Wednesday, 11 December 2013

சிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...

லவரத்தின் ஆரம்பப்புள்ளி எதுவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே  கலவரத்தின் பின்னணி தெரியவருகிறது.


விபத்துக்கான சூழல்.....

சிங்கப்பூரில் இயங்கும் பேருந்துகளில் விபத்துகள் நடப்பது மிகமிகக் குறைவு.இங்கு இருபெரும் போக்குவரத்து கழகங்கள் உள்ளது.  ஒன்று SBS TRANSIT ,  மற்றொன்று SMRT BUS SERVICES.  இரண்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் தரும் நிறுவனம்தான். இந்த இரண்டு நிறுவனங்களில் பேருந்துகள் மோதி பயணிகள் இறந்ததாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அதேபோல் மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதும் மிகக் குறைவே. இவ்வளவுக்கும் இப்பேருந்துகளில்  நடத்துனர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. ஓட்டுனர் மட்டும்தான். அவர்தான் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் வழியாக பயணிகள் இறக்கிவிட்டனரா என்பதை கவனித்துவிட்டு தானியங்கி கதவை மூடுவார்.

ஆனால், அன்று நடந்த விபத்து தனியார் பேருந்தினால் நிகழ்த்தப்பட்டது. சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறையில் வேலை பார்ப்பவர்கள் மொத்தமாக Dormitory எனப்படும் விடுதியில் தங்கவைக்கப் படுவர். சிங்கையில் நிறைய  Dormitory உள்ளது. காலையில் லாரிகளில் வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் இவர்கள், வேலைமுடிந்து இரவுதான் வீடு திரும்புவார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதோ அல்லது சினிமா உள்ளிட்ட மற்ற கேளிக்கை இடங்களுக்கு செல்வதோ சாத்தியமில்லை.

வார இறுதியான ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் எல்லோரும் ' லிட்டில் இந்தியா ' எனப்படும் அப்பகுதியில் கூடுவார்கள். ஒருவேளை ஞாயிறு வேலையிருந்தாலும் மாலை கூடிவிடுவார்கள். இதுதான் அவர்களுக்கு மீட்டிங் பாயிண்ட். ஒருவார உடல்ரீதியான கடுமையான வேலைப்பழுவுக்கு அதுதான் ரிலாக்சிங் ஏரியா.பிறகு சரக்கு,அரட்டை என்று அந்த ஏரியாவே களைகட்டும்.அப்படி அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்கும். தீபாவளி நேரங்களில் ரங்கநாதன் தெருவில் நுழைந்து விட்ட உணர்வு ஏற்படும். கடைசியாக அந்த வாரத்திற்கு தேவையான மளிகை, காய்கறிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு பிரியா விடைபெறுவார்கள். இது இன்று நேற்றல்ல, பட வருடங்களாக நம்மவர்கள் பின்பற்றும் நடைமுறை.

அவர்கள் தங்கியிருக்கும் Dormitory யிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் கிடையாது. அந்த வாய்ப்பை தான் இதுபோன்ற பல தனியார் பேருந்துகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை அழைத்து செல்லும் இப்பேருந்துகளுக்கு வார இறுதியில் வேலையிருக்காது என்பதால் , இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டு துட்டு பார்க்கும். தலைக்கு $2 வீதம் வசூலித்து கும்பல் கும்பலாக ஏற்றிச்சென்று லிட்டில் இந்தியா பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் அவர்களை ஏற்றிக்கொண்டு அதே Dormitory யில் விட்டுவிடும்.

இதுபோன்ற ஒரு தனியார் பேருந்தில்தான் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அன்று நடந்தது......

லிட்டில் இந்தியாவின் பரபரப்பான செராங்கூன் சாலைக்கு இணையாக அமைந்திருக்கிறது ரேஸ்கோர்ஸ் சாலை.  இந்தச் சாலையில்தான் அஞ்சப்பர், அப்பல்லோ பனானா லீஃப், முத்து கறீஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹோட்டல்கள் உள்ளன.

ரேஸ் கோர்ஸ் சாலை,ஹேம்­­­ஷி­­­யர் சாலைச் சந்­­­திப்­­­பில் ஞாயிறு இ­­­ரவு கிட்டத்­­­தட்ட 9.23 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. அந்தப் பேருந்தை இயக்கியது 55 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் வாசி. பேருந்துக்கு வெளியே கட்டணம் வசூலித்தது ஒரு பெண்மணி என்று சொல்கிறார்கள். அவரும் சிங்கப்பூர் வாசிதான்.

அந்தப் பேருந்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்கிற நபரும் ஏற முயன்றுள்ளார். அவர் மிக அதிகமாகக் குடித்திருந்தார் என சொல்லப்படுகிறது. அதனால் அவரை ஏற அனுமதிக்கவில்லை. அப்போது நடந்த தள்ளுமுள்ளில் சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதைக் கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயற்சிக்க, ஏதோ சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தியிருக்கிறார். பேருந்தின் கீழே சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் சக்திவேல். உடனடியாக அங்கு கூடியிருந்த தமிழர்கள் குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னருக்கு( Singapore Civil Defence Force ) தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை எந்த அசம்பாவிதமும் அங்கு நடைபெறவில்லை.

 9.31 PM க்கு முதல் ஆம்புலன்ஸ் வருகிறது. 9.37 மணியளவில் குடிமை தற்காப்புப்படை அந்த இடத்திற்கு வந்தடைகிறது. கூடவே தீயணைப்பு வண்டியும். அங்கு கூட்டம் அதிகமாகக் கூடியதால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக அதிகமான போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 9.41 க்கு அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது 400 பேருக்கு மேல் கூடிவிடுகிறார்கள். 9.56 க்கு சக்திவேலின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட தருணத்தில்தான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி வைக்கப் பட்டிருக்கவேண்டும்.

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்து பிறகுதான் கலவரம் வெடித்திருக்கிறது. முதலில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு அந்தத் தனியார் பேருந்து,  குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னர், அவர்கள் வந்த வாகனம், ஆம்புலன்ஸ் என தாக்குதல் தொடர, பின்பு கலவரமாக வெடித்துள்ளது.

இன்னொரு செய்தி, பேருந்து பின்நோக்கி நகரும்போது முன் சக்கரத்தில் சக்திவேல் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும், பெண் நடத்துனரும் சம்பவ இடத்தில் தான் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த குடிமைத் தற்காப்பு படையினர், விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட ஓட்டுனரையும்,நடத்துனரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு சென்றதால்தான் கலவரம் வெடித்தது என்றும் சொல்லப்படுகிறது



தாக்குதலில் மொத்தம் 400 பேர் ஈடுபட்டதாக உள்ளூர் செய்திகளில் படிக்க நேர்ந்தது. அடுத்து அங்கு விரைந்த போலீசாரின் 16 வாகனங்கள், 9 சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை, கான்கிரிட் துண்டுகள், கற்கள், பீர் பாட்டிகள், இரும்புக் கழிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கைகளில் கிடைத்த அனைத்துப் பொருட்களைக் கொண்டும் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் ஆறு போலிஸ் ஆபீசர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கலவரத்தின் உச்சகட்டமாக ஐந்து வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு மேலான சிங்கப்பூர் வரலாற்றில் இப்படியொரு கலவரம் நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் சிறு அசம்பாவிதம் கூட நிகழ்ந்ததில்லை. யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று நடந்த  இந்தக் கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து நின்றிருக்கிறது சிங்கப்பூர் போலிஸ்.

இவ்வளவு கலவரத்திலும் அவர்கள் அங்கு குழுமியிருந்த தமிழர்கள் மீது சிறிய லத்தி சார்ஜ் கூட செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிங்கப்பூரை ஓர் அமைதிப் பூங்காவாக மாற்ற நாங்கள் நிறைய இழந்திருக்கிறோம். இதுபோல கலவரங்களை துளிகூட அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஒருவர் வேதனையுடன் கலந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கலவரத்திற்கான அடிப்படைக் காரணம்...

கலவரத்திற்கு காரணமே நம்மவர்களின் குடிவெறிதான் என்று சமூக ஊடகங்களில் பல தமிழர்கள் பொங்குவதைக் காண முடிகிறது. இத்தனை வருடங்கள் அதே இடத்தில் நம்மவர்கள் குடித்துவிட்டு, பிறகு அமைதியாக தங்கள் இருப்பிடத்துக்கு சென்றார்களே... சிறு அசம்பாவிதம் நடந்ததாக வரலாறு இருக்கிறதா..? சிங்கப்பூரில் இந்தியத்தமிழர்கள் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட முடியுமா...?

இந்த இடத்தில் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் திரு ஈஸ்வரன் அவர்கள் சுட்டிகாட்டிய ஒரு விஷயத்தை  நினைவு படுத்த விரும்புகிறேன் ..  "இச்சம்பவத்திற்குக் காரணம் நடந்த விபத்தே தவிர, குடிபோதை அல்ல.. அவர்களின் ஆக்ரோசத்தை குடிபோதை இன்னும் அதிகப்படுத்தி கலவரமாக மாற்றியிருக்கிறது." தற்போது சம்பவம் நடந்த ரேஸ்கோர்ஸ் சாலையில் மதுபானங்கள் விற்பதற்கான அனுமதி வார இறுதி நாட்களில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போதைய நிலவரம்....

கலவரம் நடந்த அன்று இரவே 27 பேரை சுற்றிவளைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலிஸ். அதில் 25 பேர் இந்தியத் தமிழர்கள், இருவர் பங்களாதேஷ் ஆடவர்கள். அதில் ஒரு இந்தியர் மற்றும் இரு பங்களாதேஷ் காரர்களும் சம்மந்தப்படவில்லை என தெரிந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கலவரம் நடந்த மறுநாள் இறந்துபோன சக்திவேல் குமாரவேலு தங்கியிருந்த விடுதியில், இரவு 10 மணிக்குப் பிறகு வந்தவர்களை தனித்தனியாக விசாரித்தது போலிஸ். பிறகு மற்ற விடுதிகளிலும் விசாரணைகள் மேற்கொண்டு, இன்று(11-12-2013) காலை மேலும் 8 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதில் மூன்று பேர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் , தற்போது கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஒருவேளை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

சிங்கப்பூரில் குற்றத்திற்கான தண்டனைகள் மிக வெளிப்படையானவை. இந்தந்த குற்றத்திற்கு இன்னென்ன தண்டனைகள் என வகைப்பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் எந்த நெளிவு சுளிவும் இருக்காது. குற்றம் நிரூபணமானால் தயவு தட்சனையின்றி தண்டனை வழங்கப்படும். இந்தியா , பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா,பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மார் , சீனா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிருந்தும் இங்கு வேலை பார்க்கிறார்கள்.இத்தனை விதமான மனிதர்களை வைத்துக்கொண்டு குற்றங்களே இல்லாத நாடாக கட்டமைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் , சமரசமே செய்யமுடியாத அவர்களின் தண்டனை அமைப்புகள்தான். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளி கூட தப்பித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

கடைசியாக குற்றம் சாட்டப்பட்ட 27 தமிழர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என சொல்கிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டதால் பிரம்படியும் கிடைக்கலாம். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காக அபராதமும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்டவர்களில் எத்தனைப்பேர் திருமணமானவர்கள் எனத் தெரியவில்லை. ஊரில் லோன் போட்டு வீடு கட்டிக்கொண்டிருக்கலாம். தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கலாம். தம்பி, தங்கைகளின் படிப்புக்காக மாதந்தோறும் பணம் அனுப்புபவராக இருக்கலாம். திருமண வயதில் மாமன்பெண் காத்திருக்கலாம்.  குடும்பத்தின் அன்றாட செலவுக்கே இவர்கள் பணம் அனுப்பித்தான் பிழைப்பு நடக்கலாம். எல்லாமே பாழாய்ப் போய்விட்டது. மொத்தத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கை இருண்டு போனதுதான் மிச்சம்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் 8 பேர்.. ஒருவேளை இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கலாம்... அப்படி இருக்கும் பட்சத்தில், குடும்பத்தின் எதிர்காலம்..?


சன் டிவியின் உள்குத்து....

இக்கலவரம் முழுவதும் இந்திய தமிழர்களால், குறிப்பாக கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும்துறையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவிரவும்,  இது அந்த விபத்தின் எதிரொலியாக நடந்ததே ஒழிய, மத, இன ரீதியான கலவரம் (RACIAL  RIOT) கிடையாது. சீன இன மக்களுக்கும் இதற்கும் துளி அளவுகூட சம்பந்தம் கிடையாது.

இப்படியிருக்க, சன் டிவிக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள் போல... இது சீனர்களுக்கும் தமிழர்களுக்கும்  நடந்த இன மோதல் மாதிரியும், இங்கே தமிழர்கள் வெளியேவர அச்சப்பட்டு வீட்டினுள்ளே முடங்கியுள்ள மாதிரியும் தவறான தகவல்களை சன் டிவி தனது செய்தியில் வாசித்திருக்கிறது.


சம்பவம் நடந்த மறுநாளே இங்கே அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. இயல்பு வாழ்க்கை துளிகூட பாதிக்கப்படவில்லை.

சன் டிவியின் இந்த தவறான செய்தியை  சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் கண்டித்திருப்பதுடன், ஸ்ட்ரைட் டைம்ஸ் மூலமாக விளக்கமும் கோரப்பட்டிருக்கிறது.

 (டெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சன் டிவிக்கு அனுப்பிய கண்டனக் கடிதம் )
கலவரத்தின் மூல காரணம்...


இக்கலவரத்தின் மூல காரணமான அந்த விபத்தில் இறந்த சக்திவேல் முருகவேலு, புதுக்கோட்டை மாவட்டம், அரிமலத்தில் உள்ள ஓணான்குடி கிராமத்தை சேர்ந்தவர். ITI படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் துபாயில் பணிபுரிந்தவர். கடந்த இரண்டு வருடமாகத்தான் சிங்கையில் பணிபுரிகிறாராம்.

இங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில், கேரளாவில் தமது கணவருடன் தங்கியிருந்த இவரது தங்கை கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்ட துயரமும் நடந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பப் போவதாக தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தவர், இன்று காலை சடலமாக சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்திருக்கிறார்.

கலவரத்திலும் மனிதாபிமானம்... 


மேலே இருக்கும் வீடியோ ஒரு முக்கியமான நிகழ்வு. கலவரம் நடந்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள, அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏறி கதவை மூடிக்கொண்டனர். அப்போது அந்த ஆம்புலன்சுக்கு மிக அருகிலே இன்னொரு வாகனம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த வாகனமும் தீக்கிரையாகும் சூழலில், அங்கு நின்றிருந்த சில தமிழ் நல் உள்ளங்கள் ஓடிச்சென்று ஆம்புலன்சின் கதவைத்திறந்து போலீசாரை விடுவித்துக் காப்பாற்றினார்கள்.

ரோட்டில் கிடக்கும் பர்சை எடுத்துச்சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தாலே பாராட்டுப் பத்திரம் வழக்கும் சிங்கப்பூர் அரசு, பல போலீசாரின் உயிரைக் காப்பாற்றிய அவர்களை கௌரவிக்காமல் விடுமா...? ஆனால் அவர்களைக் காப்பாற்றியவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் தெரியவில்லை.

 "If you know any of the men who approached the ambulance to help, we would like to hear from you. Call us at 6319-6397 or e-mail us at stnewsdesk@sph.com.sg " என்று இன்றைய செய்தித்தாளில் அறிவித்திருக்கிறது.

இவ்வளவு கலவரத்திலும் இவர்களை பாராட்டவேண்டும் என்கிற எண்ணம், இந்த அரசின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது.

என்னத்த சொல்ல...?

நான் சிங்கை வந்த புதிதில்,வார இறுதியில் என் நண்பன் லிட்டில் இந்தியாவுக்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது எனக்கு எல்லாமே புதுசு. தி நகர், ரங்கநாதன் தெரு போல சின்னச் சின்ன வீதிகள். எங்குமே நடக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நெரிசல். எல்லோருமே நம்மவர்கள்.

அப்போது ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தபொழுது, திடீரென்று ஒரே சலசலப்பு. பார்த்தால், நாங்கள் வந்த வீதியின் இருபுறமும் போலிஸ் ரவுண்டப் பண்ணியிருக்கிறது. இடையில்  இருக்கும் சிறு சிறு சந்துகளைக்கூட மப்டியில் வந்த சிங்கப்பூர் போலிஸ் கவர் செய்துவிட்டது. உடனே, "எல்லோரும் இருந்த இடத்தில் அப்படியே உட்காருங்கள் " என போலிஸ் மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தது. எனக்கு அல்லு இல்ல.. என்ன இது என்று நண்பனிடம் கேட்டபோது,"இது சும்மா செக்கப் தான்... யாராவது சட்ட விரோதமா (ILLEGAL ) தங்கி இருந்தா அவர்களை பிடிப்பதற்கு" என்று சொன்னார்.

ஒவ்வொருவரிடமும் ஐசி அல்லது பாஸ்போர்ட் இருக்கிறதா என சோதித்தார்கள். அவர்களின் சோதனை பலனளித்தது. மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களின் கைகளை பின் பக்கமாக விலங்கிட்டு வேனில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
 
அப்போதெல்லாம், லிட்டில் இந்தியா அமைந்திருக்கும் செரங்கூன் ரோடில் நடந்து சென்றால், திடீரென்று ஒருவர் எதிர்கொண்டு,"ஐயம் போலிஸ்.. ஷோ மீ யுவர் ஐசி." என்பார்.அவ்வளவு கட்டுப்பாடுகள் முன்பிருந்தது. என்னவோ தெரியவில்லை,சில வருடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, எங்கும் சுற்றலாம், தண்ணியடிக்கலாம், கூட்டம் போடலாம் என்று சிங்கப்பூர்வாசிகளைப்போல அனைத்து உரிமைகளையும் இந்தியாவிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கி யிருந்தது. அச்சுதந்திரத்தை தற்போது மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் நம்மவர்கள்.

எனக்குத்தெரிந்து வெளிநாடுகளில் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இங்கு என்ன இல்லை...? தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கும்பாபிஷேகம் அல்லது கோயில் விசேசம் என்றால்,அதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையையே தடுத்து வசதி செய்து கொடுக்கிறது. வேலை வாய்ப்புகளில் கூட பிரித்துப் பார்ப்பதில்லை. பல ஆண்டுகள் இளமையைத் தொலைத்த இளைஞர்களுக்கு ' வடிகால் ' கூட அரசின் அனுமதியோடு நடக்கிறது.

மிக முக்கியமாக தமிழுக்கு இங்கு ஆட்சிமொழி அங்கீகாரம் வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். எட்டாம் வகுப்பு படித்தவரிலிருந்து, எஞ்சினியரிங் படித்தவர்கள் வரை வேலைக்கு எடுக்கும் ஒரே டாலர் தேசம் சிங்கப்பூர்தான் என்பதை மறுக்க முடியுமா...?

'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்' என்பதுபோல சிங்கப்பூர் தமிழர் களுக்கு வழக்கப்படும் சலுகைகளை இந்தியத் தமிழர்களும் இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கும் இனி ஆப்பு...

சம்பவம் நடந்த அன்று சமூக வலைத்தளங்களில் சிங்கப்பூர்வாசிகள் பொங்கிய பொங்கு இருக்கே...! அவர்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. பார்த்துப் பார்த்து கண்ணாடி மாளிகை போல செதுக்கி வைத்திருக்கும்  ஓர் அமைதிப் பூங்காவின் மேல் சிறு கல் எறிந்தாலே தாங்க மாட்டார்கள். தமிழர்கள் ஆடியது கொடூர ருத்ரதாண்டவம் அல்லவா...! இனி கடுமையானக் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும் இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளலாம்.


ஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன். மனைவியுடன் வெளியே செல்லும்போது, 10 சீனர்களோ அல்லது 10 மலாய்காரர்களோ குழுமியிருக்கும் ஓர் இடத்தை எவ்வித சங்கடமும் இன்றி கடந்து சென்றுவிடலாம். ஆனால் 10 இந்தியத் தமிழர்கள் கூடிநிற்கும் இடத்தை கடந்து செல்வது எவ்வளவு சங்கடமானது என்பதை இங்கு குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு இந்த அனுபவம் நிறைய...நிறைய... நிறையவே இருக்கிறது.

கூட வரும் நம்மைப் பொருட்படுத்தாமல் உடன் வருபவளை காலிலிருந்து தலைவரை  அளவெடுத்துப் பார்க்கும் அவர்களின் பார்வை அருவருக்கத்தக்கது. இது இனப்பற்றால் பார்க்கும் பார்வை என்றெல்லாம் சொல்ல முடியாது.  எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. பத்தில் நான்கு பேர் அப்படியிருப்பார்கள். அதிலும் பங்களாதேஷ் பசங்க இன்னும் கொடுமை. ஆனால் இவர்களின் லிமிட் இவ்வளவுதான். அதைத்தாண்டி போகமாட்டார்கள்.

ஊரிலிருந்து கிளம்பும்போதே சாம்பாதிப்பது ஒன்று மட்டுமே நமது குறிக்கோள் என்கிற மனநிலையில்தான் இருக்கிறோம். எவரும் மாட மாளிகையில் சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்பவர் கிடையாது. வேறு வழியில்லாமல்தான் வெளிநாடுகளுக்கு பணி செய்யவருகிறோம். குடும்பத்தின் மொத்தப் பொறுப்பையும் தன் தலைமேல் சுமந்துகொண்டுதான் சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் கால் வைக்கிறோம். எப்போது வெளிநாட்டில் கால் வைக்கிறோமோ அப்போதே நமது கோபம், வீரம், புரட்சி எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி அந்த ஏர்போர்ட்டின் வாயிலில் வைத்துவிட்டு வரவேண்டும். திரும்பிப் போகும்போது அந்த மூட்டை அப்படியே இருக்கப்போகிறது. அப்போது எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே... !

   கலவரம் நடந்த மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பிய ரேஸ்கோர்ஸ் ரோடு
இக்கலவரத்தின் மூலமாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இரண்டு விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஓன்று,இதுவரை இங்கே போராட்டம் என்றால் சிறு குழுக்களாக நின்று உரிமையை நியாயப்படி கேட்டுப் பெறுவது என்றிருந்த நிலையில், தமிழர்கள் கலவரம் செய்து அதற்கு தவறான வழியைக் காட்டியது . மற்றொன்று, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடத்தால், அதற்காகக் கலவரம் கூட செய்யக்கூடிய மனநிலையில் நிறைய ஊழியர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது.

இனி சிங்கப்பூர் அரசாங்கம் என்ன மாதிரியான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. குறிப்பாக இந்திய தமிழர்கள் மீதான  கட்டுப்பாடுகள். இங்கிருக்கும் மற்ற இந்தியத் தமிழர்கள் போல நானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

---------------------------------X--------------------------------
Updated news (12-12-2013)
இன்றைய (12-12-2013) சிங்கப்பூர் ஊடகங்களில் தமிழர்களுக்கு சாதகமான சில செய்திகள் வந்திருக்கிறது. இந்தப்பதிவில் இருக்கும் முதல் கானொளியில் இரண்டு நபர்கள் தனியார் பேருந்தை கண்மூடித்தனமாகத் தாக்கிக்கொண்டிருக்க ஒருவர் அதைத் தடுக்க முயல்கிறார். அவர்தான் அந்த சம்பவத்தின் ஹீரோ... அவரையும் தேடிப்பிடித்து கௌரவிக்க காத்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.


அவரைப்பற்றிய தகவல்களை அருகில் உள்ள காபி ஷாப் களில் விசாரித்த வகையில் அவருக்கு வயது சுமாராக 35 , இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், மிகவும் அமைதியானவர், பண்பானவர் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக இன்றைய CNA -வில் செய்தி வந்திருக்கிறது. அவரை ' Good Samaritan ' என்று பாராட்டியிருக்கிறது அந்த வெகுஜன ஊடகம். அதுமட்டுமல்ல அந்த வீடியோவைப் பார்த்து நிறைய சிங்கப்பூர்வாசிகளே சமூக வலைத்தளங்களில் அந்த நபரை பாராட்டி யிருக்கிறார்கள்.

மேலும், கலவரம் மூளும் சூழலில் அங்கு நின்றிருந்த நிறைய தமிழர்கள் அருகிலிருந்த உணவகங்களின் வெளியே போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளை அவர்கள் சொல்லாமலே தூக்கிச்சென்று உள்ளே பத்திரப் படுத்தினார்களாம். அதையும் இன்றைய செய்தியில் குறிப்பிட்டு அந்நபர்களை பாராட்டியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.

ஒரு கலவரம் நடந்தால், மொத்த கும்பலையும் கொத்தாக அள்ளிச்சென்று உள்ளே வைத்து குமுற வேண்டும் என்கிற தட்டையான சிந்தனையை தவிர்த்து, அச்சம்பவ இடத்தில் இருந்தவர்களை தனித் தனியாகப் பிரித்து விசாரணையை மேற்கொள்ளும் சிங்கப்பூர் அரசாங்கம் மிக நேர்மையானது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் சொல்லவேண்டும்..?

தவிர, இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நேற்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் நேரடியாக தமிழர்கள் தங்கியிருக்கும் அனைத்து Dormitory க்கும் சென்று, அங்கிருக்கும் இந்திய தமிழர்களை நேரில் சந்தித்து, என்ன மாதிரியான பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது என விசாரித்திருக்கிறார். அவர்கள், "எங்களுக்கு எந்த சங்கடங்களும் இங்கு இல்லை. மிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். அவர்களின் செயல்களைக் கண்டு நாங்கள் வெக்கப்படுகிறோம்  " எனத் தெரிவித்திருக்கிறார்கள்...

இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்...?

Saturday, 7 December 2013

தகராறு...( ரேணிகுண்டா + திமிரு )

துரையை மையக் களமாகக் கொண்ட ஆக்சன் த்ரில்லர் தகராறு. படத்தின் தலைப்பிலே ஓர் சுவாரஸ்யம் இருக்கிறது. திரையில் மட்டுமல்ல திரைக்குப் பின்னாலும் பல தகராறுகளை சந்தித்திருக்கிறது இந்த டீம்..

இயக்குனர் கணேஷ் விநாயக், S.J சூர்யா, சிம்பு, தருண்கோபி ஆகியோருடன் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தவர். முற்பொழுதும் உன் கற்பனைகள் முதலில் இவர்தான் இயக்குவதாக இருந்தது. அந்த வாய்ப்பு ஆரம்பத்திலேயே பறிபோய்விட, பிறகு சிம்புவை வைத்து மடையன் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் பூஜை போட்டதோடு சரி. இப்படி முதல் கோணலே முற்றிலும் கோணலாகி, நிறைய தகராறுகளை சந்தித்து இறுதியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

நாயகன் அருள்நிதி, கரு.பழனியப்பனுடன் 'அசோகமித்திரன் ' செய்வதாக இருந்தது.என்ன தகராறோ தெரியவில்லை, அது கைவிடப்பட்டு பிறகு இதில் ஒப்பந்தமானார்.

நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் பூஜா. அவருக்கும் பர்சனலாக ஏதோ தகராறு போல.விலகிவிட்டார். அவர் சிபாரிசு செய்தவர்தான் பூர்ணா .

முதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் ரகுநந்தன். அவருக்கும் ஏதோ தகராறு. அவர் விலகவே தருண் ஒப்பந்தமானார். பாடல்கள் மட்டும் முடிந்த நிலையில் அவரும் ஏதோ  தகராறு காரணமாக விலகிவிட, பின்னணி இசையை பிரவீன் சத்யா செய்திருக்கிறார்.

இதைவிட பெரிய தகராறு படத்தலைப்புப் பற்றியது. இந்தப்படத்திற்கு முதலில் நிறைய  தலைப்புகள் வைத்து பின்பு மாற்றப்பட்டது. சம்பவம், கங்கணம், பகல்வேட்டை, பகல் கொள்ளை, அடி உதை குத்து..இப்படி நிறைய. ஒன்று இயக்குனருக்குப் பிடிக்கும் தயாரிப்பாளருக்குப் பிடிக்காது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்வது இயக்குனரை திருப்தி செய்யாது. ஒருவேளை இருவருக்குமே பிடித்திருந்தால், ஏற்கனவே அத்தலைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கும். இப்படியாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் நொந்து போய் , " ச்சே..டைட்டில் பிடிக்கிறதே பெரிய தகராறா இருக்கிறதே" என்று புலம்பியிருக்கிறார். உடனே இயக்குனர், " சார்..தகராறு நல்ல டைட்டிலா இருக்கே .." என்று சொல்ல, அதுவே தலைப்பாகிவிட்டது.


சரி... இனி படத்திற்கு வருவோம்...

இயக்குனர் கணேஷ் விநாயக் ' ரேணிகுண்டா ' படம் பார்த்து நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார் போல... கிட்டத்தட்ட அதே சாயலில் கதை.

நான்கு களவாணி நண்பர்கள். சரவணன்(அருள்நிதி), செந்தில்(பவன்), பழனி(தருண் சத்ரியா), ஆறுமுகம் (ஆடுகளம் முருகதாஸ்). சிறுவயதில், அனாதைகள் என்கிற புள்ளியில் நால்வரும் ஒன்றுசேர, அதிலிருந்தே உயிருக்குயிரான நண்பர்கள். மூர்க்கத்தனமும் ஆக்ரோஷமும் கூடவே ஒட்டிக்கொண்டு அலைகிறது. களவாண்டோமா, காதல் பண்ணினோமா ,கட்டிலில் கவுந்தடித்துப் படுத்து கனவு கண்டோமா என்றில்லாமல் ஊரெல்லாம் ஒரண்டை இழுத்துவைக்க, பலரால் கட்டம் கட்டப்பட்டு 'சம்பவம்' பண்ணக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தருண் சத்ரியா மர்மமான முறையில் கொல்லப்பட, தன் நண்பனைக் கொன்றவனை பழிவாங்கத் தேடிப் புறப்படுகிறார்கள் மற்ற மூன்று நண்பர்களும். உண்மையிலேயே  அவரைக் கொன்றது யார் என்பது தான் படத்தின் இறுதியில் வெளிப்படும் அட்டகாசமான ட்விஸ்ட்.

படத்தில் மிக நெருடலான விஷயம், நான்கு நண்பர்கள் மீதும் பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட பரிதாபமோ, பச்சாதாபமோ வராமல் போனதுதான்.ஆண்டிஹீரோ சப்ஜெக்ட் செய்யும்பொழுது, அரக்க மனம் படைத்தவனாக ஹீரோவோ அல்லது அவரது நண்பர்களோ காட்சிப்படுத்தப்பட்டால், மறுப்பக்கம் அவர்களுக்குக் கொஞ்சம் இறக்க குணம் இருப்பதாகக் காட்டினால்தானே அவர்களின் பாத்திரம் மனதில் ஒட்டும்..!  அருள்நிதியைத்  தவிர மற்றவர்கள் வில்லன்கள் போலவே காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் சேட்டைகள், தகிடுதித்தங்கள் எல்லாமே அவர்கள்மீது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்துகிறதே தவிர ரசிக்க முடியவில்லை.

அதனால்தான்  தருண் சத்ரியா கொல்லப்பட்ட பின்பு, திரையில் அவரது நண்பர்கள் எவ்வளவு கதறி அழுதாலும் நமக்கென்னவோ எவன் செத்தா எனக்கென்ன என்கிற மனநிலைதான் இருக்கிறது. ரேணிகுண்டா படத்தில் இவர்களைவிட அவர்களை மூர்க்கத்தனமாக காட்டியிருப்பார்கள். இன்ஸ்பெக்டர் வீட்டிலே புகுந்து ரகளை செய்வது, பொது மக்களிடம் கொள்ளையடிப்பது என்று சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படும்பொழுது நம் நெஞ்சம் கனத்துப் போகும். அந்த உணர்வு இதில் இல்லாமல்போனதுதான் பெரும் குறை.

அதனால்தான் படம் நெடுக , தவறே இவர்கள் மீது இருக்கும்போது எதற்காக மற்றவர்களை இம்சைப் படுத்துகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை

அதேப்போல் அருள்நிதி மேல் பூர்ணாவுக்கு கொலைவெறிக் காதல் வர என்ன காரணம் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை.


தலைவரின் கலைவாரிசுகளில் தயாநிதி அழகிரியை எந்த அளவுக்குப் பிடிக்காதோ,அந்தளவுக்கு அருள்நிதியை பிடிக்கும். சாந்தமான முகம்.பார்க்க பாவமாக இருப்பார்.அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒருவேளை அவர் நடித்த கேரக்டர்கள் அப்படியோ எனத்தெரியவில்லை. வம்சமும்,மௌனகுருவும் மிகவும் பிடித்திருந்தது. உதயன் இன்னும் பார்க்கவில்லை. நிற்க,  நடிக்க வந்து நான்கு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் நடிப்பும் நடனமும் சுட்டுப்போட்டாலும் வர மாட்டேங்குதே பாஸ்...!

"எக்ஸ்குஸ்மி... நான் உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்...என்னை நீங்க எங்கேயாவது பாத்திருக்கீங்களா " என்று ராமராஜன் ஸ்டைல் டிரெஸ்சில் அரைகுறை ஆங்கிலத்தில் பூர்ணாவிடம் வழியும் காட்சிகள் மட்டும் செம.. அதேப்போல் ஆரம்பத்தில் வரும் Bureau pulling யுத்தியும் அட போட வைக்கிறது.

ஒரு காட்சியில் அருள்நிதி, பூர்ணாவிடம் சொல்வார், " திருடன் என்றால் அவ்வளவு கேவலமா போச்சா. நாட்ல எவங்க திருடல..? ".(தம்பி.. இந்த டயலாக் வச்சது சகோ தயாநிதிக்கு தெரியுமா..?  )

நான்கு நண்பர்களில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுபவர் முருகதாஸ் மட்டுமே.. சந்திரமுகிக்குப் பிறகு நான்கு நண்பர்களின் பெயர்கள் எம்பெருமான் முருகனைக் குறிக்கிறது. இதில் ஏதும் குறியீடுகள் இருக்கிறதா ?

கல்லூரிக்குப் போகாத கல்லூரி மாணவியாக பூர்ணா. ஜன்னலோரம் படத்தில் பொம்மை போல வந்தவர், இதில் பட்டையைக் கிளப்புகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில். இன்னொரு திமிரு ஈஸ்வரி....! (அய்யய்யோ சொல்லிட்டேனா.....).

மயில்சாமி கின்னஸ் சாதனைக்கு முயற்சி ஏதும் செய்கிறாரா..? கடைசியாக மனுசனை 'ஸ்டெடியாக' எந்தப் படத்தில் பார்த்தேன் என்பது நினைவில்லை. 'தள்ளாடும்' காட்சிகளில் இவரளவுக்கு தத்ரூபமாக நடிப்பவர்கள் தமிழ் சினிமாவில் கிடையாது என அடித்துச்சொல்லலாம்.  :-))

கொஞ்சம் தொய்வாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தை மங்கள்யான் ராக்கெட்டின் வேகத்துக்கு சீறிப்பாயச் செய்வது கடைசி பதினைந்து நிமிடங்கள். படத்தின் அதிமுக்கியமான திருப்பம் அங்குதான் இருக்கிறது. கொட்டும் மழைத்துளிகளின் ஊடாக தெருவின் சந்து பொந்துகளில் புகுந்து ஓடும் கேமரா, தடதடக்கும் பின்னணி இசை, யூகிக்க முடியாத அடுத்தடுத்த திருப்பங்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள்.இந்த ஒரு இடத்தில் அறிமுக இயக்குனர் கம்பீரமாக நிற்கிறார். இதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் படத்தில் பெரிதாக எதுவும் இல்லை.


Tuesday, 3 December 2013

ஸ்ருதி பாய்ந்த பதினாறு அடியும் சிவாஜிக்கு விழுந்த மரண அடியும் (சும்மா அடிச்சு விடுவோம்-8 )

ந்தியா மார்ஸ்-க்கு மங்கள்யான்  ராக்கெட் விட்டதற்கு அடுத்தப்படியாக மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம்,ஸ்ருதிஹாசன் வீட்டுக்குள்ள எவனோ கையை விட்டது. அதைப்பற்றிய 'சிறப்புப் பார்வை' யைத்தான் தற்போது காணப்போகிறோம்.

சில நாட்களுக்கு முன்பு மும்பை,பாந்தராவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த நம் தங்கத்தமிழச்சி ஸ்ருதிஹாசனை ஒருவர் கையைப் பிடித்து நையப்புடைத்தார் இல்லையா....!. தன் சொந்தப் பிரச்சனைக்காகத் தான் அவரைத் தாக்கினேன் என்று பிறகு கைதான அந்த நபர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னணியில் வேறொரு சங்கதி இருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

அதற்கு முன், தன் மகள் மீதானத் தாக்குதலைப் பற்றி, பத்துமாசம் சுமந்துப் பெத்தெடுத்த ஆத்தா சரிகா என்ன சொன்னார் என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதே மும்பையில், சரிகாவின் இன்னொரு மகளான அக்சராவுடன் சரிகா தங்கியிருக்க, சுருதி மட்டும் ஏன் தனியாக தங்கவேண்டும் என்று சரிகாவிடம் கேட்டபொழுது, வெகு கூலாக அவர் சொன்ன பதில்," ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். என்னுடன் தங்கமாட்டார்.".

உடனே, இதைத்திரித்து வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்வது சரியா என்று நியாயத் தராசை தூக்கிகொண்டு வரப்படாது ஆமா.... முதலில் தாக்குதலுக்கான பின்னணியை டீப்பா ஆராய்ந்துவிட்டு பிற்பாடு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை யோசிப்போம்.

(கமல் எதைப்பார்த்து இப்படி கதறி அழுகிறார் என்பதைத் துல்லியமாக அறிய ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும் )
சரி... முதலில் இந்தக் கோணத்தில் யோசிப்போம்.. அந்த நபர் எதற்காக ஸ்ருதிஹாசனைத் தாக்கவேண்டும்...?. ஒருவேளை அவர் சர்வதேச நடிகை(!) என்பதால், பாலியல் ரீதியான அத்துமீறல் அல்லது சில்மிசங்களில் அந்த நபர் ஈடுபட முயற்சித்திருக்கலாம் என்று பார்த்தால், அப்படியெதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. திருடும் நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எதற்கு கலைஞானியின் கலைவாரிசை அந்தாளு கையைப் பிடித்து முறுக்க வேண்டும்....?  இப்போது மைல்டா ஒரு டவுட் வந்திருக்குமே...! அதேதான்.அந்த ரகசியத்தைத் தான் இப்போ சொல்லப்போறேன்.

அதாகப்பட்டது, தனது கலைச்சேவையை இந்தியளவில் விரிவாக்கும் பொருட்டு, இந்தித்திரைப்பட உலகிலும் தன் பரந்த கடையை விரிப்பதற்காக சில இந்தி நடிகர்களுக்கு ஸ்ருதி தூண்டில் போட்டதாக சொல்லப்படுகிறது. பின்னே...பாலிவுட்டில் எந்தவொரு நடிகரின் அரவணைப்பும் இல்லாமல் அங்குலம் அளவுகூட நடிகைகள் வளர முடியாது என்பது உலகறிந்த விசயமாச்சே...அதில் வசமாக அந்த 'கான்' நடிகர் சிக்கியதாக பட்சி சொல்கிறது. இந்தியில் அறிமுகமாகும் நிறைய நடிகைகளை அண்ணன்தான் முதலில் 'அரவணைத்து ' வாழ்த்து சொல்லி ஊக்குவிப்பாராம்.

நம்ம ஸ்ருதி வேற கலைஞானியின் கலை வாரிசு இல்லையா..! அதனால் கொஞ்சம் அதிகமாக அரவணைக்க வேண்டியிருந்ததால், தினமும் இரவு ஸ்ருதி தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் தங்கி அரவணைத்து சென்றிருக்கிறார் நம்ம கான் நடிகர். இது எப்படியோ அவரது மனைவியின் காதுக்கு எட்ட, வெகுண்டெழுந்த அந்த அம்மையார் போட்ட பிளான்தான் அதுவாம். ஸ்ருதியுடன் கான் நடிகர் தங்கியிருக்கும் தருணத்தில், ஸ்ருதியைத் தாக்கினால் உள்ளேயிருக்கும் 'கான்' வெளியே வருவார்.அபார்ட்மெண்டில் கூட்டம் கூடும்.கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள் என்பதுதான் அவரின் திட்டமாம். அதற்காக அவர் செட்டப் பண்ணின ஆள்தானாம் அது. ஆனால் தாக்குதல் நடத்தும்பொழுது ஸ்ருதி சுதாரித்துக் கதைவை இழுத்து சாத்திவிட, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். கடைசியில அம்மையார் போட்ட திட்டம் பணால் ஆகிவிட்டதாம்.

                                           ( பதினாறு அடி பாயும் குட்டி......! )

தாக்குதல் நடந்த உடனையே ஸ்ருதி தரப்பு போலிசுக்கு போகாததற்கு இதுதான் காரணமாம். பிறகு விஷயம் வெளியே தெரிந்தவுடம், கண்துடைப்புக்காக புகார் கொடுத்துவிட்டு பிற்பாடு பூசுதல், மொழுகுதல் வேலை எல்லாம் நடந்தது ஊரரிந்ததுதான்.

இதிலென்ன இருக்கு.? சினிபீல்டில்,அதுவும் பாலிவுட்டில் இதுபோன்ற சங்கதிகள் நடப்பது ஒன்றும் அதிசயமான நிகழ்வில்லையே..... அப்படினுதான் நீங்க, நான் மட்டுமல்ல....., கமல் கூட நினைத்திருப்பார்..! ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே...! லிவிங் டுகெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றுதான் என்று வாதிடுகிறவராச்சே... !

இவ்வளவு ரகளைக்குப் பின், ' பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்' என்கிற ஒரேயொரு அட்வைஸோடு ஒரு அப்பாவாக அவர் கடமை முடிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஸ்ருதி எந்தப் பின்புலமும் இல்லாதவரா என்ன...? அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன..? . பிறகு எதற்காக வாய்ப்பு வேண்டும் என்று இவ்வளவு தூரத்திற்கு இறங்க வேண்டும். ஒருவேளை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் முன்னணி  நடிகையாக ஒரு பெண் வரவேண்டுமென்றால் 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்கின்ற கசப்பான உண்மையை கமல் அறியாமல் இருப்பாரா என்ன..?

கேட்டால், என் வீட்டு பாத்ரூமை எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தர்க்க ரீதியாக கேள்வி எழுப்புவார். நாங்கள் சினிமாக்காரர்களை வெறும் பாத்ரூம் சமாச்சாரமாக மட்டும் பார்த்திருந்தால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எங்கள் தமிழகத்தை சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்திருப்போமா...? அடியேன் கலைஞானியின் தீவிர ரசிகன்தான். கலைக்கு ஞானியாக இருப்பவர், கலாச்சாரத்திற்கும் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்த பட்சம் அதைக் கெடுக்காமல் இருக்கலாமே.

உலக நாயகன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்கிற குருட்டு வாதம் இங்கே செல்லாது. இறுதி மூச்சுவரை, தனது மகன்கள்,பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஒரேவீட்டில் வைத்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி காண்பித்திருக்கிறார் நடிப்புக்கே இலக்கணம் எழுதிய ஒருவர். தன் மகனுக்கு கற்பு நடிகையுடன் கனெக்சன் ஏற்பட்டபோது, கவலையால் நொடிந்து போனார் சிம்மக் குரலோன். அதைக் காரணமாக வைத்தே இருவரையும் பிரித்தார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு.
டிகர் திலகம் அவர்களின் சிலையை அகற்றப்போவதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பே மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதால், அந்தக் கம்பீர சிலையை கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை சென்னையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அது ஏர்போர்ட், தி.நகர், ECR ரோடு என பயணம் திசைமாறி விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே அச்சிலையை பார்த்திருந்தால் இன்னும் வருத்தம் கூடியிருக்கும்... போகட்டும்...

" கோயிங் ஸ்டெடி பார்ட்னர்.."  (3D)

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது எவ்வளவு வேதனைக்குரியது..!. போக்குவரத்துக்கு  இடைஞ்சல், விபத்து மிகுதியானப் பகுதி என்பதெல்லாம், என்னைக்கேட்டால் சுத்த Humbug.. அப்படிப் பார்த்தால் அம்மையாரின் கோயிங் ஸ்டெடி பார்ட்னர் சிலை கூடத்தான் நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதை அப்புறப்படுத்தட்டுமே...!

' நாங்கள் என்ன சிலையை மொத்தமாக அகற்றவேண்டும் என்றா சொல்கிறோம்..? கொஞ்சம் தள்ளி(!) மெரினா பீச்சில் வைக்கச் சொல்கிறோம். அவ்வளவுதானே' என்று ஒத்தடம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...

ஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான்.
தற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்.....? ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்) 
ன் பக்கத்து சீட்ல ஒரு பிலிப்பைன்ஸ்காரன் இருக்கான் என சொல்லியிருந்தேன் அல்லவா..  நேற்று லஞ்ச் பிரேக்குல பேசிகிட்டு இருந்தப்போ, எதேச்சையாக சைனாகாரனுவ பத்தி பேச்சு வந்தது. முக்கியமாக அவனுக யூஸ் பன்ற 'டிஸ்யூ பேப்பர்' பற்றி. 

" இவனுக எப்படித்தான் டாய்லெட்டுக்கு பேப்பர் யூஸ் பன்றானுகளே தெரியில.. என்னதான் இருந்தாலும் தண்ணியை ஊத்தி சும்மா சள சளனு மேட்டர் முடிப்பதில் உள்ள திருப்தி அதில கிடைக்குமா..?.அதுவுமில்லாம, கருமம் புடிச்சவணுக டாய்லெட்ல ஒரு பக்கெட், மக் வைக்கிரானுகளா பாரு. எனக்கெல்லாம் எவ்வளவு அடக்கமுடியா அவசரமாக இருந்தாலும், ஹாஃப் டே லீவ போட்டுட்டு, டாக்சியை புடிச்சாவது வீட்டுக்கு போயி நிம்மதியா போவேனே தவிர, இந்த பப்ளிக் டாய்லட் அல்லது  ஆபிஸ் டாய்லட் யூஸ் பண்ணவே மாட்டேன்.  உனக்கு எப்படி... இந்த பேப்பர் மேட்டர் ரொம்ப சௌகரியமா இருக்கா.." என்று அவனிடம் கேட்டேன்.

" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது.  வேற வழியில்லாம யூஸ் பண்றேன் " என்றான் .

"அப்படியா....?! " என்றேன் ஆச்சர்யமாக.

" ஆமாம். பிலிப்பைன்ஸ் பூராவும் தண்ணிதான் யூஸ் பண்ணுவாங்க.. எனக்கும் சள சளனு தண்ணியை ஊத்தி கிளீன் பன்றதுதான் புடிக்கும்.." என்றான்.

என்னவோ தெரியில... அவன் அப்படி சொன்னதிலிருந்து ஏதோ நம்ம சொந்தக்கார பயலை நேரில் பார்த்த மாதிரி ஒரே  பீலிங்...!

கடைசியா அவன் தோள்மீது கைபோட்டு சொன்னேன், " நீ என் இனமடா.... ! "

கலாட்டூன் கார்னர்...


இது 3D அனிமேசன் . Photoshop மூலம் முயற்சி செய்தேன்... இதையும் ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும். இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))

--------------------------------------------------------------X------------------------------------------------------
 டிச்சி விடுவோம் பகுதியில இனி, தமிழ் சினிமாவில் அற்புதம் நிகழ்த்திய பல நடன அசைவுகளை கண்டெடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தாக்கலாம் என்றிருக்கிறேன்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை பின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, "டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் " என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். 




                                                                                                        இன்னும் அடிச்சி விடுவோம்..............