Saturday 27 June 2015

காவல் - டம்மி துப்பாக்கி.


காவல்ன்னு ஒரு படம் வந்திருக்கு...

வாரக்கடைசி.. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த வாரம் ரிலீஸ் ஆகாததால் வழக்கம்போல ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம்னு போனேன். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எதார்த்தமாக பார்த்த நிறைய படங்கள் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு...ராஜதந்திரம்.. டிமாண்டி காலனி... காக்கா முட்டை என பெரிய லிஸ்டே இருக்கு..! 

அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்திற்கு போனேன். படத்தின் போஸ்டரில் 'புன்னகைப்பூ கீதா' கஷ்டப்பட்டு புன்னைகைத்துக் கொண்டிருந்தாங்க. இவரைப்பற்றி நம்மூர் மக்களுக்கு அவ்வளவா தெரியாது. சிங்கையிலும் மலேசியாவிலும் புன்னகைப்பூ கீதா என்றால் புன்னகைக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.. அம்மணி அந்தளவுக்கு பிரபலம்...!

10 வருடங்களுக்கு முன்பு , ஒரு தயாரிப்பாளராக 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் தடம் பதித்தாங்க.. அதில் கலெக்டராக ஒரு ' கெஸ்ட் ரோல் '  கூட பண்ணியிருப்பாங்க.. அப்போ ஹீரோயினா நடிக்க அம்மணிக்கு நிறைய ஆஃபர் வந்தது. 'குளோசப் ஷாட்' ல கொஞ்சம் டொக்காக இருந்தாலும் 'லாங் ஷாட்' ல சிக்குன்னு இருப்பாங்க.. அதுமட்டுமல்ல, வெளிநாட்டு கரன்சியும் ஒரு முக்கிய காரணம். ஓர் திரைவிழா மேடையில் நடிகர் பார்த்திபன், ஹீரோயினாக நடிக்க பகிரங்க அழைப்பு விடுத்தார் அம்மணிக்கு.. வெறும் புன்னகையை மட்டும் அப்போது பதிலாக உதிர்த்துவிட்டு, பார்த்திபனின் உள்நோக்க அழைப்பை அன்போடு நிராகரித்துவிட்டாங்க...

அப்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்து வந்தவருக்கு இப்போது மட்டும் எப்படி மனது வந்தது என்பதுதான் மில்லியன் ரிங்கட் கேள்வி..!

அது சரி.. படம் பார்த்தால் விமர்சனம் செய்தே ஆகவேண்டுமா...?. ம்ம்ம்ம்... கட்டாயம் இல்லைதான். ஆனால் கடுமையான வேலைப்பளுவுக்கிடையில் வாரம் ஒரு முறையாவது எனது வலைப்பூவை தூசி தட்ட இந்த விமரிசனங்கள் எனக்கு உதவி புரிகின்றன.  

அது போகட்டும் படம் எப்படி இருக்கு..?

காவல்துறையின் அருமை பெருமைகளைச் சொல்லும் படங்களின் வரிசையில் பத்தாயிரத்து ஒன்றாவதாக (..ஆஆஆ...வ்...) வந்திருக்கும் தமிழ்ப் படம்தான் இந்தக் காவல்.  ' நீ எல்லாம் நல்லா வருவடா..'  என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு காவலாக மாறி வந்திருக்கிறது.

பொதுவாக காவல்துறை சம்மந்தப்பட்ட படங்கள் எப்படி இருக்கும்..? ஹீரோ ஒரு போலிஸ். நகரத்தில் ஒரு சமூக விரோதி இருப்பான். அவனது பின்னணியில் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பார்கள். அத்தனைப் பின்னணியையும் உடைத்து, அந்தச் சமூக விரோதியை போட்டுத்தள்ளுவான் ஹீரோ... இந்த கிளிசே வகை கருமத்தை வைத்துதான் பல வருடங்களாக ' போலிஸ் ஸ்டோரி ' என நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா...

தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக நடந்த கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு அதற்குக் காரணம் கூலிப்படைதான் என்கிற அறிய கண்டுபிடிப்புடன் படம் தொடங்குகிறது. அத்தனை சம்பவங்களுக்கும் காரணம் கர்ணா என்கிற கூலிப்படைத் தலைவன். சென்னையில் கொலை,கடத்தல்,கட்டப் பஞ்சாயத்து என்று தனி ராஜ்யமே நடத்துகிறான் கர்ணா. இந்தக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போக, கர்ணாவை என்கவுண்டர் செய்ய முதல்வர் ரகசிய உத்தரவை பிறப்பிக்கிறார். அந்த அசைன்மெண்டை செய்து முடிக்க நியமிக்கப்பட்டவர்தான் 'இன்ஸ்பெக்டர்' சமுத்திரகனி..

வசூல் ராஜாக்களாக வலம்வரும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து உட்பட சில 'கடமை தவறாத கண்ணியமிக்க' காவலர்களின் புதல்வராக விமல், அஸ்வின் ராஜா மற்றும் இருவர். தந்தைகள் காக்கிச் சட்டை போட்டு செய்யும் வசூலை மகன்கள் காக்கிச்சட்டை இல்லாமலே செய்கிறார்கள். தந்தையின் செல்வாக்கினால் இவர்களுக்கு கருணாவுடன் நட்பு கிடைக்கிறது.

கர்ணாவை என்கவுண்டர் வலையில் சிக்கவைக்க, விமல் மற்றும் அவரது நண்பர்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் சமுத்திரக்கனி. கர்ணாவுக்கு வைத்த கண்ணியில் அவனது தம்பி சிக்கி பலியாக, கர்ணாவின் கோபத்துக்கு ஆளாகிறார்கள் விமலும் அவரது நண்பர்களும். தன் தம்பி சாவுக்கு காரணமான விமல் மற்றும் அவரது நண்பர்களை கர்ணா பழிவாங்கத் துரத்த, அவர்களைக் காப்பாற்றி கர்ணாவை என்கவுண்டரில் போட துரத்துகிறார் சமுத்திரக் கனி... இறுதியில் யார் பலியாகினார்கள் என்பதே மீதிக்கதை.

ஆரம்பத்தில் விமலை ஹீரோவாக காண்பிக்கிறார்கள். பாவம்; இதில் அவர்  டம்மி பீசு.  நன்றாக ஆடுகிறார்.... ஹீரோயினிடம் வழிகிறார்... அத்தோடு முடிந்தது அவரது வேலை. இப்படியே போனால் யோகிபாபு கேரக்டர் கூட கிடைக்காது அவருக்கு.

நிகழ்ச்சிகளை வடிவமைத்துத்தரும் 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நடத்துகிறார் புன்னகைப்பூ கீதா.. இவரது மந்திரப் புன்னகையில்(!) மயங்கி காதலில் விழுகிறார் விமல். ஆனால் அம்மணி முகத்தில் புன்னகைப்பூக்கும் போதுதான் விமலுக்கு ஒண்ணுவிட்ட அக்கா போல தெரிகிறார். மிஸ்டர் ஏகாம்பரம் (ஒளிப்பதிவாளர்).... எந்த தைரியத்தில் சார் அக்காவுக்கு குளோசப் ஷாட் வச்சீங்க..?. முன்பு ரேடியோ மிர்ச்சியாக இருந்தவர். ஆனால் வாய்ஸ் கூட பிசிறு தட்டுகிறது.  நல்லவேளை அக்காவை ஆடவைக்கவோ அல்லது பாடவைக்கவோ இயக்குநர் முயற்சிக்கவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது விபரீத முயற்சியில் அவர் இறங்கியிருந்தால், 'பேஸ்புக் புகழ் ' கவிக்குயில் கல்பனா அக்காவுக்கு போட்டியாக வந்திருப்பார்.

அக்கா புன்னகைப்பூ கீதா...

ஸ்ட்ரிக்ட் போலிஸ் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி. இந்த விறைப்பு, மொறைப்பு எல்லாம் ஏற்கனவே ஏகப்பட்ட படங்களில் கேப்டனிடம் பார்த்தாச்சு.. இவரை பீச்சில் பலூன் விற்பவராக காண்பிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது உளவு பார்க்க வந்திருக்கிறார் என்று. பிறகு தொப்பியை மாட்டிக் கொண்டு விறைப்பாக சல்யூட் அடிக்கும்போது, "அட போங்கப்பு..... இதெல்லாம் ஒரு ட்விஸ்டா....' என்றுதான் கேட்க தோன்றுகிறது.

காவல்துறையினர் வசூல் சக்ரவர்த்திகளாக இருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க அவர்களை இந்தளவுக்கு மட்டம்  தட்டியிருக்க வேண்டாம். பொதுமக்களிடம் ரவுடிகள் போல கட்டாய வசூல் செய்வது, பிறகு அதை காவல் நிலையத்தில் வைத்து வெளிப்படையாகப் பங்கிட்டுக் கொள்வது என்று ஒரு அரசு இயந்திரத்தை அப்பட்டமாக வெளுத்துவாங்குவது கொஞ்சம் ஓவர். அதனாலையோ என்னவோ இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் காமெடிக்கு எல்லாம் சிரிப்பு வரவில்லை. ' செய்கூலி உண்டு.. ஆனால் சேதாரம் இல்லை ' என்று சிங்கமுத்து தனது மகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடும்போது மட்டும் தியேட்டரில் சிரிப்பொலி. அதையே அடிக்கடி சொல்வதனால் கடைசியில் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்கும் என்று எதிர்பார்த்தால்..நத்திங்.. :-(

புளித்துப் போன கதைதான். ஆனால் காட்சிகளிலும் திரைக்கதையிலும் ஏதேனும் புதுமை புகுத்தி சுவாரஸ்யமாக்கியிருக்கலாம். எந்த புது முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் ஏதாவது மெஸேஜ் சொல்லவருகிறார் என்றால் அதுவுமில்லை.. ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம்மேனன் கரகர தொண்டையில் கதையை சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்.. ஒருவேளை இதுதான் புதுமையோ..!. கூலிப் படைத்தலைவன் பெயர் கர்ணா... அவனது கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் பெயர் அழகிரி... இதில் ஏதாவது குறியீடு இருக்கா..?

மொத்தத்தில்.... காவல் - டம்மி துப்பாக்கி.

Saturday 20 June 2015

பொறியில் சிக்கிய எலி...

முதலில் வடிவேலு இம்சை அரசனின் வெற்றி மமதையிலிருந்து வெளியே வரவேண்டும். அது தமிழ் சினிமாவில் அரிதாக நடந்த வித்தியாசமான முயற்சி. மட்டுமில்லாமல், காமெடி கார்ட்டூன்ஸ் வரைந்து மதனையே பின்னுக்குத்தள்ளி ஆனந்த விகடனை அலங்கரித்த சிம்புதேவன், தான் கற்றுக்கொண்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்தப் படம். அதன் பிறகு அவரெடுத்த அத்தனைப் படங்களும் பாக்ஸ் ஆபிசில் பல்லிளிக்க, தனது யுத்தியை மாற்றிக்கொண்டு அடுத்து புலிவேட்டைக்கு தயாராகிவிட்டார். ஒரு படைப்பாளியாக தனது ரூட்டை அவர் மாற்றிக்கொள்ள, அதில் நடித்த வடிவேல் மட்டும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் வெற்றி எப்படி சாத்தியமாகும்...?

அரசர் காலத்துக் கதை, இந்திரலோகத்துக் கதை என்று நமது வாழ்வியல் எல்லைக்கு அப்பால் சென்றவர் கொஞ்சம் முன்னேறி தற்போதுதான் 60 -களுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து இரு தோல்விகளுக்குப் பிறகும் அதே ஃபார்முலா-வைப் பிடித்துத் தொங்கினால் எப்படி வைகைப்புயல் சார்..?

பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டம் என்பதால் இயக்குநரின் கற்பனைத் திறனும் அந்தக் காலகட்டம் போலவே இருக்கிறது. மொக்கையான கதை. புகைப் பிடிப்பதற்கு(குறிப்பாக சிகரெட்) தடை செய்யப்பட்ட காலகட்டமாக 1960-ஐ கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புகைப் பிடிப்பது தீங்கானது என்பதை ஆரம்பத்தில் விளக்குகிறார்கள்( மெஸேஜ் சொல்றாங்களாமாம்..).

இவ்வளவுதான் கதை.....

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்கிறது பிரதீப் ராவத் கும்பல். அந்தக் கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிடுகிறார் கமிஷனர் ஆதித்யா. கள்ளக் கடத்தலுக்கு காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியும் உடந்தையாக இருக்கக் கூடும் எனக் கணிக்கிறார். ஒட்டுமொத்தக் கும்பலையும் பிடிக்க ஒரு போலிசை உளவாளியாக அனுப்பும் 'ஆபரேசன்' -க்கு திட்டமிடுகிறார் அவர்.

தனது சகாக்களின் துணையுடன் நூதனமான முறையில் சின்னச்சின்ன திருட்டுகளை செய்கிறார் எலிச்சாமி (வடிவேல்). ஒரு போலிஸ் ஆபிஸரின் வீட்டிலே தனது கைவரிசையை காண்பித்து தப்பிக்கிறார். திருடனைப் பிடிக்கும் போலீஸ் மூளையைவிட போலீசிடமிருந்து தப்பிக்கும் திருடனின் மூளையே சிறந்தது என்கிற முடிவுக்கு வரும் ஆதித்யா, அந்தக் கள்ளக் கடத்தல் கும்பலுக்குள் போலீஸ் உளவாளியாக வடிவேலுவை அனுப்புகிறார்.

போலீஸ் ஆகும் தனது கனவை நிறைவேற்றுவதாக ஆதித்யா உறுதி தருவதால் அந்த ஆபரேஷனுக்கு வடிவேல் சம்மதிக்கிறார். இறுதியில் அக்கும்பலை பிடித்தார்களா என்பதே மீதிக்கதை.

இனிமேல்....

வைகைப்புயலின் பழைய மிடுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. வார்த்தைப் பிரவாகமாகட்டும் உடல் மொழியாகட்டும் முன்பைவிட இன்னமும் மெருகேறியிருக்கிறார் என்பதே திண்ணம். ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு கொஞ்சமும் ஒத்துப்போகாத கதை மற்றும் திரைக்கதையமைப்பால் அவரது ஒட்டுமொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயிருக்கிறது.

நல்ல மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார்கள்; பாராட்டுவோம். அதற்கு1960 காலகட்டத்திற்கு ஏன் செல்ல வேண்டும்..? ஒருவேளை வித்தியாசமான முயற்சி என்றால் திரைக்கதையை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மாற்றியமைக்க வேண்டாமா..?   விறுவிறுப்பே இல்லாமல் நகைச்சுவை என்கிற பெயரில் சுவாரஸ்யமின்றி  நகர்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.

பேங்கில் திருடப் போகும் அந்த ஒரு காட்சி மட்டும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. மற்றவை எல்லாம் பழைய மொந்தையில் அதே பழைய கள்..!. கதைக்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவில்லை. வைகைப் புயலை திரையில் காண்பித்தாலே போதும் என நினைத்திருக்கிறது போலும் 'எலி டீம்'.  சூப்பர் ஸ்டாரே 'தண்ணி குடிக்கும்' காலகட்டமய்யா இது...!  ஒரு 'டெக்னிக்' திருடனை போலீஸ் அணுகி உதவி கேட்பது... போலிஸ் ஆசையைக் காட்டி கொள்ளைக் கூட்டத்தில் உளவாளியாக அனுப்புவது... இது போன்ற கதை எல்லாம் ருத்ரா, காக்கிச்சட்டை உட்பட நிறைய படங்களில் பார்த்தாயிற்று.

ராகதேவனுக்குப் பிறகு நான் ரசிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர்.  பிளாக் அண்ட் ஒயிட் காலகட்ட பின்னணி இசையை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பாடல்களும் பின்னணியும் வித்யா 'டக்கராக' இல்லை.. வித்யா மக்கர்..!

தோட்டாதரணிக்கு வாய்ப்பளித்ததற்காக பாராட்டலாம். உள்ளரங்க அமைப்பு எல்லாம் அட்டகாசம். ஆனால் வெளிப்புற காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணியில் செல்ஃபோன் டவரெல்லாம் தெரிகிறது. 60 களில் ஏதுய்யா செல்ஃபோன் டவர்..?

சதா இந்தளவுக்கு கீழே 'இற(க்)ங்கி' வரவேண்டுமா என்கிற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் பாலைவன நீர் வேட்கைக்கு பதநீர் குடித்தது போல குளுகுளுவென இருந்தது அம்மணியின் பிரவேசம்.... (   ஹி.... ஹி.... பிரதேசமும்...! ).  ஏற்கனவே ஷங்கரின் சிவாஜி நாயகியை ஒரு பாட்டுக்கு ஜோடியாக்கி சின்றின்பம் அடைந்த வைகைப்புயல், தற்போது அந்நியன் நாயகியுடன் ஆட்டம்போட்டு ஆசையை (நடிப்பாசையைத்தான்) தீர்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தப் படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஐஸ்வர்யாராயுடன் ஆடி தனது பிறவிப் பயனை அடைவார்.

சம்மந்தமே இல்லாமல் ஒரு இந்திப்பாடல் வருகிறது. ஒருவேளை வைகைப்புயல் அபிநயா நடனக் குழுவில் சேரப் போகிறாரோ என்னவோ.. இருக்கிற 'போர்' ரில் இது வேறு..!  தியேட்டரில் அமர்ந்திருப்பவர்களை வலுக்கட்டாயமாக எழுப்பி ' பாத்ரூம் போயிட்டு.. அப்படியே ஒரு தம் போட்டுட்டு வாங்க பாஸ்..' என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதத்தால் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் தனது சீட்டுக்கு அடியில் தானே வெடிவைத்துக் கொள்கிறாரே என்று கடந்த வாரம் புலம்பியதைத்தான் இந்தவாரமும் தொடர வேண்டியிருக்கிறது. நடிகர் சூரி முன்னணி நடிகர்கள் நடிக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற செய்தி வேறு பீதியை கிளப்புகிறது.

தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் தமிழ்திரை நகைச்சுவை உலகில் தனி அடையாளமாக விளங்கிய வைகைப்புயலின் இடத்தை அவரைத் தவிர வேறுயாராலும் நிரப்ப முடியாது. சந்தானமும் வைகைப்புயலும் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும்..!

அதெல்லாம் சரி.. படம் எப்படி இருக்கு..?Saturday 13 June 2015

சந்தானம் இனிமேல் இப்படித்தானா..? இனிமேல் இப்படித்தான் படத்தின் ஒலித்தகடு வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதையை எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொன்னார் சந்தானம். அவரது லொள்ளு சபா சகாக்கள் அவரிடம் ' ஒன் லைன் ' ஒன்றை சொன்னார்களாம். 'எந்த விசயத்திற்கும்' ஆப்ஷன் வேண்டுமென்று கேட்கும் சந்தானம் இதற்கும் ஆப்ஷன் கேட்க, நிறைய ஒன் லைன்களை ஊதித் தள்ளினார்களாம் அவரது அடிபொடிகள் . இறுதியில் இக்கதையத்தான் தேர்வு செய்தாராம் சந்தானம்.

ஹீரோ ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிக்கிறான்; அவளும் கூட. சந்தர்ப்ப சூழலால் வீட்டில் பார்க்கும் பெண்ணை நிச்சயம் செய்யும்படி ஆகிறது. காதலியா.. அல்லது நிச்சயம் செய்த பெண்ணா.. என்கிற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறான் ஹீரோ. ஒருபுறம் காதலனாகவும் மறுபுறம் மாப்பிள்ளையாகவும் நடிக்கிறான். ஒருகட்டத்தில் குட்டு வெளிப்படுகிறது. இறுதியில் யாருடன் சேர்கிறான் என்பதை ஒரு திருப்பத்துடன் சொல்லவேண்டும்.

அவ்வளவு கதைகளை அலசி ஆராய்ந்து இறுதியில் தமிழ் கூறும் திரையுலகில் இதுவரை சொல்லப்படாத(!) இக்கதையைத்தான் தேர்ந்தெடுத்தார்களாம். ஆனால் இதே கதையமைப்பில் 'வீரா' என்ற ஒரு படம் வந்தது அவர்களுக்கு நினைவில்லை போலும்.  அதுசரி... 'இன்று போய் நாளை வா..' படத்தை அப்படியே சுட்டு க.ல.தி.ஆசையா என்று பெயரில் திருட்டு ரீமேக் செய்து உண்மையான படைப்பாளி கே.பாக்யராஜ்-க்கு எந்த கிரடிட்டும் கொடுக்காதவராச்சே நம்ம சந்தானம்..!

வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் படங்களில் அவர்களுக்கு இணையான பாத்திரம் வேண்டுமென்று அடம்பிடித்து, தன்னையையும் ஒரு ஹீரோவாக 'பில்டப்' செய்துகொண்ட சந்தானம், வ.பு.ஆயுதம் படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். முதல் அடியே சறுக்கியது. அதில் கற்ற பாடத்தை முன் அனுபவமாகக் கொண்டு அடுத்தப் படத்தில் பட்டையைக் கிளப்புவார் எனப் பார்த்தால், நான் இனிமே அப்படித்தான் என்று குழப்பிய அதே குட்டையில் மீன் பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகரை... திரையில் பார்த்தாலே சிரிக்கத்தோன்றும் முக அமைப்பு உடைய ஒரு நடிகரை..  ஒரு ரொமான்ஸ் அமுல் பேபியாகக் காண்பித்தால் எப்படியிருக்கும்..?  நாயகி பின்னால் காதலைச் சொல்ல அலைவது.... காதலை நிரூபித்து அவளைக் கவர விபரீத செயல்களை செய்வது... காதல் கை கூடியவுடன் விதவிதமான காஸ்டியூமில் டூயட் பாடுவது... தமிழ்சினிமாவின் இது போன்ற  கிளிசே வகை காட்சிகளில் நடிக்க சந்தானம் எதற்கு..? இளம் ஹீரோக்கள் யாரையாவது போட்டு எடுத்திருக்கலாமே..

படம் முழுக்க கலர்கலரான டீஷர்ட்' , விதவிதமான ஜீன்ஸ் பேன்ட், உயர்ரக சப்பாத்து என ஒரு 'ஹைகிளாஸ்' இளைஞனாக வருகிறார் சந்தானம். சமையலறைக்குக் கூட அதே 'ஷு ' வுடன்தான் செல்கிறார். தன் காதலி கொடுத்த பரிசைத் தேடும்போது அதே 'ஷு 'வுடன் தான் படுக்கும் கட்டிலின் மேலே ஏறித் தேடுகிறார். தனது தாய் மாமாவை(தம்பி ராமையா) சர்வ சாதாரணமாக வாடா போடா என அழைக்கிறார். வழக்கமான நக்கலும் உடல்மொழியும் அவரிடம் இல்லை. அவர் பேச்சில் அந்தத் தொனியும் இல்லை. ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார். மொத்தத்தில் 'நம்ம சந்தானம்' நம்மிடமிருந்து கொஞ்சம் விலகியே நிற்கிறார் . எங்கு தேடினாலும் நல்லதம்பியும் பார்த்தசாரதியும் கிடைக்கவே இல்லை.

ஒரு நகைச்சுவை நடிகர் ஒரே பாய்ச்சலில் நாயகனாக பதவி உயர்வு அடையும் போது தனது பழைய பாணியை கைவிட்டு புதிய பாணியில் நடிப்பதில் என்ன தவறு.?. நல்ல கேள்விதான். ஆரம்பத்தில் வில்லனாக தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய நிறைய நடிகர்கள் பிற்காலத்தில் ஹீரோவாக சக்கைப்போடு போடுவது நிகழ்கால தமிழ்ச்சினிமா வரலாறு. ஆனால் ஒன்றை யோசித்துக் பாருங்கள். நகைச்சுவை நாயகர்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு..?. அவர்களை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம்மிடம் இல்லையா..?.  காரணம் அதுவல்ல.

வில்லனாக அறிமுகமாகி முத்திரைப் பதித்து பின்பு கதாநாயக அந்தஸ்தை அடைந்தவர்களைப் பட்டியலிட்டு பாருங்கள்; புரியும். வில்லனாக நடிக்கும்பொழுது தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர்கள் ஹீரோவான பின்பும் அதே ஸ்டைலை பின்பற்ற செய்வார்கள். நிரம்ப கெட்டவனாக நடித்த ஒரு நடிகர், திடீரென்று நிரம்ப நல்லவனாக நடித்தால் நமது சினிமா புத்தி ஏற்றுக்கொள்ளாது. சத்யராஜ், ரஜினி,கமல்,பிரபு போன்ற நடிகர்கள் வில்லனிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தப் போதும் தனது பழைய வில்லத்தனம் அடுத்தடுத்து வந்தப் படங்களில் சிறிதளவாவது இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள்.

அதேப்போல நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுக்கும்பொழுது  தனது பழைய பாணியை மொத்தமாக மாற்றாமல் நகைச்சுவையோடு பின்னிப் பிணைந்த கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கதையில் காமெடி வரக் கூடாது. காமெடியில் கதைவர வேண்டும். இம்சை அரசனின் மெகா வெற்றியும், நான் தான் பாலாவின் படுதோல்வியும் அதைத்தான் உணர்த்துகிறது.  தனது காமெடி இமேஜை மொத்தமாக தூக்கி எறிந்துவிட்டு ரொமான்ஸ் அல்லது ஆக்சன் ஹீரோவாக மட்டும்தான் இனிமேல் நடிப்பேன் என்கிற முடிவுக்கு சந்தானம் வருவார் எனில் , அவரது சீட்டின் அடியில் அவரே வெடிவைத்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.

இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க என கேட்பது புரியுது. சந்தானத்தை ஒரு ரொமான்ஸ் ஹீரோவா ஏத்துக்க முடியல பாஸ்.. அவர் டூயட் ஆடுவதையும் பைட் பண்ணுவதையும் பார்க்கவா நாங்க தியேட்டருக்கு போறோம்..?அதைத்தான் இப்போ வருகிற எல்லா ஹீரோக்களும் செய்கிறார்களே...!


அதெல்லாம் விடுங்க.. படம் எப்படி இருக்கு...?
டத்தில் மொக்கை காமெடியா சொல்லி வெறுப்பேத்துவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பத்து நிமிடத்திற்கு ஒரு பாட்டை போட்டு கொலையா கொல்றாங்க. அத்தனைப் பாட்டுக்கும் சந்தானம் டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அடுத்த பிரபுதேவா ஆவதுதான் அவரது அடுத்த இலக்கு போல..

" டே.... ய். மெகா சீரியல் பாத்து அழுவாத பொம்பளையும் கிடையாது.. மேரேஜ் சிடி பாத்து அழுவாத ஆம்பளையும் கிடையாது.."

"பொண்ணு லட்டு மாதிரி இருக்கும் தம்பி.." ..  "லட்டு மாதிரினா.. மூஞ்சில திராட்சை, முந்திரி எல்லாம் ஒட்டியிருக்குமா.."

இதற்கெல்லாம் நம்மை சிரிக்க சொல்றாங்க பாஸ். கட்டாயம் சிரித்தே ஆகவேண்டும் என்றால், விஜய் டிவி சிரிச்சா போச்சி ரவுண்டுல இப்போ நேரா வந்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறாங்களாம். அதுமாதிரி யாராவது ஒரு ஆளை செட் பண்ணி படம் பார்க்க வருகிறவர்களை கிச்சு கிச்சு மூட்டினால் தான் உண்டு. என்னை விட்டால் இதே மாதிரி மொக்கை வசனங்கள் பக்கம் பக்கமா எழுதுவேன். இதைத் தவிர்த்து காட்சியமைப்பில் நகைச்சுவை வைத்திருக்கலாம்.

இதில என்ன கொடுமை என்றால் இந்த மொக்கை ஜோக்குக்கு எல்லாம் பின்னாடி உட்கார்ந்திருந்த ஒருத்தர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். படம் முடிந்த பிறகு, கள்ளங்கபடமில்லா அந்த பிஞ்சு முகத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். படம் முடிந்து பார்த்தால் அவர் கொஞ்சம் வயதான ஆள். அவருக்கு உடம்பு சரியில்லை போல. ஏசி காற்று ஒத்துக் கொள்ளாமல் இருமிக்கிட்டு இருந்திருக்காரு.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சந்தானத்துக்கு மாறி மாறி முத்தம் கொடுப்பதற்கே இருவருக்கும் நேரம் போதவில்லை. VTV கணேஷ் மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள்... இருக்கிறார்கள்...! தவளை புகுந்த தொண்டையை வச்சி இவர் பேசுறத கேட்பதற்கு இனிமேல் நமக்கு சக்தி கிடையாது. "இங்க என்ன சொல்லுது.." என்கிற ஒற்றை டயலாக்கில் நம் நெஞ்சாங்கூட்டை தொட்டவர், இதில் தொட்டதுக்கெல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார். 'தம்பி' ராமையா.. மொதல்ல உங்க பெயரை 'அண்ணன்' ராமையா என மாற்றுங்கள். இந்த வயசான காலத்துல பேரன் வயதில் இருக்கும் ஒருவர் உங்களை 'வாடா.. போடா..' என்று அழைப்பது எங்களுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. " நேசனல் அவார்டு எல்லாம் வாங்கியிருக்கேன். வாங்கடா..போங்கடானாவது பேசுயா.." என சொல்லியிருக்க வேண்டாமா..?

லாஜிக் மிஸ்டேக் பத்தியெல்லாம் எதுவும் சொல்லப் போறதில்லை. ஹீரோயின் எத்தனை நைட்டீஸ் வச்சிருக்கார்... எத்தனை பேண்டீஸ் வச்சியிருக்கார்.. அதை இப்போ யார்யார் போட்டிருக்காங்க என்பதை பற்றியெல்லாம் ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்கிறவர், 'அவளுக்கு ஒரு அக்கா இருக்கா..' என அவளது தோழியிடம் அப்பாவியாய் கேட்கும்போது லாஜிக் பல்லிளிக்கிறது.

படத்துக்கு பட்ஜெட் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் பட்ஜெட்ல பாதி சந்தானத்துக்கு டீஷர்ட் வாங்குவதிலே செலவாகியிருக்கும். ஒரு ஃபிரேமுக்கு ஒரு டீஷர்ட்-ல் வருகிறார். ஆர்யா இடத்தை பிடிக்காமல் விடமாட்டார் போல.. :​- ).

முன்பாதி மசமச வென்று நகர்கிறது. பின்பாதி சவசவ என என்று செல்கிறது. கடைசி 15 நிமிடங்களில் வரும் திருப்பங்கள் ஓரளவு படத்தைக் காப்பற்றுகிறது. அந்த கிளைமாக்ஸ் எதிர்பாராதுதான். இரண்டே கால் மணிநேர படத்தில் அது ஒன்று மட்டுமே ரசிகர்களுக்கு திருப்தியைக் கொடுத்துவிடுமா..?  

வீக் எண்டுல வீட்ல இருந்தா வேலை செய்ய சொல்லிடுவாங்களா என்கிற அச்சத்தில் இருப்பவர்களும், அக்னி வெய்யிலின் அனலை தாங்க முடியாம 2 மணி நேரம் ஏசியில் உக்கார்ந்தா தேவல.. என்று ஃபீல் பண்ணுகிறவர்களும் இந்தப் படத்திற்கு போய்விட்டு வரலாம்.


Sunday 7 June 2015

காக்கா முட்டை - படமாய்யா இது..!


டிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அந்த வயதில், தமிழ்சினிமாவில் பலகாலங்கள் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு முதிர்ந்த நடிகனின் உணர்வுகளை அந்த பிஞ்சு முகத்தில் கொண்டுவந்த சின்ன காக்கா முட்டையை பாராட்டுவதா அல்லது பெரிய காக்கா முட்டையை பாராட்டுவதா..

கூட மேல கூட வச்சி கிறங்கடித்த ஒரு நடிகை இரண்டு சிறுவர்களுக்கு தாயாக, ஒரு டிபிகல் குப்பத்து பெண்மணியாக வாழ்ந்தே காண்பித்து இருக்காரே அவரைப் பாராட்டுவதா..

தனது பேரக்குழந்தைகளுக்கு சக தோழியாக, மருமகளுக்கு ஒரு அம்மாவாக வாழ்ந்து, கடைசியில் தனது இயலாமையை எண்ணி உயிர்விடும் அந்த பாசக்கார கிழவியைப் பாராட்டுவதா..

'நாம் திருடுறோமா...' என்று அப்பாவியாய் அச்சிறுவர்கள் கேட்க, 'இல்ல எடுக்குறோம்...' என்று ஏகாதிபத்தியதிற்கு எதிரான சிந்தனையை ஒற்றை வார்த்தையில் உதிர்த்து, வரும் ஒன்றிரண்டு காட்சிகளிலே நம் மனதை நெகிழவைத்த பழரசத்தை பாராட்டுவதா...

படம் முழுக்க கெட்டவர்களாக காட்சிப் படுத்தப்பட்டாலும் 'இவர்கள் நல்ல கெட்டவர்கள்ப்பா...' என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு டீசண்டான திருடர்களாக வந்து கிச்சு கிச்சு மூட்டிய 'தல' ரமேஷ் திலக், யோகிபாபு -வை பாராட்டுவதா...

ரயில் பயணிகளிடம் செல்போன் திருடும் சிறுவர்கள் , பீட்சா ஓனர் பாபு ஆண்டனி, அவசரக்குடுக்கை கிருஷ்ணமூர்த்தி, பணத்துக்காக எந்த லெவலுக்கும் போகும் எம் எல்.ஏ., பழைய சாமான்கள் எடைக்கு வாங்கும் கடையிலிருக்கும் அந்தப் பெண்மணி என பெரிய பட்டியலே நினைவுக்கு வருகிறது...!

இதில் யாரைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...!அதைவிட திரைக்குப் பின்னாலிருந்து இவர்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு அந்த பீட்சா கடையையே எழுதிவைக்கலாம். கதை எளிமையானது என்றாலும் அதை நகர்த்திச்சென்ற விதம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதிய பாதை.

படத்தின் பலம் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்.  இது அத்தனையையும் ஒன் மேன் ஆர்மியாக தூக்கிச்சுமந்த இயக்குநர் மணிகண்டனுக்கு சிரம் தாழ்த்திய வாழ்த்துகள். நிச்சயமாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இப்படத்தை தயாரிக்க முன்வராமல் போயிருந்தால் இதுவொரு குறும்படமாக எடுக்கப்பட்டு பத்தோடு பதினொன்றாக போயிருக்கும்.

படம் பார்த்து இரண்டு நாட்களாகிறது. இதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவே இல்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்குப் பிறகு இப்போதுதான் அப்படியொரு உணர்வு..!

உலகத்தரம் என்பது தொழில்நுட்பத்தில் இல்லை. சமூகத்தின் வாழ்வியலை நேர்த்தியாகப் படம் பிடிப்பதில் தான் இருக்கிறது..!

காக்கா முட்டை - தமிழ் சினிமாவின் தங்க முட்டை...!