Friday 29 March 2013

நவீனத்துவ போராளி... (சிறுகதை)

   

              ப்பொழுதுதான் கவனித்தான்.அவனையறியாமலே அவன் விரல்கள் லேசாக நடுக்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தப் பரபரப்பான சாலையில் வேகத்தை அதிகப்படுத்தி வண்டியை மிகக் கவனமாக செலுத்தினான்.

நீண்ட நாட்களாக அவன் நெஞ்சாங்கூட்டில் அழுத்திக் கொண்டிருந்த பாரம்..... அக்னிக் குழம்பாய் உள்ளுக்குள் கொதித்த புரட்சிகர வேட்கை இன்று எரிமலையாய் வெடிக்கப் போவதற்கான அறிகுறிகள் லேசாகத் தென்பட்டது.

இன்று  தன்னைப் போராளியாக அடையாளபடுத்திக் கொள்ளப் போகிறான் என்பது மட்டும் தெளிவாக
ப் புரிந்தது.

ஒன்றல்ல.. இரண்டல்ல... கிட்டத்தட்ட முப்பது நாட்கள் இதற்கான தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டான். அதுவும் தன் வீட்டுக்கே தெரியாமல்..! தன் நெருங்கிய நண்பன் மூலம் தான் அவர்களின் நட்பு கிடைத்தது. அதிலும் தன் எண்ணத்தோடு அவர்களும் ஒத்துப் போயிருந்தனர். அவர்களும் ஏற்கனவே போராளிகளாக இருந்தனர்.தன் நண்பனும் சமீபத்தில்தான் போராளியாக மாறினான்.நண்பன் தேர்ந்தெடுத்த அதே வழியைத் தான் இவனும் தேர்ந்தெடுத்தான்.

தீவிரவாத தாக்குதல்களை நடத்திவிட்டு அதற்கு ஏதோ ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளுமே அதேப் போல் நாம் எதையாவது செய்துதான் போராளியாக மாறவேண்டும் என நண்பன் நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னது ஞாபகம் வந்தது. காரல் மார்க்ஸ்,சேகுவாரா,பிடல் காஸ்ட்ரோ சமீபத்தில் மறைந்த சாவேஸ் உட்பட அனைவரின் வாழ்க்கை வரலாற்றை வரி விடாமல் படித்து முடித்தாயிற்று.அவர்கள் லேசாக தட்டி எழுப்பியதை விட நண்பன் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றி மொத்தமாக எழுப்பிவிட்டான்.

" நம் நிலைப்பாடோடு ஒத்துப் போகாதார் யாரா இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி..." கழுத்து நரம்பு
ப் புடைக்கப் பேசினான் நண்பன்.

" சரிடா.. போலிஸ்...கேஸ்...ஏதாச்சும் ஆயிட்டா ...."

" எதானா என்ன ..? " இடைமறித்தான் நண்பன்..."எல்லாத்தையும் நம் போராளி குழுக்கள் பார்த்துக்கும். அப்படியே ஏதாச்சும் நடந்தா..... நம் போராட்டக் களத்தில் போராளிகளின் போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும்..." 


நண்பனின் வார்த்தை வீச்சு, இவன் நெஞ்சை நிஜமாகவே  பதம் பார்த்திருந்தது.

இதற்காகத்தான் சனி, ஞாயிறுகளில் நண்பன் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு ஒரு மாதமாக பயிற்சி எடுத்துக் கொண்டான்.

அதை செயல்படுத்தும் நாளாக இன்றையத் தேதியை ஏற்கனவே குறித்து வைத்திருந்தான்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும் என்ற புரட்சிக் குழுவின் யோசனைகளை கவனமாகப் பின்பற்றினான்.குறிப்பாக தான் புரட்சி செய்யப்போகும் அந்த இடத்திற்கு தினமும் வந்து போனான். அங்குள்ளவர்களிடம் சந்தேகம் வராதவாறு தினமும் பழகினான்.குறிப்பாக தன் சொந்தப் பெயரை மறைத்து விட்டான்.ஒருவேளை மாட்டிகொண்டால் தப்பிப்பதற்கு.

ந்த இடத்தை நெருங்க..நெருங்க..கொஞ்சம்
பயம் கலந்த பீதி ஒருபுறம் தொற்றிக் கொண்டாலும்,மறுபுறம் புரட்சி...போராளி...திருப்பி அடி...நையப்புடை... ங்கொய்யால பொளந்து கட்டு... தக்காளி எட்டி உதை...சாய்ந்து விடாத சாரம்... கிண்டிவிடாத சாதம் ... என மனது உத்தரவிட்டுக் கொண்டிருந்தது.

போன் சத்தமாக ஒலிக்க, வெளியே எடுத்து பார்த்தான். போராளி நண்பன்.

" சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல.... பேணிக் ஆகாத... இது ஆரம்ப கட்டம்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். உன்னை நீ போராளியா காட்டிக்கணும்னா வேற வழியில்ல..இத செஞ்சிதான் ஆகணும்.."  நண்பனின் தைரியம் அவன் தயக்கத்தை முற்றிலுமாகப் போக்கியது.

பரபரப்புடன் களத்தில் இறங்கிவிட்டான்.

ரோட்டோரத்தில் இருந்த அந்த பிரவுசிங் சென்டருக்குள் நுழைந்து கணினியைத் திறந்தான்.
தான் பயிற்சி எடுத்த PHOTOSHOP -ஐ திறந்து அதில் அந்த மூத்த தலைவரையும்,அந்தக் கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகையையும் இணைத்து அதன் கீழே அவர்களின் உறவைக் கொச்சைப் படுத்தி அசிங்கமாக எழுதினான்.  பிறகு பேக் ஐடியைப் பயன்படுத்தி தன் போராட்ட களமான FACEBOOK -ஐ லாக்கின் செய்து அந்தப் படத்தை அப்லோடு செய்தான்.

அவ்வளவுதான். அடுத்த சில நிமிடங்களில் லைக்குகளும்,கமெண்டுகளும்,ஷேர்களும் குவியத் தொடங்கின. குறிப்பாக ஏற்கனவே இப்படி போராளியான நண்பர்களிடமிருந்து..lol, non stop rofl,haa..haa...,  :-)))), இன துரொகி,  இதோல்லாம் ஒரு பொலப்பா .., தலீவருக்கு இந்த வாயசுல இப்பாடி ஒரு அசை, தொலைவரே இது ஞாயாம.., மானாட மர்பாட பார்த்தது பெல் இருந்தது...., கிழவானுக்கு இது எத்திநியவாது ...? தாமில் நட்டை விட்டு தோரதுனும்..  என புரட்சி வாசகங்களை அள்ளித் தெளிக்கலாயினர்.

அவன் நண்பன் கூட பேக் ஐடியில் வந்து " டேய்...நீ போரளியா அயிட்ட.. வழ்த்துக்காள்..!  " என வாழ்த்தினான்.   

அவனின் உணர்ச்சித் தீ எரிமலையாக வெடிக்க ஆரம்பித்திருப்பதை உணர்ந்தான். அங்கிருந்து வெளியேறி பின்னால் உள்ள மூத்திர சந்துக்கு ஓடினான். " நான் போராளியா ஆயிட்டேன்...நான் போராளியாயிட்டேன்..." எனக் கத்தத் தொடங்கினான்,பின்னால் 'நம்பர் ஒன்' போயிட்டிருந்த இஸ்திரிக் கடை அண்ணாச்சி ஏழு தலைமுறையை இழுத்து வச்சி அசிங்க அசிங்கமா திட்டுவதைக் கூட பொருள்படுத்தாமல். 
--------------------------------------(((((((((((((((((((())))))))))))))-------------------------------------- 

11 comments:

 1. கதையாகவே இருக்கட்டும்...

  ReplyDelete
 2. அருமை அரைவேக்காட்டுப் போராளியை
  மிகச் சரியாக புரிந்து கொள்ள முடிந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இதை நகைசுவையினு எடுத்துகறதா இல்லை இன்றைய தலைமுறையின் அறியாமைன்னு எடுத்துகறத புரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. நன்றி.இணையத்தில் மட்டும் வாய்ச்சவடால் விடும் காகிதப் போராளிகளைப் பற்றிய கதை பாஸ்.

   Delete
 4. ரசித்தேன்... தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக நன்றி

   Delete
 5. ஹா ஹா ஹா ரசித்து சிரித்து படித்து மகிழ்ந்தேன்.... இணைய நவீனப் போராளிகள் இன்று ஏராளம், அதற்காக சேகுவரோ... காஸ்ட்ரோ... ஹா ஹா ஹா

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 7. நல்ல நடை, ரசித்தேன். தொடருங்கள் தொடருவேன்.

  ReplyDelete