Friday 7 September 2012

கையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி?

"வெளிநாட்டில் வேலை செஞ்சி கிழிச்சதெல்லாம் போதும்.சம்பாதிக்கிறதுக்கு இங்க ஆயிரம் வழிகள் இருக்கு.நமக்கே அடிமையா நிறைய பேர் இங்க இருக்கும்போது மத்தவிங்களுக்கு அடிமையா நாம ஏன் வேலை செய்யணும்.உடனே அடுத்த பிளைட்ட புடிச்சி சுருக்கால ஊரு வந்து சேருடா"-னு போன் போட்டு உசுப்பேத்தி விட்டுட்டான் என் நண்பன்.நான் வேற 'அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி?'-னு தீவிரமா யோசிச்சிகிட்டு இருந்த நேரம்.தாமதிக்காமல் ஊர் வந்து சேர்ந்துட்டேன்.

         பத்து பைசாகூட முதலீடு செய்யாம பணக்காரன் ஆவது எப்படி...? இதுதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யப்போற திட்டத்தின் தாரகமந்திரம்.எங்க திட்டத்தில நீங்களும் சேர்ந்தா உங்களையும் தெருக்கோடியில.......... வெயிட்..வெயிட்..தெருக்கோடியில இருக்கிற பிள்ளையார் மேல சத்தியமா லட்சாதிபதியா ஆக்கிடுவோம்னு சொல்ல வந்தேன்.

   எங்ககிட்ட மூன்று கவர்ச்சிகரமான திட்டங்கள் உள்ளது.உங்க வசதிக்கேற்ப எதுல வேணும்னாலும் நீங்க சேரலாம்.ஆனா என்ன...... கொஞ்சம் டெபாசிட் கட்டணும் அவ்வளவுதான்.கையில பணமில்லையா? கவலையை விடுங்க. சொத்தோ,பத்தோ,நகையோ,நட்டோ எது இருந்தாலும் பரவாயில்ல.அதை விற்று பணமாக மாற்றுவதற்கு எங்களிடமே முகவர்கள் இருக்கிறார்கள்.

        என்னது கல்வி தகுதியா?... கல்வியே இல்லாதுதான் மிகப்பெரிய தகுதியே....!!! அஞ்சாம் கிளாஸ் வரை படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 1.'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்....


 கடைசி காலத்தில பெத்தப்புள்ளைங்க கஞ்சி ஊத்தாம கையேந்த விட்டுவிடுவாங்கனு கவலைப்படுரீங்களா? இனி கவலையே வேண்டாம். அதுக்குத் தானே நாங்க இருக்கிறோம்.உங்கள் கடைசிக்கட்டக் கண்ணீரைத் துடைக்க அவதாரம் எடுத்த அட்சயப்பாத்திரம் தான் இந்த தங்கத்தட்டு திட்டம். இதோட விதிமுறைகள் என்னான்னு மொதல்ல தெரிஞ்சுகிங்க...

  இந்தத்திட்டத்தில சேர விரும்புகிறவங்க முதல்ல ஒரு சிறிய தொகையை டெபாசிட்டா கட்டணும். அதிகமில்லை வெறும் முப்பதாயிரம் ரூபாய் தான். டெபாசிட் கட்டின உடனே உங்கள் மன தைரியத்தைப் பாராட்டி உங்களை ஊக்குவிக்கும் விதமா எங்க கம்பெனி ஒரு அதிசயப்பரிசு தரும்.அதை ஒரு கையாள பிடிக்க முடியாதுங்க.இரண்டு கையையும் விரிச்சு வச்சுதான் பிடிக்கணும்.உலகத்தில எல்லா ஜீவன்களும் இதுக்கு முன்னால தலை குனிஞ்சுதான் ஆகணும்.மண்ணுல விளையிறது எல்லாமே மனுஷன் வாயிக்கு போறதுக்கு முன்னால இங்க வந்துட்டுதான் போகணும்.இவ்வளவு ஏன்.இதுல சோறும் போடலாம்.சோத்துக்கு தாளமும் போடலாம்.இப்பத்தெரியுதா அந்த அதிசயப்பொருள்..அதுதான் 'அலுமினியத்தட்டு....'

  எங்க திட்டத்தில சேர்ந்த உடனையே நீங்க ஒரு 'டீம் லீடர்'.அதாவது நோகாம நொங்கு திங்கிறவர்னு அர்த்தம்.இனிமேல்தான் உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கு.இந்த அலுமினியத்தட்டை கையில எடுத்துட்டு தெருத்தெருவா போயி...(யாருப்பா அங்க பிச்சை எடுக்கணுமானு கேட்கிறது..? அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி...?)உங்க பங்காளிங்க,பகையாளிங்க,நீங்க பழி வாங்கனும்னு நெனைக்கிறவங்க,ஓசி சோறு திங்கிறதுக்காகவே உங்க வீடு தேடி வர்றவங்க இப்படி தேடிப்புடிச்சி இந்தத்திட்டத்தில சேர்க்கணும்.

      மொதல்ல உங்க டீம்ல ரெண்டு பேர புடிச்சி போடணும்.அந்த ரெண்டு பேரும் தனித்தனியா ரெண்டு பேரை புடிச்சி போட சொல்லணும்.இப்ப உங்களுக்கு கீழ ஆறு பேராச்சா..!கடைசியா சேர்ந்த நாலு பேரும் தனித்தனியா ரெண்டு பேரை சேர்க்கணும்...இப்படி சேர்த்துகிட்டே போகணும்.ஆனால் பணத்தை கம்பெனில கட்டிடணும்.யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாருக்கும் அலுமினியத்தட்டு நிச்சயம் உண்டு.


  அப்பறம் ஒவ்வொரு வாரமும் உங்க தெருக்கோடியில இருக்கிற மூத்திர சந்து முக்குல மீட்டிங் போடுவோம். அங்க நம்ம கம்பெனியோட சிறப்பு பேச்சாளர் 'சீட்டிங்கானந்தா' சிறப்புரையாற்றுவார்.எவன் காலிலாவது விழுந்து கூட்டத்தை சேர்க்கவேண்டியது உங்க பொறுப்பு.அப்படியே வந்தவங்க எல்லோரையும் வளைச்சிப் போட்டு இந்தத்திட்டத்தில சேர்த்து விட்டீங்கனா உங்களுக்கு  'எக்சிகியுடிவ் லீடாரா' பதவி உயர்வு கொடுத்து உங்க கையில உள்ள அலுமினியத்தட்டுக்குப் பதிலாக 'பளபளக்கும் எவர் சில்வர் தட்டு' கொடுப்போம். (சரி...சரி....கைதட்டுனது போதும் நிறுத்துங்க..)

   இப்படியே உங்க டீம்ல ஆயிரம் பேர சேர்த்து விட்டீங்கனா...உங்கள் வீட்டைத்தேடி ஒரு 'செக்' வரும்.அந்த அமவுண்ட பார்த்தீங்க,சந்தோசத்துல அப்படியே ஆடிப்போயிடுவீங்க.வாழ்க்கையில இப்படியொரு பணத்தை பார்த்திருக்க மாட்டீங்க.இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு சம்பளம்தான் அந்த 111ரூபாய்.

இன்னொரு முக்கியமான கண்டிசன்...உங்க டீம்ல ஆள் சேர்க்கிறது நின்னுடிச்சினா உங்களுக்கு வர்ற 'செக்'கும் நின்னுடும்.அதனால தீயா வேலை செய்யணும். "செக் எப்ப வரும்","திட்டத்திலிருந்து விலகிக்கிறேன்", "டெபாசிட்ட திருப்பிக்கொடு","தங்கத்தட்டு எப்பவரும்" இப்படி யாராவது கேள்வி கேட்டா எல்லாத்துக்கும் ஒரே பதிலைத்தான் சொல்லணும். 'போயி ஆள் சேரு..அப்பறம் வரும்'.எங்கே திருப்பி சொல்லுங்க... 
 
"போயி ஆள் சேரு..அப்பறம் வரும்"... "போயி ஆள் சேரு..அப்பறம் .."  "போயி ஆள் சேரு...."  "போயி ஆள் ....." "போயி ..."   "போ......"

(ஆள் சேர்க்காம போனா கம்பெனிக்கு டெபாசிட் லாபம்.டெபாசிட் கட்டினதால ஆள் சேர்த்தே ஆகணும். கொய்யால சாவட்டும்.இதுதான் கம்பெனியின் சீக்ரெட் பாலிசி..)

ஓகே .. எல்லோரும் ரெடியா..?
கையில் ஒரு தட்டு....உனக்கு குழியை நீயே வெட்டு....

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2. பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்..


பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட அஞ்சு ஜோடி உயர் ரக கருநாக குஞ்சுகளை உங்களுக்கு கொடுப்போம்.அது வீரியம் உள்ள குஞ்சானு சந்தேகப்படுறவுங்க உங்க கையில கடிக்க விட்டு சோதனை செய்துகொள்ளலாம்.
 
   அஞ்சு ஜோடி குஞ்சுகள் வாங்குபவருக்கு  பத்து பச்சைமூங்கில் இலவசம். பத்து ஜோடி வாங்கினா தென்னை ஓலை,சீவின இளநீ இலவசம்.இருபது ஜோடி வாங்கினா,பத்தி,சாம்பிராணி,ரோஜாப்பூ மாலை இலவசமா கொடுப்போம். அதுக்கு மேல வாங்கினா நாலு பேர உங்ககூடயே அனுப்பி வைப்போம்..   

 இந்தத்திட்டத்தில சேர விரும்புகிறவங்க ரூபாய் ஒரு லட்சம் முதலீடா போடணும்.உங்க முதலீட்டுக்கு ஏற்றமாதிரி உங்க வீட்டு தோட்டத்திலேயோ அல்லது வீட்டுக்குள்ளேயோ  சிறிய / பெரிய புற்றுகளை நாங்களே ஏற்படுத்திக் கொடுப்போம்.இதற்காக 'ஸ்பெசல் மண்' ஆப்பிரிக்கவிலிருந்து கப்பல் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ளது.

உங்க வீட்டுக்குள்ளேயே சந்து,பொந்து,இண்டு,இடுக்கு,வெடிப்பு,ஓட்டை இதெல்லாம் இருந்தால் புற்று கட்டுவதற்கான செலவை கொஞ்சம் மிச்சப் படுத்தலாம்.வீட்டிற்குள் ஆங்காங்கே பழைய ஈயப் பித்தளை சாமான்கள், பிஞ்சுபோன துணிமணிகள்,நஞ்சுப்போன கோணிப்பைகள்,உடைந்து போன மரச்சாமான்கள் இதையெல்லாம் போட்டு வச்சீங்கனா இவைகள் ஓடிப்பிடித்து, ஒளிஞ்சான்கண்டு விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். 


 கருநாகப்பாம்புக்கு தேவையான தீவனம்,எலி,தவளை,முட்டை ஆகியவற்றை எங்களிடமோ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.ஐந்து மாதத்திற்குப் பிறகு நன்கு வளர்ந்த பாம்புகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகும். அந்த நேரத்தில் நீங்கள் வீட்டைபூட்டி விட்டு ஒரு வாரம் எங்கேயாவது தங்கிவிட்டு வரவும்.சுமார் எட்டு மாதத்திற்குப் பிறகு முட்டையிட ஆரம்பிக்கும்.அந்த முட்டையை நாங்களே வாங்கிக் கொள்வோம்.இதில் 'விட்டமின் Z ',ஒமேகா 6+9- போன்ற சத்துக்கள் உள்ளதால் மேலை நாடுகளில் இதன் ஆம்ப்லேட்டுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
 
இதன் கழிவுகளில்  மருத்துவகுணம் உள்ளதால் அமெரிக்காவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.அதனால் கழிவுகளை பத்திரமாக பாலிதீன் பைகளில் சேகரித்து வைக்கவும்.இதன் இறைச்சி கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேலே போகும். சீனாவில் ஒரு பிளேட் 'கருநாகப்பாம்பு பிரியாணி' இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக செய்தி கிடைத்திருக்கிறது.ஐந்து ஜோடி கருநாகப்பாம்பிலிருந்து 1லிட்டர் விஷமும்,அதன் இறைச்சியிலுள்ள கொழுப்பிலிருந்து  3 லிட்டர் எண்ணையும் எடுக்கப்படுகிறது.இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்.

ஆக...இந்த கரு நாகப்பாம்பு வளர்ப்பால் ஒரே வருடத்தில் நீங்களும் உங்க குடும்பமும் மேலே(?!) போயிடுவீங்க.. அதாவது பெரிய பணக்காரனாயிடுவீங்கனு சொல்ல வந்தேன்....


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 அரளிவிதை கொள்முதல் திட்டம்.


   

ங்களுடைய இந்த இரண்டு திட்டங்களிலும் சேர்ந்து ஓரிரு மாதங்களில் நடுத்தெருவுக்கு வரும் சூழல் ஏற்பட்டால் எங்கள் கம்பெனி உங்களை கைவிட்டுவிடாது.உங்கள் பிரச்சனைகளை ஒரேயடியாக(!) தீர்க்க எங்கள் கைவசம் மற்றொரு திட்டமும் உள்ளது.அதுதான் அரளிவிதை கொள்முதல் திட்டம்.

    இதற்கு தேவையான கன்றுகளை எங்களிடமே பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீட்டைச்சுற்றி இந்த கன்றுகளை நட்டு அதற்கு தேவையான உரம்,தண்ணி விட்டுவந்தால் ஒரே வருடத்தில் பெரிய மரமாக வளர்ந்து காய்க்கத் தொடங்கும் .


    உங்கள் வீட்டு கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு,வாந்தி வந்தால் இதன் தழைகளை பறித்து உண்ண செய்யலாம்.பிறகு எல்லாமே மொத்தமாக(!) நின்றுவிடும்.

   கடன் பிரச்சனை,உடல் ரீதியான பிரச்சனை,குடும்பப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உடனடித்தீர்வு இதன் மூலம் கிடைக்கும்.அரை கிலோ அரளி விதையை எடுத்து அதனுடன் மிளகாய், சோம்பு,சீரகம்,ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் சிறுது தண்ணீர் சேர்த்து பதமாக மிக்சியில் அடித்து ஏழு மண்டலமாக பிரித்து சாப்பிட்டு வந்தால் உங்கள் ஒட்டு மொத்த பிரச்சனையும் ஒரேயடியாக முடிந்து(!) விடும்.    

 ---------------------------------((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))--------------------------

32 comments:

 1. தமிழ்நாட்டு நிலைமைய நினைச்சு சிரிக்கிறதா, அழுவறதான்னு தெரியல பாஸ்..
  ஆறு மாசத்துக்கு ஒரு தடவை புதுசு புதுசா ப்ளான் பண்ணி கிளம்பி வந்துருவாங்க.... :):)
  பதிவு நல்ல நகைச்சுவையாக இருக்கு பாஸ்... :):)

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்... தேக்கு மர வளர்ப்புத்திட்டத்தில தொடங்கின மோசடி இன்னும் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.இவர்களோட மூலதனமே மக்களின் அறியாமைதான்.

   Delete
 2. எங்க தெரு முக்காண்ட ஒரு கிழம் தொன்நூற்றிஎட்டு வயசாகுது, அதற்கு இந்த திட்டத்தில் சேர ஆசையாம், எங்கே வந்த பார்கலாமுனு கேட்குது.

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா... நன்றி கும்மாச்சி.எங்களை தொடர்புகொள்ள வேண்டுமானால் மூணு சைபர் ரெண்டு பூஜ்யம் நாலு ஜீரோ சைபர் இந்த நம்பருக்கு போன் செய்தீங்கனா நாங்களே வந்து அள்ளிகிட்டு போயிடுவோம்.அதாவது கார் வச்சி கூட்டிட்டு போவோம்னு சொன்னேன்.

   Delete
 3. நெசமா ஊருக்கு வந்துடிங்களா???
  இந்த மூணு வேலையில் அரசு மானியம் ஏதும் தராங்களா? ஹி..ஹி....

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரகாஷ்.பேசாம ஊருக்கு வந்து இப்படி ஏதாவது தொடங்கலாம்னு ஐடியா (!) இருக்கு.

   //இந்த மூணு வேலையில் அரசு மானியம் ஏதும் தராங்களா?//

   இதை கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தில் சேர்த்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை.
   கருநாகப்பாம்பு கக்காவிலிருந்து மின்சாரம் தயாரிக்க யாராவது முன்வந்தால் அதற்கு அரசு நிதியுதவி அளிக்கப்போவதாக கால்நடைத்துறைத் துறை அமைச்சர் கானாடு காத்தான்அறிவிப்பு.

   Delete
 4. ஹா... ஹா... என்னென்ன திட்டங்கள்... அதுவும் இரண்டாவது செம...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் திண்டுக்கல் தனபாலன்அவர்களுக்கு நன்றி

   Delete
 5. ///கையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு....அஞ்சே மாசத்துல அம்பானியாவுறது எப்படி?//

  ங்கொக்கமக்கா என்னா தலைப்பு!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா... நன்றி நண்பா..

   Delete
 6. //'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்....//

  "கோல்ட் அக்யூஸ்ட்" இதெல்லாம் எப்பிடிய்யா சிந்திக்கிறீங்க! :)

  ReplyDelete
  Replies
  1. பல அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளையடிச்ச கும்பல் நண்பா அது...இப்ப திருப்பவும் ஆரம்பித்திருக்காம்.

   Delete
 7. கோப்ரா ஆம்ப்லேட் ஹி ஹி ஹி! :)

  சத்தியராஜ் பாவம்ன்னே.. அவரை முட்டை வறுவல் மாதிரி இந்த வரு வறுக்குரீங்க! :) :)

  ReplyDelete
  Replies
  1. பாஸ் இது அப்படியே ஈமு கோழி விளம்பரம்.ஈமுவை தூக்கிட்டு பாம்பை போட்டேன் .அவ்வளவுதான்.மற்றபடி சத்தியராஜ் உட்பட அனைத்தும் உண்மையே..

   Delete
 8. இந்த திட்டத்திலேயே அரளி விதை திட்டம் தான்னே "டாப்பு" ஏன்னா டக்குன்னு மேலே(!) போகலாம் பாருங்க! :) :)

  ReplyDelete
 9. அற்புதமான வரிகள்.
  கையில் ஒரு தட்டு..உனக்கு குழியை நீயே வெட்டு..

  இந்த MLM( Multi level marketing) பற்றி இவ்வவளவு தெளிவாக சுருக்கமாக சொல்லியது. அனுபவமோ?
  அதே போல் team leader என்பதை நோகாம நொங்கு திங்கிறவர்னு சொல்லியது மிக மிக சரியான கருத்து

  பல தொழில்கள் இதில் உள்ளன. அதை பற்றி எழுதவும்.
  (மருந்து விற்பது, பாத்திரம் விற்பது, பல் பொடி விற்பது, படிப்பு விற்பது, சொற்பொழிவு விற்பது .......)

  ReplyDelete
  Replies
  1. பாஸ் நம்ம ஊரை விடுங்க...இங்க சிங்கப்பூர்ல கட்டுமானத்தொழிலுக்கு வந்து குறைந்த சம்பளம் வாங்கி கஷ்டப்படுற நம்ம ஊரு ஆளுங்களை இப்படி பணத்தாசைக் காட்டி ஏமாத்தியிருக்கு ஒரு கும்பல். சேரும்போது எழுநூறு டாலர் கட்டச்சொல்லி வாரம் ஒரு முறை மீட்டிங் வைத்து சீட்டிங் பண்ணிடாங்க.போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணினால் அவுங்களுக்குத்தான் பிரச்சனை..அதனால டெபாசிட்டும் வாங்க முடியாம ஆளும் சேர்க்க முடியாம நிறையப்பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க.இதில நிறைய படித்த விவரம் தெரிந்தவர்கள் கூட ஏமாந்திருக்காங்க ...

   இதுல இன்னொரு சங்கடம்....நல்ல நண்பர்களின் நட்புகள் கூட இந்த மோசடித்திட்டதால உடைந்து போயிருக்கிறது.என்னை சேரச்சொல்லி நச்சரித்த என் நண்பன் கடைசில 'எஞ்சினியரிங் படிச்சிருக்கியே உனக்கு அறிவில்லையா..நானுந்தான் சேர்ந்திருக்கேன்" என திட்ட ஆரம்பித்துவிட்டான்...நான் யாரு? எமாந்திடுவேனா? (உண்மையைச்சொன்னா அந்த நேரத்தில கொஞ்ச பணக்கஷ்டம்..இல்லனா நானும் சேர்ந்திருப்பேன். )

   Delete
 10. //அஞ்சு ஜோடி குஞ்சுகள் வாங்குபவருக்கு பத்து பச்சைமூங்கில் இலவசம். பத்து ஜோடி வாங்கினா தென்னை ஓலை,சீவின இளநீ இலவசம்.இருபது ஜோடி வாங்கினா,பத்தி,சாம்பிராணி,ரோஜாப்பூ மாலை இலவசமா கொடுப்போம். அதுக்கு மேல வாங்கினா நாலு பேர உங்ககூடயே அனுப்பி வைப்போம்.. //

  நல்லா இருக்குயா திட்டம்

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா... நன்றி பாஸ்..

   Delete
 11. //அரளிவிதை கொள்முதல் திட்டம்//

  இந்த திட்டம் சிறப்பா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. பாஸ் அடுத்ததா 'கள்ளிப்பால் கறவைத்திட்டம்' ஆரப்பிக்கிறதப்பற்றி தீவிரமா யோசிச்சிகிட்டு இருக்கோம்.

   Delete
  2. நம்மளை மறந்துடாதீங்க பாஸ்

   Delete
 12. //பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்//

  //பிளாக் கோப்ரா வளர்ப்புத் திட்டம்//

  படம் ஜூப்பரு.. மாடலிங் நல்ல ஆளை தான் போட்டு இருக்கீக ம்

  ReplyDelete
  Replies
  1. இவரு எல்லா கேரக்டருக்கு மட்டுமல்ல...எல்லா விளம்ம்பரங்களுக்கும் பெர்பெக்டா சூட் ஆவாரு...

   Delete
 13. //'கோல்ட் அக்யூஸ்ட்' தங்கத்தட்டு திட்டம்//

  திருஒடு ஏந்த எப்படி எல்லாம் யோசிக்குறாங்க....


  பாஸ், சீக்கிரத்தில் முன்னுக்கு வந்துடலாம்

  ReplyDelete
  Replies
  1. //பாஸ், சீக்கிரத்தில் முன்னுக்கு வந்துடலாம் //

   தட்டு ஏந்துகிறதத்தானே சொல்றீங்க... :-))))

   Delete
  2. பாஸ் நீங்க காப்பு ச்சே கப்புன்னு புடிசிக்கிரீன்களே

   Delete
 14. ஆஹா! அற்புதமான திட்டங்கள் மணிமாறன். பணத்துக்காக மனிதனா அல்லது மனிதனுக்காக பணமா என கடும் சிந்தனைப் போரில் மூழ்கி இருந்த என்னை உங்க முத்தான ஆலோசனைகள் மீட்டு உயிர் பிழைக்க வைக்கும் என நம்பிக்கையுடன் வந்திருக்கேன் மணிமாறன்.
  இது போன்ற திட்டங்களால் தமிழ் குலத்தை வெகு சீக்கிரமா ஒரேயடியா தூக்கிடலாம்(?!)
  பகிர்வுக்கு நன்றி. ;-)

  ReplyDelete
 15. ஹா..ஹா... நன்றி பாஸ்.. அப்ப சீக்கிரமே எங்க திட்டத்தில சேர்ந்திடுவீங்க.... :-)))))))

  ReplyDelete
 16. Interesting schemes!. Keep up the good work. We anticipate many more from you

  ReplyDelete
 17. summa irundalae nammooru kaaran pudusu pudusa kilappuan. Idula neenga vera eduthu kudukkaringa...

  ReplyDelete