Monday, 3 August 2015

ஆரஞ்சு மிட்டாய்... -கொஞ்சம் இனிப்பு..நிறைய புளிப்பு


ரஞ்சு மிட்டாய் என்றொரு படம் வந்திருக்கிறது.

ஒரே நேர்கோட்டில் எவ்வித இலக்கும் இல்லாமல் தட்டையாக பயணம் செய்யும் தமிழ் சினிமாவின் வழித்தடத்தை அவ்வப்போது வேறொரு திசை நோக்கி திருப்ப முயற்சிக்கும் வெகு சில படைப்பாளிகளில் விஜய் சேதுபதியும் ஒருவர். அவருக்காகத்தான் இந்தப் படத்தைக் காண சென்றிருந்தேன்.

காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எந்தக் கலையையும் அடக்கிவிடக் கூடாது. அதன் இலக்கணங்களும் கட்டமைப்பும் அவ்வப்போது உடைக்கப் படவேண்டும். அதன் வெவ்வேறு பரிமாணங்கள் வெளிப்பபட வேண்டும். ஒரு கலையின் பரிணாம வளர்ச்சி அதைப் பொருத்துதான் அமைகிறது.

தமிழ் சினிமாவுக்கும் சில இலக்கணங்கள் இருக்கிறது. சமீபத்திய சில படைப்புகள் அதை உடைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விசயம்தான். காக்கா முட்டை அதில் அசுர வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு புதிய முயற்சிதான் ஆரஞ்சு மிட்டாய்..

இரண்டுமே வணிக சினிமா இல்லை. இரண்டு தலைப்புகளும் விளிம்பு நிலை மக்களுக்கு நன்கு பரிச்சயம். இரண்டிலுமே படத்தின் மையக் கருவுக்கும் படத்தலைப்புக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாது. ஆனால் ஆழமாக யோசித்தால் அவ்விரண்டு படங்களின் தலைப்பு சொல்லும் செய்தி, கதைக் கருவைவிட தத்துவார்த்தமாக இருக்கும்.

காக்கா முட்டை திரைப்படம் ஒரு விவரிக்க முடியாத பரவசத்தைக் கொடுத்தது. அதன் வணிக ரீதியான வெற்றி பல மசாலா படைப்பாளிகளை திரும்பிப் பார்க்கச் செய்தது . அந்த ஜெனரில் வந்திருக்கும் படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..


மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான்.

108 மருத்துவ விரைவு ஊர்தி ஓட்டுநர் ஆறுமுகம் பாலா, அதில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ சேவகன் ரமேஷ் திலக், வயதான தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி மற்றும் படம் முழுவதும் இவர்களை சுமந்து செல்லும் அந்த TN -31 G3669 ஆம்புலன்ஸ்.. இந்த நான்கு பாத்திரங்களுக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே ஆரஞ்சு மிட்டாய்.

சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாகிடும் என்பார்கள். தனது சாகுற நாளை குத்துமதிப்பாக தெரிந்து கொண்ட ஒரு முதியவர், வாழும் கொஞ்ச நாட்களை ஜாலியாக கடக்க நினைக்கிறார். தனது ஒரே மகனிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் சொந்த கிராமத்தில் தனிமையில் வாழ்கிறார் அந்த முதியவர். தனிமை அளிக்கும் நரக வேதனையிலிருந்து விடுபட அவ்வப்போது 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு வரவழைத்து அவர்களை ஒரு நாள் முழுக்க டார்ச்சர் செய்வது அவரது பொழுதுபோக்கு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் ஆறுமுக பாலாவும், ரமேஷ் திலக்கும். இம்மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களின் கோர்வைதான் ஆரஞ்சு மிட்டாய்.

ஐம்பது வயதைக் கடந்த முதியவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி. மஞ்சள் கறைபடிந்த பற்கள், நரைத்த முடி மற்றும் தளர்ந்த கண்களுடன் வாழ்க்கைப் பயணத்தின் கடைசி தருவாயிலில் நிற்கும் ஒரு முதியவரின் தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார். உண்மையிலேயே இப்படி வரும் தில்லு, தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து விஜய் சேதுபதிக்குத்தான் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் எந்த தயவு தாட்சண்யமும் காட்டக் கூடாது.

ஆனால், தமிழ் சினிமாவில் இவர் ஜெயித்த படங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தையே தொட்டிராத நிலையில், சமீபத்திய இவரது படங்கள் எதுவும் பெரிதாக கல்லா கட்டாத நிலையில், இவரின் போட்டியாகப் பேசப்பட்ட சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக நிலைத்துவிட்ட நிலையில், பொழுதுபோக்கான அதே நேரத்தில் கருத்தாழமிக்க வித்தியாசமான படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படியொரு சோதனை முயற்சி தேவையா..?

வித்தியாசமாக முயன்றது சரிதான்.. ஆனால் அதை நிறைவாகச் செய்திருக்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். சிகைக்கு வெள்ளைநிற டை அடித்து தொப்பையை கூட்டிவிட்டால் முதியவர் தோற்றம் வந்து விடுமா..?  நடையில் தளர்ச்சி இல்லை.. கண்களில் முதிர்ச்சி இல்லை.. ஒரு பெரிய மனுஷன்  செய்யிற வேலையா இது என நிறைய காட்சிகளில் நம்மையே கேட்க வைக்கிறார்.. இந்தியன் படத்தில் கிழவனாக வரும் கமல், கடைசிவரை முழுக்கை சட்டையோடுதான் வருவார். வேட்டியை மடித்துக் கட்டும் காட்சியே அந்தப் படத்தில் இருக்காது. தசைகள் தளர்ந்த தோற்றத்தைக் காண்பிக்கவேண்டும் அல்லது அதை முற்றிலுமாக மறைக்க வேண்டும். ஆனால் இதில் வேட்டியை மடித்துக் கட்டும்போது மாறுவேடம் போட்ட முதியவராகத்தான் விஜய் சேதுபதி தெரிகிறார்..

தோற்றத்தில் கோட்டைவிட்டவர் நடிப்பின் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். நள்ளிரவில் குத்தாட்டம் போடுவது... ஆட்டோவில் எவ்வித சலனமுமில்லாமல் திடீரென்று கண்விழித்து அதிர்ச்சி ஏற்படுத்துவது... ஸ்ட்ரெட்ச்சரில் ஜாலியாக உட்கார்ந்துகொண்டு வழியில் செல்பவரிடம் சினிமாவைப் பற்றி பேசுவது... பெற்ற மகனிடமே வீராப்பு காட்டுவது என்று நிறையக் காட்சிகளில் கைதட்டு வாங்குகிறார் விஜய் சேதுபதி.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் மினிபஸ் டிரைவராக வந்த ஆறுமுகம் பாலாவுக்கு இதில் ஆம்புலன்ஸ் டிரைவராக புரமோஷன். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகல.. ரமேஷ் திலக்கின் காதலியை உனக்குப் பிடிக்குமா என விஜய் சேதுபதி கேட்கும்போது ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்க.. செம்ம.. ! நல்ல கேரக்டராக தேர்ந்தெடுத்து நடித்தால் பெரிய காமெடியனாக வலம் வரலாம்.

படத்தில் அத்தனை கேரக்டர்களையும் மிஞ்சுவது ரமேஷ் திலக்தான். ஒரு பக்கம் காதலியிடமிருந்து டார்ச்சர்.. இன்னொரு பக்கம் சூப்பர்வைஷரிடமிருந்து குடைச்சல்.... இதற்கிடையில், கூட இருந்தே குடையும் கைலாசப் பெரியவரையும் சமாளிக்க வேண்டும்.. அத்தனைப் பேரையும் அவரவர் போக்கிலே சென்று சமாளிக்கும் திறமை ஒரு தேர்ந்த நடிகனுக்கு மட்டுமே இருக்கும். உண்மையிலேயே நீ நடிகன்ய்யா..!  ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை. ஒரு இடத்தில் கூட மிகை நடிப்பு இல்லை. ஒருவேளை இந்த வருடத்திற்கான  ' பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் '  விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

ஒரு உணர்வுப் பூர்வமான பத்து நிமிட குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றினால் எப்படி இருக்கும்...? நாயகன் விஜய் சேதுபதியை லொள்ளு பிடித்த ஆசாமியாக காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதை இன்னும் கலகலப்பாக செய்திருக்கலாம். திடீரென்று டென்சன் ஆகிறார். அட்வைஸ் செய்கிறார். அப்புறம் மஞ்சள் பல் தெரிய 'ஈ 'என்கிறார்.

படம் முடிந்து வெளிவரும்போது ஒரு பெண்மணி, ' கடைசியிலாவது கதையிருக்கும்னு நெனச்சிருந்தேன். ஆனா ஒன்னுமேயில்லை ' என்று வேறொருவரிடம் புலம்பிக்கொண்டு வந்தார். அனேகமாக அவர் விஜய் சேதுபதிக்கு ஏதாவது பிளாஸ்பேக் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்திருக்கலாம். சஸ்பென்ஸ், ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நகரும் திரைக்கதைக்கு வலுசேர்க்க அழுத்தமான பிளாஸ்பேக் வைத்திருந்தால் முடிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

என்னைப் போன்ற காக்கா முட்டைப் பிரியர்களுக்கு வேண்டுமானால் இந்தப் படம் பிடித்திருக்கலாம்.. மற்றவர்களுக்கு..?

ஆரஞ்சு மிட்டாய்... நிறைய புளிப்பு + கொஞ்சம் இனிப்பு..

என் பார்வையில் முதல் இடத்தை ரமேஷ் திலக் தட்டிக்கொண்டு போகிறார்

Saturday, 1 August 2015

கலாம் ஏற்படுத்திய கலகம்...



ரண்டு நாட்களாக பேஸ்புக்கை திறந்தாலே ஒரே எரிச்சல். அதையும் மீறி அங்கிருந்திருந்தால் மூளை குழம்பி போய் ஸ்ட்ரைட்டா கீழ்பாக்கத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நானே போயி அட்மிட் ஆகிடும் நிலை வந்திருக்கும்.

ஒரேயொரு இறப்பு... ஒரு தனி மனிதனின் மறைவு... எத்தனை எத்தனை மனிதர்களின் நிறங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது..! எத்தனைக் குபீர் போராளிகளை இணையத்தில் சந்திக்க வேண்டியுள்ளது...!

நேற்று வரைக்கும் கூடங்குளம் பிரச்சனைக்காக அப்துல்கலாமை கழுவி ஊற்றிய ஒரு குரூப், இப்போது அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்த அவர் வரவில்லை.. இவர் வரவில்லை என திட்டிக் கொண்டிருக்கிறது. (அவர்கள் வருவது இருக்கட்டும்.. முதல்ல நீ போனாயா ..?)

இன்னொரு பக்கம் மெழுகுவர்த்தி குரூப். அவரொரு கார்பரேட் கைக்கூலி, அணு உலை ஆதரவாளர். ஆதலால் கலாமின் இறப்பு எங்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று வழக்கமான புலம்பல்களை அவிழ்த்து விடுகிறது. (ஏண்டா டேய்.. ஒரு அணு விஞ்ஞானி மக்களுக்கு அணு உலை குறித்த பயத்தை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு பயமுறுத்துவா செய்வார்..? )

சந்தடி சாக்குல நம்ம காமெடி டம்பளர் பாய்ஸ், ' ஈழத்தில் உறவுகள் செத்து மடிந்த பொழுது அமைதியாக இருந்தாயே' என்று எழவு வீட்டில் இனப்பீரிடலை காண்பிக்கிறது . அந்த நேரத்தில் அப்துல்கலாம் அவர்கள் பதவியில் இல்லை என்கிற விஷயம் கூட அந்த அரைவேக்காடுகளுக்கு தெரியாது. அப்படி சிந்திக்கும் அளவுக்கு அவைகளுக்கு அறிவும் கிடையாது.

இவர்களையெல்லாம் விட மிகவும் ஆபத்தானவர்கள் 'குபீர் போராளிகள்'. பொதுவாக இவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். சமூக அக்கறை எந்தக் கடையில் கிடைக்கும் என்பார்கள். ஆனால் யாராவது இறந்து போனாலோ அல்லது ஏதாவது பரபரப்பான செய்தி வந்தாலோ போதும்,குபீர் போராளிகளாக மாறிவிடுவார்கள். உலகத்தையே உருட்டிப் போட கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கு சுயபுத்தி சுத்தமாகக் கிடையாது. எவனாவது எதையாவது கிளப்பிவிட்டால் அதைப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தத் தகவல் உண்மையானதா, நம்பகத்தன்மையானதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். கையில் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராயிடு ஃபோன் இருந்தால் போதும்.. காசா பணமா... தட்டிவிடு share -ஐ . நிமிஷத்துக்கு ஒன்றாக வதவதவென வரும்.

மிழகத்தைப் பொருத்தவரையில் 'சம்பவம்' என்று ஒன்று நடந்தால் முதலில் உருள்வது கலைஞரின் தலை என்பது எழுதப் படாத நியதி. அதுதானே தமிழ் இணையவாசிகளின் தலையாய முதற்கடமை. அப்படி செய்யா விட்டால் அவர்களின் குபீர் போராட்டம் நிறைவைப் பெறாமல் போய்விடும் அல்லவா..!.

அப்துல்கலாம் மரணத்திலும் முதல் அம்பு கலைஞர் மீதுதான் எய்யப்பட்டது. 'கலாம் என்றால் கலகம்' என்று எப்போதோ கலைஞர் சொன்னதைத் தற்போது மேற்கோள் காட்டி 'அவரை செருப்பால் அடியுங்கள் ' என்கிறான் கல்யாணராமன் என்கிற காவி நாய். அதைத்தொடர்ந்து அந்நிலைத்தகவல் பேஸ்புக்கில் நிறைய பகிரச்செய்து, தனது கலைஞர் எதிர்ப்பு அரிப்பைத் தீர்த்துக் கொண்டது சில அரைவேக்காட்டு முண்டங்கள்..

கலைஞர் எந்த மாதிரியான சூழலில், எதற்காக அப்படி சொன்னார் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு அறிவும் தெளிவும் அவர்களுக்கு இருந்திருந்தால் இங்கே எதற்கு குப்பைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..? . வார்டன் என்றால் அடிப்போம். கலைஞர் என்றால் கலாய்ப்போம். அவ்வளவுதான்.

இந்திய அரசியலில் ராஜேந்திரபிரசாத்துக் குப் பிறகு ஒருவர் இருமுறை ஜனாதிபதி- யாகும் நடைமுறை முடிந்தவரை தவிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தியத் திருநாட்டில் ரப்பர் ஸ்டாம்ப் வேலை செய்ய ஆட்களுக்கா பஞ்சம்..!. அப்துல் கலாம் அவர்கள் தனது பதவிகாலம் முடியும் முன்பே தனக்கு மீண்டும் போட்டியிட ஆர்வமில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். சந்திரபாபு நாயுடு அப்போது விடுத்த அழைப்பையும் நிராகரித்து விட்டார். காரணம்; கலாம் ஓய்வை விருப்பினார். அரசியல் அவரது தொழிலல்ல. ஆதலால் தனது புனிதமான ஆசிரியப் பணியை மீண்டும் தொடர விரும்பினார்.

அந்த சமயத்தில், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பிரதிபா பாட்டிலை  ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அதை ஆமோதிக்க, சுலபமாக வென்று நாட்டின் பன்னிரெண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் பிரதிபா. அதன் பின்பு நடந்த 2012 தேர்தலில் மத்தியில் பலமிக்க கூட்டணியாக இருந்த காங்கிரஸ், தமது வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை முன்நிறுத்தியது.

பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன்தான் சிக்கலே எழுகிறது.  அதுவரை அமைதியாக இருந்த மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தின் அரசியல் எதிரியான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் அப்துல் கலாம் பெயரைப் பரிந்துரைக்கிறார். அது அப்துல் கலாம் மீது கொண்ட அபிப்பிராயத்தால் அல்ல, பிரணாப் மீது கொண்ட வெறுப்பினால். அதற்கு மம்தா பயன்படுத்திய பகடைக்காய்தான் அப்துல்கலாம்.

ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப்பை தேர்ந்தெடுத்து, அதை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் முன்மொழிந்திருந்த நிலையில், மம்தாவின் அறிவிப்பு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அப்துல்கலாம் தான் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தால், அதை வழிமொழியும் முதல் கட்சியாக தி.மு.க இருந்திருக்கும். ஆனால் மிகப் பெரிய கட்சியான காங்கிரசே பிரணாப்பை முன் நிறுத்திய பிறகு, அதை எதிர்த்து கலாமை திமுக ஆதரித்தாலும் கலாம் படு தோல்வியைத்தான் தழுவியிருப்பார்.

இப்படியொரு சூழலில், 'அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் நான் தேர்தலில் நிற்கத் தயார்' என்று கலாம் அறிவிக்கிறார். நிச்சயம் அவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. அப்படியானால் அப்துல் கலாமின் தோல்வி உறுதியானதுதான். அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டு புதுக்குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்...?  அப்படி நிற்கும் ஆர்வம் இருந்தால் முன் கூட்டியே அல்லவா அறிவித்திருக்க வேண்டும்... இக்குழப்பத்தைப் பற்றி செய்தியாளர்கள் கலைஞரிடம் கேட்டபோதுதான் தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் 'கலாம் என்றால் கலகம் என்றொரு பொருளும் இருக்கிறது' என்றார். இது அவர்மீது கொண்ட வெறுப்பால் சொல்லவில்லை. அப்போதிருந்த சூழலை விளக்கவே அப்படி சொன்னார்..

ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையெல்லாம் இந்த குபீர் போராளிகளுக்கு முக்கியமில்லை. கலைஞரை கழுவி ஊற்றணும். அதற்கு ஏதாவதொரு காரணம் கிடைக்கணும். அப்படி கிடைத்த காரணம்தான் 'கலாம் என்றால் கலகம்' .

லைஞரை அடுத்து இந்த குபீர் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்கானது மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரன் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ' அப்துல்கலாம் ஒரு Scientist அல்ல. அவர் ஒரு Technocrat ' என்று சொன்னார்.

அதாவது அவரை 'விஞ்ஞானி' என்பதைவிட 'சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்' என்றுதான் சொல்ல வேண்டும் என்பது அவரது வாதம். இதில் கலாம் அவர்களை எந்த விதத்திலும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை.


ஆனால் டெக்னோக்ராட் என்கிற வார்த்தையை அறியாத எவனோ அதை 'ஸ்கூட்டர் மெக்கானிக்' என தவறாக புரிந்துகொண்டு இணையத்தில் அவருக்கு எதிரான தாக்குதலுக்கு விதையை தூவிவிட்டு போயிருக்கிறான்..
அதைப் பிடித்துக் கொண்டு அப்துல்கலாமை ஸ்கூட்டர் மெக்கானிக் என்று சொல்லிவிட்டார் என்று ஒரு நாள் முழுவதும் அவரை கழுவி ஊற்றினார்கள். அவர்கள் தூவிய விதைகள் மரமாகி தற்போது இப்படி வளர்ந்து நிற்கிறது... 

தைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால் சுருட்டை முடி வச்சிருந்தவன் எல்லாம் சுருளிராஜன் என்கிற மாதிரி அப்துல் கலாமின் சிகை அலங்காரத் தோற்றத்தை ஒத்த எந்தப் புகைப்படம் கிடைத்தாலும், 'இது மாமேதை அப்துல் கலாமின் இளமை காலத்து அரிய புகைப்படம் ' என்கிற புரளியை ஒரு குரூப் பரப்பிக் கொண்டிருந்தது. அதை நமது குபீர் போராளிகள் உணர்ச்சிப் பெருக்கெடுத்துப் பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து வயது கலாமின் புகைப்படம் என்று ஒரு துல்லியமான வண்ணப் புகைப்படம் ஒன்று நிறைய பேரால் இணையத்தில் பகிரப்பட்டது. 1931-ல் கலாம் பிறந்தார். அப்படியானால் அப்புகைப்படம் 1940 வாக்கில் எடுக்கப் பட்டதாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் ஏதய்யா இவ்வளவு துல்லியமான வண்ணப் புகைப்படக் கருவி..? 

கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது எடுக்கப்பட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கிடைத்தது. அது 1953-ல் எடுக்கப்பட்டது. அதுவே பழைய கருப்பு வெள்ளையில் இருக்கும்போது இவர்களுக்கு 10 வயது வண்ணப் புகைப்படம் எங்கிருந்து கிடைத்தது..? தவிரவும் கல்லூரியில் படிக்கும்போதே ஒட்ட வெட்டிய சிகையலங்காரத்தோடு இருக்கும் அப்துல் கலாம் பள்ளிப் பருவத்திலா இப்படி இருந்திருப்பார்..?

ஒருவேளை டைம் மெசினில் பயணம் செய்து அப்துல் கலாம் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திற்கு சென்று அப்புகைப்படத்தை எடுத்து வந்திருப்பார்களோ..! சத்தியமாக உங்களையெல்லாம் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காதுய்யா...

ன்னும் நிறைய கூத்துக்கள்  நடந்தது..

# அப்துல் கலாம் பிறந்த தினத்தை அகில உலக மாணவர்கள்  தினமாக ஐ.நா அறிவித்தது. 

# அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.. (இன்னும் சில பேர் பிரிட்டன், ஆஸ்திரேலியா , கனடா என புருடா விட்டுக் கொண்டிருந்தனர்.)

# அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் வருகிறார்.

 # இத்தாலி நாட்டில் பிறந்த சோனியாவை இந்திய பிரதமர் ஆகாமல் தடுத்ததே அப்துல்கலாம் தான்..

 # வானத்தில் ஒரு அபூர்வ உருவம் தோன்றி கலாமுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உடனே மறைந்துவிட்டது.

# கலாம் 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்ததாக சொல்லப்படுவது பொய். அது குறித்த எந்த கானொளியும் இன்னும் வரவில்லை. அப்படியானால் கலாம் கொலை செய்யப்பட்டாரா...?

இன்னும் நிறைய புதுப்புது தகவலை கண்டுபிடித்து ஒரு குரூப் பரப்பிக் கொண்டிருக்க, அத்தனை செய்திகளும் பல்லாயிரக்கணக்கில் இந்த குபீர் போராளிகளால் பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

வை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளியது கேப்டனின் அழுகை. அப்துல் கலாமின் மரணத்தில் சிக்சர் அடித்த ஒரே ஆள் நம்ம கேப்டன்தான். அதற்கு முன்பு வரை இணையவாசிகளால் சகட்டுமேனிக்கு கலாய்க்கப் பட்டவர், அதே வாய்களால் 'பச்ச மண்ணுய்யா நம்ம கேப்டன்..' என அச்சம்பவத்துக்குப் பிறகு சொல்ல வைத்து விட்டார். அதுசரி... கேப்டனுக்கும் கலாமுக்கும் அப்படி என்ன பெரிய பிணைப்பு ..?  

கேப்டன் டெல்லி சென்று மன்மோகன் சிங்கையும், மோடியையும் தான் சந்தித்து விட்டு வந்திருக்காரே தவிர, இங்கிருக்கும் அப்துல் கலாமை ஒருமுறையாவது சந்தித்து சமுதாய முன்னேற்றத்தைப் பற்றி ஆலோசனை செய்திருக்காரா ..?.. இந்தியா வல்லரசு ஆகணும் என தனது திரைப்படங்களில் காட்சிக்கு ஒரு முறை சொல்லும் கேப்டன், உண்மையிலேயே அதற்கு செயல்வடிவம் கொடுத்த அப்துல்கலாமை சந்தித்து ஒருமுறையாவது பாராட்டியிருப்பாரா..?

" கருப்பு நிறமென்பதால் ஆரம்பத்தில் கோடம்பாக்கத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது, ' நானிருக்கிறேன் நண்பா..  உன்னை ஹீரோவாக்கிக் காட்டுகிறேன்.. ' என்று சூளுரைத்த 'அந்த ஆருயிர் நண்பர்..."

"ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல், சொந்த ஊருக்கே திரும்பிப் போய் அரிசிமில் வேலையைப் பார்க்கப் போகிறேன் என்று மதுரைக்கு ரயிலேற கிளம்பிய கேப்டனை தடுத்து நிறுத்தி, மீண்டும் பிஸியான ஹீரோவாக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு, வாய்ப்புக்காக ஒவ்வொரு கம்பெனியின் படியேறி மறுவாழ்வு அளித்த அந்த ஆருயிர் நண்பர்...."

"திருமணம் செய்துகொண்டால் நட்பில் விரிசல் வந்துவிடும் என்பதால் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் நண்பனுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த அந்த ஆருயிர் நண்பர்..."

"ஏற்கனவே விவாகரத்து வாங்கின, உடன் நடிக்கும் எல்லா நடிகர்களுடன் நெருக்கமாக இருந்த அந்த விவகார நடிகையுடன் காதலில் விழுந்தபொழுது, அவரிடமிருந்து பிரித்து, பிரேமலதாவை பெண் பார்த்து மணமுடித்து அழகு பார்த்த அந்த ஆருயிர் நண்பர்.... ,"

"அந்த ஆருயிர் நண்பர்" கண்ணாடிப் பெட்டிக்குள் அடக்கமாகிக் கிடந்த பொழுது, வரும் அழுகையை அடக்க முடியாமல் உடைந்து அழுவார் கேப்டன் என நினைத்திருந்தேன். ஆனால் அண்ணியாரோடு அமைதியாக அஞ்சலி செலுத்திவிட்டு கடமை முடிந்தது என்று கிளம்பிப் போனார் கேப்டன். அப்படிப்பட்ட கேப்டனும், அண்ணியாரும் கலாமின் உடலைப் பார்த்து கலங்கி அழுதார்கள் என்பதுதான் எங்கேயோ இடிக்கிறது....! அதுசரி, ஒரு நடிகனால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அழுகையைக் கூடவா கட்டுப்படுத்த முடியாது..?

துபோன்ற கொடுமைகள் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பார்த்துவிட்டு எப்படி சுலபமாகக் கடந்து செல்ல முடியும்...? "இரண்டு நாட்களாக பேஸ்புக்கை திறந்தாலே ஒரே எரிச்சல்" என்று முதலில் எழுதியதற்கு இதுதான் காரணம்.

எது எப்படியோ... 'கலாம் என்றால் கலகம் என்றொரு அர்த்தம் இருக்கிறது...' என்று கலைஞர் சொன்னது கலாமின் இறுதிச்சடங்கிலும் பொய்க்கவில்லை என்பதுதான் இங்கே ஆச்சர்யம்..!