜேசின் மகனை தாங்கள்தான் பேருந்தை ஏற்றி கொன்றுவிட்டதாக நினைக்கும் பார்த்திபனும் விமலும் அவரது 'பேக்'கை இவ்வளவு அலட்சியமாகவா வீட்டில் வைத்திருப்பார்கள்....?


பூர்ணாவை குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுத்து ராஜேஷ் வளர்ப்பதாக சொல்கிறார்கள். ராஜேசின் மகன், மகளோடு சிறு வயதிலிருந்தே உடன்பிறந்தவள் போலவே வளர்பவள் எப்படி ராஜேசின் மகனோடு காதல் கொண்டார்..? அதிலும் ராஜேசின் மகன் ஊருக்குக் கிளம்பும்போது பூர்ணாவோடு காதலில் ததும்பி வழிந்து கொஞ்சும் காட்சி ஓவராகத் தெரியவில்லையா...?

இடையில் வெள்ளைகார தம்பதி ஒன்று வருகிறது( ஒரிஜினலிலும் வருகிறார்கள்). எதற்காக வந்தார்கள்... பிறகு எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

விமல் தன் காதலை தெரியப்படுத்த,பத்து ரூபாய் நோட்டில் 'சம்மதமா' என்று எழுதி மனிஷா யாதவிடம் கொடுப்பார். அவரும் அடுத்தக் காட்சியிலேயே நேரடியாகவே 'சம்மதம்' என்று சொல்வார். ஆனால் இரண்டு காட்சிகள் கழித்து விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். என்னய்யா இது..?

ஒன்று, படம் நகைச்சுவையாக நகர வேண்டும், அல்லது சஸ்பென்ஸ் கலந்து விறுவிறுப்பாக செல்லவேண்டும். இரண்டுமே இல்லாத பட்சத்தில் இதுபோல குறைபாடுகள், இருக்கும் கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யத்தையும் கெடுத்துவிடுகிறது.

இவர்களின் பேருந்து பழுதடைந்துவிட, அதை சரிபார்க்கும் மெக்கானிக்காக சந்தானபாரதி வருகிறார். டூல் பாக்சை திறக்கிறார். உள்ளே குவார்ட்டரும், சைடு டிஷும். உடன் வந்த உதவியாளரை பேருந்தை சரிசெய்ய சொல்லிவிட்டு பார்த்திபனும் அவரும் நடு ரோட்டில் தண்ணியடிக்கிறார்கள். இது காமெடி சீனாம் .இதற்கு சிரிக்கவேண்டுமாம்... போங்க சார்...

படத்தில் ஆறுதலான சில விசயங்களில் பாடல்களும் ஒன்று. கரு பழனியப்பன்-வித்யாசாகர் கூட்டணி மீண்டும் கலக்கியிருக்கிறது. எல்லாப் பாடல்களும் முதல்முறைக் கேட்கும்பொழுதே ரசிக்க வைக்கிறது.

'பார்த்திபன் கனவு' கொடுத்த கரு. பழனியப்பனின் படைப்பா இது..? மனுஷ்ய புத்திரனை தொலைக்காட்சி விவாதமொன்றில் முதன்முதலில் திணறடித்து, புரட்டியெடுத்த அந்த கரு.பழனியப்பனா இவர்..?  என்னவோ போங்க சார்..!28 comments:

 1. என்ன தல நான் நாளைக்கு போகலான்னு இருந்தேன் யோசிக்க வட்சுட்டீங்களே

  ReplyDelete
  Replies
  1. நன்றி சக்கர கட்டி....மொக்கை எல்லாம் இல்லை பாஸ்... ஆனா சுவாரஸ்யமே இல்லை.

   Delete
 2. நடு நிலை நின்று விமர்சனம்,நன்று!நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி Yogarasa..

   Delete
 3. விமல் ஒரு படத்தில் இருந்தாலே சந்தேகமில்லாமல் அப்படத்தை நிராகரித்துவிடலாம் என்று நினைக்கிறேன்... நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரபா .... அவரின் சமீபத்திய படங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது .

   Delete
 4. மனுஷ்ய புத்திரனை தொலைக்காட்சி விவாதமொன்றில் முதன்முதலில் திணறடித்து, புரட்டியெடுத்த அந்த கரு.பழனியப்பனா இவர்..?

  எந்த டிவியில் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்... இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நீயா நானாவில். பார்க்காமல் விட்டிருந்தால் இந்த "லிங்கில்" சென்று காணலாம்.

   Delete
 5. விமல் பாவம்... என்னவோ போங்க...!

  ReplyDelete
 6. எல்லாம் சரி //சூரத்தில் வேலைபார்க்கும் ராஜேசின் மகன்,திருமணத்திற்காக பண்ணைக்காட்டிற்கு வரும்பொழுது பார்த்திபன் & விமல் ஓட்டிவரும் பேருந்தில் அடிபட்டு இறந்துவிடுகிறார்// இப்படி படத்தில் முக்கிய திருப்புமுனையை சொன்னால் படம் பார்க்காதவர்கள் பார்க்கும் போது சுவாரசியம் இருக்குமா நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ஏன் பாஸ் மலையாளத்தில் முழுதாக படம் பார்த்தீர்களா இல்லையா ... ?இதுதான் படத்தின் டிவிஸ்டா .... ?அவரை யார் உண்மையிலேயே கொன்றது என்பதுதானே படத்தில் இருக்கும் ஒரே ட்விஸ்ட் . படத்தின் மைய பிரச்சனையை சொல்லிவிட்டு அது எப்படித் தீர்த்தார்கள் என்பதை சொல்லாமல் விடுவதுதான் நேர்மையான விமர்சனம் என்பது என் புரிதல் . நீங்க சொல்வதுபோல எழுதவேண்டுமென்றால் , ஒரு ஊரில் பார்த்திபனும் விமலும் ட்ரைவர் கண்டக்டராக இருக்காங்க . அவங்க ஒரு பிரச்சனையில மாட்டிகிட்டாங்க . அது என்ன பிரச்சனை ... எப்படி தீர்த்தாங்க என்பதை வெண் திரையில் காண்க . அப்படினுதான் எழுத முடியும் . அப்படி எழுதினா அதுக்கு பேரு விமர்சனம் இல்ல . முன்னோட்டம்

   Delete
 7. நான் மலயாளம் மட்டும்தான் பார்த்தேன்..தமிழ் இன்னும் பார்க்கல்ல..எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது திரைக்கதையையும் குறை சொல்ல முடியல்ல.. உங்க பல கேள்விகள் சின்னபுள்ளத்தனமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. மலையாள ஒரிஜினலை நான் இங்கே குறைசொல்லவில்லை . அப்படி சொதப்பலான திரைக்கதையும் , சுவாரஸ்யமில்லாத காட்சியமைப்பும் இருந்தால் அங்கே பிளாக் பஸ்டர் மூவி ஆகியிருக்க முடியுமா ...? நீங்க கேட்டதுதான் சின்னப்புள்ளத்தனமா இருக்கு . அதிலும் தமிழில் எடுக்கும்போது ஈயடிச்சாம் காபி அடிக்காம கொஞ்சம் விருவிருப்புக்காக திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்ட வேண்டாமா ..? முதலில் தமிழ் வெர்சனை பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கவும் . ஹிந்தியில் எடுத்த நாயக் சரியில்லை என்றால் தமிழில் முதல்வன் சூப்பராக இருந்ததே என்பீர்களா ..?

   Delete
  2. //பூர்ணாவை மைனா ரேஞ்சுக்கு காதலிப்பதாக விதார்த் கேரக்டர் படைக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சியில் அவரைக் கொல்ல மனமில்லாமல்தான் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார்.//

   // இறுதியில் சொல்லப்படும் ஒரேயொரு டிவிஸ்ட் .//


   நீங்களே ஒரேயொரு டிவிஸ்ட் னு சொல்லீட்டு அதயும் சொல்லீட்டீங்களே ... என்னமோ போங்கஜி ...!

   Delete
  3. //ராஜேசின் மகனை தாங்கள்தான் பேருந்தை ஏற்றி கொன்றுவிட்டதாக நினைக்கும் பார்த்திபனும் விமலும் அவரது 'பேக்'கை இவ்வளவு அலட்சியமாகவா வீட்டில் வைத்திருப்பார்கள்....? //

   இது கேள்வி ...!

   Delete
  4. //நீங்களே ஒரேயொரு டிவிஸ்ட் னு சொல்லீட்டு அதயும் சொல்லீட்டீங்களே ... என்னமோ போங்கஜி ...!//

   ஒரு சில நெருடலான லாஜிக் மீறல்களை பற்றி சொல்லும்போது அது கிளைமாக்ஸ் அல்லது டிவிஸ்ட் என்று கூட பார்க்காமல் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இந்தப்படத்தை ஏற்கனவே நீங்கள் பார்த்ததால்தான் இந்ன் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்கிறது...இல்லைஎன்றால் இதைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்க மாட்டீர்கள்...

   ஜீவன்ஜி... ஒரு படத்தின் விமர்சனம் என்பது இரண்டு விதமாக எழுதப்பட வேண்டும்....

   1. படம் பார்க்காதவர்களுக்கான விமர்சனம்,

   2. படம் பார்த்தவர்களுக்கான விமர்சனம்.

   உதாரணமாக, நீங்கள் இந்தப் படத்தையே பார்க்கலைனு வச்சுக்கீங்க... என் விமர்சனம் முழுவதும் திரைக்கதை நல்லா இருக்கு , வசனம் நல்லா இருக்கு, அவர் சூப்பரா நடிச்சியிருக்காரு...பாட்டு சூப்பர்... கிளைமாக்ஸ் அதகளம்... டைரக்சன் அருமை... இப்படியே எழுதினேன்னு வச்சுக்கீங்க... உங்களுக்கு செம கடுப்பாகிடும்... முதல்ல இந்த படத்தோட கதை என்ன..? யாராரு என்னென்ன வேடத்தில நடிச்சிருக்காங்க...? கதை மூலம் என்ன சொல்ல வாராங்க..? இதை சொல்ல வேண்டாமா என்று உங்களுக்கு கோபம் வரும்...

   அடுத்தது இடண்டாவது கேஸ்... இப்ப நீங்க இந்தப் படத்தை பார்த்துட்டீங்க... என் விமர்சனம் முழுவதிலும் படத்தின் மொத்த கதையையும் ஆரம்பத்திலேருந்து சொன்னேன்னு வச்சுகீங்க... என்னங்க மொத்த கதையையும் சொல்றீங்க.... படத்தில என்னென்ன லாஜிக் மிஸ்டேக் இருக்கு, எந்தந்த இடத்தில இயக்குனர் சறுக்கியிருக்கிறார் ... படத்தில உள்ள குறைகள் இதைப்பத்தி எழுத வேண்டாமா என கேப்பீங்க...

   இப்ப யோசிச்சு பாருங்க.... இரண்டு தரப்பிலிருந்தும் என் விமர்சனத்தைப் படிப்பாங்க...நான் இரண்டையும் கலந்து கட்டிதான் எழுதமுடியும்...

   இன்னொரு விஷயத்தை லாஜிக்கா திங்க் பண்ணிப் பாருங்க... உண்மையிலேயே படம் பார்க்காம விமர்சனம் படிக்கிறவங்க கதைச்சுருக்கத்தை மட்டும் படிப்பாங்களே தவிர , லாஜிக் மிஸ்டேக் பற்றி படிக்க மாட்டாங்க.. ஏனெனில் அது அவர்களுக்கு புரியாது.

   அதே மாதிரி , படம் பார்த்தவங்க கதைச்சுருக்கத்தை படிக்க மாட்டாங்க.... என்ன குறை சொல்லப்பட்டிருக்கிறது...லாஜிக் மீறல் என்று எதை சொல்லியிருக்காங்க என்பதைத்தான் படிப்பாங்க... அதனால் படம் பார்த்த உங்களுக்கு ட்விஸ்ட் என்ன என்பது தரிந்தால் என்ன ... தெரியாமல் இருந்தால் என்ன...?

   so, ஒரு விமர்சனம் என்பது அவரவர்கள் ரசனைக்குட்பட்டது...
   Delete
  5. //so, ஒரு விமர்சனம் என்பது அவரவர்கள் ரசனைக்குட்பட்டது... // வாஸ்தவம் தான் ...!

   தமிழ் சினிமாவில் எப்படி நெறைய செண்டிமெண்ட்ஸ் இருக்கிறதோ போலவே விமர்சனங்களிலும் . திரைப்பட விமர்சனமென்றால் கதை விவரிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டுமென்று யார்தான் ஆரம்பித்தார்களோ ....?


   Delete
  6. சினிமா விமர்சனங்களுக்கு முன்னோடி என்று அலசிப் பார்த்தால் முதலில் ஞாபகம் வருவது 25 பைசா பாட்டுப் புத்தகம்தான்... :-) அவர்கள்தான் கிளைமாக்ஸ் வரை கதையை சொல்லிட்டு மீதியை வெண்திரையில் காண்க என சொல்வார்கள். அதைப் பின்பற்றி தான் தினத்தந்தியும் அவ்வாறே விமர்சன நடையை வைத்திருந்தது.

   மட்டுமில்லாமல் , ஒரு தனிப்பட்ட நபரை விமர்சிக்க வேண்டுமானால் முதலில் அவரின் கேரக்டரை சொல்லிவிட்டுதானே பிறகு விமர்சிப்பார்கள் . அப்போதுதான் அந்த விமர்சனம் எடுபடும். அதுபோலத்தான் சினிமா விமர்சனமும். ஒருவேளை கதைக் கருவிலே கோளாறு இருந்தால் கதையை சொல்லாமல் எப்படி விமர்சிக்க முடியும்..?

   Delete
 8. மலையாளக் கருவிலே கோளாறில்லை ,நம்ம கரு .பழனியப்பன் செய்த தமிழ் உருவில்தான் கோளாறு என்பது சரிதான் !
  த .ம 3

  ReplyDelete
 9. நன்றி பாஸ்..

  ReplyDelete
 10. //விமல் தன் காதலை தெரியப்படுத்த,பத்து ரூபாய் நோட்டில் 'சம்மதமா' என்று எழுதி மனிஷா யாதவிடம் கொடுப்பார். அவரும் அடுத்தக் காட்சியிலேயே நேரடியாகவே 'சம்மதம்' என்று சொல்வார். ஆனால் இரண்டு காட்சிகள் கழித்து விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். என்னய்யா இது..?//

  மணிஜி ...! மனீஷா சம்மதம் சொல்வது பாத்ரூமை உபயோகப்படுத்துவதற்குத்தான் ... காதலுக்கு அல்ல ... விமல் முனுமுனுப்பாரே கவனிக்கலையா ...?

  ReplyDelete
  Replies

  1. அவர் சிம்பாலிக்காக சொல்கிறார் என்பது என் புரிதல்... நிறைய சினிமாவில் பார்த்திருப்போமே... நாயகன் என்னை பிடித்திருக்கா என்று கேட்டால் உங்க பாட்டு பிடித்திருக்கு, நீங்கள் போட்ட சட்டை பிடித்திருக்கு என்று சொல்வாங்களே..அப்படித்தான் அவர் சொல்கிறார் என்று நான் நினைத்தான்.. ஏனெனில் விமல் திரும்பவும் கேட்பதற்கு முன்பாகவே, எச்சி டம்ளரை மாற்றிக் குடிப்பது மற்றும் ஒரு டூயட் எல்லாம் வரும்... இவ்வளவு நடந்த பிறகு மீண்டும் விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்

   Delete
  2. //அவர் சிம்பாலிக்காக சொல்கிறார் என்பது என் புரிதல்... //

   நீங்க சரியா புரிஞ்சு என்னஜி பண்றது ... விமல்ஜிக்கு புரியலையே .... :)

   //இவ்வளவு நடந்த பிறகு மீண்டும் விமல் அவரிடம்,'நான் சம்மதமானு கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லையே' என்பார். //

   இதெல்லாம்தானே காதலில் அழகு ...இதெல்லாம் காதல்ல சகஜம் ஜி ...!

   Delete
 11. //ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேசின் மகளுக்கும்( மனிஷா யாதவ் ), //

  ராஜேஷின் மகளா ...?அவருக்கு அப்பாவே இல்லையே படத்தில் ...


  //அதற்காக சில கேரக்டர்கள் தொடர்ந்து அதே பஸ்ஸில் பயணிப்பதாகக் காட்டுகிறார்களே..அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா...? குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி.//

  கி.மூ விற்கு வேலையே தண்ணியடிப்பது தானே ஜி .. அறிமுகக் காட்சிகளிலேயே சொல்லியிருப்பார்களே . அப்புறம் , அங்கிருப்பது ஒரே பேருந்துதான் அதன் மூலம்தானே அவர்கள் வேலைக்கு கீழே செல்ல முடியும் ....?  ReplyDelete
  Replies

  1. //ராஜேஷின் மகளா ...?அவருக்கு அப்பாவே இல்லையே படத்தில் ...//


   என்ன பாஸ் குழப்புறீங்க....... பூர்ணாவுக்குத்தான் அப்பா கிடையாது... மனிஷா யாதவுக்குமா அப்பா கிடையாது...? அப்போ ராஜேஷுக்கு ஒரே ஒரு பையன் மட்டுமா... ?

   Delete
 12. //அப்படியிருக்க, ஒரு காட்சியில் பூர்ணா சேலை மாற்றும்பொழுது ஜன்னல் வழியாக அவருக்குத் தெரியாமல் காமப் பார்வையோடு ரசிப்பது ஏன்..?//

  ஜி ..! எல்லா மனிதர்களுக்குள்ளும் எல்லாவிதமான ஆசாபாசங்களும் இருக்கும்தானே ...? அந்தாள ஒன்னும் புனிதனா காமிக்கலையே ( BTW புனிதர்களாக பாவிக்கப்படுபவர்கள் தான் அதிகம் சேட்டை செய்கிறார்கள் என்பது வேறு விஷயம் :)).

  ReplyDelete
  Replies

  1. படத்தில் இறுதியாக விதார்த் தற்கொலை செய்துகொள்கிறார். கிட்டத்தட்ட காதல் கொண்டேன் தனுஷ் கேரக்டர். அவரின் தற்கொலை நமக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அவரது காதல் உண்மையாக ,புனிதமாக இருந்திருக்க வேண்டும். காதல் கொண்டேனின் தனுஸ் சைக்கோ +அதீத காதல். ஆனாலும் அதில் காமத்தை கலக்காததால்தான் , தனுஸ் கொலையே செய்திருந்தாலும் அவர் சாகும்போது நம் இதயம் கனத்துப் போகும்.

   ஆனால் இதில், ஒருதலையாகக் காதலித்து வந்த தன் காதலியை கொல்ல மனமில்லாமல் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார் விதார்த். உண்மையிலேயே இந்தப்படத்தின் ஹீரோவாக விதார்த் தான் இருந்திருப்பார், அந்த சேலை மாற்றும் ஒரு காட்சியைத் தவிர்த்திருந்தால்.

   பூர்ணா மீது வைத்திருந்தது இனம் புரியாத வெறித்தனமான காதல்தான் என்பதை வெளிப்படுத்தவே உடன்பிறவா சகோதரனை கொல்ல துணிந்தார் என இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார்... அப்படியிருக்க இடையில் எதற்கு அந்த காமம்..? காதலோடு காமமும் இருந்திருந்தால் அவர் வேறு வகையில் பூர்ணாவை ஏற்கனவே அடைந்திருக்கலாமே...

   விதார்த் இறுதியில் தற்கொலை செய்துகொள்வது போல் காட்சிப்படுத்தி அந்த கேரக்டர் மேல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். அப்படியானால் அந்த சேலை மாற்றும் காட்சியை தவிர்த்திருக்கலாமே என்பதுதான் என் வாதம். அந்தக் காட்சியை தவிர்த்துவிட்டுப் பாருங்கள், விதார்த் கேரக்டர் மட்டும்தான் கடைசியாக நம் நெஞ்சில் நிற்கும்...

   Delete