Saturday, 4 July 2015

சப்பாத்தியை ஓட்டை போடுவது எப்படி..?

 சிங்கை வந்த புதிது. இங்குள்ள சிங்கப்பூர் தமிழ்க் குடிமக்கள் பேசும் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வட்டார பேச்சு வழக்கு உண்டு. நெல்லைத்தமிழ் , கொங்கு தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் என்று அந்தந்த பகுதி மக்களுக்கும் ஒரு ஸ்லாங் உண்டு.

இதை SLANG என்று சொல்வதை விட DIALECT என்று சொல்வதுதான் சரி. SLANG வேறு... DIALECT வேறு.  "ங்கோத்தா.. " என்பது சென்னை ஸ்லாங்.  "படா பேஜாருப்பா..இப்ப இன்னா சொல்லுறே நீ.." என்பது சென்னை DIALECT . புரியவில்லை என்றால் விட்டுவிடவும். நான் சொல்ல வருவது இதைப் பற்றியல்ல.

நம்மூரில் பல வட்டார பேச்சு வழக்கு இருப்பது போல சிங்கை-மலேசியாவுக்கும் தனித்துவமான வட்டார பேச்சு வழக்கு உண்டு. "அண்ணே... இத இனிமே பாய்க்க முடியாதண்ணே..." என்பார்கள். பாய்க்க முடியாது என்றால், பாவிக்க முடியாது. பாவிக்க முடியாது என்றால், பயன்படுத்த முடியாது. இதே வார்த்தை இலங்கையிலும் பாய்க்கப்படுவதாக ஸாரி..பயன்படுத்தப்படுவதாக சென்னைப் பித்தன் அய்யா பதிவு ஒன்றில் பார்த்தேன். இலங்கையில் ஒரு துணிக்கடையில் "நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று பதாகை எழுதி வைத்திருந்தார்களாம். உபயோகிக்கும்..பயன்படுத்தும்...என்கிற அர்த்தத்தில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிங்கை சென்ற புதிதில், என் அலுவலகத்தில் மலேசியா நண்பன் ஒருவன் நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தான். அவனது பெயர் முருகன். காலை ஷிப்டை முடித்துக்கொண்டு நான் கிளம்பும் வேளையில் இரவுப் பணிக்கு அவன் வருவான். ஒரு நாள் பணிக்கு வந்த உடனேயே பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்..

"என்ன முருகா .. என்ன தேடிகிட்டு இருக்க..?.."

" என் சப்பாத்திய எவனோ ஓட்டை போட்டுட்டாண்ணே.."

" என்னது சப்பாத்திய ஓட்டை போட்டுட்டானுவளா.. அதப் போயி எதுக்குய்யா ஓட்டை போட்டாணுவ..  அத எங்க வச்சிருந்த..?"

" ட்ரெஸ் கழட்டுற இடத்தில தான்ணே வச்சிருந்தேன்.. "

" அத எடுத்துட்டு வா பாக்கலாம்... "

" அண்ணே.. ஓட்டை போட்டுட்டாணுவங்கிறேன்.. அத எடுத்துட்டு வா..ங்கிறீங்க.."

"சரியா.. டென்சன் ஆகாதய்யா.. வேற வாங்கிக்கிலாம் விடுய்யா ...."

"அண்ணே அது அம்பது வெள்ளிண்ணே.. "

" அம்பது வெள்ளியா.. என்னய்யா அநியாயமா இருக்கு.. சரி இனிமே வாங்குனா பேக்கு உள்ளேயே வச்சிக்க.. வெளிய வைக்காத..":

" நானே ஓட்டை போட்டுடாணுவங்கிற டென்சன்ல இருக்கேன்.. நீங்க வேற பேக்குல வய்யி.. லாக்கர்ல வய்யின்ட்டு.. "

"ஓட்டை போடுற அளவுக்கு வக்கிரம் புடிச்சவன் எல்லாம் இங்க இருக்கானா... ஒருவேள விளையாட்டா செஞ்சியிருப்பாங்க... சரி விடுய்யா... எவனாச்சும் கவர்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்கு விரல விட்டு பாத்துருப்பான். ஓட்டை விழுந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி அம்பது வெள்ளி விக்கிறது அநியாயம்யா.. அந்த ஹோட்டல் எங்க இருக்கு..."

அவ்வளவுதான். செம காண்டாகி அங்கிருந்து கிளம்பி போயிட்டான். எனக்கு ஒரே குழப்பம். நம்ம ஊரு பையன் ஒருத்தன கூப்பிட்டு, " என்னப்பா சாப்பிடற சப்பாத்திய போயி எவனாவது ஓட்டை போடுவானா... மட்டமா இருக்காங்கப்பா .."

"அவனே ஷூ வை காணும்னு தேடிக்கிட்டு இருக்கான்...  அவன ஏன்ணே டென்சன் ஏத்துறீங்க.."

" யோவ் சத்தியமா தெரியாதுய்யா.. அவன்தான் சப்பாத்தியை ஓட்டை போட்டுட்டாங்கனு சொன்னான்.."

"அது சப்பாத்தி இல்லன்ணே.. சப்பாத்து.."

அடப்பாவிகளா.. ஷூவதான் சப்பாத்துனு சொல்றீங்களா.. அப்போ இவ்ளோ நேரம் ஷூ காணாம போனத பத்திதான் பேசிகிட்டு இருந்திருக்கானா.. அவன் சப்பாத்துனு சொன்னது என் காதில சப்பாத்தின்னு விழுந்திருக்கு. நான் சப்பாத்தின்னு சொன்னது அவன் காதுல சப்பாத்துனு விழுந்திருக்கு. அப்போ ஓட்டைப் போடுறதுன்னா திருடிட்டு போறது போல.. 

அப்புறம் விசாரித்தால்தான் தெரியுது. சப்பாத்து என்பது shoe-வின் தமிழாக்கமாம். ஜெயமோகன் கூட அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நமக்குத்தான் தெரியாமல் போய்விட்டது.

ஒரு தமிழ் வார்த்தையை அயல்நாடு சென்று அறிய வேண்டிய சூழல் எனக்கு. ஆனால் வேற்று மொழியிலிருந்து வந்த நிறைய வார்த்தைகள் தற்போது தூய தமிழ் சொற்கள் போல தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் எழுதும் மரபுக் கவிதைகளில் கூட அவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகத் தென்படுகிறது.

உதாரணத்திற்கு சில... (அடைப்புக் குறிக்குள் உள்ளது தூய தமிழ்ச் சொல்)

அர்ச்சனை  (மலரிட்டு வழிபடுதல்)
சுதந்திரம்  (விடுதலை)
வாகனம்  (ஊர்தி)
 வருடம்  (ஆண்டு)
பட்சி  (பறவை)
சங்கதி  (செய்தி)
வாசனை  (மணம்)
விவாகம்  (திருமணம்)
பண்டிகை  (திருவிழா)
கேணி  (கிணறு)
கடுதாசி  (கடிதம்)
ஆஸ்பத்திரி  (மருத்துவமனை)
மகசூல்  (விளைவு)
ஜமக்காளம்  (விரிப்பு)
தபால்  (அஞ்சல்)
தயார்  (ஏற்பாடு)
புகார்  (முறையீடு)
வக்கீல்  (வழக்குரைஞர்)
பந்தயம்  (பணயம்)
அசல்  (மூலம்)
ஆசாமி  (ஆள்)
இலாகா  (துறை)
சந்தா (உறுப்பினர் கட்டணம்)
மைதானம்  (திடல்)
சன்னல்  (காலதர்)
பந்தோபஸ்து  (பாதுகாப்பு)
சிபாரிசு  (பரிந்துரை)
கோர்ட்  (நீதி மன்றம்)
சிப்பாய்  (போர்வீரன்)
பாக்கி  (மிச்சம்)
வாய்தா  (நிலவரி)
ஏராளம்  (மிகுதி)
நபர்  (ஆள்)

டிஸ்கி..
ஒன்னுமில்ல... ஒரே சினிமா பதிவுகளா எழுதி எனக்கும் போரடிச்சி போச்சு. அதான் ஒரு சேஞ்சுக்கு...

-------------------------------XXXXXXXXXXXXXXXXXXXX---------------------------------

15 comments:

 1. hahaha
  paavam unga nanpar
  antha samayam unga mela payangara kandaakiruppar:-)


  chappathi-shoe
  rasichen.

  ReplyDelete
 2. சப்பாத்திய பிச்சி உதறிட்டீங்க...! ஹிஹி...

  உங்கள் தளம் தானா என்று url-யை பார்த்தது உண்மை...

  ReplyDelete
 3. வடிவேலு அடிக்கடி ஆட்டைய போடறது என்ற பயன்படுத்துவார் . திருடுவது என்பதை இப்படிக் குறிப்பிடுவதை அதற்குமுன் அறிந்ததில்லை.
  நல்ல( நகைச்)சுவையான பதிவுதான்

  ReplyDelete
  Replies
  1. நன்றி..முரளிதரன் அவர்களே.. :-)

   Delete
 4. சப்பாத்து என்பது தூயதமிழ்ச் சொல்லல்ல! இது போத்துக்கேய மொழிச் சொல்.

  ReplyDelete
  Replies

  1. நன்றி..மேலே பட்டியலிட்ட சில சொற்கள் போல இதுவும் திசைச் சொல்லாக இருக்கலாம். இலங்கைத்தமிழில் இந்த சொல் அடிக்கடி உபயோகப்படுத்தப் படுகிறதாக அறிகிறேன். ஜெயமோகனும் கவிஞர் முத்துலிங்கமும் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்பதாக எங்கேயோ படித்திருக்கிறேன்.

   Delete
 5. இப்படித்தான் ஷூவ சப்பாத்திதுனு சொல்றீங்களா....த.ம்5

  ReplyDelete
 6. நானும் சப்பாத்தி பற்றி தான் பதிவோ? என்று நினைத்தேன்.... :)))

  ரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்..

   Delete
 7. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுரேஷ்

   Delete