நீண்ட காலமாகவே எனக்கொரு ஆதங்கம் இருக்கிறது.கலக்கபோவது, அசத்தபோவது,நிமுத்தபோவது, கவுக்கபோவது என எந்தத் தொலைக்காட்சியைத் திருப்பினாலும் மிமிக்கிரி என்ற பெயரில் அதே 'கொழகொழ' எம்ஜியார், அதே 'ஆ..ங்' விஜயகாந்த்,அதே ' கோபால் ' சரோஜாதேவி, சிவாஜி,நம்பியார்,ரகுவரன்,பூர்ணம் விசுவநாதன்.....etc என்று அரைத்த மாவையே அரைக்கும் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்கள்,தனித்துவமான குரலமைப்பு உள்ள நிறைய கலைஞர்களை விட்டுவிட்டார்கள்.
அந்தக்கால வி.எஸ்.ராகவனையும், டி.எஸ்.பாலையாவையும் கூட தன் பலகுரல் வரிசையில் சேர்த்துக் கொண்டவர்கள் இவரை எப்படி மறந்துபோனார்கள் என்பதுதான் என்னுள் எழுந்த ஆச்சர்யம்.கொஞ்சம் திருட்டுமுழி,வெள்ளந்தியான கிராமத்து முகவெட்டு,கொஞ்சம் கோயமுத்தூர் மண்வாசனைக் கலந்த பேச்சு,ஒரு ஆடு மனிதனைப் போல் மிமிக்கிரி செய்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு தனித்தன்மையான குரலுக்கு சொந்தக்காரரான அமரர் திரு.கல்லாப்பெட்டி சிங்காரம் அவர்கள் தான் நான் குறிப்பிடும் அந்த மகா கலைஞன்.
எண்பதுகளில், திரைக்கதை யுக்தியால் தமிழ்த் திரையுலகை தன் கட்டுக்குள் வைத்து கலக்கிக் கொண்டிருந்தவர்கள் இருவர்.ஒருவர் T.ராஜேந்தர் மற்றொருவர் K.பாக்யராஜ்.இருவருக்குமே எதோ ஒரு வகையில் தாய்க்குலங்களை கவர்ந்திழுக்கும் ' மேஜிக் ' நன்றாகவே தெரிந்ததாலையோ என்னவோ இவர்களின் படங்கள் அப்போது சக்கைப் போடு போட்டது. குறிப்பாக,அன்றையக் காலக்கட்டத்தில் கிராமப் புறங்களிலிருந்து மாட்டுவண்டி கட்டிக்கொண்டு, குடும்பத்தோடு சென்று பாக்கியராஜ் படங்களைப் பார்த்து ரசிப்பதெல்லாம் கிராமப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு.
பாக்யராஜ் படங்கள் எல்லாமே சமகால ரசிகனின் ரசனைக்கும் ரசிப்புக்கும் இன்னமும் ஒத்துப்போகக்கூடிய காவியங்களாக இருப்பதற்கு அவரின் அசத்தலான திரைக்கதை என்பது அறிந்த ஒன்று தான்.அதைத் தவிர்த்து பார்த்தோமானால் அவரின் அடுத்த பலம் நேர்த்தியான பாத்திரப்படைப்புகள்.ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் தேர்ந்தெடுத்த நடிகர்/நடிகைகள்,அந்த கதாபாத்திரமாகவே மாறி நம் மனதில் பதிந்துவிடுவார்கள். அவரின் படங்களில் வரும் நடிகர்/நடிகைகளுக்கு அதிக பட்சமாக இரண்டு மூன்று படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.ஆனால் தொடர்ந்து அவரது படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகர் கல்லாபெட்டி சிங்காரமாகத்தான் இருக்க முடியும்.
எண்பதுகளின் ஆரம்பம்.என் பள்ளிப் பருவத்தில் தியேட்டரில் போய் படம் பார்ப்பதெல்லாம் எட்டாக்கனியாக இருந்த காலகட்டமது.வகுப்பில் ஏதாவது பணக்கார பசங்க படம் பார்த்துவிட்டு கதை சொல்லும் போது தியேட்டரில் பார்த்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டு திருப்தி பட்டுக் கொள்வதோடு சரி.கிராமங்களில் இப்படி செவி வழியாகவே படம் பார்த்தக் கூட்டங்கள் நிறையவே உண்டு.அதிலும் பாக்கியராஜ் படங்களைப் பார்த்துவிட்டு ,"டேய்..அப்போதான் கல்லாப்பெட்டி சிங்காரம் உள்ள வருவாரு.." என சொல்லும்போது எங்களையறியாமலே உள்ளக்கூட்டில் உற்சாகப் பறவை சிறகடிக்கும். எதேச்சையான ஒரு சந்தோசம் எங்கள் கண்களில் வழிந்தோடும்.குறிப்பாக கல்லாப்பெட்டி வரும் காட்சிகளை மீண்டும் ஒருமுறை சொல்லச்சொல்லி கேட்டு ரசிப்போம்.
கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் சிறு சிறு கதாபத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் கல்லாபெட்டியின் முறைப்படியான அறிமுகம் அமைந்தது 1979 -ல் வெளிவந்த 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தில் தான்.இது பாக்யராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் படம்.அந்தப் பட டைட்டில் இதைத் தெளிவாக சொல்கிறது. ஆனால் இதற்கு முன்பே 1976 -ல் வெளிவந்த 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' படத்தில் நகை திருடும் வியாபாரி வேடத்தில் நாகேஷ் உடன் நடித்திருப்பார்.
' மோட்டார் சுந்தரம்பிள்ளை '
கல்லாபெட்டியின் பிரத்யேகமான அந்த ' வாய்ஸ் ' சுவரில்லாத சித்திரங்கள் படத்திலே காணலாம். "அடேய்..அடேய்...அழகப்பா...இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா..." என்று தன் மகன் பாக்யராஜுடன் கோபிப்பதாக இருக்கட்டும்,கவுண்டமணியின் தையல்கடையில் உர்கார்ந்துக் கொண்டு "கண்ணடிச்சா வராத பொம்பளை...கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா..?" என்று திரும்பத் திரும்ப கேட்டுவிட்டு,பின்னால் நிற்கும் காந்திமதியைப் பார்த்தவுடன் வழிவதாக இருக்கட்டும்,பாக்யராஜ் திரை வாரிசுகளின் திருட்டு முழி சரித்திரம் அனேகமாக இவரிடமிருந்துதான் ஆரம்பித்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.அதிலும் அவர் "லட்சுமி அக்கா"-வின் கதை சொல்லும் அழகே தனி...!
லட்சுமியோட அக்கா கதை தெரியுமா..?
கல்லாப்பெட்டியின் நடிப்பில் மகுடமாய் அமைந்தது 'இன்று போய் நாளை வா'..திரைப்படம். சராசரியை விட குள்ளம், மெலிந்த தேகம்,பார்த்த உடனே ' பக் 'என்று சிரிப்பை வரவழைக்கும் முகம், ஆடு அடிதொன்டையில் பேசுவதுபோல் குரல் என நகைச்சுவைப் பாத்திரத்திற்கேற்ற உருவ அமைப்புடைய ஒருவர் பயில்வானாக நடிப்பதென்பது சாத்தியப்படுமா..?. அவரது உடல் மொழியும்,வசன உச்சரிப்பும் அத்தனை குறைகளையும் ஒட்டுமொத்தமாகத் தூக்கி சாப்பிட்டு விடும்.காமா பயில்வானின் ஒரே சிஷ்யனான சோமா பயில்வானாக வருவார். "வெரிகுட்..வெரி குட்...வெரி குட்...", "கமான்..கமான்.. கமான்..குயிக்..குயிக்..", "தேங் யு...தேங் யு...", "ஓக்கே பை..ஓக்கே பை " என்று ஷோல்டரை உலுக்கி,கண்களை உருட்டி அவர் சொல்லும் ஸ்டைல் அலாதியானது.
ஒரு கை ஓசை,மௌன கீதங்கள்,அந்த ஏழு நாட்கள் என தொடர்ந்து பாக்கியராஜ் படங்களில் படம் முழுக்க வியாபித்திருப்பார் கல்லாப்பெட்டி.
'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் பாக்யராஜுக்கு அப்பா வேடம்.பணக்கார வேஷம் போடும் ஏழை வாட்ச்மேன்.கேட்கவா வேண்டும்...? ஒரு கட்டத்தில் முதலாளியின் மகள் பூர்ணிமா மனது மாறி பாக்யராஜை திருமணம் செய்ய சம்மதித்துவிடுவார்.அதை பாக்யராஜின் அப்பாவாகிய கல்லாபெட்டியிடம் தெரியப் படுத்துவது போல் காட்சி.அவரின் காலில் விழுந்து, "என்னை ஆசீர்வாதம் செய்யுங்க மாமா...." என பூர்ணிமா சொல்லும்போது, " மாமா.. நான் மாமா.." என்று வார்த்தைகள் வராமல் சந்தோசத்தில் நெஞ்சுவலியே வந்து சாய்ந்துவிடுவார்.இன்னமும் நினைத்துப் பார்த்து சிரிக்கத் தூண்டும் காட்சி அது.அந்தக் காட்சியில் கல்லாபெட்டியைத் தவிர யார் செய்திருந்தாலும் இவ்வளவு அற்புதமாக அமைந்திருக்காது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு கல்லாப்பெட்டியை ஏன் பாக்யராஜ் பயன்படுத்தவில்லை என்பது மட்டும் புரியாது புதிர். "எடுத்து ஊத்திகிட்டா என்ன..எறங்கி முங்குனா என்ன.. எப்படியும் குளியல் ஒன்னுதானடா..!" இந்தப் படத்தில் கல்லாப்பெட்டி உதிர்க்கும் தத்துவமுத்துக்களில் இதுவும் ஓன்று.
கல்லாப்பெட்டி : "டேய் எங்க இனம் இருக்கே.. அது கவரிமான் இனம்.ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரோடு இருக்காது..செத்துப் போகும்."
கவுண்டர் : "நைனா..கொஞ்சம் குனி..ம்ஹும்..தலையைப் பாரு காஞ்சிபோன மைதானம் மாதிரி...ஒரு முடிக்கு ஒரு தடவை நீ செத்திருந்தாலும்..இந்நேரம் எத்தினியோ தடவை செத்திருக்குனுமே நைனா.."
கவுண்டமணியின் 'நைனா'-வாக @உதயகீதம்
"மாங்கா" @ எங்க ஊரு பாட்டுக்காரன்
எண்பதுகளில் தவிர்க்கமுடியாத நகைச்சுவைக் கலைஞனாக உருவெடுத்த கல்லாப்பெட்டி சிங்காரம் தொன்னூறுகளின் ஆரம்பத்திலே தனது கலையுலகப் பயணத்தோடு,தன் வாழ்க்கைப் பயணத்தையும் முடித்துக் கொண்டார்.1990 -ல் வெளிவந்த 'கிழக்கு வாசல்' அவரின் கடைசிப்படம்.படம் வெளிவருவதற்கு முன்பே தன் மூச்சை நிறுத்திவிட்டார் என்பதை பட டைட்டிலில் வரும் 'அமரர் திரு கல்லாப்பெட்டி சிங்காரம்' என்பதன் மூலம் அறியமுடிகிறது.
@கிழக்கு வாசல்-கடைசிப்படம்
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் 'பாக்யராஜ் வாரம்' பார்த்தபோது, தூறல் நின்னுப் போச்சு-வைத் தவிர்த்து மற்றையப் படங்களில் கல்லாப்பெட்டியின் ராஜ்ஜியமே கோலேச்சியிருந்ததைக் காண முடிந்தது.என் மனதின் அடி ஆழத்தில் நிசப்தமாய் ஓடிக்கொண்டிருந்த என் பால்ய காலத்து எண்ண நீரோட்டத்தை மெல்ல சலசலக்கவும் வைத்தது.எண்பதுகளில் வெளிவந்த பாக்யராஜ் படங்களைப் பார்க்கும் போது நம் மனது நம்மையறியாமலே குழந்தையாய் மாறி குதூகலித்தால்,அதற்கு கல்லாப்பெட்டி சிங்காரத்தின் தனித்துவமான குரலமைப்பும்,அசத்தலான முகபாவனையும்,உன்னதமான உடல்மொழியும்,நகைச்சுவைக் கலந்த குணச்சித்திர நடிப்பும் தான் காரணமாக இருக்க முடியும்.அவர் நடித்த படங்களுக்கு ஒத்த வரியில் விமர்சனம் செய்யவேண்டுமானால் இப்படித்தான் எழுத முடியும்......... " கல்லாப்பெட்டி ராக்ஸ்...!!!!!"
வணக்கங்களுடன்....
மணிமாறன்.
----------------------------------------------((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))------------------------
நகைச்சுவை கலைஞனின் அழகிய திறமையை அழகுடன் மெறுகேற்றியுள்ளீர்கள்.கல்லாபெட்டியாரின் குரல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteநண்பர் முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் அவர்களின் கருத்துக்கு நன்றி..
Deleteமறக்கமுடியாத ஒரு நல்ல கலைஞன் ! எல்லா பால்ய கால நினைவு மீட்டல்களிலும் கல்லா பெட்டிக்கு அவர்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு ! உங்களின் இந்த கட்டுரைக்கு நன்றி !
ReplyDeleteஅனானியாருக்கு நன்றி...
Delete//'கொழகொழ' எம்ஜியார்,//
ReplyDeleteமறைந்த தலைவர்களை கொஞ்சம் மரியாதையோடு அழைக்க கற்ற் கொள்ளவும்
சொந்தப் பேரில் வர தைரியம் இல்லாவிட்டாலும் அனானியா வந்து கமென்ட் போட்டதுக்கு நன்றி....கொஞ்சம் திரும்பவும் படிச்சிப் பார்த்தீங்கனா..நான் யார் மீது குற்றம் சொல்கிறேன் என்பது புரியும்.எம்ஜியாருக்கு குண்டடிப்பட்ட பிறகுதான் பேச்சு சரியாக வரவில்லை.ஆனால் மிமிக்கிரி செய்பவர்கள் எல்லோருமே எம்ஜியார் என்றால் அந்த கொழ கொழ பேச்சு மட்டும்தான் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.அவருடைய கருப்பு வெள்ளைப் படங்களில் மிகத் தெளிவாக கம்பீரமாக வசனம் பேசியிருப்பார்.அதே போல் புதிய பறவையில் மட்டுந்தான் 'கோபால்...கோபால்..'.ஆனால் சரோஜாதேவி என்றாலே இந்த வசனத்தைப் பேசித்தான் கழுத்தை அறுக்கிறார்கள்...நான் எழுதியது இவர்களைத் தாக்கித்தான்.மற்றபடி மரியாதை எனக்கும் தெரியும் பாஸ்...
Deleteகடைசி படம் பெரிய வீட்டு பண்ணக்காரன் நண்பரே
ReplyDeleteநன்றி தல..ஒருவேளை இருக்கலாம்.
Deleteநான் அறிந்த தகவல் படி பெரிய வீட்டு பண்ணக்காரன் Release date - 11 Jun,1990.
கிழக்கு வாசல் 12 July 1990.தவிர கிழக்குவாசல் பட டைட்டிலில் 'அமரர் கல்லாபெட்டி சிங்காரம் ' என எழுதியிருப்பார்கள்.அதனால் தான் அப்படி கூறியிருந்தேன். உங்களின் தகவலுக்கும் நன்றி..(ம்ம்ம்...என்ன ஒரே அனானி கமெண்டா வருது..?))
பலர் பார்த்தாலும் பெயர் கூட அறியா கலைஞனை கவ்ரவிதுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஹாரி..
Deleteநல்ல ஞாபக மூட்டல்.நல்ல கட்டுரை/
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி சார்..
Deleteநல்ல கலைஞனை நினைவூட்டியமைக்கு நன்றி. மணிமாறன்.
ReplyDeleteஏண்டா கோன வாயா?....ஏண்டா கோன வாயா??
ReplyDeleteஉங்களை இல்லீங்கோவ்! இந்த வசனம் தான் அவர் வசனத்தில் BEST. எப்படி ஒன்னு இங்கிருக்கு மாதிரி....இவர் சொல்லும் அழகே தனி. அந்த கரகரக் குரல்...எனக்கு பிடித்த நடிகர்.
ஏண்டா கோன வாயா? சொல்லிப் பாருங்கள்...!
பின்குறிப்பு: அந்த படம் பேர் தெரியவில்லை; அந்த, "ஏண்டா, கோன வாயா?" வசனம் வரும் காட்சியை இடுகையில் போடுங்களேன்.
நன்றி!
எனக்கு பிடித்த நகைச்சுவை கலைஞர்களில் கல்லாப்பெட்டி நீங்கா இடம் பிடித்தவர். அவரைப்பற்றி இடுகை போட்டதிற்கு மிக்க நன்றி.
ReplyDeleteகூகுளில் புகுபதிகை செய்ய சோம்பல் அதான் பெயர் இல்லாமல் :)
நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகர்.
ReplyDeleteதமிழ் சினிமாவின் unsung heros துணை நடிகர்கள்தான். சந்தேகமே இல்லை. நமது சாபக்கேடான அசட்டு ஹீரோக்களை விடவும் திரைப்படங்களின் வெற்றியில் துணை நடிகர்களின் பங்கு அதிகமானது. கல்லாப் பெட்டி சிங்காரம், கவுண்டமணி, காந்திமதி, செந்தில், வடிவேலு, டி.எஸ். பாலையா, ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, செந்தில், வீராச்சாமி....என்று பட்டியல் மிக நீண்டது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தமிழ் சினிமாவில் இன்றுவரை கிடைக்கவில்லை. அந்தக் குறையைப் போக்கும் இந்தக் கட்டுரை ஒரு நல்ல முயற்சி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு படத்தில் காது கேட்காமல் நடித்திருப்பார் அந்த படத்தின் பெயரை கூற முடியுமா?
ReplyDelete