Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, 23 November 2013

இரண்டாம் உலகம்-விமர்சனம்...


இரண்டாம் உலகம் ஒரு mystical லவ் ஸ்டோரி.

"நாம் எவ்வளவு நாள் காதலிக்கிறோம், யாரைக் காதலிக்கிறோம், எப்படிக் காதலிக்கிறோம் என்பது முக்கிய -மில்லை. ஆனால் காதல் மட்டும் பரிசுத்தமாக, உண்மையாக இருக்கவேண்டும். ஏனெனில் உண்மையான காதலுக்குத்தான் இந்த உலகம் அசைந்து வழிவிடும்.நீங்கள் உண்மையாக காதலிக்கும் பொழுது, அப்பெண்ணின் நினைப்பு ரத்தமாக ஓடும் பொழுது, எதைப்பற்றியும் கவலைப் பட தேவையில்லை. உங்கள் காதல் நிச்சயமாக ஜெயிக்கும்". இதுதான் செல்வராகவன் சொல்லவரும் மெசேஜ்.

இதற்காக, காதல் வசப்பட்ட ஒரு கோழை, மாவீரனாகி சரித்திரம் படைத்த கதையைத்தான் இரண்டாம் உலகம் மூலம் கற்பனையாகத் தட்டிவிட்டிருக்கிறார் இயக்குனர். இது முழுக்க முழுக்க பேண்டசி வகை படைப்பு என்பதால் மில்லி கிராம் அளவுக்குக் கூட லாஜிக்கை தேடவேண்டியதில்லை.

நாம் வாழும் உலகத்திலும்,விசித்திரம் நிறைந்த இரண்டாம் உலகத்திலும் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தைக் கதையாக ஆர்யா சொல்வதாக விரிகிறது படம். முதல் ஐந்து நிமிடங்களில் அவர் சொல்லும் முன்னோட்டத்தை கவனிக்கத் தவறினால் மொத்தக் கதையும் புரியாமல் போவது நிச்சயம்.

இரண்டாம் உலகத்தை எப்படி நம் உலகத்தோடு முடிச்சு போடுகிறார் என்பதை தெரிந்துகொண்டாலே ஓரளவு கதை புரிந்துவிடும். இரண்டாம் உலகம் என்றால் என்ன என்பதை சிறு வயதில் பாட்டி கதை சொன்னதுபோல் சொன்னால்தான் விளங்கும். விமர்சனம் என்றால் மொத்தக் கதையும் சொல்லக்கூடாது என்கிற நியதி இருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதையை எப்படி சொன்னாலும் யாருக்கும் விளங்காது என்பதுதான் இங்க விசயமே.. :-))


நாம வாழ்ற பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில பூமி மாதிரியே ஒரு கிரகம் இருக்கு.அதுக்கு பேரு இரண்டாம் உலகம். அங்க விசித்திரமான விலங்குகள், பறவைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அங்க வாழ்கிற மக்கள் நம்ம மாதிரியே இருக்காங்க. நம்ம மாதிரியே தமிழ் பேசுறாங்க..நம்ம மாதிரியே டிரெஸ் போட்டுகிறாங்க... கோவப்படுறாங்க... சிரிக்கிறாங்க...சண்டைப்போடுறாங்க.. அடிச்சிகிறாங்க.. ஆனா நம்ம உலகத்தில இருக்கிற ஒரே ஒரு விஷயம் மட்டும் அங்க இல்ல. அது .. காதல்...!

அங்க பெண்கள் இருக்காங்க. ஆனா அவுங்க ஆண்களுக்கு அடிமையாக இருக்காங்க. அந்த தேசத்தில காதல் இல்லாததால பூக்களே பூப்பதில்லை. எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ அங்க தேசம் சீக்கிரமா அழிந்து போய்விடும். அங்கயும் அப்படித்தான். நோய்கள் , குற்றங்கள் எல்லாம் பெருகி கிடக்குது.

அந்த தேசத்தை ஒரு ராஜா ஆட்சி செய்யுறார். நம்ம நாட்ல இருந்த மாதிரியே  தளபதி, வீரர்கள் எல்லாம் இருக்காங்க. அவர்களுக்கெல்லாம் ராஜகுரு மாதிரியும், மக்களைக் காக்கும் தெய்வம் மாதிரியும் ஒரு அம்மா இருக்காங்க. தம்மையும், தம் நாட்டையும் படைத்தது பெண் ரூபத்தில் இருக்கிற அந்த தெய்வம்தான்னு நம்புறாங்க. 

ராஜானா சண்டை, போர் எல்லாம் இருக்கணுமே...!  ஆமா அதுவும் இருக்கு. பக்கத்து ஊர்ல ஒரு அரக்கன் இருக்கான். அவன் அடிக்கடி தன் ஆட்களுடன் இங்க வந்து சண்டைபோட்டு, கொள்ளையடிச்சி, பெண்களை கடத்திட்டும் போறான். ஆனால் அவனுடைய ஒரே இலக்கு அந்த தெய்வத்தாய்தான். அவரை கடத்திக்கொண்டு போய்விட்டால் அந்த உலகத்தையே தம் காலடியில் கொண்டுவந்து ஒரே ராஜாவாக இருக்கலாம் என்பது அவனது திட்டம்.

அதைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கும் தன் நாட்டில் ஒரு மாவீரன் உருவாகனும்னு அந்த தெய்வத்தாய் நினைக்கிறாங்க. அப்படி ஒரு மாவீரன் உருவாகுனும்னா அவனுக்கு ஒரு பெண் துணை வேணும். அவனை அவள் காதலிக்க வேண்டும். அவனுக்குள்ளும் காதல் வரவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அங்கிருக்கும் ஒரு விசித்திர சிங்கத்தைக் கொன்று தான் வீரன் என்பதை உணர்த்துகிறான் ஒருவன். அவன்தான் ஆர்யா. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். திருமணம் செய்ய முயல்கிறான். அவள் அனுஷ்கா. ஆனால் அவர்களுக்குள்  காதல் இல்லை. அவர்களுக்கு காதல் வந்துவிட்டால் அந்த தேசத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கி நந்தவனமாகிவிடும். அவன் மாவீரனாகிவிடுவான். ஆனால் காதல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த தேசத்தில் அவர்களுக்குள்  எப்படி காதலை விதைப்பது ...?

இங்கேதான் நம் உலகத்துக்கும் இரண்டாம் உலகத்துக்கும் முடிச்சுப் போடுகிறார் இயக்குனர். காதலின் தேசமான நம் உலகத்திலிருந்து காதலில் கசிந்துருகும் ஒருவனை இரண்டாம்  உலகத்திற்குக் கொண்டுவந்து அங்கிருக்கும் ஆர்யா-அனுஷ்காவுக்கு காதலைப் போதித்தால்..?

அதற்கு பலிகடா ஆகிறார் நம் உலகத்து மதுபாலகிருஷ்ணன்(ஆர்யா). அவரின் காதலியான அனுஷ்காவை பலியிட்டு, இரண்டாம் உலகத்துக்கு அவனை இழுக்கிறார் தெய்வத்தாய். அங்கே அனுஷ்காவுக்கு காதல், வெட்கம், பீலிங்க்ஸ் என்றால் என்ன என்பதை கிளாஸ் எடுக்க, அனுஷ்காவுக்கு இரண்டாம் உலகத்து ஆர்யா மேல் காதல் தொற்றிக்கொள்கிறது. அதன் மூலம் ஆர்யா மிகப்பெரிய மாவீரனாகி அந்த அரக்கக் கூட்டத்தை கொன்றொழிக்கிறான். அங்கே பூக்கள் பூத்துக்குலுங்கி நந்தவனமாகிறது. இரண்டாம் உலகம் சுபிட்சமடைகிறது.

சரி.. இப்போ நம் உலகத்திலிருந்து அங்கு சென்ற ஆர்யா என்ன ஆவார்..? அவரைக் கொன்று மூன்றாம் உலகத்துக்கு அனுப்பிவிடுகிறார் தெய்வத்தாய். அங்கே இன்னொரு அனுஷ்கா இருக்க....அவர்களுக்கும் காதல்... (சரி..சரி  உங்க நிலைமை புரியுது..அது அடுத்த பார்ட்டாக வரக்கூடும்..)


இதுதான் இரண்டாம் உலகம் மூலம் செல்வராகவன் சொல்லவந்த கற்பனைக் கதை. இந்தக் கதையை நம் குழந்தைகளுக்கு சொன்னால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். " அவர்கள் உலகம் சுபிட்சமடையணும்னு நம்ம உலகத்து காதலை பிரித்து,காதலியைக் கொன்று, காதலனை அவுங்க உலகத்துக்கு அவுங்க தெய்வம் கொண்டு போனிச்சி சரி.அப்போ நம்ம உலகத்து கடவுள்களெல்லாம் என்ன பண்ணினாங்க?".  இப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு ஃபேண்டசி ஃபில்ம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.

இப்படியொரு கதையை தமிழில் எடுக்க முயற்சி செய்ததற்காக செல்வராகவனை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். இக்கதையை நமக்குள் அடங்கும் பட்ஜெட்டில் எடுத்தாக வேண்டும் என்கிற பிரச்சனைதான் அவர் சந்தித்த முதல் சவாலாக இருக்கவேண்டும். இரண்டாம் உலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமே CG WORK  செய்துதான் ஒப்பேற்றவேண்டும் என்பதால் பட்ஜெட்டில் முக்கால்வாசி இதுவே விழுங்கியிருக்கும். இரண்டாம் உலகத்தைக் காட்டியவகையில் ஹாலிவுட்டுக்கு இணையாக செதுக்கியிருக்கிறார் என்பதே தமிழில் ஒரு சாதனைதான். எது எப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு கொண்டுசெல்லும் இயக்குனர்களில் செல்வராகவன் மிக முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை...

ஆனால்........   வெறுமனே இந்த ஜில்பான்சி கதையை வைத்து படமாக எடுத்ததின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். நம் உலகத்து ஆர்யா-அனுஷ்காவின் ஆரம்ப காதல் காட்சிகள் எல்லாம் செல்வராகவனின் அக்மார்க் முத்திரை. அதிலும் அனுஷ்கா தன் காதலை ஆர்யாவிடம் புரப்போஸ் பண்ணும் காட்சி அருமை. அதன் பின்புதான் வெறுப்பேற்றுகிறார். ஆர்யா தன் தாத்தா சீரியஸாக இருக்கிறார் என்று பொய் சொல்லி அனுஷ்காவுடன் கோவா செல்லும் காட்சியிலிருந்தே போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அனைத்தும் செயற்கைத்தனமாகவே இருக்கிறது. தனது காதலியையோ அல்லது காதலனையோ இம்ப்ரெஸ் பண்ண வேண்டுமென்றால் அவர்களது  பிறந்தநாளின் முதல் நாள் இரவு கேக்,மெழுகுவர்த்தி சகிதமாக "ஹாப்பி பர்த்டே டூ யூ.." என பாடும் காட்சியை இன்னும் எத்தனை வருசத்துக்கு காட்டப்போறீங்க யுவர் ஆனர்..? வேற ஏதாவது யுத்தி யோசிக்கக் கூடாதா...?


இது கற்பனைக்கதை என்பதால் அவர் இஷ்டத்திற்கு கதை விட்டிருக்கிறார். ஜெயமோகனின் டார்த்தீனியம் படிப்பது போல் இருந்தது. இரண்டாம் உலகத்து அனுஷ்கா இறந்து போனதால்தான் ஆர்யா பைத்தியம் மாதிரி திரிந்து அந்த சுவாமி மலையின் மீது ஏறி இன்னொரு ஆர்யாவைக் கூட்டிவருகிறார். பிறகு அனுஷ்கா திடீரென்று தோன்றுகிறார். கேட்டால் அவர் மட்டும் காட்டில் தனியாக வசிக்கிறாராம்.

படத்திற்கு நிச்சயம் வரிவிலக்கு கிடைத்துவிடும். இது நம் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் இல்லை என்றாலும், இரண்டாம் உலகத்தில் வரும் அந்தத் தெய்வத்தாய், நமது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் குறியீடுதான் என்பதைப் பச்சைக் குழந்தைக் கூட சொல்லிவிடும். அதிலும் இடைவேளைக்கு முன் இரட்டை இலை துளிர்ப்பது ஒரு குறியீடே அல்ல. அது, "கொஞ்சம் பார்த்து கவனித்து வரிவிலக்கு கொடுங்க தாயீ " என்பதின் நேரடிக் கெஞ்சல்...!

படத்தில் ஆறுதலான விஷயம் பாடல்கள். "கனிமொழியே...","மன்னவனே என் மன்னவனே..","பழங்கல்ல.."   பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அப்பாடல்கள் வரும் காட்சி மட்டும் கொஞ்சம் உற்சாகப்படுத்தியது. மற்றபடி பின்னணி சிம்பொனி இசை அமைத்திருப்பதாக பீத்திக் கொண்டதெல்லாம் அவ்வளவாக இம்ப்ரெஸ் பண்ணவில்லை.

உலகத்தரம், உலக சினிமா எடுக்கவேண்டுமென்றால் ஹாலிவுட் படங்களைப் போல் கதைப்பின்னவேண்டும் என்கிற அவசியமில்லை. நம் மண் சார்த்த கதைகள் எவ்வளவோ இருக்கிறது. பொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க முயன்றவர்களில் செல்வராகவனும் ஒருவர். அப்படியொரு காவியத்தை எடுத்து வணிக ரீதியாக தோற்றுப் போயிருந்தால் கூட இழப்பு வெறும் பணமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் அழுத்தமாகப் பெயர் பதிந்திருக்கும். தன் கற்பனையில் ஓடிய ஒரு கதையை  படமாக எடுத்து ரசிகனை இவ்வளவு அவஸ்தைக்குள்ளாக்க வேண்டுமா..? ஒருவேளை இந்தப்படத்தை 3D யில் முயற்சி செய்திருந்தால் (கொஞ்சம் பட்ஜெட் எகிறினாலும் ) அந்த பரவசத்திற்காகவாவது தியேட்டருக்கு கொஞ்சம் கூட்டம் வந்து போட்ட பணத்தை எடுத்திருக்கலாம்.   இவரது போதைக்கு பாவம் அந்த தயாரிப்பாளர்தான் ஊறுகாய் போல..!

Wednesday, 7 August 2013

சேரனை புரிந்துகொள்ளுங்கள்...!



இயக்குனர் சேரன் மகளின் காதல் சம்மந்தமாக எல்லோரும் கருத்து கந்தசாமியாக மாறி ஆளுக்காளு ஒரு கருத்தை சொல்லிகிட்டே இருக்காங்க.. அப்படினா நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லித்தானே ஆகணும்.. இல்லனா சமூக அக்கரையற்றவன்(!?) என்ற பழிச்சொல்லை இந்த உலகம் நம்மீது சுமத்திவிடும் அல்லவா....!

இணையத்தில் இருவேறுவிதமான விமர்சனங்கள எழுப்பப்படுகின்றன. ஒரு சாரார் காதலுக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் பிள்ளையை பெற்ற அப்பா ஸ்தானத்திலிருந்து கருத்துரைக்கின்றனர்.

எனக்கு சேரன் என்கிற தனிப்பட்ட மனிதர் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு.தன்னை ஒரு புரட்சி இயக்குனராக காதலுக்கு தனி இலக்கணம் வகுத்த படைப்பாளனாக சமூகத்தில் காட்டிக் கொள்ளும் சேரன்,தன் மகளின் காதல் பிரச்சனைக்காக 'என்னைப் புரிந்துகொள்ளுங்கள்' என தொலைக்காட்சி யில் அழுவது எவ்வளவு அபத்தமாக உள்ளது..! அதைக் கண்டு எத்தனை திரைப்பிரமுகர்கள் சேரனுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர்.!.இணையத்தில் கூட அவர் மகளின் காதலனைப்பற்றி தவறான செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. சரி..சேரனை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு பெரிய உத்தமனா அவர்...? 

15 வருடத்திற்கு முன் திருச்சியில் நிஷா என்கிற இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட சம்பவத்தில், போலிஸ் விசாரணையில் அந்தப்பெண் வெளியிட்ட இரண்டு பெயர்கள் இயக்குனர் சேரன்,தங்கர் பச்சான். அந்தப்பெண் சொன்ன அதே நேரத்தில் இவர்கள் திருச்சியில் இருந்தது உண்மை என்றாலும் பிறகு எப்படியோ சரி கட்டப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் தந்தை ஐந்து வருடம் கோர்ட்டுக்கு நடையாக நடந்து கடைசியில் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. அந்தத் தகப்பனை யார் புரிந்து கொண்டார்கள்...?

ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரன்,உதவி இயக்குனர்களின் நிலையைப்பற்றி பத்திரிகையில் ஏதோ சொல்லி வைக்க, நிறைய உதவி இயக்குனர்களைத் திரட்டிக்கொண்டு பாலகுமாரனின் வீட்டின் முன்பு கோசம் போட்டு பொங்கு பொங்குனு பொங்கினார். இதை எதிர்பார்க்காத பாலகுமாரன் எல்லோரின் முன்பும் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டது எல்லா பத்திரிக்கையிலும் வந்ததே... அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டாரா சேரன்...?

ஒரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை 'பாடுகளா' என திட்டியவர், இன்று டிவியில் கதறி மக்களிடம் சிம்பதி தேடுகிறார். இருதரப்பிலும் ரகசியமாக பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை இப்படி தமிழகம் முழுவதும் பேச வைத்திருப்பது  'ஒரு வெளம்பரம்....' போலல்லவா தெரிகிறது.

காதலை வெறுக்கும் கதாநாயகியின் தந்தையை வில்லனாகவே நம் தமிழ் சினிமா தொடர்ந்து சித்தரித்து வந்திருக்கிறது.அதற்காக ரவுடியிசம்,கொலை மிரட்டல் என்கிற எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். அதை அப்படியே ரியல் ஃலைப்பில் செய்துவிட்டு என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என தொலைக்காட்சியில் அழுதால் நாமும் கண்கலங்கி உருகிவிடுகிறோம்... இந்த சமூகத்தில் சினிமாகாரனின் அழுகைக்குத்தான் எவ்வளவு வலிமை...!!

அதேநேரத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து,ஒரு சாராசரி தந்தையாக அவர் பக்கம் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை டீலிங் செய்த விதம்தான் தவறு.மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் அதன் வலி.இல்லையென்று சொல்லவில்லை.திரையில் காதலின் புனிதத்தைப் பற்றி பாடமெடுத்தவர் தன் சொந்த வாழ்க்கையில் எந்த காதலையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாதுதான். ஆனால் 'முன்பு நல்லவனா தெரிந்தான். இப்ப கெட்டவனா தெரியிறான்' என்கிற வழக்கமான விளக்கத்தை இவரும் கொடுக்கும்போதுதான் கொஞ்சம் சறுக்குகிறார்.

சேரன் அவர்களே.. உங்கள் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எங்களுக்கும் அதே படபடப்புதான் வருகிறது. ஆனால் 20 வயது என்பது நல்ல பக்குவப்பட்ட நிலை.மூன்று வருடம் காதலித்தவர் அந்தப் பையனின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருப்பார். உங்கள் மகள் மீது நம்பிக்கை வையுங்கள். இவ்வளவு கடந்த பின்னும் இந்தக் காதலை பிரித்து வைப்பது சமூகத்தில் உங்கள்மீது தவறான பிம்பத்தை உருவாக்குவதுடன் அது கடைசி வரை உங்கள் ஆழ்மனதை  உறுத்திக்கொண்டே இருக்கும். "இந்தியா காதலின் பூமி தான்..காதலர் பூமியல்ல.!" என்று கவிப்பேரரசு சொன்னதை மீண்டும் நிருபித்துவிடாதீர்கள். 

ஓகே..கருத்து முடிந்தது.





Friday, 2 August 2013

பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு..

 (கடந்த பதிவின் தொடர்ச்சி...)
அங்கிருந்து தலைதெறிக்க ஓட, பின்னால் ஒரு அபலக் குரல் ... .திரும்பிப் பார்த்தால் பிரபல காப்பி பேஸ்ட் பதிவர்.

பிகாபே பதிவர்: ஹி... ஹி...என்ன சீனு இந்தப்பக்கம்...?

சீனு : சும்மா காபிபேஸ்ட்.. ச்சே...காபி சாப்பிட்டு போவலாம்னு வந்தேண்ணே..  

பிகாபே பதிவர்: ஏதோ காப்பி பேஸ்டுனு காதுல விழுந்துச்சி...

சீனு :  (விழுந்துடுச்சா..) பேஸ்ட் வாங்கிட்டு அப்படியே காப்பி குடிச்சிட்டு போலாம்னு வந்தேன்.. இதைதான் சுருக்கி சொல்லிட்டேன்..

பிகாபே பதிவர்: காதல் கடித போட்டியெல்லாம் வக்கிறீங்க. என்னை கூப்பிட மாட்டீங்களா...

சீனு : நீங்க மூக்கு சிந்துற கேப்புல மூணு பதிவு போடுற ஆளு...  டிக்கெட் கவுண்டர எட்டிப்பாத்தே எட்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுற ஆளு...உங்களைபோயி எப்படிண்ணே... நீங்க 'மலை'.. நாங்க சும்மா  மடு...

பிகாபே பதிவர்: சாரி சீனு.எனக்கு புகழ்ச்சி புடிக்காது.என்னைப்பத்தி ஏதாவது புகழ்ந்து சொல்லனும்னா அதை அப்படியே ஒரு பதிவா போட்டுடுங்க..ஹி... ஹி.. அப்புறம் என்னை யாருமே கூப்பிடாதால நானே என்னை கூப்பிட்டு  காதல் கவிதை எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது சொந்தமா எழுதணுமாமே..அந்த ஒரு காரணத்துக்காக விட்டுட்டேன்.

சீனு :அதனால என்னாண்ணே இப்ப சொல்லுங்க...

பிகாபே பதிவர்: (ச்சே..வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேனே..) சரி...நீங்க கேக்கிறதால என் கற்பனையில் ஊறினத கக்குறேன்... பட் என் கவிதையை பாத்துட்டு ரொம்ப புகழக் கூடாது. ..ஏன்னா எனக்கு புகழ்ச்சி புடிக்காது...

"கொடியிடை விளைவது கனி...
இந்த கனியிடை விளைவது சுவை....
அந்த சுகம் பெற நமக்கென்ன குறை...
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்.."
எப்படி என் வார்த்தை வீச்சு....?

சீனு : அண்ணே இது 'அழகிய தமிழ் மகள் இவள்' பாட்ல வர்ற சரணம்ண்ணே... 

பிகாபே பதிவர்: என்னது முன்னாடி யாரோ எழுதிட்டாங்களா..? ச்சே..நாம என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்..? சரி அடுத்தத கேளுங்க..அசந்துடுவீங்க.

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்....
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்...
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே...

சீனு : அண்ணே இது 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில வர்ற பாட்டுண்ணே..கண்ணதாசன் எழுதினது.


பிகாபே பதிவர்: என்னது இதையும் எழுதிட்டாங்களா.... என்கிட்டே ஒரு கெட்ட பழக்கம் சீனு... அப்பப்போ எனக்கு தோணுறத அப்படியே ஒரு பேப்பர்ல கிறுக்கி தூக்கிப் போட்டுடுவேன். அதை எடுத்து இவனுக சினிமாவில பாட்டா போட்டுறாங்க. சரி இது கனநேரத்தில் கற்பனையில் உதித்தது ....

" கை வீசிடும் தென்றல்... கண் மூடிடும் மின்னல்...
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ..!
பண்பாடிடும் சந்தம்... உன் நாவினில் சிந்தும்....
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ...!

சீனு : ' மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி...தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..  '

பிகாபே பதிவர்: (கோபத்துடன்..) சீனு.. இது எப்படி உங்களுக்கு தெரியும்...?

சீனு : சும்மா வெறுப்பேத்தாதிங்கண்ணே..இது உலகத்துக்கே தெரியும்...

பிகாபே பதிவர்:   என்னது அதுக்குள்ளே வேர்ல்ட் முழுக்க ரீச் ஆச்சா...? இப்படித்தான் சீனு நான் இன்னிக்கி என்ன பதிவு போடப் போறேனோ அதை ஒரு வாரத்துக்கு முன்னாடி எப்படியோ தெரிஞ்சிகிட்டு பத்திரிக்கையில போட்டுடுறாங்க... அதுவும் ஒரு எழுத்து கூட மாறாம. கடைசில என்னை காப்பி பேஸ்ட் பதிவர்னு இந்த உலகம் சொல்லது. ச்சே..என்ன மாதிரியான உலகத்தில வாழ்றோம்..?    

சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போகணும்னா கால் சட்டையை கழட்டுறதும்.....நம்பர் ஒன் பதிவர்னா காபி பேஸ்ட் பன்றதும் சகஜம்தானே...

பிகாபே பதிவர்: சரி சீனு...இதுதான் பைனல் பீஸ்... இத எங்கேயும் கேட்டிருக்க முடியாது.. இப்ப ஏன் கற்பனை குதிரைய தட்டி விடறேன் பார்..

"கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்...
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே...
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்த்து போக..
கண்கள் கலங்கி நானும் ஏங்க மழையின் சாரல் என்னைத் தாக்க..
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க..."

சீனு :   இதைத்தான் எதிர்பார்த்தேன்...அடடடா.. வரிக்குவரி சிக்சர்...பின்னிட்டீங்க... அனேகமா உங்களுக்குதான் முதல் பரிசு..

பிகாபே பதிவர் : சாரி சீனு.எனக்கு...........

சீனு : புகழ்ச்சி புடிக்காதுனு சொல்ல வறீங்க. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்....

( சீனு  அங்கிருந்து புறப்பட்டவுடன் ......)

பிகாபே பதிவர்: அப்பாடா நல்லவேளை.இது " யாரடி நீ மோகினி" படத்தில வர்ற பாட்டுனு கண்டுபிடிக்கல. ச்சே...ஒரு காப்பி பேஸ்ட் பதிவரா இருக்கிறது எவ்வளவு சிரமம்..!




Monday, 22 July 2013

'மரியான்..' இப்ப என்ன சொல்ல வர்றியான்..?


ரோஜா படத்தை வேறு ஒரு கோணத்தில் வைத்து சிந்தித்திருக்கிறார் பரத்பாலா.. அங்கே வயலும் வயல் சார்ந்த இடம். இதில் கடலும் கடல் சார்ந்த இடம். அங்கே பசுமையான காஷ்மீர் என்றால் இதில் வறண்ட சூடான் பாலைவனம். மற்றபடி ஃபீலிங்க்ஸ் எல்லாம் அதேதான்.

தன் காதலியின் தந்தை பட்ட கடனையடைக்க சூடான் செல்லும் நாயகன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். அங்கிருந்து த..ப்..பி...த்...து எப்படி தன் காதலியை சேர்கிறார் என்பதுதான் கதை.

தனுஷ்...

கதைக்கு இருநூறு சதவிகிதம் நச்சென பொருத்துகிறார் மீனவ இளைஞனாக வரும் தனுஷ்.ஆரம்பத்தில் 'சுறா' ரேஞ்சுக்கு கொடுக்கப்படும் பில்டப் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் பிற்பகுதியில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும்போது,பறந்து அடிச்சா பதினாறு டன் வெயிட்டுடா பாக்குறியா..என ஒரே அடியில் பத்துபேரை சாய்த்துவிட்டு, துப்பாக்கி ரவைகளை பல்லால் கடித்து துப்பிவிட்டு,பாலைவன பூமியை பொளந்து கொண்டு தப்பித்து வரும் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது வியக்கத்தக்க விஷயம்.

நிச்சயம் ஆடுகளத்திற்குப் பிறகு தனுசின் இயல்பான நடிப்பை இதில் காணலாம்.மரியான் சாவே வராதவன் என்று ஆரம்பத்தில் விளக்கம் கொடுக்கப்படுவதால் தனுசுக்கு எதுவும் ஆகாது என முன்னமே தெரிந்து விடுகிறது.

சில காட்சிகளில் அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார். லிப் டு லிப் ரொமான்ஸ் காட்சி, நண்பனின் சாமாதியில் உடைந்துபோய் உட்காந்திருக்க அங்கு வரும் பார்வதியிடம் காட்டும் கோபம், தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும்போது கம்பெனிக்கு பேசுவதாக சொல்லிவிட்டு தன் காதலிடம் பேசும்போது இருக்கும் தவிப்பு  என ஆங்காங்கே எதார்த்த நடிப்பில் பின்னியெடுக்கிறார் தனுஷ். கமல், விக்கிரமுக்கு பிறகு அந்த சீட் உனக்குதாம்ல...!

ஆனால் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தும்போது ஏனோ முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்.

பார்வதிமேனன்..

பனிமலாரக வரும் பார்வதிமேனன் ஏற்கனவே பூ படத்தில் ஜொலித்தவர் என்பதால் சிரமமில்லாமல் நிறைய காட்சிகளில் வாழ்த்திருக்கிறார். அந்த 'லிப் டு லிப்' காட்சி ஓன்று போதும். மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது. அதன்பிறகு வரும் நெருக்கமான காட்சிகளில் நம் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு கடைசி வரை ஏமாற்றி விடுகிறார். கடைசி வரை இவரை டாப் ஆங்கிளில் காட்டி ஏதோ உணர்த்த முற்படுகிறார் இயக்குனர். நம்ம மரமண்டைக்குத்தான் ஒன்னும் விளங்கல.. :-)

பிற்பகுதியில், ' மரியான் கண்டிப்பா வருவான்..இதோ வந்துகிட்டு இருக்கான்... ' என பினாத்துவது கொஞ்சம் ஓவர். சரி எதற்காக இவர் தனுசை இந்த அளவுக்கு லவ்வி வருகிறார்..? அழுத்தமான காரணம் எதுவும் இல்லாததால் 'அபிராமி..அபிராமி' குழப்பம் இதிலும் வருகிறது.


ஏ.ஆர். ரகுமான்..

படத்தின் ஒரே பலம். ஒத்த ஆளாக நின்று போராடியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு பிரேமையையும் உயர்த்திப் பிடிக்கிறது இசைப்புயலின் பிரமாண்டமான பின்னணி இசை. 'சோனா பிரியா தானா வறியா..',  'இன்னும் கொஞ்சம் நேரம்..' பாடல்கள் பரவாயில்லை. தாய் மண்ணே வணக்கம்.. பாடலை மனதில் கொண்டு 'நெஞ்சே எழு..! காதல் அழிவதில்லை..!' பாடலை உருவாக்கியிருக்கிறார்கள் போல.வருங்கால சந்ததியினருக்கு காதலர்களின் தேசிய கீதமாக ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொருவர் வசனம் எழுதிய ஜே.டி.குரூஸ். 'வாழ்க்கையில சாதிக்க நினைக்கிறவனுக்கு எல்லாம் பொம்பளையோட மூச்சுக் காத்து பட்டுகிட்டே இருக்கணும்..' என்கிற வரி வேறு ஒரு அர்த்தம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்.....' என்பதைத் தான் அப்படி சொல்லியிருக்கணும்.

அடடே.. கமலா காமேஷ் திரும்பவும் நடிக்க வந்தாச்சே என நினைத்தால் அது உமா ரியாஸ்... நடிப்பில் குட்டி பதினாறு அடி பாய்கிறது.. (அப்புறம் என்ன விசு சார்..ஜோடி கிடைச்சாச்சு.சம்சாரம் அது மின்சாரம் பார்ட் -2 எப்போ எடுக்க போறீங்க..?)

காமெடிக்காக சேர்க்கப்பட்ட ஜெகனும் அப்புக்குட்டியும் அப்பாவியாய் செத்துப் போகிறார்கள்.முற்பகுதியில் மீனவ குப்பத்தை சுற்றியே கதை நகர்கிறது. மீனவர் என்றாலே இலங்கையின் அத்துமீறலையும் காட்சிப் படுத்தவேண்டும் என்கிற சமீபத்திய தமிழ் சினிமாவின் மரபு இதிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. அதற்காக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பிணமாக ஒதுங்குவது சாத்தியமா..?

'அண்ணே நீ எந்தப் பொண்ணை பாத்தாலும் ஒன்னு குத்தகைக்கு எடுத்திடுவ...இல்ல கொள்முதல் செஞ்சிருவ..இந்த பனிமலர் கிட்ட மட்டும் ஏன் இப்படி இறங்கி போகணும்'

' டேய்...மத்தப் பொண்ணுங்க மாதிரி இல்லைடா , பனிமலரை நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன்.கல்யாணம் பண்ணினா அது பனிமலரைத்தான்..'

டேய் தமிழ்நாட்டு வில்லன்களா நீங்க அம்புட்டு நல்லவிங்களாடா..? இன்னும் எத்தனைப் படத்திலடா இந்த டயலாக் பேசுவீங்க...?

அனுப்பி வைக்கிறது மட்டும்தான் என் வேலை.. மத்ததுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது என சர்வ சாதாரணமாக சொல்லும் வெளிநாட்டு ஏஜென்டின் மற்றொரு முகத்தை அற்புதமாய் படம்பிடித்திருக்கிறார்கள். சிங்கைக்கு இரண்டு லட்சம் பணம் கட்டி அழைத்து வந்து,இரண்டே மாதத்தில் வேலையில்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட நண்பருக்காக ஒரு ஏஜென்டிடம் நான் வாதாடிய போதும் இதே டயலாக்தான்.

சூடானில் எங்கேயோ ரெகார்ட் டான்ஸ் ஆடின கும்பலை கூட்டியாந்து தீவிரவாதியாக நடிக்க வைத்திருக் கிறார்கள் போல. ஒண்ணுக்கும் நடிப்பு வரல. அதாவது பரவாயில்ல..சின்ன வயசில தீபாவளிக்கு அப்பா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியில் கேப்பை நிரப்பி தெருவெல்லாம் டப் டப்னு மேலே நோக்கி சுடுற மாதிரி அடிக்கடி வானத்தை நோக்கி சுட்டுகிட்டே இருக்காங்க. கடத்தினவர்கள் எவ்வளவு ரகசியமா இருக்கணும்..?  இப்படித்தான் போற வழியெல்லாம் வானத்தைப் பார்த்து சுட்டுகிட்டே இருக்கணுமா.? பணம் பறிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கும் போது எதற்காக பார்வதியின் போட்டோவை சிகரெட்டால் சுட்டு சிற்றின்பம் அடையவேண்டும்..?


இரண்டாம் பாதி செம இழுவை.பத்து நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய படத்தை  ஜவ்வு போல இழுத்தது மிகப்பெரிய மைனஸ். பசி தாங்க முடியாமல் ஜெகன் புலம்ப, அந்த நேரத்தில் வறுமையின் நிறம் சிவப்பு காட்சி தேவையா..? நெஞ்சைப் பிழியவேண்டிய காட்சி நம்மை பொறுமையின் எல்லைக்கே கொண்டு செல்கிறது.

தனுசை துப்பாக்கியால் வில்லன் கடுமையாக தாக்குவதை பின்னாலிருந்து காட்டுகிறார்கள். அடுத்தநாள் குருதிப்புனல் கமல் போல் குத்துயிரும் கொலையுருமாய் இருப்பார் என நினைத்தால் கன்னத்தில் சிறு கீறலோடு மட்டும் காட்சி தருகிறார். ஒருவேளை ரப்பர் துப்பாக்கி போல. 

சூடான் தீவிரவாதிகளிடமிருந்து தனுஷ் தப்புவது பு.கோ.சரவணன் படத்தில் பார்டரை தாண்டுவதை விட காமெடியாக இருக்கிறது.தப்பித்து வருபவர் பட்டினியால் சோர்ந்து, சாவை வென்று, அடுத்தடுத்த கடுமையான சோதனைகளைத் தாண்டி இறுதியில் கடல் மாதாவை அடைகிறார். ஆனால் அப்போதுதான் ஃபுல் மீல்ஸை செம கட்டு கட்டியவர் போல் ஃபிரசாக காட்சியளிக்கிறார்.இறுதியில் கடல் ராசாவாக வில்லனை சாகடிக்கும் உத்தி அருமை.

அப்பாடா ஒரு வழியாக படத்தை முடிச்சுட்டாங்கப்பா..சீக்கிரம் கதவை திறங்கடா..என எழும்ப முற்படுகையில், "இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன...ஏன் அவசரம்..என்ன அவசரம்.." என திரையில் பாடல் ஒலிக்க., கால்கள் EXIT -ஐ நோக்கி ஓட்டம் பிடிக்கிறது...! 

தனுசுக்காக ஒரு தடவை பார்க்கலாம்..!

Saturday, 20 July 2013

திடங்கொண்டு போராடு சீனுவுக்காக ஒரு காதல் கடிதம்..

       இந்த 'காதல்' என்கிற படுகுழியில் விழுந்த அனுபவம் எல்லாம் நமக்கு கிடையாதுங்க.. ஆனா காதலிச்சிருக்கேன். காதல் உணர்வு வராத உயிர் இந்த உலகத்தில் உண்டா என்ன..? அட்லீஸ்ட் ஒருதலைக் காதலாவது செய்திருப்பார்களே. 

அந்தந்த வயதில் ஏதோ ஒரு காரணத்தால்(பெரும்பாலும் அழகு) காதல் தூண்டப்படும்.அது இன்பா
ச்சுவேசன் என்றாலும் அந்த தருணத்தில மனசு கிடந்து படபடனு அடிச்சுக்கும் பாருங்க...அந்த உணர்வை எத்தனை வருஷம் கழிச்சி நெனச்சி பாத்தாலும் பரவசமா இருக்கத்தானே செய்யும்...

எந்த வயசில காதல் வரும்னு சொல்லவே முடியாதுங்க.. அதை காதல் என்பதைவிட ஒருவித ஈர்ப்புனு சொல்லலாம். காமம் என்கிற வரையறைக்குள் வராதவரை காதல் தவறில்லை.

ஒன்னாம் வகுப்பிலேயே காதல் வரலாம்... கிழிஞ்ச டவுசரும் அழுக்குச் சட்டையுமாய் பள்ளிக்கு செல்லும் போது கலர் கலரா கவுன் போட்டுக்கிட்டு வாய் நிறைய லிப்ஸ்டிக் நிரப்பிகிட்டு வரும் சக மாணவியைப் பாத்து வரலாம். வாத்தியார் பொண்ணு என்றால் பயம் கலந்த காதல் வரலாம். சுதந்திர தினத்திற்கும் ஆண்டு விழாவிற்கும் பாரத நாட்டியம் என்கிற பெயரில் உடற்பயிற்சி செய்யும் பெண்ணைப் பாத்தும் வரலாம். பாக்க மொக்கையாக இருந்தாலும் வகுப்பில் முதல் மாணவியாக வரும் பெண்ணின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வரலாம். வாத்தியார் எந்த பெண்ணையாவது புகழ்ந்து பேசிவிட்டால் அந்தப் பெண்ணின் மீது திடீர் ஈர்ப்பு வரலாம்.. ஏன்...டீச்சர் மீது கூட காதல் வரலாம்...இப்படி ஏதோ ஒரு விதத்தில் காதல் வயப்படாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் இதெல்லாம் அந்தந்த பருவத்தைக் கடக்கும்போது நம்மோடு பயணிக்க முடியாமல் மறைந்து விடுகிறது.

என் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் பாத்தாலும் காதலில் கசிந்துருகி நின்றதா ஞாபகமே இல்லை. அவ்வளவு நல்லவனா நீங்க-னு கேக்க தோணுமே..? அதுதான் இல்ல.உண்மைய சொல்லனும்னா எதுவும் செட்டாகல....

காலேஜ்ல படிக்கும்போது ஜூனியர் செட் பொண்ணு ஒன்னு நட்போட பழகினது. எங்க ஊர் பொண்ணுங்கிறதால பழைய கொஸ்டின் பேப்பர் தர்றது,புக்ஸ் தர்றதுனு உதவி செய்வேன்.அப்பப்போ லைப்ரரில சந்திப்போம். நல்லா தெளிவா புரிஞ்சுங்கனும்னு ஒரே பேப்பரை ரெண்டு மூணு தடவை எழுதறதால (அதத்தான் இந்த உலகம் அரியர்னு சொல்லுது) பல டிசைன்ல நம்மகிட்ட கொஸ்டின் பேப்பர் இருக்கும். இப்படி நட்பு போய்கிட்டு இருந்த சமயத்தில அந்த புள்ளைக்கு பொறந்த நாள் வந்தது. நான் சும்மா இருக்காம ஒரு வாழ்த்து மடல் வாங்கி அதோட ஹாஸ்டல் அட்ரசுக்கே அனுப்பிட்டேன். என்ன நினைச்சுதோ தெரியில...அடுத்த நாள் என்ன பாத்துச்சி. அவ்வளவுதான்..சைக்கிள எடுத்துட்டு சிட்டா பறந்து போயிடிச்சி. அடுத்தத் தடவை பாக்குறப்போ நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை விக்கிரமன் படத்து டயலாக்கெல்லாம் சொல்லி விளக்கலாம்னு இருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அந்தப் புள்ளையே பாக்கவே இல்ல..        

இப்படி ஒரு ஃபிளாஷ்பேக்கை வச்சிக்கிட்டு என்னத்த காதல் கடிதம் எழுதறது
னு தெரியில. வீட்டுக்காரியை நினைச்சி ஏதாவது எழுதலாம்னா கொழம்பு கரண்டியும், தோசை பிரட்டியும் கண் முன்னால வந்து மூட் அவுட்டாக்குது. ஒருவேளை நானெல்லாம் காதலிச்சிருந்தேனா கண்டிப்பா ஊர்ல மாடு தான் மேய்ச்சிகிட்டு இருந்திருப்பேன்.ஏனா எத செஞ்சாலும் நிறைய ஈடுபாட்டோடத்தான் செய்வேன். 

சரி.. சீனுவுக்கு வாக்கு கொடுத்திட்டேன்..போட்டிக்கான கடைசி நாளும் வந்துட்டு. எதையாவது எழுதலாம்னு யோசிச்சேன்.காதல் திருமணம் செய்து பணத்தேவைக்காக வெளிநாட்டில் வாழும் கணவன், தாயகத்தில் இருக்கும் மனைவிக்கு திருமண நாளன்று கடிதம் எழுதினால் எப்படியிருக்கும் என்கிற கற்பனையில் வடித்தது தான் இந்தக் கடிதம்.

 (எக்ஸ் கியுஸ் மீ..ஒன் மினிட். படிச்சி முடிச்சிட்டு காரித்துப்புறதா இருந்தா கொஞ்சம் தள்ளிப் போயி துப்புங்க.. அது உங்க மானிட்டர்.. அப்புறம் உங்க இஷ்டம்..)



பிரியமான பிரியதர்ஷினி....

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா.....? 

இப்படி கேட்டதுக்கு இந்நேரம் உன் கண்ணில் நீர் பூத்திருக்கும்.காலையிலிருந்து குறைந்தது அஞ்சு ஆறு கோயிலாவது ஏறி இறங்கியிருப்ப... ஐநூறு தடவையாவது என் பேரை உச்சரிச்சிருப்ப... நொடிக்கு நூறு தடவை என்னை நினைச்சிருப்ப... உன் நினைவே நான் தான்னு எனக்குத் தெரியாதாடா செல்லம் ...!

உன்னை முதன் முதலில் எப்போ பார்த்தேன்னு யோசிக்கிறேன்..

சரியா அஞ்சு வருசத்து முன்னால.... அப்போ உனக்கு காலேஜ் லீவு. எங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற உங்க சித்தி வீட்டுக்கு வந்திருந்த... ஒரு நாள் சாயங்காலம் அஞ்சு மணி வாக்கில், போன் டவர் கிடைக்கலனு எங்க வீட்டு  மொட்டை மாடிக்கு நான் வந்தப்போ, உங்க வீட்டு மொட்டை மாடில கையில ஏதோ புக்கை வச்சிக்கிட்டு தீவிரமா படிச்சிகிட்டு இருந்த.. அதுவும் முகத்தை அந்தப் பக்கமா திருப்பிகிட்டு...!

நான் சத்தம் போட்டு பேசினதில கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருப்ப போல.கோபத்தில சட்டென திரும்பி பாத்துட்டு இறங்கி போயிட்ட. அப்பத்தான் உன் முகத்தை நான் முதன் முதலா பாத்தேன். என்னவோ தெரியில. எப்படினும் சொல்லத் தெரியில... ஆனா பாத்த உடனையே உன்னை புடிச்சிப் போச்சி...!

அதுக்கப்புறம் ஏதோ ஒன்னு  என் மனசுக்குல உருண்டுகிட்டே இருந்துச்சி. நைட் உறக்கமே வரல. நாம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற மாதிரி எல்லாம் கற்பனை ஓடிகிட்டே இருந்துச்சு. பிறகு எப்போ தூங்கினேன்னு தெரியில.. !

அடுத்த நாளிலிருந்து....

அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா மாடிக்கு வந்து பா
ர்ப்பேன்.. நீ இருக்க மாட்ட..  சாயங்காலம் வரை ஐம்பது  தடவை யாவது ஏறி இறங்கி இருப்பேன்.. ஆனா சூரியன் மறையுதோ இல்லையோ கரெக்டா தினமும் அஞ்சு மணிக்கு மொட்டைமாடி  நிலாவா நீ உதிப்ப...

திரும்பவும் போன் பேசுற மாதிரி உன்னை பார்ப்பேன்.. ஆனா ஒரு தடவை கூட என்னை பாக்க மாட்ட... இப்படியே அஞ்சு நாள் போச்சு.ஆனா நீ என்னை கண்டுக்கிற மாதிரி தெரியில..

எனக்கு வெறுத்துப் போச்சி... நான் முட்டாள் தனமா நடந்துகிறதா மனசு சொல்லிச்சி.. உன்கிட்ட பேச முயற்சிக்கலாம்னு கூட தோணிச்சி... ஒருவேளை நீ  சத்தம் போட்டு ஊரை கூட்டிட்டா அவமானமா போயிடுமோனு ஒரு பக்கம் பயம் வேற. கடைசில ஒரு முடிவுக்கு வந்தேன்.வேணாம். காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இது வேணவே வேணாம்னு முடிவு செஞ்சிட்டேன்...

அடுத்த ரெண்டு நாள் மொட்டை மாடிக்கு போகவே இல்ல...ஆனா ஒருபக்கம் மனசு கிடந்து துடிக்கும். மறுபக்கம் அதுக்கு நாம சரிபட்டு வரமாட்டோம்னு மனசாட்சி தடுத்து நிறுத்தும்...

ஆனா முடியில.. ரெண்டு நாள் கூட முடியில.. கடைசியா இன்னிக்கு ஒரு தடவை பாத்துட்டு வந்திடலாம். அதுக்கு பிறகு மாடிப்பக்கம் தலைவச்சே படுக்கக் கூடாதுனு முடிவு பண்ணினேன். திரும்பவும் போனை எடுத்துட்டு ஒவ்வொரு படியா ஏறினேன். மனசு படக் படக்னு அடிச்சிகிட்டு.. ஒரு பத்து நிமிஷம் நின்னு பாப்போம்...திரும்பி பாக்கலனா அதுக்கப்புறம் காதல்ன்ற நினைப்பே மனசுக்குள்ள வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டு ஒவ்வொரு படியா ஏறினேன்...


கடைசி படி வந்து விட்டது.. ஒரு வித படபடப்போடு மொட்டை மாடிக்குள் காலடி எடுத்து வச்சேன் ...

அங்கே.............


வச்ச கண் வாங்காம எங்க வீட்டு மாடியையே உத்துப் பாத்துகிட்டு இருந்த. என்னைப் பார்த்த அந்த நொடியில் உன் கண்களில் இருந்த தவிப்பு இருக்கே.. அப்பப்பா...! அந்தக் கண்களில் என்ன ஒரு காதல்..! என்னவொரு ஏக்கம்..! என்னவொரு தவிப்பு...! இருபதடி தூர இடைவெளியில் எந்தப் பெண்ணும் என்னை இந்தளவுக்கு உற்று நோக்கியதில்ல.. எனக்கு அப்படியே உடம்புக்குள்ள ஜிவ்வுன்னு ஏதோ ஒன்னு ஏறுற மாதிரி இருந்துச்சி.

உண்மையிலேயே அப்போது தான் வைரமுத்து சொன்ன  உருவமில்லா உருண்டையின் விளக்கம் புரிந்தது. அப்படியே என்னை யாரோ அந்தரத்தில தூக்கிட்டு போற மாதிரி இருந்தது.விரல்கள் நடுங்க ஆரம்பிச்சுட்டு...என் முகம் சிவந்து போவதை கண்ணாடி இல்லாமலே பார்த்தேன்.

ஒரே பார்வையில உன் காதலை சொல்லிவிட்டு போயிட்ட..! கண்ணின் கடைப்பார்வை எவ்வளவு வலிமையானது என்பதை பாரதிதாசன் சொன்னபோது நம்பவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன்.


விழுந்தேன்....  சொத்து சுகம், சாதி சனம் எதுவும் தேவையில்லை  நீதாண்டி என் வாழ்க்கைனு மொத்தமாக விழுந்தேன். ஆனா இந்த பாழாய்ப்போன சாதி நம்மை பிரிச்சி வைக்க என்னென்ன இடைஞ்சல் பண்ணினது உனக்கு தெரியாதா...?

அந்த நேரத்தில நீ மட்டும் என் மேல நம்பிக்கை வைக்காம சாதியும் சொந்தமும் தான் முக்கியம்னு என்னை விட்டு போயிருந்திருந்தா இந்நேரம் நான் உசுரோடவே இருந்திருக்க மாட்டேன். நம்மை பிரிக்க பாத்தவங்க முன்னால வாழ்ந்து காட்டணும்னு நீ சொன்ன பாரு... அப்பவே முடிவு பண்ணினேன். உன் கூட சேர்ந்து வாழ, சாகுற அளவுக்கு கூட ரிஸ்க் எடுக்கலாம்னு...

மத்தவங்க வாயடச்சிப் போற அளவுக்கு வாழ்ந்து காட்ட
ணுங்கிறதுக்குத்தான் இவ்வளவு தூரம் உன்னை பிரிஞ்சி வந்து இருக்கேன்... ஆனா உன் கூட இல்லாத ஒவ்வொரு கணமும் நரக வேதனையா இருக்கு.இன்னும் எத்தனை இரவுகள்...?  

தூக்கம் கலையும் ஒவ்வொரு அதிகாலையும் ஊரில் இருக்க மாட்டேனா என தோணுது.உன் மடிமேல தலை வைத்து  தூங்கணும் போல இருக்கு...மார்போட அணைச்சுகனும் போல இருக்கு...உன் நெத்தில முத்தமிடனும் போல ஆசையா இருக்கு. உன் பாதங்களை எடுத்து என் கன்னத்தில ஒத்திக்கணும் போல இருக்கு...

இந்த எழவெடுத்த காசு பணம் எதுக்கு. இப்பவே கிளம்பி வந்திடலாம்னு தோணும். ஆனா வாழ்ந்து காட்டனும்...  கவலைப் படாத. இன்னும் ஒரு வருஷம் பொறுத்திரு. வாழ்க்கை பூரா பிரியா
ம இருக்க  இன்னும் ஒரு வருஷம் பிரிஞ்சி இருப்போம்...