Tuesday 28 October 2014

விஜய்ண்ணாவுக்கு ஒரு கடிதம்...


அன்புள்ள விஜய்ண்ணா..... 

"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க..." அப்படின்னு காவல் நிலையத்தில் நீங்கள் கதறிய கதறல் இன்னும் என் காதுக்குள்ள எதிரொலிச்சிகிட்டே இருக்கு. போயி புள்ளக்குட்டிய படிக்க வையுங்கடானு கமல் சொன்னப்போ கூட யாரும் கேக்கல.

ஆனா விஜய்ண்ணா, இங்க தியேட்டரில் விசில் பறக்குது. என்கூட படத்துக்கு வந்திருந்த  நண்பன் உணர்ச்சி வசப்பட்டு சீட் மேல ஏறி நின்னு கை தட்டினான்.  எனக்கோ மயிர் சிலிர்க்க ஆரம்பிச்சுட்டுது.   அதிலும் வெளிநாட்டில் வேலை செய்யிறவங்க எல்லாம் எப்படா ஊரில் போயி விவசாயம் பண்ணலாம்னு இருக்காங்கனு சீன் வச்சீங்க பாருங்க.. அந்த கும்மி இருட்டுலேயும் அத்தனைப்பேர் கண்ணுலேயும் கண்ணீரை பாத்தேன் விஜய்ண்ணா...

படம் முடிந்து வெளியே வந்தவுடன் என் நண்பனிடம் , ' ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்ட போல.. அப்போ ரெண்டு வருஷ காண்ட்ராக்ட் முடிந்தவுடன் ஊரில் போயி விவசாயம் பண்ணுவனு சொல்லு...'

" ஏய் போப்பா..நானே எங்கப்பன் என்னை வயல்வேலை செய்ய சொல்லுவாருனு பயந்து போயிதான் பணத்தைக் கட்டி சிங்கப்பூர்ல வந்து கன்ஸ்ட்ரக்சன் வேலை பாத்துகிட்டு இருக்கேன்.."

" அப்படினா விசில் அடிச்சி கைதட்டினது எல்லாம்...?"

"அது எங்க இளைய தளபதிக்காக..."

அடப்பாவி.. எங்க விஜய்ண்ணா சிக்ஸ்பேக் எல்லாம் வச்சி ஜட்டியோட வந்து விவசாயத்தை விட்டுடாதீங்கனு கதறி அழுவுறது உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கா..?



அவன் சொன்னத கேட்டதும் நான் அப்படியே  ஷாக் ஆயிட்டேன் விஜய்ண்ணா. நீங்க முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்திடுச்சி. எடுத்து சொல்றது முக்கியம் இல்லீங்கண்ணா. நீங்க எடுத்துக்காட்டா இருக்கணும். இவங்களுக்கு எல்லாம் விவசாயம்னா என்னன்னு புரிய வைக்கணும்.

எங்க ஊர் பக்கத்தில விவசாயம் செய்ய நிறைய தண்ணீர் கிடைத்தாலும் யாருக்கும் விவசாயம் செய்ய விருப்பம் இல்ல.. விளை நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஏன்னு கேட்டா, "விவசாயம் பண்ணினேன். வெறும்பயல் ஆனேன். பிளாட் போட்டு வித்தேன் கோடீஸ்வரன் ஆனேன்" என பன்ச் டயலாக் அடிக்கிறாங்க. 

"அப்படின்னா தண்ணீர் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிடலாம் என்று எங்க விஜய்ண்ணா சொன்னதெல்லாம் பொய்யா....." என்று நடிகர் திலகம் ஸ்டைலில் இழுத்து கேட்டேன். பொக்குனு மூஞ்சிலே குத்திடாங்கண்ணா...

 "தைரியம் இருந்தா உங்க விஜய்ண்ணாவ வந்து இங்க விவசாயம் பண்ண சொல்லு பாக்கலாம்" என்று சவால் விடுறாங்கண்ணா..

" யோவ். யாருகிட்ட சவால் விடுற.. எங்க விஜய்ண்ணா விவசாயிகளுக்காக மூணு நாள் பைப்புகுள்ள உட்காந்து போராட்டம் பண்ணினவருய்யா... இதே ஊர்ல 20 ஏக்கர் நிலத்தை வாங்கி எங்க விஜய்ண்ணாவை விவசாயம் பண்ண சொல்றேன் பார்"  என நானும் எதிர் சவால் விட்டுட்டு வந்துட்டேன்.

நான் சொன்னதில ஏதாவது தப்பு இருக்காங்கண்ணா...?

நடு ராத்திரியில நான் மட்டும் ஏண்டா சுடுகாட்டுக்கு போவணும்னு நீங்க பொலம்பறது எனக்கு கேக்குது விஜய்ண்ணா..

ஆனா.. ஒரே ஒரு பிளாஷ்பேக் சொல்றேன். அதை கேட்டுட்டு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..

5 வருசத்துக்கு முன்னாடி கந்தசாமின்னு படம் வந்ததே ஞாபகம் இருக்குங்களா.. கலைப்புலி தானு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் நம்ம சீயான் விக்ரம் நடித்த படம்.  கலைப்புலி தானு நிறைய கடன்வாங்கி, கஷ்டப்பட்டு தயாரித்த படம்.

அந்தப் படத்தோட படப்பிடிப்பு முடியும் நேரத்தில் பட யூனிட் ஒரு அறிவிப்பு செய்தது. தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு வித்தியாசமான, பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு அது. இரண்டு கிராமங்களை கந்தசாமி குழு தத்தெடுக்கிறது என்பதுதான் அந்த செய்தி. அது தொடர்பான காணொளி கூட வந்தது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவ்விரு கிராமங்களை சேர்ந்தவர்களை அழைத்து வந்து கௌர
ப்படுத்தினார்கள் .

படம் தயாரிப்பில் இருக்கும் சமயத்தில் அது தொடர்பான விழாவோ அல்லது பொதுச்சேவையோ செய்தால் அது தயாரிப்பாளரின் தலையில்தான் விழும் என்பது சினிமா இண்டஸ்ட்ரியில் எழுதப்படாத விதி. ஏற்கனவே பணப் பற்றாக்குறையால் இடையில் தடைபட்டு பின்பு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு எடுத்து முடிக்கப்பட்ட படம் அது. அப்படியிருக்க இரு கிராமங்களை
த் தத்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன..?

ஒருவேளை வியாபார தந்திரமாக இருக்குமோ..? எல்லோரும் அப்படித்தான் நம்பினார்கள். ஆனால் அதற்கான விடை படம் வெளிவந்த பிறகுதான் கிடைத்தது. 




கந்தசாமி படத்தின் கிளைமாக்சில் விக்ரம் பேசும் வசனம் அப்படத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே ஒரு நல்ல மெசேஜ். படத்தில் வில்லன் சொத்துபத்திரங்கள், பணம் உள்ளிட்ட தனது அனைத்து உடமைகளையும் ஒரு சொகுசுப் பேருந்தில் மறைத்து வைத்து கூடவே ஒரு வடநாட்டு கில்மாவுடன் "என் பேரு மீனாகுமாரி...." பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டே  பயணம் செய்வார்.

அப்பேருந்தை வழிமறித்து செதில் செதிலாக உடைத்தெடுப்பார் விக்ரம். அப்போது அந்த கில்மாவைப் பார்த்து, " உனக்கு பஸ்சுக்குள்ள ஆடுறதுக்கு எவ்வளவு கொடுத்தான்..." என்று கேட்பார்.


" 30 லட்சம்..."

அடுத்து அவன் பக்கம் திரும்புவார். அப்பொழுதுதான் அந்த வசனம் வரும்.. 

" இதில 200 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்திருக்கலாம். இல்ல உங்க கம்பெனிய சுத்தி இருக்கிற ரெண்டு மூணு கிராமத்தையாவது தத்தெடுத்திருக்கலாம். முடியலனா நீ வாழ்ற தெருவையாவது தத்தெடுத்திருக் கலாம். அதுவும் கஷ்டம்னா உன் கீழ வேலை செய்யிற ரெண்டு மூணு குடும்பங்களையாவது தத்தெடுத்திருக் கலாம். இந்த மாதிரி செஞ்சிருந்தா நம்ம மண்ணுல சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுல சம்பாதிச்ச மாதிரி கணக்கு காட்டி இவ்வளவு பணத்தை வெளிநாட்ல பதுக்கி வைக்க தோனிருக்காது..." 



கொஞ்சம் லாஜிக் படி யோசிச்சீங்கனா... அந்த பாம்பே கில்மாவுக்கு லட்சம் லட்சமா பணம் கொடுத்து ஐட்டம் டான்ஸ் ஆட கூட்டி வந்தது கந்தசாமி பட குரூப். ஆனா வசனம் வில்லனை திட்டி பேசுவாங்க. படம் பார்க்கிற நமக்கு என்ன தோணும்..? "அடேய் வக்கனையா வசனம் பேசுறீங்களே.. முமைத் கான்-க்கு பணம் கொடுத்து கூட்டிவந்ததே நீங்கதானடா.. அதுல நீங்க ரெண்டு கிராமத்தை தத்தெடுக்க வேண்டியதுதானே.. ஸ்ரேயாவுக்கு கொடுத்த பணத்துக்கு பத்து கிராமத்தை தத்தெடுக்கலாமேடா.. ". இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால்தான் முன்கூட்டியே இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தார்கள்.

கந்தசாமி நூறாவது நாள் விழாவில் கூட அந்த கிராமங்களை இரண்டு தொழிலதிபர்கள் தத்தெடுப்பதாக அறிவித்தார்கள்.  அந்த கிராமங்கள் தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியாது. ஆனால் படத்தில் வரும் அந்த வசனங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக களப்பணியாற்றி சாதித்துக் காட்டியது கந்தசாமி படக்குழு.


பிளாஷ்பேக் முடிஞ்சதுங்கண்ணா....


த்தி படத்திற்கு 20C வாங்கியதாக பேசிக்கொள்கிறார்கள். அது கருப்பா வாங்கினீர்களோ அல்லது வெள்ளையா வாங்கினீர்களோ தெரியாது.ஆனால்,"5000 கோடி கடன் வாங்கின பீர் பாக்டரி ஓனர் தற்கொலை பண்ணிக்கல. ஆனா 5000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி தற்கொலை பண்ணிக்கிறான் " என கொஞ்ச நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நிறைய லைக், ஷேர் வாங்கின ஒரு ஸ்டேடசை காப்பியடிச்சி சினிமாவுல பேசி கைதட்டல் வாங்குறீங்க.

திமுக மீது  2G ஊழல் புகார் சுமத்தப்பட்ட பிறகு நடந்த எத்தனை பாராட்டு விழாவில் நைனாவோட போயி கலைஞரை பாராட்டி பேசியிருப்பீங்க. அதையெல்லாம் மறந்துவிட்டு 2G ன்னா என்னான்னு தெரியுமான்னு கேட்டு உசுப்பேத்தி விடுறீங்க..

அதெல்லாம் விடுங்க விஜய்ண்ணா..

"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க..." அப்படின்னு திரையில கதறுற நீங்க, ஏன் விலை நிலங்களாக மாறிக்கொண்டிருக்கும் விளை நிலங்களை வாங்கி விவசாயம் பண்ணக் கூடாது.?

நீங்க வாங்குற 20C யில அஞ்சு கல்யாணமண்டபம் கட்டலாம்.  ECR ரோட்டுல பத்து பிளாட் வாங்கிப் போடலாம். ஆனால் அதுல கால்வாசி செலவு செய்தால் போதும். 10 ஏக்கர் நிலத்தை வாங்கி ஏன் நீங்க விவசாயம் பண்ணக் கூடாது..?

விவசாயம் என்றால் நீங்கள் சேற்றில் கால் வைக்க வேண்டியதில்லை விஜய்ண்ணா. எங்க ஊர் பக்கம் தண்டல் விடுவது என்று சொல்வார்கள். அதாவது, ஒருகாலத்தில் ஏக்கர் கணக்கில் பயிர் செய்தவர்கள் பிறகு வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ செட்டில் ஆகும் சூழல் ஏற்படும்போது அந்நிலங்களை ஊரில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளவர்களிடம் கொடுத்து விவசாயம் செய்ய சொல்வார்கள். ஒரு ஏக்கருக்கு இத்தனை மூட்டை நெல்லாகவோ அல்லது பணமாகவோ அந்நில உரிமையாளர்கள் பெற்றுக் கொள்வார்கள். இதில் இருவருக்குமே லாபம். விவசாயமும் பாதுகாக்கப்படும்.

அதுபோல செய்யலாமே விஜய்ண்ணா. அல்லது அதில்வரும் லாபத்தை அதில் உழைத்த ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கலாமே.  அப்படி செய்தால் நீங்கள் பேசும் பொதுவுடமை சித்தாந்த கொள்கைக்கு உயிர் கொடுத்தது போல் இருக்குமே.. செய்வீர்களா விஜய்ண்ணா....

இப்படிக்கு..

"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க..."
என்கிற டயலாக்கை கேட்டு பொறிகலங்கி போய் நிற்கும்
ஒரு ரசிகன்...


22 comments:

  1. மணிமாறன் சார்,

    வாசிப்பதற்கு செம லந்தான பதிவா இருந்தாலும் நம்ம கோட் கோபி சொல்ற மாதிரி இது ஒரு நிதர்சனமான உண்மை... :-)

    Back to form... superb.. You rock...

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள தம்பி சீனு..

      உங்கள் கமெண்ட் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி

      Delete
  2. அருமையான பதிவு. யாருக்கும் விவசாயம் செய்ய விருப்பம் கிடையாது.விளை நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்கவோ , பிளாட் போடுவதற்காக விளை நிலங்களை வாங்குவதோ தான் மக்களின் ஆர்வம் எல்லாம் என்பது மறுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள வேகனரிண்ணா. .
      சரியாக சொல்லியுள்ளீர்கள்.. மிக்க நன்றி

      Delete
  3. விஜய் சார்(?!);சும்மா போங்க,சார்!நாங்கெல்லாம் நடிகருங்க.டைரெக்டரு எதை சொல்லுறாரோ,அத மட்டும் தான் செய்வோம்.என்கிட்டப் போயி தண்டலுக்கு நெலத்த எடுத்து,விவசாயம்பண்ணுன்னு..............சும்மா போங்க சார்!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள Yogaண்ணா. .
      மாபெரும் மக்கள் சக்தி, விவசாயிகளின் மக்கள் தளபதி விஜய்ண்ணா அவர்கள் நேற்று கோவையில் நடந்த விழாவில் " பசியுடன் இருப்பவருக்கு மீன் துண்டுகளை கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் ." என்று கூறியுள்ளார் . எனவே எங்க விஜய்ண்ணா விரைவில் நேரடியாக விவசாயத்தில் குதிப்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

      Delete
    2. அடடே.........................!வேற,எங்க எங்கல்லாம் "குதிக்கப்" போறாருன்னு பொதுவா சொன்னீங்கன்னா,மக்கள் படை பின்னாடியே குதிக்க ரெடியா இருக்காங்க!!!!

      Delete
  4. அருமையா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மனசு ண்ணா. .
      மிக்க நன்றி

      Delete
  5. விஜயகாந்த்கூட எத்தனயோ தீவிரவாதிய படத்துல புடிச்சாரு
    அவர தாவூதை புடிக்க சொல்றது

    ReplyDelete
  6. டயலாக் சொன்ன அனுபவிக்கணும் ஆராயக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள HARI ண்ணா. .

      தீவிரவாதிகளை பிடிப்பதும் விவசாயத்தை ஊக்கப்படுத்துவதும் ஒன்றா..? இரண்டில் எது நடைமுறை சாத்தியம் என்பதை யோசியுங்கள்.

      நடிகர் செந்தில் தான் சம்பாதித்த பணத்தில் நிறைய விவசாய நிலங்களை வாங்கி தற்போது விவசாயம் செய்துக்கொண்டிருக்கிறார். அதுபோல் ஏன் விஜய்ண்ணா செய்யகூடாது. நிலம் வாங்கி விவசாயம் செய்யச்சொல்லி விவசாயத்தை ஊக்கப்படுத்துவது ஒன்றும் தவறான விஷயம் இல்லையே.

      நேற்று கோவை விழாவில் எங்க விஜய்ண்ணா பேசியதை சுருக்கமாக தருகிறேன்..

      //"விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

      எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். எத்தனை பேர் வாழ்வை இழந்து வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள், எத்தனை பேர் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவிய படம்.

      பசியுடன் இருப்பவருக்கு மீன் துண்டுகளை கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நாம் கேள்விப்பட்ட பழமொழி. என்னைப் பொறுத்தவரை மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது மட்டும் இல்லாமல், மீன் பிடிப்பதற்குத் தேவையான வலையையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஏழை மக்களின் வாழ்வு உயரும்.

      நாளைக்கு சேர்த்து வைப்பதை விட ஏழைகளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா குறைந்தா போய்விடப் போகிறோம். "//

      அதாவது மீன் குஞ்சுக்கு எப்படி நீந்துவது என்பதைக் கற்றுக்கொடுக்க போவதாக சொல்லியிருக்கிறார் எங்க விஜய்ண்ணா . அதைத்தான் என் பதிவில் சொல்லியிருக்கிறேன். என் பதிவில் நக்கல் இருக்கும் .ஆனால் சொல்ல வந்த விசயத்தில் நக்கல் இல்லை.

      இப்படிக்கு..

      கடும் நெருக்கடியிலும் காவிரி டெல்டா பிரதேசத்தில் பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மகன்.

      Delete
  7. super.super.நான் சொல்ல வேண்டும் , எழுத வேண்டும் என்று ஆத்திரமாக இருந்தேன்.தெளிவாக சுவைபட எழுதிவிட்டீர்கள்.நன்றி.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Ponniyinselvan/karthikeyan..

      Delete
  8. நல்லாத்தான் கலாய்க்கின்றீங்க கருத்துச் சொல்லுவது நடிப்பு பின் பற்றுவது உங்க நிலை!ஹீ தியேட்டரில் விசில் ஊதும் பலர் பொதுவில் சாதாபுலியாக்கும்! பகிர்வு சிந்திக்கத்தூண்டுது!ம்ம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனிமரம்

      Delete
  9. புதுப்படம் வந்தால் தால் தான் சிலர் வலையை தூசு தட்டும் நிலை !ம்ம் சிங்கப்பூர் நிலை அதிகம் எழுதலாம் சார்.இது என் கருத்து!

    ReplyDelete
    Replies
    1. உணமைதான் பாஸ்.. இங்கு இணையம் செம ஃபாஸ்ட். பவர் கட் பிரச்சனை இல்லை. நேரம் கூட கிடைக்கிறது . ஆனால் ஏனோ எழுதுவதற்கு அசதியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுபவர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

      Delete
  10. நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டி.என்.முரளிதரன்

      Delete