Wednesday 13 March 2013

எரியும் பனிக்காடாக பாலாவின் பரதேசி....தேநீரில் கலந்திருக்கும் உதிரம்...!



வ்வொரு முறையும் நூலகம் செல்லும்போது வலியமாக என் கண்ணில் தென்படும் அந்த நாவல். அப்போது அதை எடுத்துப் படிக்க அவ்வளவு ஆர்வமில்லை.ஆனால் அதன் தலைப்பு ஏனோ ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது.

"எரியும் பனிக்காடு '' இதுதான் அந்த நாவலின் தலைப்பு.இலக்கியரசம் சொட்டச்சொட்ட எழுதியிருப்பார்களோ என்ற அச்சத்தில் அதைப் புரட்டிப் பார்க்கக் கூட விருப்பமில்லாமல் ஒருவித மிரட்சியோடு அந்த இடத்தை கடந்து செல்வேன்.சமீபத்தில் பாலாவின் பரதேசிப் படத்தைப் பற்றிய செய்தி படிக்க நேர்ந்த போது அது எரியும் பனிக்காடு என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்று அறிய நேரிட்டது.


சாமி கும்பிடும் போது பிரசாதம் தீர்ந்து போயிடுமோனு ஒரு பரபரப்பு இருக்கும் பாருங்க...அப்படியொரு பரபரப்பு.அந்த புத்தகத்தை யாரும் எடுத்திரக்கூடாதுடா ஆண்டாவா...அதை வச்சி ரெண்டு பதிவாவது தேத்திடனும்டா... என்கிற வெறியோடு நூலகத்தை நோக்கி ஓடினேன். நல்லவேளை அதே இடத்தில பத்திரமா இருந்தது. ஏன்னா இது படிக்கிற மேட்டராச்சே....!


ஆனைமலை தேயிலைக் காடுகளில் 1920 லிருந்து 1930 வரை நடந்த வெவ்வேறு சம்பவங்களை பின்னிப் பிணைத்து  இந்தக் கதையை ரெட் டீ( RED  TEA ) என்ற தலைப்பில் (ரெட் லேபில் டீ அல்ல..) பி.எச்.டேனியல் என்பவர்  எழுதியிருக்கிறார்.இவர் 1945 முதல் சுமார் 25 ஆண்டுகள் தேயிலைத் தோட்டங்களில் எழுத்தராக வேலைப் பார்த்திருக்கிறார்.இந்தக் காலகட்டத்தில் 1900-லிருந்து 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்த பலபேரை பேட்டிக் கண்டு இந்த நாவலை வடிவமைத்திருக்கிறார். பிற்பாடு இது தமிழில் இரா.முருகவேல் என்பவரால் 'எரியும் பனிக்காடு' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

 இந்த நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்...

1925 -ஆம் ஆண்டுதான் இந்த சம்பவங்கள் நடக்கும் காலகட்டம். திருநெல்வேலி மாவட்டம், மயிலோடை கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கருப்பன்-வள்ளி என்கிற புதுமணத்தம்பதிகள்தான் கதையின் நாயகன் -நாயகி.அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த கடுமையான பஞ்சம்,வறட்சியால் ஒரு வேலை உணவுக்குக் கூட வழியில்லாத சூழ்நிலை.இவர்களின் வறுமையை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஒரு குரூப் இவர்களுக்கு நல்ல வேலையும், தங்குவதற்கு சொகுசான இடமும் அமைத்துத் தருகிறேன் என ஆசை காட்டி தேயிலைத் தோட்டத்தில் தள்ளிவிடுகின்றனர்.அங்கு ஏற்கனவே நிறையப் பேர் இவர்களைப் போல கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர்.அங்கு இவர்கள் படும் துன்பங்களும்,பாலியல் வன்முறைகளும், தினந்தோறும் அனுபவிக்கும் கொடுமைகளையும் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காண்பிக்கிறது இந்த நாவல்.

ஒருபுறம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அவர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் என அன்றைய ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவலங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார் இந்த நாவலில் ஆசிரியர்.

ஆங்கிலேய துரைகளுக்கு ஜால்ரா தூக்கும் கூட்டம்,காரியம் ஆவதற்காக தன் மனைவியையே வெள்ளைக் காரனுக்குக் கூட்டிக்கொடுக்கும் குமாஸ்தாக்கள், மிருகத்தை விட கொடிய குணம் படைத்த மேஸ்திரிகள், மர்ம நோய்க்கு கொத்து கொத்தாக மடிந்து விழும் தொழிலாளிகள்,சுகாதாரமற்ற குடியிருப்புகள்,போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் என நாம் கண்டிராத வேறொரு இருண்ட பக்கத்தை தைரியமாக  படம்பிடிக்க முனைந்திருக்கும் இயக்குனர் பாலாவை வகை தொகை இல்லாமல் பாராட்டலாம்.


உயிருக்குள் புதையுண்ட உணர்ச்சிகளை உடலிலிருந்து உருவி எடுக்கும் இயக்குனர் பாலாவின் மற்றுமொரு கதைக்களம்.

ரோட்டோர டீக்கடையில் சாவகாசமாக தினசரிகளைப் புரட்டிக்கொண்டே தேனீரை உறிஞ்சும் ஒவ்வொருவரும் இனி அதில் கலந்திருக்கும் ஒரு சொட்டு உதிர வாசனையும் உணர்வார்கள்.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றில் மிக இருண்ட பக்கத்தை இந்த நூல் அலசுகிறது.

நான் சென்னையில் வேலைப் பார்த்த போது அங்குள்ள மிகப்பெரிய ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, "இவரோட பொண்டாட்டிய அந்த காலத்தில வெள்ளைக்கார தொரை ஒருத்தரு வப்பாட்டியா வச்சிருந்தாராம். அதை வச்சிதான் இவ்வளவு நெலத்தையும் வாங்கி குமிச்சிருக்கிராறு.."  என நண்பன் ஒருவன் சொன்னபோது அதை மறுத்து கண்டித்தேன்.இந்தக்கதையை முழுவதுமாகப் படித்து முடித்த போது அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது.

இந்தக்கதையில் முக்கியமான ஹைலைட்...அவர்கள் எப்படி ஏஜெண்டுகளிடம் சிக்கி மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே.இந்தக் கொடுமையை தயவு செய்து படியுங்கள்..கடைசியில் ஒரு விஷயம் இருக்கிறது.

மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் அதிலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இவர்களின் குறி.மூணு வேலை சாப்பாடு ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியாக வீடு,இலவச மருத்துவ வசதி,மளிகைக் கடை அக்கவுண்டு,வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்லலாம் என இப்படி பசப்பு வார்த்தைகளை பேசி மயக்குகிறார்கள்.இதை உண்மையா என அவர்கள் யோசிக்கும் முன்பே ஒரு பெருந்தொகையை அவர்களின் கையில் அட்வான்சாகத் திணிக்கிறார்கள்.குடும்பத்திற்கு நாற்பது ரூபாயாம். இன்றைய காலக் கட்டத்திற்கு நாற்பதாயிரத்துக்கு சமம் போல..

பசி பட்டினியில் வாழும் குடும்பங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால் என்ன செய்வார்கள்..? இது நாள் வரை இருந்த கடன்களை அடைத்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செலவழிப்பார்கள்.பணம் செலவாகியவுடன், ஒருவேளை மனது மாறி வர மறுத்தால் கொடுத்த அட்வான்சை திருப்பி வசூலிக்க அதிகார பலத்தை உபயோகிப்பார்கள்.

அவர்களின் அடிமை வாழ்க்கை இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.இவர்கள் எதிர்பார்த்த வசிப்பிடமும், சம்பளமும் பெருத்த ஏமாற்றத்தையே கொடுக்கிறது.பாடி எனப்படும் அந்த குடியிருப்புப் பகுதிகள் மாட்டுக் கொட்டகையை விட கேவலமானதாக இருக்குமாம். ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சமையலறை உடைய தகரத்தில் வேயப்பட்ட அந்த குடிசையில் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டுமாம்.

இவர்களுக்கு வருடாந்திர சம்பளம்.அதற்கு ஒரு பின்புலம் இருக்கிறது.இந்த தேயிலைக் காடுகளின் உரிமையாளர்கள் ஐரோப்பாவில் பெரும் செல்வந்தர்கள்.தொழிலாளிகளுக்குக் மாதம்தோறும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை சேமித்து வருடக்கடைசியில் கொடுப்பதால் அதுவரை அந்தத் தொகையை வட்டிக்கு விட்டு அதில் ஒரு அமவுண்ட் பார்ப்பார்களாம்.

எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் வருடத்திற்கு அவர்களால் 70 ரூபாய்க்கு மேல சம்பாதிக்க முடியாது. அதில் மளிகைக் கடை அக்கவுண்டுக்கு 20 ரூபாய்,கம்பளி, துணிமணிகள்,இதர செலவுகளுக்கு அட்வான்ஸ் 20 ரூபாய் என கழித்துப் பார்த்தால் வருடக் கடைசியில் 20 ரூபாய் கூட தேறாது.மீதமிருக்கும் பணத்தை அப்படியே மேஸ்திரியிடம் ஆரம்பத்தில் பெற்ற அட்வான்சுக்காகக் கொடுப்பார்கள்.

ஆக..முதல் இரண்டு வருடத்திற்கு அவர்களால் சேமித்து எதுவுமே வீட்டிற்கு அனுப்ப முடியாது. மேஸ்திரிகளுக்கு இதில் கமிசன் கிடைக்கும்.அவர் அழைத்து வந்த தொழிலாளிகள் வருடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்களோ அதில்10 பெர்சென்ட் கமிசனாக நிர்வாகம் கொடுக்கும். கமிசன் குறைந்துவிடுமோ என்பதற்காக தொழிலாளிகளை அடித்து உதைத்து வேலை வாங்குவார்களாம். கடுமையானக் காய்ச்சல் அடிக்கும் காலகட்டங்களிலும் உடல்வருத்தி வேலை செய்யப் பணிக்கப்படுவார்களாம். அதற்காக இவர்களிடம் அடியாள் குரூப் ஓன்று இருக்கும். தப்பித்துப் ஓடும் சிலரை அடித்தே கொல்வார்களாம். அதுவும் மற்ற தொழிலாளிகளின் முன்னால். ஏனென்றால் அப்போதுதான் மற்றவர்களுக்கு தப்பிக்கும் எண்ணம் வராதாம்.

சரி..இப்போது மேலே சொன்ன விசயங்களில் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்குப் பதில் வெளிநாட்டு மோகத்தில் கிராமப்புறத்திலிருந்து வெளிநாடு செல்லும் அப்பாவிகளைப் போட்டுக் கொள்ளுங்கள். மேஸ்திரிக்குப் பதில் நம்மூர் எஜெண்டுகளைப் போடுங்கள்.மறுபடியும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

எந்தவித பட்டப்படிப்பும்,தொழில்நுட்பப் பின்புலமும் இல்லாமல்' நானும் வெளிநாட்டுக்குப் போறேன்' என கிளம்பிய பல பேருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.இதை நான் கண் கூடாக பார்த்தவன் என்கிற முறையில் இரண்டையும் ஒப்பிடுகிறேன்.

ஒரே ஒரு உண்மையை மட்டும் இங்கே சொல்கிறேன்.நான் வசிக்கும் சிங்கப்பூரில் நடப்பதை சொல்கிறேன். ஊரில் எல்லா ஏஜெண்டுகளும் நெஞ்சுருக பேசுவார்கள்.ஆனால் அவர்களின் இன்னொரு முகத்தை இங்கே காணலாம்.  தங்குமிடமும்,டிரான்ஸ்போர்ட்டும் இலவசம் என பசப்பு வார்த்தைகள் பேசுவார்கள்.அது நூறு சதவித உண்மை.ஆனால் அது எப்படியிருக்கும் என்பதுதான் இங்கே யோசிக்கவேண்டிய விஷயம்.Shipyard & Construction துறையில் வேலை பார்ப்பவர்களை அழைத்து செல்லும் விதம் கொடுமையானது.மேலே மட்டும் மூடப்பட்ட ஒரு டெம்போவேனின் பின்புறம் ஆட்டு மந்தைகளை அடைப்பதுபோல் அடைத்துக் கூட்டிச் செல்வார்கள்.இருக்கை எல்லாம் கிடையாது.அப்படியே சம்மணமிட்டு உட்கார வேண்டியதுதான்.அதிலும் மழைக் காலங்களில் கடும் சாரலில் அவர்கள் நனைந்து சாக்கு பைகளை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு பயணித்ததைப் பல முறைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன்.  என் நண்பன் ஒருவனுக்கு இலவச தங்குமிடம் என்று சொல்லி கண்டைனரில் தங்க சொல்லியிருக்கிறார்கள். ஏஜென்டிடம் கேட்டதற்கு ' உனக்கு என்ன ஸ்விம்மிங் பூலோடு ஏசி வச்ச அபார்ட்மென்ட்லயா வீடு குடுப்பாங்க'-னு கடுப்படிச்சிருக்கான்.



சரி..இப்போ பரதேசி படத்துக்கு வருவோம்.சில நாட்களுக்கு முன் பரதேசி பட சம்மந்தமாக ஒரு காணொளி (TEASER) வெளியாகியது.அதில் இயக்குனர் பாலா பலபேரை கண்முன் தெரியாமல் அடிப்பதாக காட்சிகள் உள்ளது.இதற்காக பல இணையதள பெருசுகள் கடுமையான கண்டனத்தை முன் வைத்திருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ இது காட்சிக்காக எடுக்கப்பட்ட 'ரிகர்சல்' என்று தான் தோனுகிறது. எரியும் பனிக்காடு நாவலை முழுமையாகப் படித்தவர்களுக்கு அந்த காட்சிப் படிமங்களின் அர்த்தம் தெளிவாகப் புரியும். அங்குள்ள மேஸ்திரிகளும்,வெள்ளைக்காரத் துரைகளுக்கு சொம்பு தூக்கும் சிலரும் தொழிலாளிகளை அடித்துத் துன்புறுத்தும் கொடுமை அந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது. ஆனால் திரையில் இதைவிட இன்னும் கொடுமையான சம்பவங்களை பாலா காட்சிப்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன்.....   

நிச்சயமாக இப்படியொரு கதைத்தளத்தையும் கதைக்களத்தையும் கையாளும் திறன் தமிழ் சினிமாவில் பாலாவைத் தவிர வேறு யாருக்கு உண்டு...?

வணக்கங்களுடன்....
மணிமாறன்.


------------------------------------------------------((((((((((((((((((((()))))))))))))))))))))))--------------------------------

6 comments:

  1. முதல் முறையாக படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது

    ReplyDelete
  2. படம் வரட்டும் பார்க்கலாம்...

    நாவலைப்பற்றி சொன்னதற்கு நன்றி...

    பரதேசி பட காணொளி - விளம்பரம் தான்...

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி..

      Delete