வருத்தபடாத வாலிபர் சங்கம் என்ற ஜனரஞ்சக வெற்றிப் படத்திற்குப் பிறகு ஒரு வருட இடைவெளியில் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்திருக்கிறது காக்கிச்சட்டை. ஆச்சர்யம் என்னவென்றால், நள்ளிரவுக்காட்சி என்றபோதிலும் ஆண்களைவிட பெண்கள் தலைகளே அதிகமாகத் தென்பட்டது. இன்னொரு பாக்யராஜா அல்லது ராமராஜனா அல்லது இளைய தளபதி விஜய்யா என்பதை இனி அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் தீர்மானிக்கும்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான மாப்பிள்ளை படத்தை ரீமேக் பண்ணுகிறேன் என்று கொத்து பரோட்டா போட்டு 'மாப்பிள்ளை' என்கிற சூப்பர் டைட்டிலையே சப்பையாக்கிய தனுஷ், இம்முறை கமலின் சூப்பர் ஹிட் படமான காக்கிச் சட்டை டைட்டிலை பதம் பார்க்க சிவகார்த்திகேயனை களமிறக்கியிருக்கிறார்.
சரி.. இந்தக் காக்கிச்சட்டை கஞ்சிப் போட்டு துவைத்த காட்டன் சட்டையா...அல்லது கசங்கிய அழுக்குச் சட்டையா என பார்ப்போம்.
என்னை அறிந்தால் பட ரிலீஸ் சமயத்தில் காக்கிச்சட்டை படத்தின் கதையும், என்னை அறிந்தால் படத்தின் கதையும் ஒன்றுதான் என்பது போன்ற வதந்தி பரவியது. படம் வெளியான பிறகுதான் இரண்டும் வெவ்வேறு கதைகள் என உறுதியாயிற்று. ஆனால் இரண்டு படங்களின் கதைக்களம் ஒன்றுதான். இரண்டுமே சட்டத்துக்கு விரோதமாக அண்டர் கவர் தாதாவின் கண்காணிப்பில் நடக்கும் ஆர்கன் திருட்டைப் பற்றியது. ஆனால் சொல்லிய விதம் வேறு. என்னை அறிந்தால் படத்தில் சீரியஸாக சொன்ன கதையை இதில் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
குற்றப்பிரிவில் வேலைபார்க்கும் சிவகார்த்திகேயன் ஒரு கண்ணியமான,நேர்மையான போலிஸ்காரர். அவரது நேர்மைக்கு சவாலாக ஏதாவது கேஸ் பிடித்துவா என்கிறார் இன்ஸ்பெக்டர் பிரபு. மனித உடலுறுப்புகளை சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்தி விற்கும் ஒரு கும்பலைப் பற்றிய தகவல் அவருக்குக் கிடைக்கிறது. அக்கடத்தல் கும்பலை தகுந்த ஆதாரங்களோடு பிடிக்க புறப்படுகிறது சிவகார்த்திகேயன் டீம். அதனால் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், இழப்புகள் எல்லாவற்றையும் சமாளித்து இறுதியில் அக்கும்பலை எப்படி பிடித்தார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
என்னை அறிந்தால் படத்தில் ஆர்கன் திருட்டை செம சீரியஸாக காண்பித்திருப்பார்கள். ஒரு சீரியஸான மேட்டரை கொஞ்சம் சீரியஸாக சொன்னால்தானே அதிலுள்ள சீரியஸ்னஸ் நமக்கு விளங்கும். அந்த சீரியஸ்னஸ் தானே படத்தின் திரைக்கதையை பரபரவென இழுத்துச் செல்லும். ஆனால் காக்கிச்சட்டையில் சீரியஸாக நகர வேண்டிய நிறைய காட்சிகள் காமெடியாகவும், காமெடியாக வந்திருக்க வேண்டிய காட்சிகள் சீரியஸாகவும் போனதுதான் படத்தின் மிகப்பெரிய சறுக்கல்.
சிவா அறிமுகமாகும் ஆரம்பக்காட்சி 'துரைசிங்கம்' அளவுக்கு பில்டப் கொடுக்கப்படும்போது 'யூ டு சிவா' என கேட்கத் தோன்றியது. பிறகு அது வெறும் கனவுதான் எனத் தெரியவருகிற பொழுது இது அக்மார்க் சிவகார்த்திகேயன் படம் என்கிற பரவசம் நம்மை ஆரம்பத்திலேயே ஆட்கொள்கிறது. பிறகு அதே பில்டப்பை மனோபாலாவை வைத்து செய்கிறார்கள். சிவா நன்றாக ஆடுகிறார். ஒரு பாடல்காட்சியில் ஸ்ரீ திவ்யாவுடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்சன் ஹீரோவாகிறார். இதையெல்லாம் தாண்டி எதோ ஒன்று அவரிடம் குறைகிற மாதிரி தெரிகிறது.
ஆரம்பக்காட்சிகளில், போலீசாக இருந்தாலும் கிரைம் பிராஞ்ச் என்பதால் மப்டியில் வெவ்வேறு கெட்டப்பில் வேண்டாவெறுப்பாக சிவா வலம்வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புப் பட்டாசு. ஆனால் அதன்பிறகு மனோபாலா , மயில்சாமி ,சிரிச்சா போச்சி சகாக்களுடன் அவர் அடிக்கும் லூட்டி எல்லாமே காட்சிகளை நகர்த்த உதவியிருக்கிறதே தவிர ஒரு புன்னகையைக் கூட வரவழைக்கவில்லை.
ஸ்ரீதிவ்யா பொம்மைப் போல வருகிறார். நடிப்பிலும் பொம்மையாகத்தான் இருக்கிறார். குளோசப் காட்சிகளில் மட்டும் ஒரு கலைரசனைமிக்க சிற்பி செதுக்கிய சிலை போல அவ்வளவு அழகு...! ஆனால் இதையே வைத்து எவ்வளவு காலம் ஓட்டிவிட முடியும்..? வ.வா.சங்கம் படத்தில் ஓரளவாவது நடித்திருப்பார். இந்தப்படத்தில் முகத்தில் உணர்ச்சியும் இல்லை. நடிப்பில் முதிர்ச்சியும் இல்லை. கனவுக்கன்னியாக வருவதற்கான 'அமைப்பும்' அவ்வளவாக இல்லையென்பதால் 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்' என்பதை மட்டும் வைத்து தமிழ் சினிமாவில் நீண்ட காலம் வண்டி ஓட்டிவிட முடியாது. அட்லீஸ்ட் கொஞ்சம் உணர்ச்சியோடு நடிங்க அம்மணி..
படத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் இமான் அண்ணாச்சியின் காமெடி. வடிவேல் விட்டுச் சென்ற வெற்றிடம் இன்னும் அப்படியே இருக்கிறது என்றும் முட்டிப் போட்டாலும் அந்த இடத்தை சூரியால் நெருங்க முடியாது என்றும் முன்பு எழுதியிருந்தேன். ஆனால் அந்த இடத்தை இமான் அண்ணாச்சி நிரப்பி விடுவரோ எனத் தோன்றுகிறது. நிறைய இடங்களில் சிரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் அதற்கு இவருதாம்ல காரணம்..!. முன்பெல்லாம் திருநெல்வேலி பாஷையை செய்தி வாசிப்பது போல பேசுவார். அந்த ஸ்லாங் தற்போது அவருக்கு சுதிசுத்தமாக வருகிறது.
வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர். சண்டமாருதம் போல வசனங்கள் உறுத்தவில்லை. திவ்யாவின் வீட்டில் சிவாவின் அம்மா பெண் கேட்கும் காட்சி உட்பட சில இடங்களில் ஜொலிக்கிறார் பி.கே.பி.
படத்தின் முக்கியமான நெருடல் இசை. வெஸ்டர்ன் இசையை மட்டும் வைத்து ஒப்பேற்றிவிடலாம் என நினைக்கிறார் அனிருத். பின்னணி இசை இரைச்சலாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்களை அனிருத்தே பாடியிருக்கிறார். சிவாவுடன் இணைந்து பாடும் ' கொக்கி போட்டுத்தான் ' பாடல் மட்டும் பரவாயில்லை ரகம். இந்தப்படத்திற்கு போட்ட டியூனைத்தான் கத்திக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார் அனிருத் என்று எங்கேயோ படித்த ஞாபகம். அது உண்மைதான் போலும்.
இது ஒரு ஜனரஞ்சகமான படமாக இருந்தால் பின்பாதியில் போடும் மொக்கையை சகித்துக் கொண்டு போய் விடலாம். ஆனால் மிகமிக சென்சிடிவான ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக் கொண்டு அதைத் தற்குறித்தனமாக காட்சிப்படுத்தியிருப்பதால் இதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டாமல் போய்விட முடியாது.
முதலில் ஆர்கன் திருட்டைப் பற்றி சொல்லும்போது சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. எப்படி திருடுகிறார்கள், யாரையெல்லாம் தேர்ந்தெடுக்கிறார்கள், எங்கே விற்கிறார்கள் என்கிற 'டீடெயிலிங்' எந்தப் படத்திலும் சொல்லாதது. சட்டத்துக்கு புறம்பாக செய்யும் இந்தத் தொழிலில் ரகசியங்கள் எந்த அளவுக்கு பாதுக்கப்பட வேண்டியது ?. இதை நடத்தும் வில்லன் வெளியுலகத்துக்கு வரவே மாட்டாராம். இன்டர்நேசனல் அளவில் வியாபாரம் செய்வாராம். செய்யட்டும். ஆனால் அவ்வளவு ரகசியமாக செய்யப்படும் இந்தத் தொழிலில், அதன் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் சர்வர் ரூமில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியுமா என்ன..?. அப்படி நுழைந்து அதிலுள்ள தகவல்கள் சுலபமாக எடுக்க முடிகிறதே அது எப்படி..?. பாஸ்வேர்டு கூடவா இல்லாமல் இருக்கும்...?. அவர்கள் ஆர்கன் திருட்டுதான் செய்கிறார்கள் என்பதை ஒரு சாதாரண கான்ஸ்டபிலும் ஒரு நர்சும் சேர்ந்து கண்டுபிடிப்பது செம காமெடி.
சரி... நர்சாக வேலைப் பார்க்கும் ஒரு பெண்ணுக்கு சர்வர் ரூம் எங்கிருக்கு, எந்த சர்வரில் அதன் விவரங்கள் இருக்கு, அதை எப்படி திறப்பது ,அதிலிருந்து தகவல்களை எப்படி பெறுவது என்றெல்லாம் கூடவா தெரியும்?. இவ்வளவு விவரம் தெரிந்தவருக்கு அங்கே கேமரா இருக்கும் விஷயம் கூடவா தெரியாது?. ஆர்கன் திருட்டின் நெட்வொர்க்கை இவர்கள் கண்டுபிடிக்கும் விதம் சில்லறைத்தனமாக இருக்கிறது. சஸ்பென்ஸ், திருப்பம் எதுவுமே இல்லாமல் இரண்டாம் பாதி நகர்வதால் துள்ளிக் குதித்து ஓடவேண்டிய திரைக்கதை தவழ்ந்து சென்று கடைசியில் படுத்தே விடுகிறது.
வில்லனாக வரும் விஜய்ராஸ் உடல்மொழியிலும் தோற்றத்திலும் அப்படியே ரகுவரனை ஞாபகப்படுத்து- கிறார். தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்து உள்ளங்கையில் உலகம் சுழலும் இந்த யுகத்தில், இவர் கையில் அவளோ பெரிய லேப்டாப்பை எதற்குக் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இவர் வரும் எல்லா காட்சிகளிலும் அந்த ஆப்பிள் லேப்டாப்பும் கூடவே வருகிறது. ஆரம்பத்தில் கொடூர தாதாவாக அறியப் பட்டவர் கடைசியில் சில்லறைத்தனமாக சிவாவுடன் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார். அதெல்லாம் சரி... ஊரையே பயமுறுத்தும் ஒரு ரவுடி, ஹீரோவை சமாளிப்பதற்காகவும், தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ வாக நிற்பது போன்ற சீனை இன்னும் எத்தனைக் காலத்துக்கு தமிழ் சினிமாவில் காட்டப் போறீங்க?. இந்தப் புளிச்சிப் போன கிளிசே எல்லாம் கொஞ்சம் மாத்துங்கப்பா..
தன் ஆதரவாளன் ஒருத்தன் வேறு கட்சிக்கு மாறுவதற்கு பேச்சு வார்த்தை நடத்துகிறான் என தெரிந்தவுடன் அவனைப் போட்டுத்தள்ளுகிறார் வில்லன். தன் ரகசியங்களை போலீசிடம் போட்டுக் கொடுக்கப்போகும் தன் அப்பாவையே குண்டு வைத்து கொல்கிறார் அதே வில்லன். ஆனால் சர்வர் ரூமில் போய் எல்லா விவரங்களையும் திருடிய திவ்யாவையும் அதை வைத்து காய் நகர்த்தும் சிவாவையும் மட்டும் கொல்லாமல் பேச்சவார்த்தை நடத்துவாராம். என்னய்யா கதை விடுறீங்க..
வில்லனை சிக்க வைக்க அவர் லேப்டாப்பில் இருக்கும் தகவல் சிவாவுக்கு வேண்டும். அவளோப் பெரிய ரவுடியின் வீட்டுக்குள் எல்லா பாதுகாப்பையும் மீறி சிரிச்சா போச்சி குழுவுடன் உள்ளே போகிறார். சரி சின்னப் பசங்க.லாஜிக் பார்க்க வேண்டாம்,விட்டுடலாம். உள்ளே போனவுடன் லேப்டாப்பை கண்டுபிடிக்கிறார். லேப்டாப் தான் கிடைச்சாச்சே. அதை அப்படியே எடுத்துட்டு போகவேண்டியது தானே.. அதுக்குள்ளே சிடியை போட்டு காப்பி பண்ணுவாங்களாம். அது முடியும் முன்னே வில்லன் வந்து விடுவானாம். அதை வைத்து நமக்கு டென்சன் ஏத்துறாங்கலாமாம். முடியில..
மனோபாலாவை கவிழ்ப்பதற்கு சிவா ஒரு கதை விடுவார். முடியலடா சாமி. அதையெல்லாம் காமெடிக் காட்சிகள் என்று எப்படி முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை.
உடலுறுப்பு திருட்டு என்பதே சட்டத்துக்கு புறம்பாக செய்வது. அதைச் செய்வது ஒரு அண்டர் வேர்டு தாதா. அவன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கடத்தி உடல்பாகங்களை எடுத்துக்கொண்டு அவர்களைக் கொன்று விடலாம். என்னை அறிந்தால் படத்தில் சொன்னது போல ஒரு குறிப்பிட்ட ரத்த வகையை சேர்ந்தவர்களின் ஆர்கன் வேண்டுமென்றால் மட்டுமே ரிஸ்க் எடுத்து அவர்களைக் கடத்த வேண்டும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி எதையும் சொல்லவில்லை. அப்படியிருக்க எதற்காக இவர்களே ஆக்சிடெண்ட்டை செட்டப் செய்து, இவர்களே ஆம்புலன்சை வைத்துக் கடத்தி, அவர்களுக்கு 'CO ' கொடுத்து, பிறகு எல்லா ஃபார்மாலிட்டியும் செய்து... எதுக்கு இவ்வளவு ரிஸ்க்..? . அப்படித்தான் காட்டுவோம் என்றால் அதற்குப் பின்னால் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள ஒருவர் இருக்கிறார் என காட்டியிருக்கவேண்டும்.
இப்படி எல்லாம் யோசிச்சி படம் பார்த்தால் எதையும் ரசிக்க முடியாதுதான். ஜாலியான படம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் சென்சிடிவான ஒரு விஷயத்தை காட்சிப்படுத்தும்போது அதை நேர்த்தியாக சொன்னால்தானே கடைநிலை ரசிகனையும் கவர முடியும்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களினால் அவர் மீது உருவாகியிருக்கும் இமேஜ் இந்தப் படத்தை எப்படியாவது கரை சேர்த்துவிடும். தவிரவும், விரசமான காட்சிகளோ வசனங்களோ இல்லாதது தாய்மார்கள் மத்தியில் அவருக்கிருக்கும் செல்வாக்கை(!) அதிகரிக்கவே செய்யும். இரண்டாம் பாதி திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி, தர்க்க பிழைகள் எல்லாம் தெரியாத அளவுக்கு செய்திருந்தால் 'என்னை அறிந்தால்' படத்தையே ஓவர் டேக் பண்ணியிருக்கும். நம்ம சிவகார்த்திகேயன்தானே.. படம் எப்படியும் ஓடிவிடும் என்கிற எண்ணத்தில் இதுபோல இன்னும் இரண்டு படங்கள் எடுங்க.. அப்புறம் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில அவரை லென்ஸ் வைத்துதான் தேடவேண்டியிருக்கும்.
மொத்தமாக பார்த்தால் முன்பாதி சுமார். பின்பாதி படு சுமார்.