Saturday 14 April 2012

வூடு கட்டி அடி.....(சிறுகதை)


"ம்ப்பா..இந்த வூட்ட, டவுனுக்கு பக்கத்தில வேற எங்கயாவது கட்டியிருக்கலாமே.." மரத்துப் போன நாக்கின் செல்களை  மீண்டும் உயிர்பித்த தன் அம்மாவின் கைப்பக்குவத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த மகேசிடம், கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார்,அப்பா கந்தசாமி.

"இல்ல...டவுனுல இருக்கிற வூட்டோட வெல எல்லாம் சர சர யேறிகிட்டுயிருக்கு. இந்த கிராமத்துல இம்புட்டு காசபோட்டு....." கட்டிலின் இரு புறங்களிலும்  கைகளை ஊன்றிக்கொண்டு விட்டத்தைப் பார்த்த படி மீண்டும் முணுமுணுத்தார். 
       
"சங்கர் வீட்டுல ஏதாவது சொன்னாங்கலப்பா?...சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அப்பாவிடம் வினவினான் மகேஷ்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல...எனக்கு இந்தக் கிராமத்தில போயி வூடு கட்டுறது  அவ்வளவு சரியாப் படல..." 

"அப்ப...கட்டுன வீட்ட இடிச்சிரலாமாப்பா?" மகேசின் வாயிலிருந்து விழுந்த இந்த வார்த்தையில் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது.

"புள்ள சாப்பிடறப்பத்தான் இதெல்லாம் கேக்கணுமா..நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சி..அவன் எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.நீ சாப்புடுயா.." மகனுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு பேசினாள் அம்மா பாக்கியவதி.

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்..எல்லாம் அவன் எதிர் காலத்துக்காகத் தான் பேசுறேன்"

"நாலு எழுத்து படிச்சவன்.அவனுக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு? எல்லாம் காலையில பேசிக்கிலாம் போங்க"

"என் பேச்சுக்கு இங்க எந்த காலத்துல மரியாத இருந்திருக்கு .." உதறிய துண்டை தோளில் போட்டவாறு வெளிநடப்பு செய்தார் கந்தசாமி.

"எல்லாம் அந்த சங்கரப்பா செய்யிற வேல தம்பி.டீக்கடைக்கு எப்பப் போனாலும் இதப்பத்தி தான் பேசுறாராம்" கந்தசாமியின் கோபத்துக்கு விளக்கம் சொன்னாள் பாக்கியவதி.  

மகேஷ்-சங்கர் இருவரும் பள்ளியிலிருந்தே நண்பர்கள்.மகேஷ் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தான் சங்கர் வீடு உள்ளது.இரண்டு குடும்பமும் நடுத்தர வர்க்கம்தான்.என்றாலும் இருவரையும் பாலிடெக்னிக் வரை படிக்க வைத்திருந்தனர்.இப்போது மகேஷும் சங்கரும் இருப்பது வெளிநாட்டில். அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்.
    
          இரண்டு குடும்பத்திற்கும் முகநக நட்பு இருந்தாலும் உள்ளுக்குள் பொறாமைப் பூசின ஒரு போட்டி இருந்து கொண்டு தான் வருகிறது.அது பரம்பரைப் பகையல்ல.ஒரே மட்டத்திலுள்ள நெருக்கமான இரண்டு குடும்பங்களில் ஓன்று தன் நிலையை சற்று உயர்த்திக் கொண்டால்,மற்றக் குடும்பத்திற்கு வரும்  சாதாரண ஈகோபோலியா நோய்.இருவரது வீட்டில் யார் எந்தப் பொருள் புதிதாக வாங்கினாலும் அடுத்த கணமே மற்றொரு வீட்டில் மாங்கல்யத்தை அடகு வைத்தாவது அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும் என்கிற கட்டாய விதி. அது,இவர்களை வெளி நாட்டுக்கு அனுப்புவதில் கூட நீடித்தது.

        ஆனால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் தான் இருவருக்குள்ளும் வேறுபாடு இருந்தது.அது அவர்கள் வீடு கட்டத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்.சங்கர் தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பது டவுனில்.ஆனால் மகேஷின் தீர்க்கமான முடிவு, தன்னை வளர்த்த கிராமத்தில்.

      மகேஷ்-சங்கர் இருவருக்குமே திருமணத்திற்கு முன் எப்படியாவது வீடு கட்டி முடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது.அதற்காக இருவரும் திருமணத்தைக் கூட தள்ளி வைத்து விட்டார்கள்.தன் உழைப்பில் சிந்திய வியர்வையையும், ஓயாமல் பட்ட கஷ்டங்களையும் இருவரும் அவரவர்கள் கட்டும் வீட்டில் தான் விதைத்திருக்கிறார்கள்.

        இரவு பகல் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைத்து பணமீட்டுபவர்கள் ஒரு போதும் ஈகோ பார்ப்பதில்லை.ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் இனம் புரியாத ஒரு அகங்காரம் இதயத்தில் குடியிருக்கும்.தான் எடுக்கும் முடிவே சரியானதே என்று வாதிடும் கர்வம் இருக்கும்,அது தவறான முடிவாக  இருந்தாலும் கூட.

      ஆரம்பத்தில் சரியெனச் சொன்ன மகேஷின் தந்தை,தற்போது மனமாறி அங்கலாய்த்துக் கொள்வதற்கான காரணமே சங்கரின் அப்பாதான் என்பது மகேஷுக்கு புரியாமல் இல்லை.ஆனால் இந்தப்பிரச்சனையை பெரிதுப் படுத்தி நல்ல நட்பை  நஞ்சாக்க அவனுக்கு விருப்பமில்லை.

   றுநாள் காலை,வங்கியில் பணம் எடுப்பதற்காக மகேஷ் தன் தந்தையை அழைத்துக் கொண்டு புறப்படலானான்.கந்தசாமியின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பது அவரின் மௌனம் உணர்த்தியது.பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் உள்ள டீக்கடைய கடந்த போது அந்த குரல் கேட்டது.

 "மகேஷ்..." அது..... சங்கரின் அப்பா.  

 "என்ன மகேஷ் எப்ப வந்த ?.சங்கர் கூட .'.போன் பண்ணிருந்தான், நீ நேத்திக்கு   வருவேன்னு..." 

"........................."

"வேலையெல்லாம் பரவாயில்லையா?..நீ ரொம்ப கஷ்டப் படுறதா சொன்னான்"

இவர் இப்படித்தான்.கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலை நாசுக்கா இவரே சொல்லிவிடுவார்.நக்கலடிக்க நினைப்பவர்கள் பின்பற்றும் சுலப வழி.

"சங்கருக்கு கம்பெனியிலே வீடு குடுத்திருக்காங்கலாமே...நீயும் அது மாதிரியான  கம்பெனியா பாத்து போயிருக்கலாமே..."

"ம்ஹும்.. .'.பிரி அக்கொமொடேசன் என்கிற பேருல 'கன்டைனர்ல' தங்க வைக்கிறது இவருக்கு எங்கே தெரிய போகுது....". மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டான் மகேஷ். 

"ஆமா..இவ்வளவு அவசரமா எங்கே கெளம்பிட்டீங்க.?..முதல் முறையாக மகேசை பேசுவதற்கு அனுமதித்தார்.

"கொஞ்சம் பேங்க் வரை போறோம் மாமா..."  

"அப்படியா...சரி,வீட்டு வேலையெல்லாம் எப்படிப் போவுது?"

"முக்கால்வாசி முடிஞ்சிடிச்சி...இன்னும் பூச்சு வேலை மட்டும் பாக்கியிருக்கு. அதான் பாத்துட்டு போவலாம்னு வந்திருக்கேன்."

"ஆனாலும் நீ கொஞ்சம் அவசரப்பட்டுட்ட மகேஷ்.. " அவர் நெஞ்சிலிருந்த நஞ்சுப் பூனை லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

"இப்ப எங்களையே எடுத்துக்க..போன வருஷம் டவுன்ல நாங்க வாங்குன இடம் நாலு லட்சம்.இன்னிக்கு தேதிக்கு அஞ்சரை லட்சத்துக்கு போகுது.இன்னும் பத்து வருசத்தில அதோட விலை எங்கேயோ போயிடும்.நாலு பேருகிட்ட விசாரிச்சிதான் நாங்க இந்த முடிவ எடுத்தோம்.ஏன்னா நாள பின்ன எம் மவன் வருத்தப்படக் கூடாது பாரு.டவுன்ல வீடு கட்டுறது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா தம்பி...?. ஏன் கந்தசாமி நீயாவது உன் பையன்கிட்ட எடுத்து சொல்லியிருக்கக் கூடாதா?" 

கந்தசாமியின் மனதுக்குள் புகைந்துக் கொண்டிருந்ததை பெட்ரோல் ஊற்றி பற்ற வைக்க ஆரம்பித்தார்.ஆனால் கோபத்தை கட்டுக்குள் வைத்து அமைதியாக இருந்தார் கந்தசாமி.தன் அப்பாவின் முகம் மேலும் வாடிப் போவதை விரும்பாத மகேஷ், தீர்க்கமாக பேச ஆரம்பித்தான்.

"நீங்க எடுத்த முடிவு உங்களுக்கு சரின்னு பட்டா,தாராளமா செய்யுங்க.பணம் என்கிற ஒரு விசயத்த மட்டும் வச்சுப் பார்த்தா,நீங்க சொல்றது சரி தான் மாமா.ஆனா..எங்களுக்கு?..நானும் சங்கரும் கல்யாணத்துக்குப் பிறகு வெளிநாட்டிலே செட்டில் ஆகத்தான் முடிவு செஞ்சிருக்கோம்.எங்க குழந்தைகளும் அங்கு தான் வளரப் போகுது.அங்க,பேசிப்பழக நல்ல மக்கள் அவ்வளவா கிடையாது.நாம பெருசா மதிக்கிற பண்பாடும் கலாச்சாரமும் நம்ம அளவுக்கு அங்க யாரும் பின்பற்ற மாட்டாங்க.இது எல்லாத்தையும் எங்களோட அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கணும்னா,வருசத்துக்கு ஒரு முறையாவது நாங்க ஊருப்பக்கம் வந்துட்டு போகணும்.ஒரு மாச லீவுல ஊருக்கு வர்ற நாங்க சிட்டியிலே தங்கிட்டா, நாம வாழ்ந்த மண்ணோட மகத்துவத்தையும்,பெருமையையும் எப்படி அவங்களுக்கு உணர வைக்கிறது?.. இது நான் படிச்ச பள்ளிக்கூடம்,இதோ இந்தக் குளத்தில்தான் நான் டைவ் அடிச்சி குளிப்பேன்,இந்த மரத்தில்தான் நாங்க ஊஞ்சல் கட்டி ஆடுவோம்னு எங்க பசங்களுக்கு சொல்றப்போ அதுல கிடைக்கிற ஆனந்தமே தனி மாமா.இதோ... எங்க வீட்டிலிருந்து இங்க வர்றதுக்குள்ள எத்தனைப் பேரு.. "நல்லா இருக்கியா தம்பி...எப்ப வந்தீக"னு அன்பா கேக்கிற இந்த வார்த்தைகளை,நாங்க இங்க வந்து போற அந்த ஒரு மாசத்தில சிட்டியில எங்க போயி தேடுறது?.சிட்டியில நாம கட்டுன வீட்டோட விலை ஏறத்தான் செய்யும்.அதனால நமக்கு என்ன லாபம்?.நாம என்ன ஆசையா கட்டுன வீட்ட விக்கவா போறோம்?விக்காத வீட்டுக்கு விலை ஏறினா என்ன? இறங்கினா என்ன? சிட்டியில உள்ள நெருக்கடியையும்,தண்ணி கஷ்டத்தையும் எங்க பசங்க அனுபவிச்சா,பிற்பாடு அவங்களுக்கு இங்க வர்ற ஆசையே அத்துப் போய்டும்.என் மனசுக்கு இதுதான் சரின்னு பட்டது..." மகேஷ் பேசிக்கொண்டேப் போக அந்த அதிகாலையிலும் சங்கர் அப்பாவின் முகம் வியர்த்தது.

"நாலு பேரு நாலு விதமா சொல்வாங்கப்பா..அதையெல்லாம் நாம பொருள் படுத்தக்கூடாது.நாம பேங்க்குக்கு போகலாம் கெளம்பு மகேஷ்.." நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் மகனின் தோளைத் தொட்டுப் பேசினார் கந்தசாமி. 
 

டிஸ்கி.

     இது எனது முதல் சிறுகதை(மாதிரி).இதெல்லாம் ஒரு....அப்படீன்னு நெனைக்கிறவங்க,தாராளமா பின்னூட்டத்தில பின்னிப் பெடலெடுத்துட்டுப்  போகலாம்.

---------------------------------------------------------(((((((((((((()))))))))))))))))---------------------------- 




28 comments:

  1. மனசுக்கு இதுதான் சரின்னு பட்டது..

    வாழ்த்துகள் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ஊக்கத்திற்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க, இந்த மிடில் க்ளாஸ் பொறாமைய நல்லா உணர்ந்து எழுதி இருக்கிங்க, எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கதிர்.

      Delete
  4. தைரியமா எழுதுங்க பாஸ்.எவ்வளவோ பேரு காப்பி பேஸ்ட் செய்யும் வலையுலகில் உங்க சொந்த சரக்குக்கு ராயல் வணக்கம்.உங்க கதையை வெளியிடும் முன்னாடி நாலு தடவை செதுக்குங்க.இன்னும் சிறப்பா வரும்.உங்களின் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறேன்.சமயம் இருந்தால் இவர் கதையையும் படிங்க http://seenuguru.blogspot.in/.
    வாழ்த்துக்கள்! இணைந்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க.வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி சதீஷ்

      Delete
  5. என்னோட முதல் நன்றி சதீஷ் அண்ணா உங்களுக்கு தான். தங்களுடைய ப்ளாக் முன் நிறுத்ரவங்க மத்தியில என்னோட ப்ளாக் செத்தும் படிக்க சொல்றீங்க. மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது னா. நன்றி என்ற ஒரு வார்த்தை இதற்க்கு போதாது.

    ReplyDelete
  6. உண்மைய சொல்லனும்னா ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. உங்க நடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    // மாங்கல்யத்தை அடகு வைத்தாவது அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும் என்கிற கட்டாய விதி.//

    இந்த வாக்கியங்கள் சத்தியமான உண்மைகள்.

    // நாம வாழ்ந்த மண்ணோட மகத்துவத்தையும்,பெருமையையும் எப்படி அவங்களுக்கு உணர வைக்கிறது?//

    அருமையா கேள்வி நானும் வீடுன்னு ஒன்னு கட்டினால் அது என்னோட சொந்த ஊர்ல தான்.

    //விக்காத வீட்டுக்கு விலை ஏறினா என்ன? இறங்கினா என்ன?//

    அருமையா கேள்வியோட இருக்கிற உங்க முடிவு அருமை.

    இணைந்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. என் அமெச்சூர் சிறுகதையை ரசிச்சி படிச்சியிருக்கீங்க.ரொம்ப நன்றி

      Delete
  7. நல்ல முடிவு. டவுன்ல கட்டினாப்ல, கட்ன வீட்டை விக்கவா போறம்? சரியான வார்த்தை.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார். உங்களைப் போன்ற பெரியவாள் ஊக்கம்தான் எங்களுக்கு வேணும்.

      Delete
  8. கதைக்கரு ரொம்ப அருமை. யோசிக்க வேண்டிய விஷயம். கதையும் நல்லா வந்திருக்கு............

    ReplyDelete
    Replies
    1. பெரியவங்களெல்லாம் எங்க பக்கமும் வருகை தந்ததற்கு நன்றி.
      உங்கள் பின்னூடத்திற்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி ப.கு.

      Delete
  9. Hi Manimaran,
    kathai nalla irukku.

    ReplyDelete
  10. முதல் கதையே மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூடத்திற்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி நண்பரே.

      Delete
  11. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ரொம்ப நன்றி பாலாஜி....என் நெஞ்சினில் நெருடிய ஒரு விஷயம் இது.இத ஒரு கதையா எழுதலாம்னு முயற்சி பண்ணினேன்.

      Delete
  12. கதை அருமையா இருக்கு!

    என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பரே...

      Delete
  13. மணிமாறா - அழகான நடை! ரொம்ப ரசிச்சு படிச்சேன். Keep Writing!-ஆனந்தன் (REC )

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்டா ஆனந்தா.

      Delete
  14. கதை நல்ல இருக்குந்கோ.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  15. நல்ல கதை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete