Sunday 26 May 2013

இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா....?

நாட்ல எவ்ளோ சட்டங்கள் போட்டாலும் பெண்ணியத்திற்கு எதிராக நடக்கும் ஆணாதிக்க வன்செயல்கள் தொடர்ந்து பெருகிய வண்ணமே உள்ளது. அதை ஊடகங்கள் வழியாக அறியும் போது ஏனோ மனம் சொல்லொனாத் துயரம் அடைகிறது.

'வன்புணர்வு '...இந்த ஒற்றைச் சொல்லில்தான் எத்தனை வலிகள்..இதில் ஒளிந்திருக்கும் ஆற்றொணாத் துயரங்கள்தான் எவ்வளவு..எவ்வளவு...!

தான் கொண்ட அன்பை  பிற உயிர்கள் மீது மென்மையாக பிரயோகிக்கப் பழக்கப்பட்ட இந்த ஆண் வர்க்கங்கள் ஏனோ இந்த சிற்றின்பத்திற்காக பெண்மை மீது வக்கிர அம்பை மட்டும் வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுவதேன்..?

அடிக்கிற கைதான் அணைக்கும்....அணைக்கிற கைதான் அடிக்கும்...ஆனால் எப்போதும் ஆக்ரோசமாகவே திரிந்தால் எப்படி.........?    எப்படின்னேன்...?

சரி...சரி...மேட்டருக்கு வாறேன்..

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பட்டப்பகல்ல பலபேர் குடியிருக்கும் ஒரு பிளாட்ல பலவந்தமாக ஒரு பாலியல் வன்புணர்வு நடந்திருக்கு. அதுவும் வீட்டில் யாரும் இல்லை என்கிற எதேச்சையான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த சில்லுண்டி வேலையை செய்திருக்கு அந்த காம மிருகம்.

பாதிக்கப்பட்டது நம் இந்திய பிரஜை என்றால் பிரச்சனை நம்ம நாட்டோட முடிந்திருக்கும்.ஆனால் ஒரு வெளிநாட்டு..........,   இதுக்கு மேல என்னத்த சொல்றது...

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்று காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளனர். அவர்களோ இது வெளிநாட்டு சமாச்சாரமாச்சே...மேட்டர் வெளியே தெரியாமல் இரு தரப்பையும் கூப்பிட்டு சமாதானம் செய்ய முற்பட்டுள்ளனர்.ஆனால் அந்த வெளிநாட்டு பார்ட்டி பிடிவாதமாக சண்டைபோட ஒருவழியாக இது ஊடகப் பார்வையில் பட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு பார்ட்டி கீழ்தளத்தில்தான் குடியிருந்திருக்கிறது.மேல்தளத்தில்தான் அந்த காமகொடூரனின் வீடு இருந்திருக்கிறது.

நேற்று வெளிநாட்டுப் பார்ட்டியின் வீட்டில் எல்லோரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போதுதான் அந்த அதிர்ச்சிகர சம்பவத்தை கண்டு மனம் பதை பதைத்து போயுள்ளனர்.அங்கே இருவரும் ஒட்டுத் துணியில்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சரி...ஏதோ சின்னஞ்சிறுசுக.. அணைப் போட்டுத்தடுக்க அது என்ன ஆற்று வெள்ளமா...?  உணர்ச்சி மிகுதியில் சுயநிலை இழந்து மனநிலை பிறழ்ந்து தவறு செய்துவிட்டார்கள். காதும் காதும் வச்ச மாதிரி பெரிய மனசு பண்ணி அந்த ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம். அதானயா பெரிய மனுஷனுக்கு அழகு.அதை விட்டுட்டு பிரம்பை எடுத்து அந்த மேல்வீட்டு பார்ட்டியை வெளுத்து எடுத்திருக்கார். ஏதோ அலறல் சத்தம் கேட்குதேன்னு மேல் வீட்டிலிருந்து எல்லோரும் கீழே ஓடிவர அப்போதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்திருக்கிறது.

" ஒழுங்கா கண்டிச்சி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தா இந்த தப்பு நடந்திருக்குமா....." இது மேல் வீட்டுக்காரர்.

" ஏன்...ஒங்க வீட்ல கண்டிச்சி வளர்க்கப் படாதா... பகலெல்லாம் ஊர் மேயுது... தெருவுல சுத்துற நாயிக்கு வெளிநாட்டு ஆசையா...இது சும்மா விடப்போறதில்ல..போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்..." இது கீழ்வீட்டுக்காரர்.

" போ..போ..தாரளாமா குடு... ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுக்க...ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா?.."

இப்படியாக தொடர்ந்த வாக்குவாதம் கடைசியில் கைகலப்பில் முடிய..இறுதியில் காவல்துறை நுழைய வேண்டிய கட்டாயம் உருவானது.

துடியலூர் காவல் நிலையத்தில் அவர்கள் செய்த வாக்குவாதம் எப்படியோ ஊடகங்களில் வெளிவர அதைத் தான் இங்கே போட்டிருக்கேன் சாமி... எம்மேல எந்த தப்பும் கிடையாது.

கீழ்வீட்டுக்காரர்:  ஐயா...நான் வளர்ப்பது வெளிநாட்டு ஜாதி நாய். சாதாரணமாக வெறும் சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். தினமும் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். பிறகு பவுடர்,சென்ட் போட்டு  எந்த ஊர் நாயின் கண்ணின் படாமல் வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்து வந்தேன்யா...  ஊர் மேயும் அந்த  நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்குதாய்யா..?

மேல் வீட்டுக்காரர்: நாய்கள் என்றால் அப்படித்தான் இருக்கும். உன்னுடையது ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே? வெளியே விட்டது உன் தப்பு...ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா?


பாவங்க அந்த போலீஸ்கார்....எவ்வளவு சமாதானம் சொல்லியும் அந்த 'வெளிநாட்டு நாய்' வீட்டுக்காரர் சமாதானம் அடையவில்லையாம்..அதுக்கு பிறக்கபோற குட்டிக்கு  யார் அப்பான்னு தெரியாம ஒரு புதியபாதை பார்திபனாகவோ...தளபதி சூர்யாவாகவோ மாறிட்டா என்ன பண்றது..?

(யோவ்..கோயம்பத்தூர்காரங்க எல்லாம் குசும்பு காரங்கனு தெரியும்...அதுக்குனு இவ்ள அலும்பு தாங்காதுய்யா...)

6 comments:

 1. /// ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா...? ///

  வாழ்வே காதற்ற ஊசி...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி..திண்டுக்கல் தனபாலன்

   Delete
 2. ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்டிருக்கீங்க போலிருக்கே. அதிரடியாத்தான் இருக்கு.

  ReplyDelete
 3. நல்ல ட்விஸ்டு. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி.....ரூபக் ராம்

   Delete