Thursday 20 November 2014

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவது எப்படி..?ரே நாளில் உலக ஃபேமஸ் ஆவது எப்படி..? ரொம்ப சிம்பிளான விசயம்ங்க..

நம் சமூகத்தின் ஏதோ ஒரு சந்து பொந்தில் வாழும் விளிம்பு நிலை மனிதர் நீங்கள். யாருக்கும் உங்களைத் தெரியாது. தெரு நாய் கூட உங்களை மதிக்காது என வைத்துக்கொள்வோம்

ஆனால் ஒரே நாளில் இந்த உலகமே உங்களைப்பற்றி பேசும். சிறார்கள், மாணவர்கள் எல்லாம் "சார்" என்று மரியாதையோடும், பெரியவர்கள் எல்லாம் "தம்பி" என்று பாசத்துடனும் அழைப்பார்கள். மாணவ சமுதாயமே உங்கள் பின்னால் திரளும். ஏழைகளுக்கு அடுத்த எம்ஜியார் நீங்கள் தான். அரசு ஊழியர்கள் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுவார்கள். ஊடகங்கள்,தொலைக்காட்சி எல்லாம் உங்களைப் பற்றியே பேசும். அரசியல்வாதிகளுக்கும்,  கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் நீங்க சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள்.

இப்படியெல்லாம் நடக்கணும்னா ஏதாவது புரட்சி செய்யணும் அல்லது போராட்டம் நடத்தனும் அல்லது தீவிரவாதியாக மாறணும் அப்படித்தானே... என நீங்கள் கேட்க வருவது புரிகிறது. அதுதான் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்னே ஒன்னுதான்... வாயால வடை சுடனும்..!

தெளிவாகச் சொல்கிறேன். அக்கம் பக்கத்தில் ஏதேனும் அநீதிகள் நடப்பதுபோல் உங்கள் ஞானக் கண்களுக்குத் தெரிந்தால் உடனே அதை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக பதியுங்கள். அல்லது சமூகத்தை திருத்துகிறேன் என்று ஏதாவது நாலு ஐடியா கொடுங்கள். உடனே உங்கள் பெயர் இந்தியா முழுவதும் பரவும்.

இந்த ரோடு ஏன் இப்படி குண்டும் குழியா இருக்கு தெரியுமா...? ரோடு போடுற கான்ட்ராக்டர் சரியில்லை. இந்த பைப்பில் ஏன் தண்ணீர் வரவில்லை தெரியுமா..? தண்ணீர் டேங் பைப்பை இன்னும் யாரும் திறக்கல.. தெருவிளக்கு ஏன் எரியமாட்டேங்குது தெரியுமா..லைட் பியூஸாகி விட்டது. இந்த பஸ் ஏன் ஆக்சிடெண்ட் ஆகுது தெரியுமா..?  டிரைவர் சரியில்லை. அதனால் தினமும் டியூட்டிக்கு செல்லும்முன் ஒரு மருத்துவரை வைத்து ஓட்டுனர்களை சோதிக்கணும். இப்படிப்பட்ட சமூக விழிப்புணர்வு ஐடியாக்களை, நாலு பேரைக் கூப்பிட்டு தெரு முக்குல கூட்டம் போட்டு சொல்லுங்க. அப்புறம் பாருங்கள் .

எல்லோரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி,'இப்படி ஒரு அறிவாளியைத்தான் நாங்க தேடிகிட்டு இருந்தோம். இவ்வளவு நாளா நீ எங்க இருந்த ராசா...' என்று உங்களை ஆரத்தழுவிக் கொள்வார்கள். 'இம்பூட்டு  நாளா மூடிக்கிடந்த எங்கள் அறிவுக்கண்ணை சாவி இல்லாமலே திறந்து விட்டியே தம்பீ...'  என்று பெக்கர் முதல் கலெக்டர் வரை உங்கள் காலில் விழுவார்கள். 'இந்தத் தம்பி சொன்னது என்னிக்கு நடக்குதோ அன்னிக்குத் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைச்ச மாதிரி..'  என்று சொச்ச நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் தியாகிகள் எல்லாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

இவ்வளவு ஏன் நீங்கள் பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது.

என்ன...சொந்த மானிட்டராக இருந்தாலும் பரவாயில்லை, பொளிச்னு துப்பிடலாம்னு தோணுமே. எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஜெய்ஹிந்த்-2 படத்தை பார்த்தபோது...! .


ஒரு நாய் அனாதையா செத்துக்கிடக்கிறத பார்த்தவுடனையே அர்ஜுனுக்கு ஜென்டில்மேன், முதல்வன் படம் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே "மனுசனா பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்" னு சொல்லிட்டு கிளம்புவாரு. ஏதோ புரட்சி பண்ணப்போறாரு என்று பார்த்தால் இணையத்துல எதைஎதையோ தேடுவாரு. முடிவில ஹீரோயின் சைலண்டா வந்து 'இது மட்டும் நடந்திருச்சுன்னா இந்தியா வல்லரசு ஆகிடும்' என்பாங்க.

ரமணா பாணியில ஏதோ நடக்கப் போகுதுன்னு சீட் நுனி வரை நகர்ந்து  சீரியஸா கவனிச்சா, பிரஸ்ஸை கூப்பிட்டு, "தனியார் பள்ளிகளை எல்லாம் தேசியமயமாக்கனும்" னு வடை சுடுவாரு. அதற்கடுத்து நடக்கும் பாருங்க கொடுமை....! அவர் சொன்னது இந்தியா பூரா பரவி எல்லோரும் அபிமன்யு சொன்னது மட்டும் நடந்துட்டா இந்தியா அப்படியாகிடும்..இப்படியாகிடும்னு பில்டப் கொடுப்பாணுக.. இவ்வளவு நாளா எல்லோரும் அடிமுட்டாளா இருந்திருக்கோம் போல. அட இதைக்கூட மன்னித்து விடலாம். ஜெயில்ல இரண்டு கைதிகள்  அர்ஜுனைப் பார்த்து,"டிவியில பாத்தேன் தலைவா. சோக்கா பேசின..","தம்பி நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி.."என்று சொல்லும்போது வரும் பாருங்க ஒரு கோபம்.. தட் அவரே குண்டு வைப்பாராம் அவரே எடுப்பாராம் மொமென்ட்..!

ஏம்பா இந்தியாவில உள்ளவங்க எல்லாம் இந்த அளவுக்குக் கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா.. தினமும் டிவியில விவாதம் என்கிற பெயரில் ஆளுக்கொரு ஐடியா சொல்றாங்க.. அவர்கள் எல்லாம் உலக பேமஸ் ஆகிடுறாங்களா என்ன..? அப்படிப் பார்த்தா நீயா நானா கோபியும் மனுஷ்யப் புத்திரனும் இந்நேரம் ஐநா சபை வரை போயிருக்க மாட்டாங்களா.. என்ன லூசுத்தனமான கான்செப்ட் அது..?  டிராபிக் ராமசாமிக்கே ஃபைனப் போட்டு ஆஃப் பன்ற ஊருய்யா இது.

எப்பவோ போட்ட டீ -யை இப்போ வந்து எதுக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்துறேன்னு கேக்கிறீங்களா.. ?  இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். "ஜெய்ஹிந்த்-2 படத்தை பிரதமருக்கு போட்டுக் காண்பிப்பேன்.." என்று அண்ணாத்தே அர்ஜூன் பேட்டி  கொடுத்திருந்தார்.  அதனாலதான் இவ்வளவு ஆத்த வேண்டியிருக்கு.

பாவம் அவரே பேக்கேஜ் டூர்ல ஒவ்வொரு நாடா சுத்திப் பாக்கப் போயிருக்கார். அதிலும் கேமராவைத் தேடித்தேடி போஸ் கொடுத்தே டயர்டா போயி வருவாரு. வந்த உடனே படத்தை போட்டு காண்பித்து ஏன்யா அவரை இன்னும் டயர்டா ஆக்கணும்..?


ஜெய்ஹிந்த் வெளிவந்த 1994 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்ப எந்தப் படமும் சிக்காததால் வேறு வழியில்லாமல் அப்படம் தேர்வானது. வித்தியாசமான கவுண்டமணி-செந்தில் காமெடி டிராக், ரகளையான(ஹி..ஹி..) ரஞ்சிதா என்கிற கமர்சியல் கலவைகள் நிறைந்திருந்தாலும் patriotism என்கிற விஷயம் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தது பாராட்டும்படி இருந்தது . எப்படா இது மண்டையப் போடும் என்று எரிச்சல் ஏற்படுத்தும் மனோரமாவின் போர்சனைத் தவிர படம் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஜெய்ஹிந்த்-2 வில் கான்செப்ட்டும் காமெடியும் மொக்கை, ஹீரோயின் சப்பை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சுவாரஸ்யமாகப் போகவேண்டிய திரைக்கதையை இப்படி தலைகீழாகத் திருப்பி  சொதப்பியிருக்கிறார்களே..!

திரைக்கதையைப் பற்றி அவ்வளவு நுட்பமாக எனக்குத் தெரியாது. இணையத்தில் உள்ள திரைக்கதைப் புலிகள் யாராவது சொல்லட்டும். இந்தப் படத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடக்கிறது. அதைப் பின்னித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்

1. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பீஸ் கட்ட முடியாமல் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொள்கிறது.

2. அதனால் பாதிக்கப்பட்ட அர்ஜுன் பிரஸ்மீட் வைத்து ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறார். நாடு முழுதும் அது காட்டுத்தீயாகப்(!) பரவுகிறது.

3. நீதி கிடைக்காததால் வெளிநாட்டில் பயிலும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளைக் கடத்துகிறார்.

இம்மூன்று சம்பவங்களும் இதே வரிசைப்படி நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படியே ரிவர்ஸில் அமைத்திருந்தால்...!

1. வெளிநாட்டில் படிக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளை அர்ஜுன் கடத்துகிறார். அது இந்தியா முழுமையும் பரபரப்பான செய்தியாகிறது. யார் கடத்தினார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்று மீடியாக்கள் அலசுகிறது.

2.கடத்திய அர்ஜுன் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இந்தியாவே அந்த பிரஸ்மீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

3. எதற்காகக் கடத்தினார் என்று சொல்வதற்கு முன், ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொள்ளும் பிளாஸ்பேக்கை அவிழ்க்கிறார். அதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அதன்பிறகு அந்த தேசியமயமாக்கல், இன்னபிற சமாச்சாரங்களை எல்லாம் சொல்கிறார்.

அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுபோல் காண்பித்தால், சொல்ல வந்த விஷயம் இன்னும் வீரியமாக இருக்கும், படமும் விறுவிறுப்பாக இருக்கும். ரமணா படத்தின் திரைக்கதையும் கிட்டத்தட்ட அப்படிப் பட்டதுதானே..


ஒரு ஏழ்மையான குடும்பம். அவர்கள் படிக்கும் காலத்தில் வசதிகள் இல்லாததால் படிப்பறிவு இல்லாமல் கூலிவேலை செய்துவருகின்றனர் . அதனால் தன் ஒரே மகளை எப்படியாவது கஷ்டப்பட்டு தனியார் பள்ளியில் படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பவேண்டும் என்று அக்குழந்தையின் அப்பா ஆசைப்படுகிறார். அதற்காக கண்டவன் காலில் விழுந்து (LKG அட்மிசனுக்காக!) பணம் புரட்டுகிறார். பணப் பற்றாக்குறையால் தன்  கிட்னியையே விற்கிறார்.அப்படியும் பணம் பற்றாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். (அந்தக் குழந்தை பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைத்தால்தான் படிப்பேன் என அடம்பிடித்ததா என்ன..அதை எதுக்குய்யா கொல்லனும்..?.) ஜென்டில்மேன் படத்தின் பிளாஸ்பேக் ஞாபகம் வருது இல்லையா..? 

இந்தப் படத்தில் அர்ஜுன் சொல்லும் அந்த 'கான்செப்ட்' ,  நடைமுறை சாத்தியமில்லை. அதனால் அதை விட்டுவிடுவோம். ஆனால் அந்த சோக சம்பவம் மூலம் அர்ஜுன் என்ன சொல்ல வருகிறார்..?. தனியார் பள்ளியில்தான் நல்ல கல்வி கிடைக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளியில் சேர்த்தால்தான் உயர்ந்த உத்தியோகத்துக்கு போக முடியும். அதற்காக கிட்னியைக் கூட விற்கலாம்.

ஒருவேளை, அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்...? பிரைவேட் ஸ்கூல் LKG  சீட்டுக்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது என்றால் நாமதான் அறிவுகெட்ட தனமா நம்ம பிள்ளையை கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டோம் போல என நினைக்கத் தோன்றாதா ?

இப்படி ஒரு மொக்கை கான்செப்ட் உள்ள படத்தைப் போட்டுக் காட்டுறேன் என்று  பிரதமர் ஆபிஸ் பக்கம் போனால் செக்யூரிட்டியே காரித்துப்பிடுவான்.7 comments:

 1. சரியாக வறுத்து எடுத்து விட்டீர்கள். மடத்தனமான கான்செப்ட் என்பதில் சந்தேகம் இல்லை. அதெல்லாம் இருக்கட்டும் ஒழுங்காக வருமான வரி கட்டி இருக்கிறாரா என்று சொல்லட்டும். பின்னர் தேசத்தை திருத்த செல்லட்டும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டி.என்.முரளிதரன்

   Delete
 2. பல பிளாஸ்"பேக்குகள்" ஞாபகம் வருகிறது...!

  ReplyDelete
 3. இதுக்குத்தான் நான் படமெல்லாம் பார்க்கறது இல்லே! இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிப்பரப்ப வேண்டிய உன்னதமான படைப்புன்னு ஒரே வார்த்தையிலே முடிச்சிருக்கலாமே பாஸ்! இந்த படத்துக்கு இவ்ளோ பெரிய விமர்சனம் வேஸ்ட்!

  ReplyDelete
 4. என்ன......................(ARJUN)மனிதர்,இளமையை மெயிண்டைன் பண்ணி,....................பிகர்.....ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 5. ivalavu peasura neenga..oru MOVIE eadukalame... unga logic la eppadi nu therinchudum la...

  ReplyDelete