Wednesday 12 September 2012

ஹைடெக் நரகம்..... ( சிறுகதை )


காலை 9.30 மணி.

வழக்கம் போலவே
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பள்ளி பரபரப்பாகிக்கொண்டிருந்தது.

பள்ளியைச் சுற்றி வானுயரக் கட்டிடங்களும் ஷாப்பிங் மால்களும் கம்பீரமாக காட்சியளித்தது.மெட்ரோ ரயில்களில் வழக்கமான காலைநேர பரபரப்பு.

புகை கக்கும் பெட்ரோலிய வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு எலெக்ட்ரிக் பைக்,எலெக்ட்ரிக் கார்,எலெக்ட்ரிக் பஸ் என சப்தமில்லா வாகனங்களின் 'ஹார்ன்' சப்தம் காதைக்கிழித்தது.

சூரியன் தன் வருகையை உறுதிப்படுத்தி மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் தெரு விளக்குகள்  சூரியனைவிட பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. தேனீர்கடை விளம்பரப்பலகைக் கூட வண்ண நியான் விளக்குகளால் ஜொலித்தது.

வீடுகளில் மட்டுமில்லாமல் ஹோட்டல்களில் கூட மின்சார அடுப்பில்தான் சமையல்.வீட்டிற்கு வரும் குடிதண்ணீர் குழாய்களில் குளிர் நீர்,வெந்நீர் என இ
டண்டாகப் பிரிக்கப்பட்டு 24 மணி நேர சேவை இருந்தது.ஏசி,லிப்ட், எஸ்கலேட்டர் பொருத்தப்படாத வீடுகளே அங்கில்லை.

புத்தகக்கடையின் வெளியே அன்றைய எலெக்ட்ரானிக் தினத்தந்தியில்,"வீடுகளைத் தொடர்ந்து அடுத்து ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கும் இலவச மின்சாரம் வழக்குவதைப்பற்றி அமைச்சர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை" என்ற தலைப்பு செய்திகளுடன் தொங்கிக் கொண்டிருந்தது.

மாணவர்களும் ஆசிரியர்களும் இரண்டு/மூன்று/நான்கு சக்கர மின்சார வாகனங்களில் வரிசைகட்டி நின்றனர்.வாகனங்களில் இருந்தவாறே பள்ளியின் நுழைவாயிலில் உள்ள ஸ்கேனர் மெசினில் தங்கள் ஐடென்டிடி கார்டை தட்ட,தானியக்கி கதவு திறந்து ஒவ்வொருவரையும் உள்ளே செல்ல அனுமதித்தது.

இறைவணக்கம் முடிந்து மாணவ மாணவிகள் தத்தமது வகுப்புக்குச் செல்லத்தொடங்கினர்.பள்ளி தலைமையாசிரியர் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பத்தாம் வகுப்பை நோக்கி நடந்தார்.

"இன்னும் இரண்டு மாதங்களில் உங்களுக்கு பொதுத்தேர்வு வருகிறது.மாற்றுச் சான்றிதழில் உங்களின் அங்க அடையாளங்களை குறிப்பிட வேண்டியிருக்கிறது.அதனால் வரிசையில் வந்து காண்பித்துவிட்டுச் செல்லவும்" தலைமை ஆசிரியரி
ன் கட்டளையைத்தொடர்ந்து அகர வரிசைப்படி ஒவ்வொருவராய் எழுந்து வந்தனர்.

"உன் பேரு என்னடா?.. "

"ச.அழகேசன் சார்..."

"உன்கிட்ட என்ன அடையாளம் இருக்கு?"

" இடது கையில மூணு விரல் ஒட்டியே இருக்கும் சார்..."

" ம்ம்ம்...அடுத்தது..."

" க.அன்புக்கரசன் சார்.... இடது பக்க காதுமடலே இல்லசார்..ஓட்டை மட்டும்தான் இருக்கு
ம்..."
 
" ப.புகழேந்தி சார்... வலது கால் கொஞ்சம் கட்டையா இருக்கும் சார்.."

" ச.தம்பித்துரை சார்...எனக்கு ஒரு பக்க இமையும் புருவமும் ஒட்டியே இருக்கும் சார்......பின்னாடி நிக்கிறவன் பேரு பாலமுருகன் சார்.அவனுக்கு பேச வராது சார்.. ஊமை.. "

"அதெல்லாம் எழுத முடியாது வேற ஏதாவது இருக்கா" கண்டிப்புடன் கேட்டார் தலைமையாசிரியர்.

" அவனுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும்னு அவுங்க அம்மா சொல்வாங்க சார் ..ம்ம்ம்ம்ம்ம்...சார்....அவனுக்கு இடது காலில எட்டு விரல் இருக்கும் சார்.."

"என் பெயர் விஜயலட்சுமி சார்...எனக்கு ராத்திரி ஆனா சரியா கண்ணு தெரியாது சார்."

"வேற ஏதாவது இருக்காமா?.." கொஞ்சம் பரிதாபத்துடன் கேட்டார்.

தன் பாவாடையை சிறிது தூக்கி," சார் இதை யானைக்கால்னு எங்கம்மா சொல்வாங்க சார்.."

எல்லோருடைய அடையாளங்களையும் குறித்துக்கொண்ட தலைமையாசிரியர்,தன் பார்வை -25 க்குமேல் போனதால் தயாரிக்கப்பட்ட அவரின் பிரத்தியோக மூக்குக் கண்ணாடியை கழட்டி மேசைமீது வைத்தார். அனைத்து தகவல்களையும் 'பிரின்ட்' எடுத்து அடியில் கையெழுத்திட்டு அதன் கீழே 12-03-2032 என தேதிக் குறிப்பிட்டார்.அதன் வலது புறத்தில் ரப்பர் ஸ்டாம்பிலுள்ள பள்ளியின் பெயரையும் பதிந்தார்.அதில் "அரசு உயர்நிலைப் பள்ளி.இடிந்தகரை " என்றிருந்தது. வணக்கங்களுடன் ..
மணிமாறன்.

-------------------------------------------------------------(((((((((((((((((())))))))))))))))))))))))))))----------------------------------

28 comments:

 1. Replies
  1. என்னாச்சு பாஸ் ...

   Delete
 2. தலைப்புக்கு பின்னாடி இம்புட்டு பெரிய கொடுமை இருக்கா...?????

  ReplyDelete
  Replies
  1. ஜப்பானில் அணு உலை அமைந்திருக்கும் பகுதிகளில் இது போன்ற குறைபாடுகள் நிறையவே இருக்குது பாஸ்...

   Delete
 3. அருமை அருமை
  இறுதி வரி படித்ததும் தலையில்
  இடி விழுந்ததைப்போல இருந்தது
  மனம் சுட்ட கதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்றோரின் பாராட்டுகள் எங்களை நிறையவே ஊக்கப்படுத்தும் சார்.

   Delete
 4. ஏற்கனவே இடிஞ்சு போன இடிந்தகரை.அது காணாதுன்னு இன்னொரு இடியா.2032ல் கூட அழகேசன்,அன்புக்கரசன்,புகழேந்தி,தம்பிதுரை,விஜயலட்சுமி எனஅழகான தமிழ் பெயர்கள்.தமிழினத்தை அழிக்க துடிக்கும் இந்தியாவின் இறப்பு சான்றிதழ்களிலாவது தமிழ் பெயர்கள் அழியாமல் இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்...


   // 2032ல் கூட அழகேசன்,அன்புக்கரசன்,புகழேந்தி,தம்பிதுரை,விஜயலட்சுமி எனஅழகான தமிழ் பெயர்கள்.//

   இந்தப்பெயர்கள் எல்லாமே 20 -30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதானே .. தமிழே அழிந்தாலும் தமிழ் பெயர்கள் மறைந்து போவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோனுகிறது...

   Delete
 5. முடிவில் மனது இடிந்து போனது...

  ReplyDelete
 6. எவ்வளவு அழகான எழுத்து நடை! வியப்பு! முடிவு செமையாய் முடித்தீர்கள்!

  கொந்தளித்துக்கொண்டிருக்கிறது இடிந்தகரை... கொஞ்சமாவது காதுகொடுத்து கேட்பார்களா அதிகாரத்தில் இருப்போர்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்.....

   சிவகாசி விபத்தில் இறந்தவர்களில் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்களைவிட பார்க்கச்சென்றவர்கள்தான் அதிகமாம்.இந்த லட்சணத்தில் இருக்கிறது நமது பாதுகாப்பு அமைப்பு.

   நூறு சதவீத பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் வரையில் அணு உலை ஒரு கொலை உலைதான்...

   Delete
 7. முடிவு நெஞ்சில் அறைந்தது அண்ணா.....இன்றே முகநூலில் பரப்புகிறேன்...சிறப்பான படைப்பு.

  ReplyDelete
  Replies
  1. தம்பி சதீசுக்கு மிக்க நன்றி....

   Delete
 8. நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. நண்பர் BKK அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 9. Replies
  1. நண்பருக்கு மிக்க நன்றி..

   Delete
 10. Replies
  1. thanks for your comment சமுத்ரா

   Delete
 11. சுஜாதா கதை படித்தது போன்ற உணர்வு..

  ReplyDelete
  Replies
  1. பெரிய வார்த்தை பாஸ்.. இருந்தாலும் அவரின் வாசகன் என்ற முறையில் சந்தோசம்.

   Delete
 12. நல்ல கதை...இனி உங்களை பின்தொடர்ந்து கொள்கிறேன்

  ReplyDelete
 13. Well said. Thanks for sharing the risks involved behind nuclear projects. BTW, nuclear power plants produce meager amount of electricity which will not be sufficient to cater the needs of a society. In our state wind energy and solar energy are viable sources.

  ReplyDelete
 14. வார இதழ்களில் வரும் படைப்புகளைத் தூக்கிச் சாப்பிடும் மிகச் சிறந்த படைப்பு.

  தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் நடையும் அமைந்துள்ளது.

  பாராட்டுகள்.

  இனியும் எழுதுங்கள்.

  ReplyDelete
 15. உண்மையாகி விடாதிருக்கப் பிரார்த்திப்போம் ..

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete