Saturday 19 May 2012

எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஓராண்டு கால சாதனைப் பட்டியல்கள். ன்பார்ர்ர்ர்ந்த பெரியோர்களே ..தாய்மார்களே...எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின்(குலோத்துங்க-வ விட்டு விடவில்லையே.....) உயிரிலும் மேலான ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளே...எங்கே நான் அம்மாவின் புகழை இந்தத் தரணியெங்கும் பரப்புவதின் மூலம்,அம்மாவின் அதி படு தீவிர அடித்தொண்டனான சமக கட்சியின் அகில அண்டத்தலைவர் சித்தப்பு சரத்குமார் அவர்களையும், 'மானமிகு' பேரவை முன்னவர்,அம்மாவின் கார் டயரையே பாதத் திருவடியாக நினைத்து பாதஅபிஷேகம் செய்ய பணிக்கப்பட்ட முன்னாள் தற்காலிக முதல்வர் ஒபிஎஸ் அவர்களையும் பின்னுக்குத்தள்ளி, இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் இதயத்தில் நான்  இடம்பிடித்து விடுவேன் என்று எல்லோரும் நினைத்துவிடக்கூடாது என்பதை இங்கே உங்கள் முன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு கட்டுப்பட்டுள்ளேன். 

   எங்கள் அம்மாவின் ஓராண்டுகால சாதனைகளைப் பார்த்து நம் இந்தியாவே வியந்து மூக்கின்மேல் விரலை வைத்து('யாரு மூக்குல' என்றெல்லாம் கேட்கக் கூடாது) மூச்சிரைத்துப் போகவேண்டும் என்ற லட்சிய நோக்கோடு இந்தியாவின் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.அதே நேரத்தில் தமிழகபட்ஜெட்டில் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ25,00,00,000 யில் வெறும் ரூ.15கோடி மட்டுமே விளம்பரத்திற்கு செலவிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி எங்களை மீள முடியா வேதனையில் ஆழ்த்தியது. சொடக்குபோடும் நேரத்தில் சுவிஸ் வங்கியையே போயஸ் தோட்டத்திற்கு புலம்பெயரச் செய்யும் ராவணர்கள் சுற்றியிருந்தும் வெறும் சொற்ப பணத்திலா  விளம்பரம் செய்வது?அதே வேளையில் இந்த சாதனைளை இணையத்தில் வெளியிடப்படாததைக்கண்டு கட்சியின் இணைய வழி கொ.ப.செ என்ற முறையில் எனக்கு ஏற்பட்ட கடும் மன உளைச்சலுக்கு மருந்தாகவே  இங்கே பதிவிடவேண்டிய கட்டாயம். 

 ஆங்...அதே நேரத்தில் அம்மா பேரவை பயர்பாக்ஸ் பிரிவு IP 162-256-854 சார்பாக உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.எங்கள் அம்மாவைப் பற்றி தரக்குறைவாக பேசுபவர்களை தன் வாயாலேயே புரட்டிஎடுக்க,அம்மா பேரவை கால்நடைப்பிரிவின் மாநிலத் தலைவர் எங்கள் கிராமத்து நாயகன் ராமராசன் புறப்பட்டு விட்டார்.கொஞ்ச நாட்களுக்கு முன் சட்டப் பேரவையில் நாக்கை மடித்து நீட்டி முழங்கிய எதிர்கட்சித்தலைவரை அடக்கி வைப்பதற்கு மேடையேறிய எங்கள் மக்கள் நாயகன் ஒரு ரகசியத்தை அம்பலப் படுத்தினார்.அதைக்கேட்டு விட்டு,என் இருபத்து ஐந்து வருட சினிமா வாழ்க்கையே களங்கப்பட்டு விட்டது என்று கதறி கதறி அழுதுக் கொண்டிருக்கிறார் அந்த எ.க.தலைவர்.இதுபோல் பல ரகசியங்களை தன் மூளையின் ரகசிய அறையில் மூடிவைத்திருப்பதாக நம்பவே முடியாத தகவல்கள் தெரிப்பதால் இனி யாரும் அம்மாவைப்பற்றி நாக்கு மேல் எதைப்போட்டும் பேசக்கூடாது என்று எங்கள் கிளையின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். 

  அதே நேரத்தில்(எதோ ஒரு நேரத்தில் விடுங்கப்பா...) புரட்சித்தலைவி அம்மாவின்  ‘நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை’யை நாற்பது  பக்கத்தில் விளம்பரம் செய்யாமல் வெறும் நான்கு பக்கத்தில் மட்டுமே செய்த 'செய்திமக்கள்தொடர்புத்துறை'க்கு எனது ஆழ்ந்த கண்டனங்களை பதிவு செய்வதுடன்,அம்மாவின் ஏனைய சாதனைகளை இங்கே பட்டியலிட கடமைப் பட்டுள்ளேன்.


  1.தீயசக்திகளின் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட  மின்வெட்டால் மக்கள் கடும் அவதிபடுகிறார்கள் என்பதை கொடநாட்டிலிருந்தே மிக உன்னிப்பாக கவனித்து வந்த எங்கள் அம்மா,காலம் வரும்வரைக் காத்திருந்து கடைசியில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.கடந்த ஆட்சியில்,ஒரு நாளுக்கான 24 மணிநேரத்தில் 7200 மணித் துளிகளாகயிருந்த மின் வெட்டு,எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் 86400 மணித்துளிகளில் வெறும் 8 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கிறது என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

 2.மின்சாரம் இல்லாதிருந்தாலும் மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர்,பேன் போன்றவற்றை அளிப்பதால், இவைகளை மின்சாரமில்லாமல் எப்படி இயக்குவது என்று சிந்திப்பதின் மூலம் பல இளம் விஞ்ஞானிகள் உருவாகக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்தக் கடமைப் பட்டுள்ளேன். 


3.எங்கள் அம்மாவிற்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை வரதட்சனை. அப்படியிருக்கும்போது 'சமச்சீர் கல்வி' என்பதில் உள்ள 'சீர்' என்ற வார்த்தை திருமணத்தில் பெண்வீட்டார் கொடுக்கும் 'சீர்வரிசை'யைக் குறிப்பதாக உள்ளதால்,இந்த 'சமச்சீர்கல்வி'க்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.அதைக் கூட புரிந்து கொள்ளாமல் சுப்ரீம் கோர்ட் வரைச் சென்ற தீய சக்திகளுக்கு எதிராக, மீண்டும் எங்கள் அம்மா புயலெனப் புறப்படுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


4.    நூலகத்துக்கு வந்தோமா படித்தோமா என்றில்லாமல் "யம்மாடியோ.. இவ்ளோப் பெரியக் கட்டிடமா..! இம்புட்டு வசதியாவா?" என்று வருபவர்கள் வாய்பிளந்து நிற்பதால் படிப்பதில் ஆர்வமில்லாமல் போய் விடுவதாக உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,அந்தக் கட்டிடத்தையே குடோனாக மாற்ற நினைத்த எங்கள் அம்மாவின் உயரிய சிந்தனையில் மண்ணை வாரிப்போட்ட தீய சக்திகளை வேரோடு அழித்து,தான் நினைத்ததை மீண்டும் சாதித்து காட்டுவார் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். 
 5.'ஓல்ட் இஸ் கோல்ட்' என்று நினைப்பவர் எங்கள் அம்மா.அதற்கு உதாரணமாக சிறுவயதில் விளையாடிய நடைவண்டி,பல்லாங்குழி, கிலுகிலுப்பை,கோழிகுண்டு,கிட்டிப்புள்ள உட்பட எல்லாவற்றையும் பொக்கிசமாக வைத்திருக்கிறார்.அவர் பார்ப்பது கூட பழைய பிளாக் அண்ட் ஒயிட் படங்களைத்தான்.அவர் அவ்வப்போது முனுமுனுக்கும் பாடல்கள் கூட பா..பா பிளாக்ஷிப்-ம்,டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்-ம் தான். இவ்வளவு ஏன் இவருடன் படித்த-நடித்த நண்பர்களுடன் இன்னமும் நல்ல நட்பில் இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.அப்படிப் பட்டவரை,ஏதோ புதிதாக சட்டமன்றம் கட்டியிருக்காங்களாம். அதில்தான் சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப் படவேண்டுமென்றால் அதை எப்படி ஏற்பார்? அதுவுமில்லாமல் நம் வாழ்வியல் சூழலோடுப் பழகிப்போன கொசுவும் மூட்டைபூச்சியும் அங்கு அறவே இல்லையாம்.அது கூட பரவாயில்லை அங்கே மைக்கைப் பிடிங்கி அடிப்பதற்கும்,முகத்தில் ஓங்கி குத்துவதற்கும் ஏதுவாக இருக்கைகள் யாவும் மிக அருகில் இல்லையாம்.இதிலிருந்து  நம் முதல்வர் அம்மா,'புதியன அழிதலும் பழையன வாழ்தலும்' என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பது புலப்படும்.   

6.எங்கள் அம்மா ஆட்சிக்கு  வந்த அடுத்த நாளிலே "எல்லாக் கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டனர்!" என்று உளவுத்துறைக்கு கூட தெரியாத சங்கதியை தெரியப்படுத்தியத்தின் மூலம்,பேங்க் லாக்கரிலும் ரகசிய அறையிலும் பாதுகாப்பாக வைத்திருந்த நகைகளை மீண்டும் மக்களை அணியவைத்து,அதன் மூலம் கொள்ளையர்கள் மிக சுலபமாக நகைப் பறிப்பு சம்பவங்களை நடத்த வழிவகை செய்த அம்மாவின் கருணையுள்ளத்தை அந்த நான்கு பக்க விளம்பரத்தில் தெரியப்படுத்தவில்லை என்பதை நான் இங்கே கடுமையான விமர்சனமாக வைக்கிறேன்.

7.கடந்த தீயசக்திகளின் ஆட்சியில்,மேடையில் பேசஅனுமதித்து,பின் சிறையில் அடைத்த'தள்ளு தள்ளு' சீமானை,இந்த ஆட்சியில் மேடையில் பேசுவதால் பக்கத்து தெருவில் இரண்டு பேருந்துகள் தானாகவே மோதிக்கொள்வதாலும், அடுத்தத் தெருவில் பத்து பேர் தானாகவே சுட்டுக்கொண்டு இறந்து விடுவதாலும், மேடை அமைந்திருக்கும் வீதியில் உள்ள சாக்கடையில் ரத்த ஆறு ஓடுவதாலும்,இனிமேல் பேசவே அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்ததின் மூலம் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ நம் முதல்வர் பாடுபடுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

8.ஏதோ பால் விலை ஏறிவிட்டது என்று கூக்குரலிடுகிறார்களே..அதன் பின்னணியில் உள்ள மகத்துவம் உங்களுக்குத் தெரியுமா?...பால் விலை உயர்ந்தால் பாலின் மதிப்பு உயரும்.பாலின் மதிப்பு உயர்ந்தால் பால் கொடுக்கும் மாட்டின் மேல் மதிப்பு வரும்.மாட்டின் மேல் மதிப்பு வந்தால் அந்த மாட்டை இலவசமாகத் தரும் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் மீதும் மதிப்பு வரும்..மதிப்பு வரும்..மதிப்பு வரும்..என்பதை இங்கே நினைவு கூறுகிறேன்.அதேபோல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டதாக பல தீய சக்திகள் கொக்கரிக்கிறார்கள்.அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்..எங்கள் அம்மா 2050-ல் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் என்ன கட்டணம் இருக்குமோ அதை ஒப்பிட்டுப் பார்த்துதான் இங்கே உயர்த்தியிருக்கிறார்கள்.இதைக்கூட அறியாமல் நீங்கள் அங்கலாய்த்துக் கொள்வது உங்களின் அறிவீனத்தையேக் காட்டுகிறது. 9.எல்லாவற்றையும் விட ஒரு சமூகவியல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது எங்கள் அம்மாவின் ஓராண்டு ஆட்சி.கடந்த தீயசக்தியின் ஆட்சியில் டாஸ்மார்க் கடைகளில் கிடைத்த வருமானத்தைவிட,எங்கள் அம்மா ஆட்சியில் பற்பல புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தியதின் மூலம் இரண்டு மடங்கு வருமானத்தை ஈட்டியிருக்கிறோம் என்பதை என் அடிமனத்தைத் தொட்டு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 

10. போராட்டம் நடத்துகிறார்களா...சுட்டுத்தள்ளு.!. பேங்குல கொள்ளையடிச்சாங்களா..போட்டுத்தள்ளு..! இவற்றின் மூலம் எல்லா மக்களும் சமமே என்ற சமதர்மக் கொள்கையை நாங்கள் நிலை நிறுத்துகிறோம் என்பதை..............

 ஏய்....ஏய்....எதுக்கு கல்லெல்லாம் எடுக்கிற..கீழப்போடு...
கீழப்போடு...

பெரியோர்களே..தாய்மார்களே...நான் இருக்கக் கூடிய காகூக கட்சியில் சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்...
 -----------------------------------------------------(((((((((((())))))))))))))))))))))--------------------------

 


  12 comments:

 1. //அம்மா பேரவை பயர்பாக்ஸ் பிரிவு IP 162-256-854 சார்பாக உங்களுக்கு//

  இது எப்ப இருந்து

  ReplyDelete
  Replies
  1. இது எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஓராண்டு சாதனையை உன்னிப்பாக கவனித்ததிலிருந்து...

   Delete
 2. //இணைய வழி கொ.ப.செ என்ற முறையில்//

  வாழ்த்துக்கள் அண்ணன் கொ.ப.செ வாழ்க

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி உடன்பிறப்பே.தாங்கள் எப்போது எங்கள் கிளையில் இலையாகப் போகிறீர்கள்?

   Delete
 3. // பல இளம் விஞ்ஞானிகள்//

  ஆகா இது வேறயா ம்ம்

  ReplyDelete
  Replies
  1. பல விஞ்ஞானிகள் உருவெடுத்திருப்பதாக யாரும் நம்ப முடியாத தகவல்கள் தெரிவிக்கிறது.

   Delete
 4. அடேங்கப்பா,......... சாதனை பட்டியல்கள் ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ...மிக்க நன்றி ..நீங்களும் எங்கள் காகுக கட்சியில் சேரும்படி அழைப்பு விடுக்கிறேன்.

   Delete
 5. அம்மாவுக்கு சாதனை, மக்களுக்கு வேதனை.......

  ReplyDelete
  Replies
  1. அதுதான் நம் விதிஎன்றால்...........????

   நன்றி பிரகாஷ்.

   Delete
 6. இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே உத்தமச் சோளன் டாக்குடர் கலீஜ்ஜர் கருணாநிதி என்ற நபரைவிட நீங்கள் கூறும் அம்மா சாதனையாளரா?

  ReplyDelete
 7. இருவருமே மக்களின் வேதனைகளை சாதனைகளாக சொல்லும் ரோதனையாளர்கள்...

  ReplyDelete