தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளைகளான கே.எஸ். ரவிக்குமார்,சுந்தர்.C ,ஹரி போன்ற கமர்சியல் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்சஸ்புல் பார்முலா இருக்கும். அது குறைந்தபட்ச உத்திரவாதத்தை எந்தக் காலக்கட்டத்திலும் தரத் தவறியதில்லை. அவர்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ராஜேஷ்...
இந்தப்படத்தில் வசனம் மட்டுமே ராஜேசின் ஏரியா என்றாலும் இது முழுக்க முழுக்க அவர் பார்முலாதான். ராஜேஷிடம் பணிபுரிந்த பொன்ராம் தான் இந்தப்படத்தின் இயக்குனர். ஒரு கல் ஒரு கண்ணாடியை எப்படி கதை,லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் மூன்று மணிநேரம் பார்த்து சிரித்துவிட்டு வந்தோமோ, அதே எதிர்பார்ப்புடன் இதற்கு செல்லலாம்.
தனது மூணாவது மகளைச் சுட்டுக்கொன்றதாகக் கூறி ஊர் பெரியவரான சிவனாண்டியை(சத்யராஜ்) கைதுசெய்கிறது போலிஸ். உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சிவனாண்டியின் பார்வையில் பிளாஸ்பேக்காக விரிகிறது மொத்தப் படமும்.ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் டைப் படம் போல தெரிந்தாலும் பிறகு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
திண்டுக்கல் அருகில் உள்ள சிலுக்குவார்பட்டி என்கிற ஊரில் கடமை,கண்ணியம்,கட்டுப்பாடை விட கவுரவம் தான் முக்கியம் என வாழும் பெரியவர் சிவனாண்டிக்கு(சத்யராஜ்) மூன்று பெண் குழந்தைகள் (கூடவே நான்கு அல்லக்கைகள்). மூன்றாவது பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தை ஊராருடன் பகிர்ந்து கொள்ளும்போது எதிர்த்த வீட்டு பங்காளியால் அவமானப் படுத்தப்படுகிறார். சினம் கொண்ட சத்தியராஜ் கோபத்தில் அவனது ஒரு பக்க காதை அறுத்துவிடுகிறார். எப்படியும் உன் பொண்ணு யாரையாவது இழுத்துகிட்டு ஓடும் அப்போ உன் காதை நான் அறுக்கிறேன் என சபதமிடுகிறார் காது அறுபட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன்.
இதற்காக முதல் இரண்டு பெண்களையும் இளவயதிலேயே அவசர அவசரமாக திருமணம் செய்துவைத்து விடுகிறார் சத்யராஜ். மூணாவது பெண்தான் +2 படிக்கும் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா.. ஆரம்பத்தில் இவரது டீச்சரான பிந்துமாதவியை ரூட் விடுகிறார் சிவகார்த்திகேயன். அதற்குத் தூதாக சிவா பயன்படுத்துவது ஸ்ரீதிவ்யாவை. நன்றாக செட்டாகும் நேரத்தில் சிவாவுக்கு அல்வா கொடுத்துவிட்டு வேறொருவரை பிந்துமாதவி திருமணம் செய்துவிட...பிறகு என்ன, சிவாவின் கடைக்கண் பார்வை திவ்யாவை நோக்கி திரும்புகிறது. ஏற்கனவே திவ்யாவும் சிவாவை விரும்புவதால் இருவரின் காதல் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு போல் வேகமாக வளர்ந்துகொண்டே செல்கிறது.
ஒருகட்டத்தில் இவர்களது காதல் சத்தியராஜுக்கு தெரியவர, திவ்யாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இதனால் திருமணம் நடக்கும் முதல் நாள் இரவு இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கின்றனர். அவர்கள் ஓடிப்போனார்களா..சத்தியராஜுக்கு காது அறுபட்டதா..என்பதை வெண்திரையில் காண்க என முடிக்க இதுஎன்ன வாரப்பத்திரிக்கை விமர்சனமா...?. விரிவாக சொல்கிறேன். இதன் பிறகு நடந்த கதையே வேறு..
ஓடிப்போகும் ஜோடியை துப்பாக்கியுடன் வழி மறைக்கிறார் சத்யராஜ். சுடத்தான் போகிறார் என்று நினைத்தால், கையைப்பிடித்து கெஞ்சுகிறார். தான் அவசரப்பட்டு திருமண செய்த இரு மகள்களும் தற்போது நன்றாக இல்லை. நீங்களாவது நன்றாக இருங்கள் என பணம், நகையோடு ஆசிர்வதித்து அவர்களை அவரே ஓட சொல்கிறார். இதுதான் கிளைமாக்ஸ் ட்விஸ்ட். அப்படியே ஊருக்கு வந்து கவுரவுத்திற்காக தன் சொந்த மகளை சுட்டுக்கொன்ற சிவனாண்டி என்கிற பில்டப்போடு வளம் வருகிறார்.
கடைசியில் இந்த விஷயம் ஊருக்கு தெரியவந்ததால்,தானே தன் ஒரு பக்க காதை அறுத்துக்கொள்ள(கொஞ்சம் ஓரமாத்தான்) , 'தன் கவுரவத்திற்காக தன் காதையே அறுத்துக்கொண்ட சிவனாண்டி வாழ்க' என அவரது அல்லக்கைகள் பிளேட்டை திருப்பிப்போட்டு கோஷம் போடுவது ஃபைனல் ஷாட்..!
புல்லட், துப்பாக்கி சகிதமாக சத்யராஜ் கொடுக்கும் அலப்பறை தௌசண்ட் வாலா பட்டாசு. வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவராக சிவகார்த்திகேயன். செயலாளராக பரோட்டோ சூரி... இவர்கள் இருவரும் படம் நெடுக அடிக்கும் கூத்து சிரிப்பு சரவெடி. அதிலும் பரோட்டோ சூரிக்கு சிவாவுக்கு இணையான ரோல். ஜோடியும் உண்டு. ஆனால் ஏனோ நிறைய இடங்களில் வடிவேலுவை இமிடேட் பண்ண முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த உன்னதக் கலைஞனின் இடத்தை அவரைத்தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.
சமீபத்தில் சிவாவுடன் கிசு கிசுக்கப்பட்ட பிந்துமாதவி இதில் அவருக்கு அல்வா கொடுக்கும் டீச்சராக வந்து நம்மையும் கிறங்கடிக்கிறார். இவ்வளவு அழகான டீச்சர்களெல்லாம் சினிமாவில் மட்டும்தான் வருகிறார்களா... அல்லது அந்தப் பருவத்தில் ரசிக்க தெரியாத அப்பாவியாக இருந்து விட்டேனா...?
நாயகியாக வரும் ஸ்ரீதிவ்யா செம கியூட். கொஞ்சம் ஹோம்லியான கேரக்டர் பண்ணினால் இன்னொரு ரேவதியாக வர வாய்பிருக்கிறது. (ஆனால் இவர் சிரிக்கும்போது மட்டும் ஏனோ தலைவி ரேஷ்மா ஞாபகம் வந்து தொலைக்கிறது.)
இது முழுநீளக் காமெடிப்படம் என்பதால் எல்லோருக்குமே காமெடிக் காட்சிகள் வைத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சாமியாடி குறிசொல்லி தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் சூரியின் அப்பா, திண்டுக்கல் ரீட்டாவுக்கு அலையும் பல்லுபோன தாத்தா, ஸ்ரீ திவ்யாவின் தோழியாக வரும் அந்த கருப்பழகி இப்படி மனிதில் நிற்கும் கேரக்டர்கள் நிறைய. அதிலும் ஏற்கனவே காதலுக்கு எதிராக நடித்து பிரபலமானவர்களை, காதலை எதிர்க்கும் சத்தியராஜை உசுப்பேத்திவிடும் நான்கு அல்லக்கைகலாக தேர்வு செய்திருப்பது இயக்குனரின் சூப்பர் ஐடியா. கொடூர வில்லனாக அறியப்பட்ட காதல் தண்டபாணி இதில் செம காமெடி பண்ணுகிறார்.கிளைமாக்சில் சிவா இவரை மிமிக்கிரி செய்து கிண்டல் செய்யும்போது வாய்விட்டு சிரிக்கலாம்..
படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் வரும் எல்லோருக்கும் ஒரு பிளாஸ்பேக் வைத்திருப்பது அழகிய கவிதை. தன் அப்பாவின் சமையலில் நொந்துபோய்,"அம்மா செத்தப்பிறகு இன்னொரு கல்யாணம் செஞ்சியிருந்தியினா இந்நேரம் வாய்க்கு ருசியா விதவிதமா சமைச்சிப் போட்டிருப்பாங்களே" என சிவா சொல்ல..., " நானாடா மாட்டேன்னேன். என்னை எங்கேடா பண்ண விட்ட..?" என சின்ன வயதில் சிவா செய்த சேட்டைகளை ஞாபகப்படுத்தும் அந்த பிளாஸ்பேக் சிரிப்பு வெடி...
ஸ்ரீதிவ்யாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க, 'காதல் என்பது பொது உடமை' என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, காதல் தோல்வியில் சோகமாக உட்காந்திருக்கிறார் சிவா. ஓடிப்போகும் பிளானை சொல்வதற்காக ஒரு சிறுமியை அனுப்பி சிவாவை கூட்டிவரச்சொல்கிறார் திவ்யா. அந்தச்சிறுமி சிவாவிடம் வந்து, "அக்கா உங்களை கூப்டாங்க.." என்றவுடன், "உங்க அக்காவா..பார்க்க நல்லாயிருக்குமா" என அந்த சூழலிலும் காமெடி பண்ணுவதற்கு சிவாவாலதான் முடியும்.
கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட 'ஆடலும் பாடலும்' என்கிற ஆபாச நடன நிகழ்ச்சி தற்போது மீண்டும் யூடியுபில் நிரம்பி வழிகிறது. அதையும் இந்தப்படத்தில் சேர்த்திருப்பது செம ஐடியா. அதிலும் திண்டுக்கல் ரீட்டா ஆ(ட்)டும் 'ஒட்டடை ஒட்டடை கம்பத்திலே' பாடலுக்கு எழுந்து விசில் அடிக்க தோனுகிறது(பாவிக ரெண்டு வரியோட மாத்திடாணுக).
இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனதால் அதைப்பற்றி எதுவும் சொல்லத்தேவையில்லை.
"ஊதா கலர் ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?" என்கிற தத்துவப் பாடல் இன்னமும் முனுமுனுக்க வைக்கறது. தற்போதைய டிரென்ட் ,காதல் தோல்வி என்றால்,'அட பொன்னான மனசே.. பூவானே மனசே'.. என மரத்துக்கு கீழ உட்கார்ந்து சோக கீதம் பாடக்கூடாது போல. காதல் தோல்விக்கும் குத்து பாட்டுதான்.
இவ்வளவு நகைச்சுவையான திரைப்படத்தில் லாஜிக் மிஸ்டேக் என எதையும் தேட மனது வரவில்லை. இருந்தாலும் சில சந்தேகங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
தன் மகள்கள் காதலில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பருவம் எய்திய இளம்வயதிலேயே, சரியாக விசாரிக்காமல் முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததால், அவர்கள் சந்தோசமாக இல்லை என சிவாவிடம் சத்யராஜ் சொல்கிறார். ஆனால் அவரது கடைசி பெண்ணான ஸ்ரீதிவ்யாவுக்கு அப்படி அவசர அவசரமாக திருமணம் செய்யும்போது அவரது இரண்டு அக்காக்களும், நாங்களும் இப்படித்தான் பயந்தோம், இப்போ பாரு சந்தோசமா நல்ல நிலைமையில் இருக்கிறோம் என சொல்வது ஏன்..?
சிவகார்த்திகேயனைப் பற்றி தெரிந்து கொண்டு அவருக்குத்தான் திருமணம் செய்யவதாக முடிவெடுத்ததாக சொல்லும் சத்யராஜ்,ஒரு நாள் நைட் தெரியாமல் வீட்டிற்கு வந்துவிட்டார் என்கிற ஒரு அல்ப காரணத்திற்காக அதே தப்பை திரும்ப செய்வது ஏன்..?
இப்படி சில 'ஏன்'கள் இருந்தாலும் அதை யோசிக்கவிடாமல் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதால் அவையெல்லாம் பெரிதாக கண்ணுக்குத் தெரியவில்லை..
சமீபத்திய சீரியஸ் படங்கள் எல்லாம் வரிசையாக ஊத்திக் கொண்ட நிலையில் அவைகள் ஏற்படுத்திய நஷ்டத்தை இந்தப்படம் நிரப்பிவிடும். சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் 'தலைவா' தூக்கப்பட்டு 'வபவாச' ரிலீஸ் செய்திருப்பதாக அறிந்தேன். முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிசில் 10 கோடியைத் தாண்டிவிட்டதாகத் தகவல்(பட்ஜெட் 5 கோடிதான்) .
எப்படிப்பார்த்தாலும் வ ப வா சங்கம் மூன்று மணிநேர சிரிப்புக்கு கியாரண்டி...
டிஸ்கி.
இந்த இடத்தில் சிவகார்த்திகேயனைப் பற்றி ஓன்று சொல்லவேண்டும். சிவாவுக்கு சென்ஸ் ஆஃப் ஹுமர் என்பது அவர் ரத்தத்தில் ஊறியது. ஆனால் டான்ஸ்,ஆக்டிங் என மற்ற துறைகளிலும் அவர் வெளுத்து வாங்குவதுதான் ஆச்சர்யம்.
விஜய் டிவியின் ஜோடிநம்பர்-1, சீசன்-3 என்று நினைக்கிறேன்.நடுவராக எஸ்.ஜே.சூர்யா பொறுப்பேற்றிருந்தார். அதில் ஒரு ஜோடியாக படவாகோபி தன் மனைவியுடன் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முக்கியமான இன்னொரு ஜோடி லொள்ளுசபா ஜீவா-ஐஸ்வர்யா. ஜீவாவும் மிமிக்கிரியில் யாருக்கும் சளைத்தவரல்ல. ஆரம்பத்தில் லொள்ளுசபாவில் ஒல்லிப் பிச்சானாக சில ரோல்களில் வந்தவர் பிறகு அத்தனை ஹீரோ ரோல்களையும் செய்தார். ரஜினி,பாக்யராஜ்,விசு என பல நடிகருக்கு கணக் கச்சிதமாகப் பொருந்துபவர். அந்த மிதப்பில் ஜோடி நம்பர் ஒன்னில் ரஜினி மாதிரி கையை மட்டும் ஆட்டி மூவ்மென்ட் கொடுக்க, S.J. சூர்யா கடுப்பாகிப் போனார். பின்னே...ஒரு டான்ஸ் காம்பெடிசனில், பிற்காலத்தில் ஹீரோவாக திரையில் ஜொலிக்க வேண்டும் என்கிற வெறியில் இருப்பவர் முழு ஈடுபாட்டோடு பிராக்டிஸ் செய்து ஆடவேண்டாமா...? தனது நடனத் திறமையை வளர்த்துக்கொள்ளும் மேடையாக இதைக் கருத வேண்டாமா..?
S.J.சூர்யா எதோ சொல்லிவிட்டார் போல...இனிமேல் ஆடமுடியாது என சொல்லிவிட்டு, அப்படியே கிளம்பி போய்விட்டார் ஜீவா. இதை எதற்கு தேவையில்லாமல் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா...? அவர் இடத்தை நிரப்ப வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அப்போதுவரை அவர் ஒரு மிமிக்கிரி ஆர்டிஸ்ட்,க.போ.யாரு வின்னர் அவ்வளவுதான். அதற்கு முன்வரை சுத்தமாக டான்ஸ் ஆடியதில்லையாம். அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எல்லோரும் அறிவோம்.
விஜய் டிவியைப் பொறுத்தவரை ஜீவா, சிவாவுக்கு சீனியர். சிவாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர். படம் பெயர் 'மாப்பிள்ளை விநாயகர்' என்று நினைக்கிறேன். இன்னமும் அந்தப்படம் ரிலிசாகவில்லை. அதற்குள் சிவாவுக்கு மூன்று ஹிட்டுகள்...! அவரின் வெற்றிப்பாதை தொடர வாழ்த்துக்கள்.)