Monday 20 July 2015

மாரி.. ஐயாம் வெரி சாரி..!நேற்றுதான் மாரி பார்த்தேன்..

விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து சிரிப்புக் காட்டிக்கொண்டிருந்த சிவகார்த்தியகேயனை காமெடியனாக அறிமுகப்படுத்தி, பிறகு மாஸ் ஹீரோவாக்கி எப்படி தெருமுக்குல கிடந்த ஆப்பை எடுத்து தெனாவெட்டாக செருகிக் கொண்டாரோ, அதேப்போல் விஜய் டிவி புகழ் ரோபோ சங்கரை திரும்பவும் சோலோ காமெடியனாக வாய்ப்பளித்து அடுத்தாக ஹீரோவாக்கி இன்னொரு ஆப்பையும் செருகிக்கொள்ள தனுஷ் எடுத்திருக்கும் மற்றொரு முயற்சியே இந்த மாரி.

புறாப் பந்தயம்தான் படத்தின் மையம். அதன் மூலம் இரு குழுவுக்குள் நடக்கும் அடிதடியே படத்தின் ஒன் லைன். இதில் சம்மந்தமில்லாமல் சமீபத்திய பரபரப்பு நிகழ்வான செம்மரக் கடத்தலை இடைச்செருகியிருக் கிறார்கள்.

திருவில்லிக்கேணி பகுதியின் ' ஒன் மேன் தாதா ' மாரி. தொழில்- மார்கெட்டில் கட்டாய வசூல் & அடிதடி. பொழுதுபோக்கு- புறாப் பந்தயம். மாரியின் இடத்தைப் பிடிக்க முயல்கிறான் இன்னொரு தாதா ' பேர்ட் ' ரவி. இந்நிலையில் அப்பகுதிக்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன், பேர்ட் ரவியை கையில் போட்டுக் கொண்டு மாரியை ' உள்ளே ' தள்ளி அந்த இடத்தைக் கைப்பற்றுகிறார். இழந்த தனது இடத்தையும் அடையாளத்தையும் திரும்பவும் அடைந்தானா மாரி என்பதே படத்தின் கதை.. 

வித்தியாசமான கதைக்களம் என்று கூட சொல்ல முடியாது. சேவல் சண்டையை மையப்படுத்தி அதன் மூலம் மானிட உணர்வுகளிலிருந்து வெடித்துக் கிளம்பும் வன்மம், ஈகோ, துரோகம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தாக்கங்களை நேர்த்தியாக சொல்லி தேசிய அளவில் பாராட்டை அள்ளிய ஆடுகளம் போல இதில் புறாப் பந்தயத்தைக் கையிலெடுத்திருக்கிறார் தனுஷ்.

தன் உடல் வாகுக்கும் தனக்கிருக்கும் ' நம்ம வீட்டு பிள்ளை ' இமேஜுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாத 'தாதா' கேரக்டர் தனுசுக்கு. ஹீரோ ஒரு லோக்கல் தாதா. அவரோட கெட்டப் எப்படி இருக்கணும்..? தமிழ் சினிமாவில் அவரை எப்படி அடையாளப்படுத்தணும் ..? இது கூடவா தெரியாது. எத்தனை தமிழ் சினிமா பாத்திருக்கோம்.. சின்னக் குழந்தைகிட்ட கேட்டா கூட சொல்லிடுமே..!

சைக்கிள் செயின் சைஸில் கழுத்து நிறைய ஜொலிக்கும் தங்கம், லோக்கல் கூலிங் கிளாஸ், தடதடக்கும் புல்லட், முண்டா பனியன் முக்கால் வாசி தெரியும்படி பட்டன் இல்லாத ஜிகுஜிகு சட்டை, கூட ரெண்டு அல்லக்கைகள்.. இது வெளிப்புற அடையாளம். ரொம்ப கெட்டவன்தான்; ஆனால் கொஞ்சம் நல்லவன், முரடன்தான்; ஆனால் கல்லுக்குள் ஈரம்போல காதல், கருணை இருக்கும், அடிச்சிப் புடுங்கனும்; ஆனா யாருக்கும் தெரியாம படிப்பு செலவுக்கு உதவி பண்ணனும், இதை அப்படியே காப்பி பண்ணி யாரெல்லாம் ரவுடி கெட்டப்புல ஹீரோவா நடிக்கிறாங்களோ அவுங்க மேல பேஸ்ட் பண்ணி போடணும்..

அஜித் மேல பேஸ்ட் பண்ணினா அது ரெட்,  விக்ரம் மேல பண்ணினா ஜெமினி, சிம்புவுக்கு காளை, சூர்யாவுக்கு ஸ்ரீ...இந்த வரிசையில கடைசியா ஒல்லிபிச்சான் தனுஷ் மேல பேஸ்ட் பண்ணியிருக்காங்க.. கூட கொஞ்சம் 'ஹேய்.... செஞ்சிடுவேன்..." என்ற பஞ்ச டயலாக்கை சேர்த்துவிட்டால், முடிந்தது மாரி கெட்டப்.

' செஞ்சிடுவேன்....' என்றால் எங்கூர் பக்கம் வேறொரு அர்த்தம். அதுவும் பொண்ணுங்க கிட்ட சொன்னா தோலை உரிச்சி தொங்க போட்டுடுவாங்க.. 

ஒரு தாதாவுக்குரிய மிரட்டலான குரலும், பாடி லாங்குவேஜும் திரையில் வருவதற்கு நிறையவே மெனக் கெட்டிருக்கிறார் தனுஷ். அவரைப் போன்ற பிறவி நடிகனுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர். ஆனால் அதை மட்டும் வைத்துகொண்டு அவரை ஏரியாவுக்கே தாதா என்று சொன்னால் அந்த ஏரியா பிச்சைக்காரன் கூட நம்பமாட்டான் ஸாரே.. 

ரோபோ ஷங்கருக்கு இவ்ளோ ' வெயிட் ' கொடுத்ததற்கான காரணம் புரியவில்லை. ஒவ்வொரு காட்சியும் ரோபோ சங்கரின் 'பன்ச்' சோடுதான் முடிகிறது. பாரில் தண்ணியடிக்கும் காட்சியும், வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் ரோபோ. மற்ற இடங்களில் மொக்கை போடுகிறார்.


காஜல் அகர்வால் நடத்தும் பேஷன் டிசைன் கடையில் தனுஷ் பார்ட்னராக சேர்ந்து அவருக்கு தனுஷும் ரோபோ ஷங்கரும் குடைச்சல் கொடுப்பது போல நிறைய காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குனர். கொடுமை என்னவென்றால் அதெல்லாம் காமெடியாம். ஸ்ஸ்ஸப்பா..முடியில. நிலக்கடல வேர்க்கடல பொட்டுக்கடல..  இதுக்கெல்லாம் எனக்கு சிரிப்பே வரல..

போலீஸே பொறுக்கியாக மாறும் வில்லன் கேரக்டர் விஜய் யேசுதாசுக்கு. வெட்டு சங்கராக 'தில்' காட்ட வேண்டியவர் அமுல் பேபியாக அசடு வழிகிறார். வாட்ட சாட்டமான உடல்வாகுதான். ஆனால் ஒரு பொறுக்கி போலிஸுக்கான விறைப்பு, திமிரு, அதட்டல், மிரட்டல் கொஞ்சமாவது வேண்டாமா..?  

ஓபனிங் சாங்கில் ஆண்ட்ரியா புகழ் அனிருத் என்ட்ரி கொடுக்கிறார். ஹீரோவுடன் டான்ஸ் வேற. சகிக்கல பாஸ்.... 

ஓபனிங் சாங்கில் தனுசின் ஆட்டம், ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ரோபோ, புறாப் பந்தய சுவாரஸ்யம், இறுதி சண்டைக்காட்சி, தனுசுக்கும் காஜல் அகர்வாலுக்கும் டூயட் சாங் இல்லாதது என்று சில பிளஸ்கள் இருந்தாலும், சப்பையான கதைக்கு மொக்கையான திரைக்கதையானதால் இன்னொரு சுள்ளானாக வந்திருக்கிறது இந்த மாரி. 

மாரி..  ஐயாம் வெரி சாரி..! 


Saturday 11 July 2015

பாகுபலி...பலே பலி..!

ன்னர்கள் காலத்துக் கதை. ஒரு ஊர்ல... என ஆரம்பிக்கலாம் என்றுதான் ஆசை. ஆனால் என்ன செய்வது, கதை மாந்தர்களை மட்டும் சொல்லிவிட்டு மீதியை அப்புறம் சொல்கிறேன் என்றால் எப்படி இருக்கும்...?

நள்ளிரவுக்காட்சி என்பதால் இடைவேளை விடாமல் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். போர்க்கள காட்சிகளு- க்குப் பிறகு சத்தியராஜ் முக்கியமான ட்விஸ்ட் ஒன்றை சொல்கிறார்... அட என்று நிமிர்த்து உட்கார்ந்த நேரத்தில் தியேட்டரில் மின் விளக்கை போட்டார்கள். இண்டர்வல் பிளாக் சூப்பர்ரா இருக்குப்பா என நினைத்துக் கொண்டிருந்தால், படம் முடிந்துவிட்டது கிளம்புங்க என்கிறார்கள்.

கதையில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்காமல், தத்ரூப காட்சிகளாலும் பிரமிப்பூட்டும் போர்க்கள பிரும்மாண்டத்தினாலும் மட்டுமே என்னைப் போன்ற ஓர் சராசரி சினிமா ரசிகனை திருப்தி படுத்திவிட முடியுமா என்கிற கேள்வி, படம் முடிந்தவுடன் என்னைப் போல் நிறைய பேரின் மனத்துக்குள் எழுந்திருக்- கலாம்.

பொதுவாக இரண்டாம் பாகம் என்று வருகிறபொழுது , முதல் பாகத்தில் ஒரு கதையை சொல்லி , அதன் திரைக்கதையில் நிறைய முடிச்சுகளை வைத்து அதே பாகத்தில் அம்முடிச்சுகளை அவிழ்த்து சுபம் என்று முடிப்பார்கள். இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான ஒரே ஒரு 'லீட்' மட்டும் வைத்து படத்தை ' தொடரும் ' என்றும் முடிப்பார்கள். ஆனால் பாகுபலியில் இடைவேளையோடு எழுந்து வந்தது போன்ற உணர்வு . 

பொதுவாக விமர்சனம் எழுதும்போது கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திவிட்டு, பாதி கதையை சொல்லி, முக்கிய திருப்பங்களை சொல்லாமல் ' மீதியை திரையில் காண்க ' என முடிப்பது தொன்று தொட்டு திரை விமர்சகர்களால் பின்பற்றப்படும் நடைமுறை..  ஆனால் இதில் அவர்கள் சொன்னதே பாதி கதைதான் என்பதால் அதை அப்படியே சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

பாகுபலி பாகம் 1-ன் மையக்கதை " 25 வருடங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு, அடிமைப்போல சிறைவைக்கப் பட்டிருக்கும் ஒரு அரசியை அவளது மகன் மீட்டு வருவது..." . கிட்டத்தட்ட எம்ஜியாரின் அடிமைப்பெண் படத்தின் ஒன் லைன்.

# ரம்யாகிருஷ்ணன் தனது முதுகில் பாய்ந்த அம்பைப் பொருட்படுத்தாமல் ஒரு குழந்தையைக் காப்பற்ற தப்பித்து ஓடுகிறார். இறுதியில் குழந்தையை பழங்குடி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அக்குழந்தை வளர்ந்து பிரபாஸ் ஆகிறது.

# நாட்டுக்கு எதிராக போராடும் ஒரு போராளிக்குழுவில் தமன்னா இருக்கிறார். அரசி தேவசேனாவை மீட்க வேண்டும் என்பது அவர்களது லட்சியம்.

# அரண்மனை வளாகத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு அடிமைப் பெண்ணாக முடங்கிக் கிடக்கிறார் அனுஷ்கா. அவரது அடிமைத்தளையை உடைத்தெறிய தைரியமில்லாத குற்ற உணர்ச்சியில் சத்யராஜ்.

இம்மூன்றுக்கும் முடிச்சி போடவேண்டும். பிறகு அம்முடிச்சிகளை அவிழ்க்க வேண்டும். இதுதான் பாகுபலி படத்தின் கதை.

தமன்னா மீது கொண்ட காதலால் யாரென்றே தெரியாமல் அனுஷ்காவை மீட்டு வருகிறார் பிரபாஸ்.. பிறகு அவர்தான் பிரபாஸின் அம்மா எனத் தெரியவருகிறது. அப்படியானால் பிரபாஸ்...?. பிளாஷ்பேக் விரிகிறது...


லைகளுக்கு உச்சியில் மகிழ்மதி என்றொரு தேசம்.

மகேந்திரன் என்னும் பேரரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவர் பிங்கால தேவன்(நாசர்) கை ஊனமான மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்).  இளையவர் மதிகூர்மையும், வீரமும் செறிந்த தீரேந்திரன்(பிரபாஸ்).

அரசரின் மறைவுக்குப் பின்னர் , மூத்தவர் பிங்கால தேவருக்கு கிடைக்க வேண்டிய அரசர் பட்டம், மதிகூர்மை உடைய இளையவர் தீரேந்திரனுக்குக் கிடைக்கிறது. தனது ஊனத்தினால் தான் அரசாட்சி செய்யும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்கிற தவறான சிந்தனை, மூத்தவர் பிங்கால தேவனின் மனதில் வஞ்சத்தை விதைக்கிறது. அரசர் பதவி தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனது வாரிசு அரியணையில் அமரவேண்டும் என்கிற வெறி, நயவஞ்சக சூழ்ச்சி செய்ய அவரைத் தூண்டுகிறது.

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அரசர் தீரேந்திரன் இறந்துவிடுகிறார். அந்த நேரத்தில் மூத்தவரின் மனைவி சிவகாமி தேவிக்கும் இளையவரின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. இரண்டும் ஆண் குழந்தைகள். இளையவரின் மனைவி பிரசவிக்கும் போது இறந்து விட்டதாக செவிலித்தாய் சொல்கிறாள்.

மன்னர் இறந்த துயரத்தில் அரண்மனையே பொலிவிழந்து துக்கத்தில் மூழ்கிவிட, ஆட்சியைக் கைப்பற்ற உள்ளடி வேலைகள் நடக்கிறது. அதை ஆயுதங்களை நிர்வகிக்கும் தனது விசுவாசி கட்டப்பா (சத்யராஜ்) உதவியுடன் முறியடிக்கிறார்  சிவகாமிதேவி. வேறுவழியில்லாமல் அவரே அரியணையில் ஏறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.ஆனால் அவர் ஆட்சி செய்யாமல் இளையவாரிசை இளவரசனாக்க முடிவு செய்கிறார். இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பிங்காலதேவன், தமது மகனை இளவரசனாக்கும் படி கேட்டுக் கொள்கிறார்.

ஆனால், இதை சிவகாமி தேவி மறுக்கிறார். இரண்டு புதல்வருக்கும் அரியணையில் ஏறும் தகுதி இருக்கிறது. பிற்காலத்தில் இருவரில் வீரத்தில் சிறந்தவன் எவனோ..மக்கள் மனதில் நிற்பவன் எவனோ.., அவனே ஆட்சிக் கட்டிலில் அமரட்டும்.. இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம் என்று ஆணையிடுகிறார்.

மூத்தவர் பிங்கால தேவனின் மகன்தான் பல்வாள் தேவன்(ரானா). இறந்துபோன அரசன் தீரேந்திரனின் மகன் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்). இருவருமே சிறுவயதிலிருந்தே வீரத்தில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் விவேகம் என வருகிறபோது பல்வாள் தேவனைவிட பாகுபலி ஒரு படி மேலே நிற்கிறார்.

இருவரும் வீரமிக்க ஆண்மகனாக வளர்ந்து நிற்கும் வேளையில் காலகேயர்கள் என்கிற அரக்கர்கள் போர் தொடுத்து வரப் போவதாக செய்தி வருகிறது. மகிழ்மதி தேசத்தையும் அதன் மானத்தையும் காக்கும் பொறுப்பு இருவருக்கும் வருகிறது. இருவரில் யார் மிகப்பெரிய வீரன் என்று சோதனை செய்யும் சந்தர்ப்பமாகவும் அது அமைகிறது.

தன் மகனுக்கு முடிசூடுவதற்கு சரியான தருணத்திற்காக காத்திருந்த பிங்காலதேவன் 'முடியை முடிப்பவன் முடி. காலகேய தலைவனை எவன் கொல்கிறானோ அவனுக்கே மகிழ்மதியின் அரியாசனம்' என சொல்கிறார். அதை சிவகாமிதேவியும் ஆமோதித்து படைகளை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்துத் தருமாறு உத்தரவு இடுகிறார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிங்கால தேவன் தனது மகனுக்கு நவீன ஆயுதங்களையும், பாகுபலிக்கு கோட்டையைத் தகர்க்கும் கலன்களை மட்டும் கொடுக்கிறார்.

போர் ஆரம்பமாகிறது. நவீன ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளை பல்வாள்தேவன் துவம்சம் செய்ய, தனது சாதூர்யத்தால் புதிய யுத்தியை பயன்படுத்தி எதிரி படைவீரர்களை வீழ்த்துகிறார் பாகுபலி. ஒரு கட்டத்தில் காலகேய படைகள் மகிழ்மதி படைகளைப் பின்வாங்க செய்து கோட்டையை நோக்கி முன்னேறி வருகிறது. தோல்வியின் விளிம்பில் மகிழ்மதி படை. கடைசியாக தங்களது பிரம்மாஸ்திரம்மான திரிசூல வியூகத்தை கையில் எடுக்கிறார்கள் பல்வாள்தேவனும் பாகுபலியும்.

காலகேய படைத்தலைவனை வீழ்த்த, பல்வாள்தேவனும் பாகுபலியும் இருமுனைத் தாக்குதலைத் தொடுக்கின்றனர். திரிசூல வியூகத்தால் நிலைகுலைந்துபோன காலகேய தலைவன், மகிழ்மதி நாட்டு மக்களை மனிதக் கேடையங்களாக நிறுத்துகிறான். எப்படியாவது காலகேய தலைவனின் தலையை எடுத்துவிட்டு அரியணையில் ஏறவேண்டும் என்கிற வெறியில் தனது நாட்டு மக்களின் உயிரை துச்சமாக மதித்து முன்னேறுகிறான் பல்வாள்தேவன். ஆனால், தன் மக்களைக் காப்பாற்றிய பிறகே காலகேய தலைவனை வீழ்த்தவேண்டும் என்று புதுயுத்தி வகுக்கிறான் பாகுபலி. இறுதியில் காலகேய தலைவனுக்கும் பாகுபலிக்கும் கடுமையான நேரடியுத்தம் நடக்கிறது. இதில் காலகேய தலைவன் தோல்வியடைந்து சாகும் தருவாயிலில், பல்வாள்தேவன் முந்திக்கொண்டு கடைசி அடியை அடித்து காலகேய தலைவனை கொன்றுவிடுகிறான்.

காலகேய தலைவனை கொன்றது தன் மகன்தான் என்று சொல்லி அரசனாக கட்டளையிடும்படி தன் மனைவி சிவகாமி தேவியை கேட்கிறான் பிங்கால தேவன். ஆனால் சிவகாமியோ, " எதிரிகளை வீழ்த்துபவன் போர்ப் படைத் தலைவன், ஆனால் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுபவன் தான் நாட்டின் அரசன். அதனால் பாகுபலியே இந்நாட்டின் அரசன் " என்று ஆணையிடுகிறார்.

இது ஃபிளாஷ்பேக்..

இதில் நான்கு தலைமுறை வருகிறது. குழம்பியவர்களுக்காக (நான் உட்பட) ஒரு சமூக சேவை. :-)
ஃபிளாஷ்பேக்கை சொல்வது பாகுபலியின் விசுவாசியான கட்டப்பா.. அப்படியானால் பாகுபலியைக் கொன்றது யார் என்று கேட்க, ' நான் தான்...! ' என்கிறார் கட்டப்பா. படம் முடிகிறது.

தேவசேனாவை  எதற்காக சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள் ..?

பல்வாள்தேவன் எப்படி அரசனானான் ..?

சிவகாமி தேவி எதற்காக குழந்தையைக் காப்பாற்ற போராடவேண்டும்..? அவர் மீது அம்பெய்தியது யார்..?

தமன்னா யார்..? எதற்காக போராளியானார் ..?   இப்படி நிறைய புதிர்களுக்கு விடை சொல்லாமல் அடுத்தப் பாகத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.

குழப்பத்தோடு நாமும் வெளிவருகிறோம். பொதுவாக இதுபோன்ற விடையில்லா புதிர்களை தொலைக்காட்சி தொடர்களில்தான் வைப்பார்கள், அடுத்த எபிசோடை பார்க்க வேண்டும் என்பதற்காக. பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் போல.


டத்தின் கதையை உருவாக்கும் போதே அதன் காட்சிப் பிம்பங்களை கற்பனையில் ஓடவிட்டு பார்த்திருப்பார் இயக்குனர் ராஜ்மௌலி. ஏற்கனவே ட்ரிபிள் ஹாட்ரிக் அடித்தவர். சினிமா உலகில் யாருமே செய்யாத மகத்தான சாதனை இது. அந்த நம்பிக்கைதான் இப்படியொரு பிரும்மாண்டமான படத்தை எடுக்கும் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. சோழர்களின் மிச்ச எச்சத்தை கண்டுபிடிக்கிறேன், வேறு ஒரு உலகத்தை காண்பிக்கிறேன் என்று வெறும் ஜிகினா வேலைப்பாட்டை செய்துவிட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரசனை போதவில்லை என்று ஜல்லியடிக்கும் தற்குறி ராகவன்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

இத்தனை வருடம் உழைப்பு என்று புலம்புகிறார்கள். ஆனால் அந்த உழைப்பினால் வெளிவந்த வியர்வை சரியான தளத்தின் மீது சித்தப்பட்டிருக்கிறதா என்பதுதான் இங்கு முக்கியம். ராஜ்மௌலியின் உழைப்பு வீணாகப் போகவில்லை. இந்தியாவே ஒரு தென்னிந்திய மொழி திரைப்படத்திற்காக காத்துக் கிடந்தது பாகுபலிக்காகத்தான். எனக்குத் தெரிந்தவகையில் சிங்கையில் எந்திரனுக்கு அடுத்து அதிக திரைகளில் வெளியிடப்பட்டது பாகுபலிதான்..

ஆரம்பத்தில் வெள்ளுடை தரித்த தேவதை போல அறிமுகமாகும் அந்த அருவிக்காட்சியே இது உள்ளூர் சினிமா அல்ல, உலக சினிமா என்பதை உணர்த்துகிறது. அருவிக்காட்சி, அரண்மனை, காட்டெருமை, பிரும்மாண்ட சிலை, போர்க்களக் காட்சிகள் என எல்லாவற்றிலும் 'CG' புகுந்து விளையாடியிருக்கிறது. இந்திய சினிமாவில் இந்தளவுக்கு தத்ரூபமான நேர்த்தியான 'CG' யை இதுவரைப் பார்த்ததில்லை.

கதாபாத்திரத் தேர்வு கூட அமர்க்களம். யாரிடமும் மிகை நடிப்பு இல்லை. பிரபாஸ்- ரானா இருவரும் அப்படியே பொருந்திப் போகிறார்கள். ஆனால் இவர்களை விட அமர்க்களப் படுத்தியிருப்பது சத்யராஜும் ரம்யா கிருஸ்ணனும். கட்டாப்பா என்று ரம்யாகிருஷ்ணன் கர்ஜிக்கும் போது மின்னல் வேகத்தில் வாளோடு பாய்ந்து வரும் அந்த ஒரு காட்சி மெய் சிலிரிக்க வைத்தது. வாள் சண்டையில் பின்னி எடுக்கிறார். அரசிக்கே உள்ள கம்பீரம் ரம்யா கிருஷ்ணனின் குரலிலும் முகத்திலும்." இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்.." என்று சொல்கிறபோது 'உத்தரவு அரசியாரே' என்று நம்மையே சொல்ல வைக்கிறது. வசனங்கள் நச் என்றெல்லாம் சொல்லமுடியாது... ஆனால், உறுத்தாத வசனங்களுக்கு உத்திரவாதம் கார்க்கி வைரமுத்து.

இறுதியில் நடக்கும் போர்க்கள காட்சி, அதற்கான வியூகம் எல்லாமே இந்திய சினிமாவுக்கு புதிது. அவ்வளவு பேரை கட்டி மேய்ப்பதே பெரிய சவாலான விசயம்தான். ஒரு நிஜப் போர் எப்படியிருக்கும் என்பதை கண்முன் காட்டிய அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ராயல் சல்யூட். குறிப்பாக ஸ்டண்ட் பீட்டர் ஹெயின், ஒளிப்பதிவாளர் கே.செந்தில்குமார், விஷுவல் எஃபெக்ட் ஸ்ரீநிவாஸ் மோகன்..

இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று கேட்க வைக்கிறது, தமன்னாவை பெண் போராளியாகப் பார்க்கும் போது. நிச்சயம் நடிப்பில் அவருக்கு இது அடுத்தக்கட்டம். கிளாமராக கிளுகிளுப்பேற்றியவரை வாள் ஏந்தும் போராளியாகப் பார்க்கும் பொழுது ஆச்சர்யம் வரத்தானே செய்யும்..!

இப்படி நிறைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனாலும் குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டம் ஆரம்பத்தில் இருந்திருக்காது என நினைக்கிறேன். ஒருவேளை பட்ஜெட் எகிறிப்போனதால் எடுத்த முடிவாக இருக்கலாம். அதற்காகத்தான் முதல் பாதியை முடிந்தவரை இழுத்திருக்கிறார்கள்.

படத்தில் முக்கியமான குறை மரகதமணி. ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் ஒரு படைப்புக்கு இசை எவ்வாறு இருக்கவேண்டும்..? பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பெரிய இடையூறு. பின்னணி இசைகூட முதல் பாதியில் சொதப்பல்தான். இரண்டாம் பாதியில் சமாளித்திருக்கிறார்.

பிரபாஸ்- ரானா இருவரையும் ஒப்பிட்டால் ரானாவே முந்துகிறார். அவர் பாத்திரத்திற்கேற்ற வில்லத்தனம், வெறி, கோபம் எல்லாம் அச்சு அசலாக கண்களில் தெரிகிறது. பிரபாஸ் , ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ஈர்ப்பும் போர்க்கள காட்சிகளில் கொஞ்சம் விறைப்பும் காட்டியிருக்கலாம்.

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி அனுஷ்காவை இந்தக் கோலத்திலா பார்க்கவேண்டும்.. அய்யகோ.. ! மேக்கப் போடாமலே அழகாக இருக்கும் தலைவியின் முகத்தில் எதையோ ஒட்டி அவரை கிழவியாக்க முயற்சி செய்த ராஜ்மவுலிக்கு தமிழக அனுஷ்கா பேரவையின் சார்பாக கடும் கண்டனங்கள். அடுத்த பாகத்தில் அனேகமாக அனுஷ்காவைச் சுற்றிதான் கதை நகரும் போல தெரிகிறது.

மற்ற குறைகள் என்றால் முதலில் சொல்லியதுதான்.. கதை முடிவில்லாமல் அந்தரங்கத்தில் தொங்குகிறது.. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

பாகுபலி -கொண்டாடப்பட வேண்டிய படம்..!

Saturday 4 July 2015

சப்பாத்தியை ஓட்டை போடுவது எப்படி..?

 சிங்கை வந்த புதிது. இங்குள்ள சிங்கப்பூர் தமிழ்க் குடிமக்கள் பேசும் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வட்டார பேச்சு வழக்கு உண்டு. நெல்லைத்தமிழ் , கொங்கு தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் என்று அந்தந்த பகுதி மக்களுக்கும் ஒரு ஸ்லாங் உண்டு.

இதை SLANG என்று சொல்வதை விட DIALECT என்று சொல்வதுதான் சரி. SLANG வேறு... DIALECT வேறு.  "ங்கோத்தா.. " என்பது சென்னை ஸ்லாங்.  "படா பேஜாருப்பா..இப்ப இன்னா சொல்லுறே நீ.." என்பது சென்னை DIALECT . புரியவில்லை என்றால் விட்டுவிடவும். நான் சொல்ல வருவது இதைப் பற்றியல்ல.

நம்மூரில் பல வட்டார பேச்சு வழக்கு இருப்பது போல சிங்கை-மலேசியாவுக்கும் தனித்துவமான வட்டார பேச்சு வழக்கு உண்டு. "அண்ணே... இத இனிமே பாய்க்க முடியாதண்ணே..." என்பார்கள். பாய்க்க முடியாது என்றால், பாவிக்க முடியாது. பாவிக்க முடியாது என்றால், பயன்படுத்த முடியாது. இதே வார்த்தை இலங்கையிலும் பாய்க்கப்படுவதாக ஸாரி..பயன்படுத்தப்படுவதாக சென்னைப் பித்தன் அய்யா பதிவு ஒன்றில் பார்த்தேன். இலங்கையில் ஒரு துணிக்கடையில் "நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று பதாகை எழுதி வைத்திருந்தார்களாம். உபயோகிக்கும்..பயன்படுத்தும்...என்கிற அர்த்தத்தில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கை சென்ற புதிதில், என் அலுவலகத்தில் மலேசியா நண்பன் ஒருவன் நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தான். அவனது பெயர் முருகன். காலை ஷிப்டை முடித்துக்கொண்டு நான் கிளம்பும் வேளையில் இரவுப் பணிக்கு அவன் வருவான். ஒரு நாள் பணிக்கு வந்த உடனேயே பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்..

"என்ன முருகா .. என்ன தேடிகிட்டு இருக்க..?.."

" என் சப்பாத்திய எவனோ ஓட்டை போட்டுட்டாண்ணே.."

" என்னது சப்பாத்திய ஓட்டை போட்டுட்டானுவளா.. அதப் போயி எதுக்குய்யா ஓட்டை போட்டாணுவ..  அத எங்க வச்சிருந்த..?"

" ட்ரெஸ் கழட்டுற இடத்தில தான்ணே வச்சிருந்தேன்.. "

" அத எடுத்துட்டு வா பாக்கலாம்... "

" அண்ணே.. ஓட்டை போட்டுட்டாணுவங்கிறேன்.. அத எடுத்துட்டு வா..ங்கிறீங்க.."

"சரியா.. டென்சன் ஆகாதய்யா.. வேற வாங்கிக்கிலாம் விடுய்யா ...."

"அண்ணே அது அம்பது வெள்ளிண்ணே.. "

" அம்பது வெள்ளியா.. என்னய்யா அநியாயமா இருக்கு.. சரி இனிமே வாங்குனா பேக்கு உள்ளேயே வச்சிக்க.. வெளிய வைக்காத..":

" நானே ஓட்டை போட்டுடாணுவங்கிற டென்சன்ல இருக்கேன்.. நீங்க வேற பேக்குல வய்யி.. லாக்கர்ல வய்யின்ட்டு.. "

"ஓட்டை போடுற அளவுக்கு வக்கிரம் புடிச்சவன் எல்லாம் இங்க இருக்கானா... ஒருவேள விளையாட்டா செஞ்சியிருப்பாங்க... சரி விடுய்யா... எவனாச்சும் கவர்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்கு விரல விட்டு பாத்துருப்பான். ஓட்டை விழுந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி அம்பது வெள்ளி விக்கிறது அநியாயம்யா.. அந்த ஹோட்டல் எங்க இருக்கு..."

அவ்வளவுதான். செம காண்டாகி அங்கிருந்து கிளம்பி போயிட்டான். எனக்கு ஒரே குழப்பம். நம்ம ஊரு பையன் ஒருத்தன கூப்பிட்டு, " என்னப்பா சாப்பிடற சப்பாத்திய போயி எவனாவது ஓட்டை போடுவானா... மட்டமா இருக்காங்கப்பா .."

"அவனே ஷூ வை காணும்னு தேடிக்கிட்டு இருக்கான்...  அவன ஏன்ணே டென்சன் ஏத்துறீங்க.."

" யோவ் சத்தியமா தெரியாதுய்யா.. அவன்தான் சப்பாத்தியை ஓட்டை போட்டுட்டாங்கனு சொன்னான்.."

"அது சப்பாத்தி இல்லன்ணே.. சப்பாத்து.."

அடப்பாவிகளா.. ஷூவதான் சப்பாத்துனு சொல்றீங்களா.. அப்போ இவ்ளோ நேரம் ஷூ காணாம போனத பத்திதான் பேசிகிட்டு இருந்திருக்கானா.. அவன் சப்பாத்துனு சொன்னது என் காதில சப்பாத்தின்னு விழுந்திருக்கு. நான் சப்பாத்தின்னு சொன்னது அவன் காதுல சப்பாத்துனு விழுந்திருக்கு. அப்போ ஓட்டைப் போடுறதுன்னா திருடிட்டு போறது போல.. 

அப்புறம் விசாரித்தால்தான் தெரியுது. சப்பாத்து என்பது shoe-வின் தமிழாக்கமாம். ஜெயமோகன் கூட அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நமக்குத்தான் தெரியாமல் போய்விட்டது.

ஒரு தமிழ் வார்த்தையை அயல்நாடு சென்று அறிய வேண்டிய சூழல் எனக்கு. ஆனால் வேற்று மொழியிலிருந்து வந்த நிறைய வார்த்தைகள் தற்போது தூய தமிழ் சொற்கள் போல தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் எழுதும் மரபுக் கவிதைகளில் கூட அவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகத் தென்படுகிறது.

உதாரணத்திற்கு சில... (அடைப்புக் குறிக்குள் உள்ளது தூய தமிழ்ச் சொல்)

அர்ச்சனை  (மலரிட்டு வழிபடுதல்)
சுதந்திரம்  (விடுதலை)
வாகனம்  (ஊர்தி)
 வருடம்  (ஆண்டு)
பட்சி  (பறவை)
சங்கதி  (செய்தி)
வாசனை  (மணம்)
விவாகம்  (திருமணம்)
பண்டிகை  (திருவிழா)
கேணி  (கிணறு)
கடுதாசி  (கடிதம்)
ஆஸ்பத்திரி  (மருத்துவமனை)
மகசூல்  (விளைவு)
ஜமக்காளம்  (விரிப்பு)
தபால்  (அஞ்சல்)
தயார்  (ஏற்பாடு)
புகார்  (முறையீடு)
வக்கீல்  (வழக்குரைஞர்)
பந்தயம்  (பணயம்)
அசல்  (மூலம்)
ஆசாமி  (ஆள்)
இலாகா  (துறை)
சந்தா (உறுப்பினர் கட்டணம்)
மைதானம்  (திடல்)
சன்னல்  (காலதர்)
பந்தோபஸ்து  (பாதுகாப்பு)
சிபாரிசு  (பரிந்துரை)
கோர்ட்  (நீதி மன்றம்)
சிப்பாய்  (போர்வீரன்)
பாக்கி  (மிச்சம்)
வாய்தா  (நிலவரி)
ஏராளம்  (மிகுதி)
நபர்  (ஆள்)

டிஸ்கி..
ஒன்னுமில்ல... ஒரே சினிமா பதிவுகளா எழுதி எனக்கும் போரடிச்சி போச்சு. அதான் ஒரு சேஞ்சுக்கு...

-------------------------------XXXXXXXXXXXXXXXXXXXX---------------------------------

Friday 3 July 2015

பாபநாசம்..- பாசப்போராட்டம்..!

கொலைக்குற்றத்தில் சிக்கிக் கொண்ட தன் மகளைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தந்தையின் பாசப்போராட்டம் தான் பாபநாசம். ஏற்கனவே த்ரிஷ்யம் படம் பார்த்தவர்களுக்கு பாபநாசம் படத்தின் கதையை திரும்பவும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் கடமை என்று ஒன்று இருப்பதால்......

பாபநாசம் என்கிற கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக சுயதொழில் செய்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). மனைவி ராணி (கவுதமி) மற்றும் இரு மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை. தொழில் தவிர, தொலைக் காட்சியில் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது அவரின் பொழுதுபோக்கு.

பள்ளியில் நடக்கும் கேம்ப் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அவரது மூத்த மகளை, குளிக்கும்போது ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்து விடுகிறான். அதை வைத்து தனது ஆசைக்கு இணங்கும்படி அவர்கள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்.

இந்த விஷயம் சுயம்புவின் மனைவிக்கு தெரியவர, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றுகிறது. இதில் அவன் கொல்லப்படுகிறான். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தை மறைக்க அவர்கள் வீட்டு தோட்டத்திலே குழி தோண்டி அவனைப் புதைத்து விடுகிறார் சுயம்புவின் மனைவி.

மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பும் சுயம்புவிடம் நடந்ததை சொல்கிறார்கள். கொல்லப்பட்டவன் ஐ.ஜி யின் மகன் எனத் தெரியவர, ஒட்டுமொத்தக் குடும்பமே உடைந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் பரிதவிக்கிறது.

பிறகு சுதாகரித்துக் கொள்ளும் சுயம்பு, சட்டப்படி இது கொலையல்ல என்பதை விளக்கி அவர்களைத் தேற்றி ஆறுதல் சொல்கிறார். அதன்பின்பு ஒவ்வொரு தடையமாக அழிக்கிறார். ஆனால் விதி, அவர்களைக் காட்டிக் கொடுக்கிறது. கடைசியில் அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

 
சல் த்ரிஷ்யத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால் இதன் ஒவ்வொரு காட்சியையும் அசலோடு மனம் ஒப்பீடு செய்துக்கொண்டே வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  மலையாள த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தின் இயக்குனர். கிட்டத்தட்ட அனைத்துக் காட்சிகளையும் அப்படியே நகல் எடுத்திருக்- கிறார். மலையாள த்ரிஷ்யத்தில் குளியல் வீடியோவை வைத்து மிரட்டும் ஐ.ஜி யின் மகனை இரும்புக் கம்பியால் தாக்குவார் ஜார்ஜ் குட்டியின் மகள். இதில் அவன் வைத்திருக்கும் செல்போனைத் தாக்க முற்படும் போது அந்தக் கம்பி தவறுதலாக தலையை தட்டிவிடுவதாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். தன் அம்மாவையே இச்சைக்கு அழைக்கும் ஒருவனை மகள் கொலை செய்ய முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது..? பின்னே எதற்கு தமிழில் இந்த சமரசம்..?

வெகு இயல்பாக அறிமுகமாகிறார் உலகநாயகன். படத்தில் ஒரு இடத்தில் கூட ஹீரோயிசம் இல்லை. இப்படி ஒரு கதையில் நடிக்க சம்மதித்ததிற்கே அவரைப் பாராட்டலாம்.இரு குழந்தைகளுக்கு அப்பா என்கிற பாத்திரம் கமலுக்கு புதிதல்ல. அப்பா- மகள் கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது. கமல் பேசும் பாபநாச பாசையை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுக்கிறது. என்றாலும் எல்லாவற்றிலும் பெர்பெக்சன் எதிர்பார்க்கும் ஒரு கலைஞனின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும்.

மோகன்லால்-கமல் ஒப்பீடு தேவையில்லைதான். ஆனால் ஜார்ஜ் குட்டி என்கிற பாத்திரத்தினுள் தெரிந்த ஒரு அக்மார்க் கேபிள்டிவி ஆபரேட்டர், அன்பான அதே நேரத்தில் கண்டிப்பான அப்பா, பிரியமான கணவன், பாசமான மருமகன் எல்லாம் சுயம்புலிங்கத்தின் பாத்திரத்தில் ஏனோ தெரியவில்லை. ஆனால் இறுதியில் கொலை செய்யப்பட்ட ரோஷன் பஷீர் பெற்றோரிடம் கமல் உருகிப் பேசும் அந்த ஒரு காட்சியில் ஜார்ஜ் குட்டியையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் சுயம்பு லிங்கமான கமல். உலக நாயகன் உக்கிரமாக ஜொலிக்கும் இடமது.

நிஜத்தில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் திரையில் கமல்- கவுதமியை தம்பதியினராகப் பார்க்கும் போது ஏதோ ஒன்று நெருடுகிறது. பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியின் தாய் இந்தளவுக்கா டொக்கு விழுந்து போயிருப்பார்..?.ஒருவேளை நிஜத்தில் இருக்கலாம். சினிமா என வருகிற பொழுது ஒரு முன்னணி  நடிகரின் மனைவியாக நடிப்பவர் என்பதால் கொஞ்சம் 'வெயிட்டான' அம்மாவைப் போட்டிருக்கலாமே..?  கமல்-கவுதமி ரொமான்ஸ் காட்சிகள் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...

படத்தின் முதல்பாதி ஜவ்வாக இழுக்கிறது. டீக்கடையில், போலீசாக வரும் கலாபவன்மணியை கமல் கலாய்ப்பது, கமல்-கவுதமி உரையாடல்கள் , பாடல்கள் என்று சுவாரஸ்யமில்லாமல் முன்பாதி நகர்கிறது. ஆனால் பின்பாதியில்தான் திரைக்கதை வேகமெடுக்கிறது. கொலையை மறைக்கும் கமலின் தந்திரங்கள், விசாரணையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மகள்களுக்கு கமல் எடுக்கும் வகுப்பு, போலிஸ் புலன் விசாரணை என்று தடதடவென்று சிக்கல் இல்லாமல் சீறிப்பாய்கிறது திரைக்கதை.

படத்தில் பாராட்டப்படவேண்டிய மற்றொரு கதாபாத்திரம், கொலை செய்யப்பட்டவனின் அம்மாவாக வரும் ஐ,ஜி. கீதா பிரபாகர் (ஆசா சரத்). புலன்விசாரணை செய்யும் காவல் உயரதிகாரியாக அவர் காட்டும் கம்பீரமாகட்டும், தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்பதே தெரியாமல் ஒரு அம்மாவிடமிருந்து வெளிப்படும் தவிப்பாகட்டும், கமலுக்கு அடுத்து செம்மையாக ஸ்கோர் செய்வது இவர்தான்.

படம் முழுவதும் பச்சை பசேலென இருக்கும் ரம்மியமான மலைப்பிரதேசங்களைப் பளிச்சென பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். ஜிப்ரனின் பின்னணி இசை அவ்வளவாக காட்சிகளோடு பொருந்தவில்லை. பாடல்கள் சுத்தம்..!

முன்பாதியில் கோட்டைவிட்டு பின்பாதியில் கொடியை நட்டு இருக்கிறார்கள். மலையாள த்ரிஷ்யம் ஒரு வருடம் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் பாபநாசம் படத்திற்கு 'ரிப்பீட் ஆடியன்ஸ்' வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருமுறை பார்க்கும்படி தான் உள்ளது.


                        ப்ளஸ்                   மைனஸ்
சிக்கலில்லாமல் சீறிப்பாயும் பின்பாதி திரைக்கதை.                                        சுவாரஸ்யமில்லாமல் நகரும் முதல் பாதி.... 
உலக நாயகனின் எதார்த்த நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள்.
காவல் உயரதிகாரியாக வரும் ஆசா சரத் நடிப்பு  விசாரணையின் போது  நடக்கும் வன்முறைக் காட்சி.
சுஜித் வாசுதேவ்வின் ஒளிப்பதிவு  கவுதமி.  ( சிம்ரன், அபிராமி,நதியா எல்லாம் பரிசீலனையில் இருந்தார்களாம். கமலின் தேர்வுதான் கவுதமி)
இறுதிக் காட்சியில் ஜெயமோகனின் வசனம்.
ஹீரோயிசம் இல்லாத இயக்கம்
Wednesday 1 July 2015

இன்று நேற்று நாளை - கொண்டாடும் இணையவாசிகள்..! சமீப காலங்களில் இணையவாசிகளால் அதிகம் புகழப்பட்ட, கொண்டாடப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் என்றால் தொட்டால் தொடரும், காக்கா முட்டை, மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய மூன்று படங்களை சொல்லலாம்.

இதில் காக்கா முட்டை, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் மட்டுமல்ல திரையுலக ஜாம்பவான்களாலும்  மெச்சப்பட்ட படைப்பு.. அதனால் அதை விட்டுவிடுவோம்.

'தொட்டால் தொடரும்' படம் தமிழ் கூறும் இணைய வாசிப்பாளர்கள் நன்கறிந்த பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கரின் முதல் படைப்பு. தவிரவும், வலைப்பூ சினிமா விமர்சகர் வட்டத்திலிருந்து வெளிவந்த முதல் திரைப்படம். படம் வெளிவந்த நாளில் பேஸ்புக்கில் வாழ்த்துகள் நிரம்பி வழிந்தன. சிலர் FDFS பார்த்து விட்டு 'கலக்கிவிட்டார் காப்பி' என்கிற ரீதியில் அண்ணன் கேபிளாருக்கு ஜன்னியே வருமளவுக்கு ஐஸ் வைக்கும் வைபோகத்தை நடத்தினர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் பப்பரப்பா ஆன சங்கதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தது.

கடந்த வாரம் வெளியான 'இன்று நேற்று நாளை' படத்திற்கும் செம ஒப்பனிங் பேஸ்புக்கில். சினிமா வாடையே ஆகாதவர்கள் எல்லாம் சினிமா விமர்சனம் எழுதினர். சிலர் தியேட்டரிலிருந்து இடைவேளையின் போது 'லைவ் ரிவியூ' எல்லாம் கொடுத்தனர். எல்லா பேஸ்புக் விமரிசனங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. படத்தை ஆகா..ஓகோ..என்று புகழ்ந்துவிட்டு கடைசியில் 'with Rajesh Da Scorp.'  என்று 'டாக்' கை தட்டி விட்டிருந்தனர். பொதுவாக யாருக்கும் லைக் போடும் பழக்கமில்லாத கருந்தேள் ராஜேஷ், வளைச்சி வளைச்சி எல்லோருக்கும் லைக் போட்டுக் கொண்டிருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்தது.

அதில் ஒரு பெரியவர், படத்தையும் கருந்தேளையும் வானளாவ புகழ்ந்துவிட்டு, படத்தில் ஒரே ஒரு குறை இருக்கிறது என கொஞ்சம் இழுத்திருந்தார்.. அடேங்கப்பா.. TAG போட்டு குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு பேஸ்புக் சமூகம் வளர்ந்து விட்டதா என்று ஆச்சர்யம் கொண்டேன்.  படத்தில் டைம் மெசினை வைத்துக் கொண்டு தங்கம் வாங்க செல்வார்கள் விஷ்ணுவும் கருணாகரனும். அங்கே கடைக்காரரிடம் பேசும்போது எனக்குப் பிடித்த நடிகர் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்பார்.  அதெப்படி லிங்கா படம் வெளிவந்து படு தோல்வியடைந்த நிலையில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்..? விஜய் அல்லது அஜித்தை அல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும்... இதை எப்படி வசனம் எழுதுபவர்கள் கவனிக்காமல் விட்டார்கள் என்று அறிவுப்பூர்வமான வினாவை எழுப்பி, அது ஒன்றே படத்தில் உள்ள குறையென சுட்டிக் காட்டியிருந்தார்.

அதைவிட பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அதற்கு மெனக்கெட்டு கருந்தேள் சொன்ன பதில்தான். 'ஐயா நாங்கள் கதை டிஸ்கஷன் செய்யும் போது லிங்கா படம் வெளிவரவில்லை. அப்போதே எடுக்கப்பட்ட காட்சியது. அதற்குப் பிறகுதான் லிங்கா படம் வெளியானது' என்கிற தர்க்க ரீதியான பதிலை அவரது பதிவில் எழுதியிருந்தார். அதாவது லிங்கா படம் தோல்வியடைந்ததால் சூப்பர் ஸ்டார் என்கிற 'பதவி'யிலிருந்து ரஜினிகாந்த் தூக்கியடிக்கப்பட்டாராம். அய்யா... சூப்பர் ஸ்டார் என்பது பதவியல்ல..; பட்டம்..!.  ரஜினிக்கென்றே உருவாக்கப்பட்ட பட்டம். எப்படி மக்கள் திலகம் என்றால் எம்ஜியாரை மட்டும் குறிக்கிறதோ.. எப்படி நடிகர் திலகம் என்றால் சிவாஜியை மட்டும் குறிக்கிறதோ.. அதேப்போல சூப்பர் ஸ்டார் என்றால் இந்தியாவில் ரஜினியை மட்டும் தான் குறிக்கும். அவர் காலத்திற்குப் பிறகும் கூட...

பரவாயில்லை.. எனக்குத் தெரிந்து கே.என்.சிவராமன், யுவாவை அடுத்து படத்தில் உள்ள 'குறை' என்கிற வார்த்தையை தமிழ் பேஸ்புக் உலகில் அவர்தான் உபயோகித்திருந்தார். அந்த நேர்மையை பாராட்டுகிறேன்...!

படத்தைப் பார்த்த சிலர் தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் புதிய யுத்தி என்கிற ரீதியில் பாராட்டி எழுதியிருந்தார்கள். அவர்களின் உணர்ச்சிப் பீறிடலுக்கு 'TAG ' க்கும் ஒரு காரணமாக இருக்கலாம். 'சினிமாவா... வீக் எண்டில் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்வோம் அவ்வளவுதான்...' என்கிற அளவிலே இருப்பவர்களுக்கு இணையத்தில் சினிமாவின் நுணுக்கங்களை பலர் அலசுவதைப் படித்தவுடன் ஆச்சர்யம். குறிப்பாக 'திரைக்கதை' என்கிற வார்த்தையும் சினிமாவில் அது குறித்த அவசியத்தையும் மாறி மாறி வகுப்பெடுத்தவர்களில் கருந்தேள் ராஜேசும் ஒருவர். அதிலும் ஏதாவதொரு ஆங்கில சினிமாவை எடுத்துக் கொண்டு சினிமாவின் இலக்கணமே இதுதான் என்று புரியாத படத்தைப் பற்றி புரியாத மொழியில் புரியாத ஒன்றை அவர் விளக்கும்போது ஸ்கூலில் இங்கிலீஸ் டீச்சர் வகுப்பெடுக்கும்போது 'பேந்த பேந்த முழிக்கும்' மாணவனின் நிலைதான் நமக்கு.

பொதுவாக, சினிமாவுக்கான சூத்திரங்கள் வெற்றிபெற்ற படங்களிலிருந்துதான் உருவப்படுகிறது. கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு எந்த வரையறையும் கிடையாது. ஆனால் அதன் திரைக்கதைக்கு வரையறை, அளவுகோல், வடிவமைப்பு எல்லாம் இருக்கிறது. கதையை நகர்த்தும் சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை. திரைக்கதையைப் பற்றி வகுப்பெடுக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களைத்தான் அளவுகோலாக எடுக்கிறார்கள். ஏன் இந்திய சினிமாவுக்கு அந்தத் தகுதி இல்லையா..?

பொறியியல்,மருத்துவம் மாதிரி சினிமாவும் ஒரு துறை. மற்றத் துறைகளில் எப்படி ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதோ அதேப்போலதான் திரைப்படத்துறையிலும். இங்கும் அனுபவமே சிறந்த ஆசான். வெளிநாடு- களில் கட்டடம் கட்டும் முறைக்கும் இங்குள்ள முறைக்கும் நிறைய வேறுபாடுள்ளது. மண், தட்பவெட்பம் இதையெல்லாம் பொறுத்து மாறுபடும். சினிமாவும் அப்படித்தான். எந்த வெளிநாட்டு படங்களையும் ஒப்பிட்டு இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவை குப்பை என்று சொல்லிவிட முடியாது. தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் ஹாலிவுட் படங்கள் முன்மாதிரியாக இருக்கலாம். அதற்காக சினிமாவின் இலக்கணத்தையே அந்தப் படங்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என சொல்வது அபத்தம்.

தமிழில் சக்கைப்போடு போட்ட கரகாட்டக்காரனும் சின்னதம்பியும் எந்த இலக்கணத்தை பின்பற்றி எடுக்கப்பட்டது..? வேண்டுமானால் இதுபோன்ற படங்களிலிருந்து தமிழ் சினிமாவுக்கான சூத்திரத்தையும் இலக்கணத்தையும் வகுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர் என்று புகழப்படும் கே.பாக்யராஜ் எந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்து திரைக்கதை சூத்திரத்தைக் கற்றுக்கொண்டார்..?இன்று நேற்று நாளை படத்திற்கு வருவோம்..

மூன்று நாட்களில் மூன்று கோடி.. திரையரங்குகள் அதிகரிப்பு... வசூலில் சாதனை.. போன்ற செய்திகள் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான முயற்சிகள் எல்லாமே தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. கால இயந்திரம் என்னும் விஷயம் தமிழ் சினிமாவில் புதிதுதான். அதை வைத்து எப்படி சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, குழப்பமில்லாத ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்பதில் திரையனுபவமே இல்லாத இந்த 'டீம்' சவாலான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி, முண்டாசுபட்டி, எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமானப் படங்களை மட்டுமே தயாரிக்கும் பிடிவாத தயாரிப்பாளர் சி.வி. குமாருடன் இணைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். இயக்குநருக்கு முதல்படம். குறும்பட அனுபவம் இருந்தாலும் வெண்திரை என வருகிறபோது வணிக வெற்றிக்காக நிறைய உழைக்க வேண்டும். புதிய சிந்தனை.. வித்தியாசமான கதைக் களம் என்று நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்.. தன் ஒருவனின் கையில் மட்டும் வண்டியின் 'ஸ்டீரிங்' இருக்கக்கூடாது என்பதையுணர்ந்து, அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரோடு ராஜன், கருந்தேள் போன்ற தியரிடிகல் ஜாம்பவன்களுடன் இணைந்தது படத்தின் முதல் வெற்றி.. கேபிள் சங்கர் இந்த இடத்தில்தான் தோற்றுப்போனார். தன்னைச் சுற்றி சினிமாவை ஆர்வமாக பயிலும் நண்பர்கள் இருந்தும், தனது விநியோக அனுபவம் மட்டுமே போதும் என நினைத்த கேபிளாரின் எண்ணத்தில் விழுந்த அடிதான் தொட்டால் தொடரும்.

தமிழ்த்திரையில் முதன்முதலாக டைம் மெசினை அறிமுகப்படுத்தியுள்ளதால் அதைப்பற்றிய விளக்கத்தை ஆரம்ப பாடசாலையில் வகுப்பெடுப்பது போல் விளக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. ஆனால் 'ஏ' செண்டர் ரசிகனுக்கு மட்டும் புரியும்படி சொல்லியிருப்பது முதல் சறுக்கல்.

படத்தின் ஹீரோ டைம் மெசின். அதைச்சுற்றித்தான் கதைப் பின்னப்படவேண்டும். முதல் பாதியில் ஹீரோவாக  ராஜநடைபோடும் டைம் மெசின் பிறகு காமடிப் பீசாக மாறிவிடுகிறது. பிற்பாதியில் டைம் மெசினை வைத்து விறுவிறுப்பாக பின்னப்படவேண்டிய திரைக்கதை 'கொழந்த' என்கிற வில்லனை சுற்றி நொண்டியடிக்கிறது. அதனால் ' ஆர்யா ஒரு டைம் மெசினைக் கண்டுபிடிக்கிறார்.... என ஆரம்பிக்க வேண்டிய இந்தப் படத்தின் கதையை,"விஷ்ணு ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பொறுப்பில்லாமல் அவன் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பதால் அப்பெண்ணின் அப்பா ஜெயபிரகாஷ் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவனுக்கு ஒரு டைம் மெசின் கிடைக்கிறது. அதைவைத்து தான் புத்திசாலி என்று அவளது அப்பாவை நம்பவைத்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறான். இதற்கிடையில் அவளது அப்பாவுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு ரவுடியை போலீஸ் என்கவுண்டர் செய்கிறது. விஷ்ணு, வேற ஒரு சம்பவத்துக்காக அந்த டைம் மெசினின் மூலம் இறந்தகாலம் செல்லும்போது, தவறுதலாக  அந்த ரவுடியை காப்பாற்றிவிடுகிறான். பிறகு அந்த ரவுடி ஜெயபிரகாஷையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய துரத்த, அவர்களை விஷ்ணு எப்படி காப்பாற்றுகிறான் என்பதே இப்படத்தில் கதை.." என முடிக்க வேண்டியதாயிற்று. இதில் டைம் மெசின் ஒரு கேரக்டராக வந்து செல்கிறது. ஒருவேளை தமிழ் சினிமா என்பதால் வணிக வெற்றிக்காக திரைக்கதையை இப்படி மாற்றம் செய்திருப்பார்கள்.

படத்தின் திரைக்கதையை செதுக்குவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்களாம். நிறைய காட்சிகளில் அவர்களின் உழைப்பு பளிச்சிடுகிறது. முக்கியமான திருப்பங்களை வசனங்களில் சொன்னால் அழுத்தம் இருக்காது என்பதால் காட்சிகளால் உணர்த்தியிருக்கிறார்கள். உதாரணமாக, காணாமல் போன அம்மாவின் கண்ணாடியை கண்டுபிடிக்கும் காட்சி. டைம் மெசினை வைத்துக்கொண்டு காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கலாம் என்பதை வெறும் வசனங்களால் விளக்காமல், டைம் மெசினில் தவறுதலாக ஒரு மாதத்திற்கு முன்பான நேரத்தை செட் பண்ணிவிட, அந்த நேரத்தில் ஒரு சிறுவன் அம்மாவின் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஓடுவதாகவும்,அதை விஷ்ணு பிடுங்கி வைத்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு வரும்போது,' ஒரு மாதத்துக்கு முன்பே காணாமல் போன கண்ணாடியை நீதான் வச்சிருக்கியா..' என விஷ்ணுவின் அம்மா கேட்கும் காட்சி.

படத்தில் செம்மையான ஒரு காட்சி இருக்கிறது. டைம் மெசினில் தனது காதலியை அவளது பிரசவிக்கும் காலத்திற்கு அழைத்து செல்கிறார் விஷ்ணு. தன்னை பிரசவிக்க தன் அம்மா படும் வேதனையை நேரில் பார்க்கிறாள் அவள். தன் அம்மாவுக்கு பிரசவ வலி வந்தவுடன் தானே அவளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்ல நேருகிறது. அங்கு அவள் பிறக்கிறாள். அவள் பிறந்த பொழுது எப்படி இருந்தாள் என்பதை நேரில் பார்க்கிறாள். அந்தக் காட்சியின் உச்சமாக, அவளே அவளைத் தன் கைகளில் தாங்கி உச்சி முகந்து பூரிப்படைகிறாள். அதை செல்ஃபோனில் போட்டோவும் எடுத்துக் கொள்கிறார்கள். என்னவொரு அட்டகாசமாக கற்பனை..!!! ஹாட்ஸ் ஆஃப் டு யூ கைஸ் ....! 

எனக்கிருக்கும் சில சந்தேகங்கள்....

2065 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக காண்பிக்கப்படும் டைம் மெசினைப்பற்றி, 2015-ல் ஒரு சாதாரண எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டெஷன் படித்த ஒரு எஞ்சினியர் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது எப்படி..? அதை ஏதோ மிக்சி கிரைண்டர் ரிபேர் பண்ணுவது போல சரி செய்கிறாரே எப்படி..?

டைம் மெசினை முதன்முதலாக பார்க்கும் அந்த விஞ்ஞானி(!) அதில் ஏறி பயணம் செய்து, அது டைம் மெசின் தான் என்பதை நொடிப்பொழிதில் உறுதி செய்கிறார் சரி... பிறகு அவருக்கு கரண்ட் ஷாக் ஆகி கோமா நிலையிலிருந்து திரும்பும் போது பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறார். அந்த நேரத்தில் விஷ்ணுவும் கருணாவும் கொடுக்கும் அந்த கருப்பு பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு இது 'டைம் டிராவல் டிவைஸ்' என்கிறாரே... அது எப்படி..?

ஷேர் மார்கெட்டைப் பற்றி துளியும் அறியாத ஒருவனால், எந்த ஷேர் எவ்வளவு போகும் என்கிற எதிர்கால முடிவை மட்டும் வைத்துக் கொண்டு அத்தனை தொழில் வல்லுனர்களையும் ஏமாற்றுவது சாத்தியமா..? ஒருவருக்குக் கூட அவன் மேல் சந்தேகம் வரவில்லையே ஏன்..?

ருணாகரன் ஜோதிடனாக வருகிறார். அந்தத் தொழிலுக்கான உடல்மொழி, பேச்சு வழக்கு என எதுவுமே அவரிடம் இல்லை. அவர் போலியான ஜோதிடர் என நம்ப வைப்பதற்காக காண்பிக்கப்படும் அந்த தேர்வு முறை கொட்டாவியை வரவைக்கிறது.

வில்லனை, டைம் மெசினை விட பலசாலியாக பில்டப் செய்தது எதற்காக என்பது விளங்கவில்லை. அவரை சிக்க வைக்கத்தான் ஜெயபிரகாஷ் மூலமாக போலீஸ் கன்னி வைக்கிறது. ஆனால் அந்த சம்பவத்துப் பிறகு சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றுகிறார்.... ஜவுளிக்கடையில் என்கவுண்டர் செய்கிறார்... காரில் துரத்துகிறார்.

டைம் மெசினை வைத்து எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். அப்படியானால் அந்த ரவுடியால் அந்தக் குடும்பத்துக்கு என்ன ஆகும்... ஒருவேளை திரும்பவும் அவன் என்கவுண்டர் செய்யப்படுவானா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்தானே..அதையேன் அவர்கள் முயற்சி செய்து பார்க்கவில்லை...(ஒருவேளை டைம் மெசினில் பயணம் செய்பவர் எதிர்காலத்தில் இறக்க நேரிட்டால், திரும்பவும் நிகழ்காலத்திற்கு திரும்ப முடியாது என்பதால் இருக்குமோ..?)

டைம் மெசினை வைத்துக் கொண்டு காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்துத் தருவதின் மூலம் ஹீரோவும் அவனது நண்பனும் பணம் சம்பாதிப்பதாக காட்டப்படுவது கொஞ்சம் திராபையான கற்பனைதான். வேறு ஏதாவது யோசித்திருக்கலாம். காணாமல் போன இடம், நேரத்தைக் கேட்டுக்கொண்டு, அந்தக் காலகட்டத்திற்குப் போய், அது தவறும் பொழுது எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, இந்த இடத்தில் உங்கள் பொருள் இருக்கிறது என்று சொல்வார்களாம். எடுத்து ஒளித்து வைக்கும் பொழுது யாரும் பார்க்காமலா இருப்பார்கள்..?  உதாரணமாக, காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்துத் தரும் காட்சி.. அந்தக் குழந்தை காணாமல் போன காலகட்டத்திற்குச் சென்று அக்குழந்தையை மீட்டு அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு நிகழ் காலத்திற்கு வந்து விடுவார் விஷ்ணு. பிறகு அக்குழந்தையின் பெற்றோர் அங்கு சென்று மீட்டுக் கொள்வார்களாம். அந்த இல்லக் காப்பாளர், 'அந்த ஜோசியக்காரனோட ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தானே... அவன்தான் வந்து குழந்தையை விட்டுட்டு போனான்..' என சொல்லிவிட்டால், இவர்களே கடத்தி இவர்களே கண்டுபிடித்துத் தருவது போல ஆகாதா..?

இப்படியாக சிலருக்கு நிறைய கேள்விகள் எழலாம்.. டைம் மெசின் என்பதே கற்பனைக் கதாபாத்திரம் என்பதால் நமக்கிருக்கும் சந்தேகங்களை டீலில் விட்டுவிடலாம்.

எப்படிப் பார்த்தாலும் இனி தமிழில் வரப்போகும் பல ' சயின்ஸ் ஃபிக்‌ஷன் ' படங்களுக்கு இந்தப்படம் ஒரு முன்னோடி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. பொதுவாக டைம் ட்ராவல் கதை என்பதே ஒரு குழப்பமான விசயம்தான். திரைக்கதையும், எடிட்டிங்கும் நேர்த்தியாக இல்லை என்றால் படம் பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்துவிடும். இதில் இரண்டுமே மிகச்சரியாக அமைந்திருப்பது வெற்றிக்கான அடித்தளம்.

அடுத்தப் படைப்பை இன்னும் நேர்த்தியாகக் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது...