Wednesday, 4 April 2012

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை...திடுக்கிடும் பின்னணி

    கடந்த வாரம் இணையத்தில் படித்த ஒரு செய்தி என் பழைய நினைவுகளை கனத்த இதயத்தோடு அசைபோட வைத்தது.பள்ளிப் படிப்பை தமிழில் பயின்று பின் கல்லூரி சென்று ஆங்கிலத்தில் படிக்கும் போது ஏற்படும் சிரமங்கள், எத்தனை பேர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

   முதல்ல... அந்த சோகமான செய்தியை சொல்லிடுறேன்.

மணிவண்ணன் 
   தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேவராசபாளையத்தை சேர்ந்தவர்  மணிவண்ணன்(21).இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்  கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த மார்ச்-27ம் தேதி பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். இவரைப் பற்றிய மற்ற விவரங்களை அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

     இறந்து போன மாணவன் மணிவண்ணன், வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இவரின் தந்தை செல்வம் இவர்களை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட,தாயார் காஞ்சனா கூலி வேலை செய்து மணிவண்ணனையும், அவரது தம்பி மதிவாணனையும், தங்கை சர்மிளாவையும் காப்பாற்றி வந்தார்.

     ஏழ்மை காரணமாக மணிவண்ணன் தனது 12-வது வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு,தனது தாய் காஞ்சனாவுடன் செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்தார்.2008-ம் ஆண்டு,தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ். கொத்தடிமைகளை மீட்கும் பணிக்காக,மணிவண்ணன் வேலை பார்த்த செங்கல் சூளைக்கு சென்றிருக்கிறார்.அப்போது மணிவண்ணனின் படிப்புத் திறமையையும்,ஏழ்மை அவனது படிப்புக்கு தடையாக இருப்பதையும் கலெக்டர் அபூர்வா கேட்டறிந்தார்.உடனடியாக மணிவண்ணன் தொடர்ந்து படிப்பதற்கு அபூர்வா உதவி செய்தார்.அவரது உதவியால்தான்,மணிவண்ணன் நன்றாக படித்து,சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாராம்.

District Collector, Ms. Apoorva, IAS
    மாணவர் மணிவண்ணன் ஏழ்மையில் இருந்தபோதிலும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தாராம். அவர் பிளஸ்-2 தேர்வில் 1159 மார்க் வாங்கி மாநிலத்தில் 13-வது இடத்தைப் பிடித்தார்.அவர் இந்த அளவுக்கு படிப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அபூர்வா என்று சொன்னால் அதுமிகையாகாது.ஆனால்,அவரது கனவு முழுவதுமாக  நிறைவேறவில்லை. இடையிலேயே முடிந்துபோனது.

   மணிவண்ணன் பிளஸ்-2 தேர்வில், நல்ல மதிப்பெண் எடுத்திருந்தபோதிலும்,அவருக்கு ஆங்கில அறிவில் குறைபாடு இருந்தது. தமிழில் அவர் நல்ல புலமை பெற்றவர்.அவர் 8-வது வகுப்பு படிக்கும்போதே, தமிழில் கவிதை எழுதினார்.தற்போது கூட"தாய்ப்பால் வாசம்''என்ற கவிதை புத்தகத்தை எழுதி வெளியிட இருந்தாராம்.

         ஐ.ஏ.எஸ்.அதிகாரி அபூர்வாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த புத்தகத்தை,'அபூர்வா செந்தமிழன்'என்ற புனைப்பெயரில் எழுதி இருக்கிறார். மணிவண்ணனை,தமிழை அடிப்படையாக வைத்து பட்டப்படிப்பு படிக்க வைத்திருந்தால்,அவர் பெரிய ஆளாகியிருப்பார்.அவர் என்ஜினீயரிங் படிப்பை, ஆங்கில வழியில் படிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

 கடந்த 3ஆண்டுகளில் அவர் 26 பாடங்களில் பெயிலாகி உள்ளார்.இந்த ஆண்டு இன்னும் 8 பாடங்களில் பரீட்சை எழுத வேண்டியுள்ளது. 4-வது ஆண்டு பரீட்சை வேறு உள்ளது.படிப்பில்,தேர்வாக முடியாததால்,மன அழுத்தம் காரணமாகத்தான்  மணிவண்ணன் தற்கொலை செய்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
 
     அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், “மாணவன் மணிவண்ணனின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. அவர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது, இன்றுதான் அவரது அகடமிக் கல்வி பட்டியலை முழுமையாக பரிசோதித்தேன். முதல் செமஸ்டரில் அதிக மதிப்பெண் பெற்று அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியடைந்துள்ளார். அதேநேரத்தில், தொடர்ந்து நடைபெற்ற 2, 3, 4, 5ம் செமஸ்டர் தேர்வுகளில் எழுதிய 32 பாடங்களில் 26 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார்.நன்றாக படிக்கக் கூடிய மாணவர் இப்படி தோல்வியடைந்தது எதனால் என்பது தெரியவில்லை.


      தோல்வியடைந்த பாடங்களுக்கான அரியர் தேர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அதில் சரியாக தேர்வு எழுதவில்லை என்று தெரிகிறது. அடுத்த நாள் நடைபெற இருந்த தேர்வை எழுதாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவர் எழுதிய கவிதை புத்தகம் ஏப்ரல் 4ம் தேதி பல்கலைக்கழகத்தில் வைத்து வெளியிடப்பட இருந்தது.அதற்குள் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார். மணிவண்ணன் தைரியமான மாணவன்,அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று நான் எதிர் பார்க்கவில்லை" என்றாராம்.

         பொதுவாகவே..  +2 ல தமிழ் மீடியத்தில் படிச்சி ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்கினவங்க கூட மெடிகல் அல்லது இஞ்சினியரிங்-ல சேர்ந்து படிக்கிரப்போ இங்கிலீஷ் மீடியத்தில படிச்சுட்டு வந்த பசங்க கூட போட்டிப் போட முடியாமல் சோர்ந்து போயிடுறாங்க. அதுவே பின்பு அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது.ஸ்கூல படிக்கும் போது பெற்றோர், ஆசிரியர்கள் கிட்டேருந்து கிடைக்கும் ஊக்கம் தான் நமக்கு  உற்சாகத்தைக் கொடுத்து அதிக மார்க் எடுக்க தூண்டுது.ஆனால் காலேஜில படிக்கிறப்ப ந்த ஊக்கம் நமக்கு கிடைக்கிறதில்ல.

      தமிழில் அறிவியல் பாடம் படிக்கும் போது விசை,வேலை, திசைவேகம்,திருப்புத்திறன்,நியூட்டன் விதி,பாயில் விதி இப்படி நிறைய விசயங்கள் தமிழ்ல தெளிவா விளக்கத்தோட படிச்சிருப்போம். எப்போ கேட்டாலும் உடனே சொல்ற மாதிரி நம்ம மனசுல அப்படியே பதிஞ்சிருக்கும். ஆனால் தமிழ்ல படிச்ச இதே விசயத்த காலேஜில ஆங்கிலத்தில் படிச்சா.. படிக்கிறப்போ புரியும் அப்பறம் மறந்துடும்.தமிழ் மீடியத்தில படிச்சுட்டு போற நெறைய பேருக்கு இந்த வியாதி இருக்கும்.சில நேரங்களில தெரிஞ்ச ஒரு விசயத்த தெரியாமலே படிச்சிருப்போம்.

புரியலயா?..... என்ன நோகடிச்ச அந்த ஒரு வார்த்தை....

    நான் காலேஜில படிக்கிறப்போ கெமிஸ்ட்ரியில'Sublimation'னு ஒரு வார்த்தை அடிக்கடி வந்துகிட்டே இருந்துச்சி.அடிக்கடி வந்ததாலையோ என்னவோ அந்த வார்த்தை மனசுல பதிஞ்சி போச்சி.இதுக்கு அர்த்தம் கேட்டா இது கூட தெரியாதான்னு பசங்க கிண்டலடிச்சா என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டு அப்படியே விட்டுட்டேன்.அப்பறம் ஒரு வழியா பார்டர்ல பாஸ் பண்ணி அடுத்த செமஸ்டர் போயாச்சி.பாத்தா...அடுத்த செமஸ்டர்லேயும் அதே வார்த்தை திரும்ப வருது.சரி இதுக்கு மேல தாமதிச்சா படிக்கிறதுக்கே ஒரு அர்த்தம்(?!) இல்லாமல் போய்டும்னு நேரா போயி இங்கிலீஸ் மீடியம் படிச்ச நண்பன் கிட்டே போயி கேட்டுட்டேன்.அவன் ஓரக்கண்ணால மேலேயும் கீழேயும் பாத்துட்டு விளக்கத்தச் சொன்னான். 'சாலிட் ஸ்டேட்லேருந்து லிக்யுடு ஸ்டேட்க்கு போகாம டைரக்டா கேசியஸ் ஸ்டேட் க்கு மாறுறதுக்கு பேருதான் சப்ளிமேசன்' அப்படீன்னு சொன்னான். அட வென்ட்ரு..இதுக்கு பேரு பதங்கமாதல்.இத நான் எட்டாம் வகுப்பிலே படிச்சுட்டேனே.எங்க சயின்ஸ் வாத்தியாரு சூடத்த கொளுத்தி எல்லாம் வேற காமிச்சாரே..இதுக்கு அர்த்தம் புரியாமலே ஒரு செமஸ்டர் தாண்டி வந்துட்டேனே.சரி.. சரி.. இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்னு டீலிங்க  முடிச்சுட்டு நடைய கட்டிட்டேன்.இது போல எத்தன வார்த்தை தெரிஞ்சும் தெரியாம படிச்சிருக்கேன்.இப்படி எல்லாத்துக்கும் அர்த்தம் தேடிகிட்டே இருந்தா என்னைக்கு டிகிரி வாங்குறது?.

     பொதுவாகவே அண்ணா யுனிவர்சிடி,ஆர்.இ.சி.உள்ளிட்ட டாப் லெவல் இன்ஜினியரிங் காலேஜ்-ல உள்ள சிலபஸ் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.சி பி எஸ் சி-ல படிச்சுட்டு வர்றவங்களுக்கு கூட கஷ்டமா இருக்கிற இந்த பாடத்திட்டங்கள் கிராமப்புறத்திலிருந்து வர்ற மாணவர்களுக்கு மயித்தக்கட்டி மலைய இழுக்கிற மாதிரிதான்.அதிலேயும் பாடம் நடத்துற புரொபசர் எல்லாமே அவங்க லெவெலுக்கு நடத்துவாங்களே தவிர கடைக்கோடி மாணவர்களுக்கும் புரியும் படி நடத்துவது இல்ல. இன்ஜினியரிங் காலேஜ்-ல முதல் ரெண்டு செமஸ்டர்ல உள்ள எல்லா பாடமும் +1,+2 ல படிச்ச  விசயங்கள் தான்.இங்கிலீஷ் மீடியத்தில படித்தவர்களுக்கு இது ரொம்ப சுலபமா இருக்கும்.ஆனால் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு வர்றவங்க எல்லாமே புதுசா படிக்கிற மாதிரி இருக்கும்.இதப் புரிஞ்சுகிட்டு படிக்கிறதுக்குள்ள எக்சாமே வந்துடும்.இதுல அரியர் விழும் போதுதான் நல்லா படிக்கிற பையன் கூட சோர்த்து போயி படிப்பில ஆர்வமே இல்லாம போற சூழ்நிலை வந்திடும்.பிறகு இந்த அரியர்ஸ் எல்லாத்தையும் முடிக்குறதுக்குள்ள அடுத்தடுத்து நிறைய அரியர்ஸ் தலை மேல இடி மாதிரி விழும்.பத்து அரியர்ஸ் எழுதி பாஸ் பன்றது...பத்து பொட்ட புள்ளைங்கள பெத்து கல்யாணம் பண்ணி குடுக்கிற மாதிரி.

       நான் படிச்ச காலேஜில 'இயர் பேக்'-னு ஒரு சிஸ்டம் இருந்துச்சி.ஒரு அரியருக்கு மூணு வாய்ப்பு தான் தரப்படும்.அதுலேயும் பாஸ் பண்ணலைனா, ஸ்கூல்ல பெயில் ஆக்குற மாதிரி இதுலேயும் பெயிலாக்கி ஜூனியர் செட்ல தூக்கி போட்டுடுவாங்க.அந்த மூணாவது அட்டம்ப்டுக்கு போறவுங்க  தாடி மீசையோட சைக்கோ மாதிரி திரிவாய்ங்க.என் நண்பன் ஒருத்தன் எக்ஸாம் அன்னிக்கு முதல் நாள் நைட்டு டீ குடிக்க போனவன் திரும்பியே வரல.சரி வேற பிரண்டு ரூமுக்கு போயிருப்பான்னு அசால்டா விட்டுட்டோம்.அடுத்த நாள் எக்சாமுக்கும் வரல.காலேஜ் எல்லாம் தேடிப்பாத்துட்டு ஊருக்கு போன்  பண்ணிக் கேட்டா,நைட்டு டீ குடிக்க போனவன் கட்டுன லுங்கியோட பஸ் ஏறி திருச்சியிலிருந்து விருதுநகருக்கு போயிருக்கான்.அங்க அவன பெத்தவங்க அந்தக் கோலத்துல பாத்துட்டு குழம்பி போயி,"என்னப்பா இந்த நேரத்தில"-னு கேட்டிருக்காங்க."இல்ல சும்மா டீ குடிச்சிட்டு போகலாம்னு வந்தேன்-னு சொல்லியிருக்கான்.அவன் சொன்னத கேட்டதும் அவங்களுக்கு  மயக்கமே வந்துடுச்சாம்.பின்ன...பெரிய இன்ஜினியர் ஆவான் நம்ம பையன்னு நெனச்சிகிட்டு இருந்தவங்க முன்னாடி போயி இவன் இப்படி நின்னா? இது போல மன அழுத்தத்தில நானும் கொஞ்சம் பாதிக்கப்பட்டேன் என்பதனால (ஹலோ...அப்பறம் தெளிஞ்சிருச்சி) இவ்வளவு சொல்ல வேண்டியிருக்கு.

   சரி இதற்கு என்னதான் தீர்வு?..தொழில்நுட்ப படிப்புகளை தமிழ்ல கொண்டு வந்துட்டா..?அது முதலுக்கே மோசமாயிடும்.இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு போனா முதல்ல 'பீட்டர்ரு' எப்படி இருக்குனு தான் பாக்குறாங்க.அல்லது 'ஸ்டேட் போர்ட்' பாடத்திட்டதில மாற்றம் கொண்டு வரலாமா? பிறகு கண்டிப்பாக இது அரசியலாக்கப்படும்.....பிறகு என்னதான் தீர்வு?

         

தகவல்கள்;தமிழ் குறிஞ்சி.        
----------------------------------------------------------X---------------------------------------------------