Thursday, 25 December 2014

கயல்- விமர்சனம்.

பிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்கள்தான் கதைத் தளம்.

று மாதங்கள் வேலை மீதி ஆறு மாதங்கள் ஊரைச் சுற்றுவது என்கிற ஜாலி பாலிசியுடன் திரிகிறார்கள் ஹீரோ ஆரோன் மற்றும் அவரது நண்பர் சாக்ரடிஸ்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடியை அவர்கள் சந்திக்க நேர்கிறது. உண்மை நிலை தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்யப்போய், பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும். அங்கே அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்களும் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து நையப்புடைக்கிறது அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல். தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்தக் கும்பல் நம்ப மறுக்கிறது. அவ்விருவரிடமும் உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.

அதுவரை தனக்கு காதல் வரும்படி எந்தப்பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது. பெண்ணைக் காணாமல் வெறியில் திரியும் அந்தக் கும்பலின் முன்பாகவே கயலை காதலிப்பதாக சொல்கிறான் ஆரோன். ஏற்கனவே கொலைவெறியில் இருப்பவர்களுக்கு இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அக்கட்டத்தில் ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.

இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயலுக்கு காதல் அரும்புகிறது. காதல் வலியால் துடிப்பவளை ஆசுவாசப்படுத்தி காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி யோசனை சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல்.

கயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத்தேட,காதல்கோட்டை பார்ட்-2 போல நீள்கிறது தேடும்படலம். இறுதியில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கயல் படத்தின் முடிவு.

முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .

ரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. மைனா சித்தார்த்-அமலாபாலை ஞாபகப்படுத்துகிறார்கள். இருவரில் கயல் மட்டுமே நம் கண்களில் நிறைகிறார். துரு துரு கண்கள், வெள்ளந்திப் பார்வை, திருஷ்டியாய் உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம், மாநிறம் தோற்றம் என்று ஒரு கிராமத்து தேவதையை அச்சு வார்த்தது போல் இருக்கிறார். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறார். 

ஹீரோவின் நண்பரா.. கூப்பிடுங்கடா சூரியை என்கிற சமகால சினிமா ட்ரெண்டுக்கு இயக்குனர் செல்லாதது ஆறுதல். ஆனால் இதில் சாக்ரடிசாக வரும் நண்பர் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு அவ்வப்போது பேசும் வசனம் புரியவும் இல்லை, புரிந்த சில இடங்களில் சிரிப்பும் வரவில்லை. இயக்குனரின் ஆஸ்தான காமெடியன் தம்பி ராமையா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் பெருங்குறையாக நிறைய கேரக்டர்கள் பேசும் வசனங்கள் தெளிவாக இல்லை. கல்யாண வீட்டில் சித்தப்பாவாக வரும் அந்தப் பெரிசு செய்யும் ரவுசு ஓரளவு புன்னகைக்க வைத்தாலும் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே சிறிது நேரமெடுக்கிறது. ஆர்த்தியும் அவரது மாணவிகளும் தங்கியிருக்கும் லாட்ஜ் ரூம்பாய், ஆர்த்தியை சார் என்று அழைக்கிறார். அதைக் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். சார் என்கிற வார்த்தையைத் தவிர அவர் பேசுவது எதுவுமே புரியவில்லை.அது நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்ட காட்சி என்றால் பேசுவது புரிந்தால் தானே சிரிக்க முடியும்...?

வில்லனாக வரும் யோகி தேவராஜ் முதல் போலிஸ், லாரி டிரைவர், கயல் பாட்டி என்று படத்தில் நிறையப் பேர் காதலில் phd முடித்தது போல் லெக்சர் எடுப்பது ஏனோ எரிச்சலைத் தருகிறது. வெளி உலகமே தெரியாத ஒரு இளம்பெண்ணை இப்படித்தான் ஒரு பாட்டி காதலனைத் தேடிப்போ என அனுப்பி விடுவாரா..?

ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். சீரியசான ஒரு விசயத்திற்காக போன்  செய்யும் போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அதைவிடக் கொடுமை அந்தப் போலீஸ்காரர்களிடம் ஆரோனும் சாக்ரடிசும் கக்கும் தத்துவார்த்த சிந்தனைகள். நறுக்கென்று நான்கு டயலாக்கில் முடித்திருக்கலாமே..

ஆரோன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதன் பின்னணியை அவனது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங். அதேப்போல் ஆரோனும் சாக்ரடிசும் ஒருவர் பெயரை மற்றொருவருக்கு இனிஷியலாக வைத்துக் கொள்வது 'நண்பேண்டா.. ' வுக்கு புது விளக்கம்.
படத்தில் முக்கிய பலம் என்று கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமாரி வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக பெரிய சபாஷ் போடலாம். தசாவதாரம் படத்தில் சொதப்பிய சுனாமி காட்சிகளை இதில் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார்கள். சுனாமியின் பின்னணிக்காக  டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மிரட்டலாக இருக்கிறது.

அதெல்லாம் சரி, இந்த சுனாமி காட்சி எதற்காக வைக்கப்பட்டது..? மனிதன் உருவாக்கிக் கொண்ட செயற்கை சீரழிவான சாதியால் பிரித்து வைக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியை இயற்கை பேரழிவான சுனாமி சேர்த்து வைக்கிறது  என்பதற்காகவா..? அப்படியானால் சுனாமிக்கு முன்பாகவே அவர்கள் சேர்வதாக ஏன் காண்பிக்க வேண்டும்..?

குளோசப் ஷாட்களில் கண்களும் வாயும் தெரிந்தால் போதும் என்பது பிரபு சாலமன் உத்தியா.? அப்படியானால்  சத்தம் வாயிலிருந்து வருவதால் வாயை மட்டும் காண்பித்திருக்கலாமே. சில  குளோசப் கட்சிகள் பயமுறுத்துகிறதய்யா.. 

ஒரு மென்மையான காதலை முரட்டுத்தனமாக சொல்லும் பிரபு சாலமனின் அதே டெம்பிளேட் கதைதான். ஆனால் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை. முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றுகிறது.

சுனாமியை தத்ரூபமாக காட்டிய விதத்திற்காகவும், கயல்விழி ஆனந்திக்காகவும் வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்.

                        ப்ளஸ்                   மைனஸ்

கயல்விழி

தெளிவில்லாத வசனங்கள்

சுனாமியை காட்டிய விதம்.

முதல் பாதி

ஒளிப்பதிவு
திரைக்கதை.

பாடல்கள்

சிலரது  செயற்கைத்தனமான நடிப்பு.


Saturday, 20 December 2014

பிசாசு - செல்ல மிரட்டல்

து என்ன தமிழ்த் திரையுலகத்துக்கு பேய் வருடமா?.அம்மையாரின் இலவச அறிவிப்புகள் போல் வாரத்திற்கு ஓன்று ரிலீசாகிறது.  சில வாரங்களுக்கு முன்பு அரண்மனை, யாமிருக்க பயமேன் வந்து மிரட்டியது. பிறகு, 'இருக்கு ஆனா இல்ல ' வந்து கிச்சு கிச்சு மூட்டியது. சென்ற வாரம் 'ரா' பார்த்தேன். அதற்கு முதல் வாரம் 'ஆ..'.  நேற்று பிசாசு.  நைட் பாத்ரூம் எழுந்து போகக் கூட அச்சமாக இருக்கிறது. ஜன்னல் கதவு அசைந்தாலே மனது கலவரமாகிறது. 

பொதுவாக ஹாரர் படங்களில் உள்ள பிளஸ் என்னவென்றால் விறுவிறுப்பான திரைக்கதைக்கு  நிறைய யோசிக்க வேண்டியதில்லை. தானாகவே அமைந்துவிடும். எந்த நேரத்தில் என்ன நிகழும் என்கிற சிறு படபடப்பே மொக்கைப் படத்தையும் சுவாரஸ்யமாக்கிவிடும்.

அதிலும் சொதப்பிய படங்களும் இருக்கிறது . இருக்கு ஆனா இல்ல, ரா அந்த வகைப் படங்களே. இந்த வருடத்தின் கடைசி ஹாரர் படமான பிசாசு எப்படி இருக்கிறது..?

ணிரத்னம் , ஷங்கர் படங்களின் ஒவ்வொரு காட்சிகளிலும் அவர்களது தனித்துவமான முத்திரை தெரியும். மிஷ்கினும் அவர்கள் வரிசையில் இணையக் கூடிய ஆளுமைதான். சம கால இயக்குனர்களில் தனித்து தெரிபவர். எங்கிருந்து சுடுகிறார் எனத் தெரியாது. ஆனால் விஷுவல் மீடியாவான சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் திறமையாக கையாளக் கூடிய விற்பன்னர். அவரது வழக்கமான குறியீடுகளுடன் வந்திருக் கிறது பிசாசு.

ரொம்ப சிம்பிளான கதைதான்.

வயலின் கலைஞரான சித்தார்த் (புதுமுகம் நாகா), சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்ற போராடுகிறார். துரதிஷ்டவசமாக அவள் இறந்து விடுகிறாள்.

இறந்துபோன அப்பெண்ணின் ஆவி சித்தார்த் மீது காதல் கொண்டு அவர் வீட்டில் மையம் கொள்கிறது. அங்கு அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது.

ஆரம்பத்தில் அவனை அழிக்க வந்த கெட்ட ஆத்மா என நினைத்திருக்கையில் கடைசியில் அவனைக் காக்க வந்த நல்ல ஆத்மா என தெரியவருகிறது. அந்த ஆவி அவனை விட்டுச் செல்ல வேண்டுமானால் அவளை காரில் இடித்து கொன்றவனை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தரவேண்டும் என முடிவு செய்கிறார்கள் சித்தார்த்தும் அவரது நண்பர்களும் .

இதற்கிடையில், அப்பெண்ணின் தந்தையான ராதாரவியும் காரில் இடித்தவனை பழி தீர்க்க துடிக்கிறார். இவர்கள் எல்லோரும் அவனை கண்டுபிடித்தார்களா என்பதே மீதிப்படம்.
  
அந்த Color blind மேட்டர் எங்கிருந்து பிடித்தார் எனத் தெரியவில்லை. ஆனால் அதை கிளைமாக்ஸ் ட்விஸ்ட்-ல் வைத்திருப்பது தமிழ் சினிமாவில் புதிது. 
ஹீரோ நாகா ஒரு புரடியூஸரின் மகன் என மிஸ்கின் ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம். இந்தக் கதைக்கு சுமாரான ஃபேஸ் இருந்தால் போதும் என நினைத்திருக்கிறார். ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார். அதிர்ச்சியான காட்சிகளில் கண்களில் தெரியும்  பயம் பர்ஃபெக்ட். வாய்ஸ் மாடுலேஷன் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. அது என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல், ஒத்தக் கண்ணை மறைத்துக் கொண்டு...? மிஸ்கினின் எல்லா படங்களிலும் ஒருவர் இந்த வகை சிகை அலங்காரத்துடன் வருகிறாரே.

புதுமுக நாயகி கேரளத்து பைங்கிளி பிரயுகா செம கியூட் . ஆரம்பக் காட்சிகளோடு அவர் தரிசனத்திற்கு தடா போட்ட இயக்குனர் மிஸ்கினுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். ராதாரவி சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிறைகிறார். தன் மகளை பேயாக பார்க்கும் அந்தத் தருணத்தில் மண்டியிட்டு தவழ்ந்துக் கதறும் அந்த ஒரு காட்சியே போதும்.

பாசத்துடன் தனது தந்தையான ராதாரவியின் கன்னங்களை தடவும் அந்தப் பிசாசு, 'உன்னைக் கொன்றவனை கொல்லாமல் விடமாட்டேன்' என்று ராதாரவி சொன்னவுடன் கோபத்துடன் கைகளை இழுத்துக்கொள்ளும். அந்த ஒரு சீனிலே யார் கொலையாளி என்பதை குறிப்பாக சொல்கிறார் இயக்குனர்.

படத்தில் கிளிசே வகை குறியீடுகள் ஆங்காங்கே வந்து சலிப்படைய வைத்தாலும் மறைமுகமாக அவர் சொல்லும் சில நல்ல மெசேஜ்கள் வரவேற்கப்படவேண்டியவை.குறிப்பாக செல்போனை நோண்டிக்கொண்டே கார் ஓட்டக்கூடாது. அதுதானே அவ்வளவு பெரிய பிரளயத்துக்கு காரணமாக அமைந்தது.

படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. மணிரத்தினத்துடன் இணையும் போது மட்டும் ஒளிப்பதிவா- ளர்கள் தனித்து தெரிவார்கள். அதே மேஜிக் மிஸ்கினுடனும் ஒர்க்அவுட் ஆகிறது. முக்கியமாக கேமரா கோணங்கள் உலகத் தரம். சபாஷ் ரவி ராய்.

இந்தப் படத்திற்கு இளையராஜா தேவையில்லைதான். ஆனால் ராஜாவிடம் கேட்டு வாங்குவது போல் அரோல் குரேலியிடம் மிரட்டி வாங்கியிருக்கிறார் மிஸ்கின். நிறைய இடங்களில் மௌனமாக இருந்தாலும் தேவையான இடங்களில் பின்னணி இசை மிரட்டுகிறது . குறிப்பாக 'போகும் பாதை தூரமில்லை' பாடலில் வரும் வயலில் இசை செம்ம..!

பொதுவாக பேய் என்றால் நள்ளிரவு , அமாவாசை, நிறைந்த பௌர்ணமி இப்படிப்பட்ட நேரங்களில்தான் உலாவரும் என்கிற தமிழ் சினிமாவின் விதியை மாற்றி எழுதியிருக்கிறார் மிஸ்கின். தவிர, பேயை விஷுவலாக  காட்ட அவர் எடுத்திடுக்கும் சிரத்தையும் அதன் பெர்பெக்ஸனும் பாராட்டப்படவேண்டியது. முதல்முறையாக அந்த பேய் உருவத்தை காணும்போது உடம்பே சிலிர்க்கிறது. பிறகு அந்தரங்கத்தில் பறந்து வருவது எல்லாம் புளித்துப் போன பழைய ஐடியாதான்.
குறைவான கேரக்டர்கள். யாரிடமும் மிகை நடிப்பு இல்லை. பேயோட்ட வரும் அந்த பெண், நாகாவின் அம்மாவாக வரும் கல்யாணி, நாகாவின் நண்பர்கள், ஆட்டோகாரர்  உட்பட எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் ஆறு நிமிடங்கள் ஓடும் குறும்படத்திலே இப்படிப்பட்ட கதையை கலை நுணுக்கத்துடன் நேர்த்தியாக சொல்கிறார்கள். அதை இரண்டு மணி நேரத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர். அதனால் ஏனோ ஒரு குறும்படத்தை பார்த்த எஃபெக்ட் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டெக்னிகல் சமாச்சாரங்களைத் தவிர்த்து படத்திற்கான செலவு மிகக் குறைவுதான்.

மற்றபடி வழக்கமான தமிழ்ப் பேய் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டுத்தான் நிற்கிறது பிசாசு. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

                        ப்ளஸ்                   மைனஸ்
மிஸ்கின் இயக்கம் . குறும்பட எஃபெக்ட் .
இசை , ' போகும் பாதை தூரமில்லை ' பாடல் . புளித்துப்போன குறியீடுகள்.
ராதாரவி நடிப்பு .
ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்.

Thursday, 18 December 2014

லிங்கா, பிம்பிளிக்கி பிளாப்பி ஆனது எப்படி..?



ரு ரஜினி ரசிகனாகத்தான் படம் பார்க்க சென்றேன். இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதவே கூடாது என எண்ணியிருந்தேன். ஏனென்றால் வலைப்பூவில் விமரிசனம் என்கிற பெயரில் கிறுக்க ஆரம்பித்தப் பிறகு தியேட்டரில் நான் பார்க்கும் முதல் ரஜினி படம். அதனால் தலைவர் படத்தை விமர்சனக் கண்களோடு தோண்டித் துருவி ஆராயக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இருப்பினும் FDFS என்பதில் மாற்றம் இல்லை. ஏனென்றால் வெளிநாடுகளில் அதற்கு அவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல, பாடாவதி படங்களையே முதல்நாள் பார்க்கும்போது தலைவரின் படம் அதுவும் ரசிகப் பட்டாளங்களோடு பார்க்கும் பாக்கியம் வேறு அல்லவா.. !

நான் பார்த்த தியேட்டரில் ஆன்லைன் புக்கிங் கிடையாது. ஆபிசில் 3 மணிக்கு எனக்கு லஞ்ச் பிரேக். அந்த இடைப்பட்ட நேரத்தில் சென்று டிக்கெட் எடுத்து விடலாம் என்று ஆபிசில் எவரிடமும் சொல்லாமல் புறப்பட்டு சென்றேன். அங்கே போனால் எனக்கு முன்பாக பெரிய கியூ . கடைசியாக நிற்பவரிடம் கேட்டேன்.

' எத்தன மணிக்கிங்க டிக்கெட் கொடுப்பாங்க.. '

' தெரியாதுங்க.. '

' படம் எத்தன மணிக்கி.. '

' தெரியாது.... '

' அப்புறம் எதுக்கு கியூல நிக்கிறீங்க.. '

' எப்படியும் இந்த கவுண்டர்லதான் டிக்கெட் கொடுப்பாங்க. நைட் எப்படியும் ஷோ போடுவாங்க. வாங்கிட்டுத் தான் போறதா இருக்கேன் .. '

நானும் நின்றுவிட்டேன். ஆபிசுக்கு போன் செய்து ஒரு அர்ஜெண்ட் மேட்டர். ஸெகண்ட் ஆஃப்  லீவ் எடுத்துக் கிறேன் என சொன்னேன். அது போகும்போது அல்லவா சொல்ல வேண்டும். போயிட்டு போன் பண்ணி சொன்னா எப்படி என்று கடிந்த மேனேஜரை ஒரு வழியாக சமாளித்தேன். அப்படி இப்படியென்று மூன்று மணி நேரம் இழுவைக்குப் பின் தலைவரின் லிங்கா டிக்கெட் கையில் கிடைத்தது.

இதெல்லாம் எதற்காக என்றால், லிங்காவை இணையத்தில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் நேற்று காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார். ஏதோ ரஜினி மீது வன்மத்தை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே இணையத்தில் லிங்காவுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஒரு விதத்தில் லிங்காவை 'மொக்கை' என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். முதல்நாள் காட்சியின் இடைவேளையின் போதே தல செங்கோவியின் போஸ்ட் ஒன்றில் 'படம் மொக்கைய்யா' என கமெண்டிட்டேன். பிறகு, நான்கு வருட தவத்திற்குப் பின் ஏக்கத்துடன் காத்திருந்த ஒரு ரசிகனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை  எப்படி பதிவு செய்வது..?

மூன்று நாட்களில் 100கோடி வசூல் சாதனை என்று விளம்பரப்படுத்துகிறீர்களே. அது எப்படி வந்தது..? எல்லாம் எங்கள் ரஜினிக்காக நாங்கள் கொடுத்த தட்சனையய்யா..! (நள்ளிரவு ரிலீஸ் என்பதால் எனக்கு மட்டுமே டாக்சி $50+டிக்கெட் $20. ஆக மொத்தம் இந்திய ரூபாயில் மூவாயிரத்துக்கு மேல் செலவுய்யா..). ஆனால் விமர்சனம் மட்டும் பண்ணக் கூடாது என்றால் எப்படி.? அப்படியே பெரிய இழப்பு என்றால் தலைவரிடம் போய் நில். தலைவர் தன் சம்பளத்தில் கால்வாசி  திருப்பிக் கொடுத்தாலே போதும். மொத்த இழப்பையும் சரிக்கட்டி விடலாம்.


ன்று படம் முடிந்து வெளியே வரும்போது கடும் மன உளைச்சல் அடைந்தேன். ரஜினி, தமிழ் சினிமாவின் எவ்வளவு பெரிய ஆளுமை. ஒட்டுமொத்த தமிழர்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக கலைஞன். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மார்க்கெட்டிங் உள்ள மகா சக்தி. அவரை வைத்து இப்படி பல்லாங்குழி விளையாடு கிறார்களே..!

ரஜினியின் இமேஜுக்கு தகுந்தாற்போல் கதையே பின்ன முடியாதா..? அவரது ஸ்டைலுக்கு தீனி போடுவது போல் திரைக்கதையை அமைக்க முடியாதா..? 25 வருடங்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரின் ரசிகர்களை  குறைந்தபட்ச அளவு கூட இவர்களால் திருப்திப்படுத்த முடியாதா..?  ரசிகர் மன்ற ஷோவில் ரசிகனையே தூங்க வைத்த கொடுமை எங்கேயாவது நடந்திருக்காய்யா..?

இதில் படைப்பு ரீதியாக லிங்கா அடைந்த தோல்வியை சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படம் மொக்கை என்று உதடு வரை வரும் வார்த்தையை அப்படியே விழுங்கி விடுகிறார்கள். சிலர் ' மூணு நாள்ல நூறு கோடி வசூல். அதுதான் சூப்பர்ஸ்டார் ' என்று ஸ்டேடஸ் போட்டு காயத்துக்கு களிம்பு தடவிக் கொள்கிறார்கள். ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன்... தலைவர் படம் மூணு நாள்ல 100 கோடி வசூல் ஆவதெல்லாம் ஒரு பெருமையா..? அஞ்சான் படத்தை முதல் நாளே ஒட்டுமொத்தமா ஊத்தி ஊத்தி கழுவின போதும் முதல் நாள் வசூல் 11 கோடி என்று லிங்குசாமி பீத்திக் கொண்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..?

இப்போதெல்லாம் அச்சு ஊடகங்களில் வரும் விமர்சனங்களை விட இணையத்தில் சூட்டோடு சூடாக வரும் விமர்சனங்களைத்தான் தமிழ் சினிமா உலகம் உத்து உத்து பார்க்கிறது. ஏனென்றால் இவர்கள்தான் எந்தவித நீக்கு போக்கும் இல்லாமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்வார்கள். படம் மொக்கை என்றால் சுத்தி வளைக்காமல் நேரடியாக பாய்ண்ட்டுக்கு வருவார்கள். அப்படியிருக்க, தலைவர் படமாகவே இருந்தாலும் குறைகளை தைரியமாக சுட்டிக்காட்டினால்தான் அடுத்தப் படத்தில் இன்னும் கூடுதல் கவனம் எடுப்பார்கள். அதைவிடுத்து படம் செம்ம... சூப்பர்ரோ சூப்பர்... அப்படின்னு சொல்லிகிட்டே இருங்க.. அடுத்து இன்னொரு பாபாவோ அல்லது நாட்டுக்கொரு நல்லவனோத்தான் வரும்.  





லிங்கா படம் பார்த்தவர்கள் அனைவருமே விமர்சகர்களாக மாறி தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங் களில் கொட்டிவிட்டனர். ஒட்டுமொத்த விமர்சனங்களையும் படித்துப்பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும். எல்லோருமே ரஜினியின் படத்தை ஆவலோடு எதிர்பார்த்தவர்கள். ஒரு பாட்சாவாகவோ அல்லது சிவாஜியாகவோ இல்லாவிட்டாலும் அருணாசலம் ரேஞ்சுக்காவது இருக்கும் என நம்பியிருந்தவர்கள்.ஆனால் பாபாவைவிட மொக்கையாகிப் போனதுதான் எல்லோரையும் இணையத்தில் பொங்க வைத்திருக்கிறது.

பாபா படத்திலும் குசேலன் படத்திலும் என்ன தவறுகள் செய்தார்களோ அதையேத்தான் லிங்காவிலும் செய்திருக்கிறார்கள். இரண்டுமே வித்தியாசமாக கதையமைப்பு உடையதுதான். ஆனால் ரஜினி என்கிற மெகா பிம்பத்தை மட்டும் காண்பித்து படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்ததின் வெளிப்பாடுதான் அவ்வளவு பெரிய தோல்வி. பாபாவை விடுங்கள், குசேலன் ஏற்கனவே கேரளாவில் சக்கைப்போடு போட்ட படத்தின் ரீமேக். ஆழமான கதையும் கூட. ஆனால் இங்கே என்ன செய்தார்கள்..? ரஜினி படமாச்சே. அவருக்கேற்ற மாதிரி எடுக்க வேண்டும் என்று தேவையில்லாத பில்டப் காட்சிகள் , கிராபிக்ஸ் பாடல் காட்சிகள், நிறைய கதா பாத்திரங்கள், வலிய திணிக்கப்பட்ட அரசியல் வசனங்கள் என்று கதையின் மையத்தையே சிதைத்து விட்டார்கள். வடிவேல் போர்சன் மட்டும் ஓரளவு சகிக்கும்படி இருந்தது.

ஆனால் பாருங்கள். பாபா, குசேலன், லிங்கா இந்த மூன்று படத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. மூன்று படத்தின் இயக்குனர்களும் ஒரு காலத்தில் ரஜினியை உச்சத்திற்கு கொண்டுவந்தவர்கள். மூன்று இயக்குநர்களுமே பீல்ட் அவுட்டாகி ஓய்வு பெரும் கட்டத்தை தாண்டியபிறகு ரஜினியே அழைத்து வாய்ப்புக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பதுதான் இங்கே டச்சிங். சூப்பர்ஸ்டாருடன் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாபா எப்படி கடைசி படமானதோ, பி.வாசுவுக்கு எப்படி குசேலன் கடைசிப் படமானதோ அதேப் போல் கே.எஸ்.ரவிக்குமாருக்கு லிங்கா கடைசிப் படம். 

லிங்கா எத்தனைக் கோடி வேண்டுமானாலும் வசூல் செய்யட்டும். படைப்பு ரீதியாக லிங்கா படுதோல்வி. இப்படி ஒரு கதையை எடுத்ததற்கே பாராட்ட வேண்டும் என்கிறார்கள். ஒரு வரலாற்று நிகழ்வை தவறாக பதிவு செய்துள்ளார்களே அது எவ்வளவு பெரிய துரோகம். இனி பென்னி குயிக்கின் வரலாற்றை யாருமே திரைப்படமாக எடுக்க முடியாதபடி செய்திருக்கிறார்களே அது நியாயமா...?

காரணமே இல்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட ஒரு அணையைப்பற்றிய கதையை ரஜினி ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...? அவர்கள் சொல்லாவிட்டாலும் அது தற்போது தமிழர்களால் அதிகம் பேசப்படுகிற முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய கதைதான் என்பது தானே நிதர்சனம். அந்த அணையைக் கட்ட பென்னி குயிக் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் மூலம் அறிவோம். பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது விபத்தில் சிக்கி இறந்த அவரது ஆறு வயது மகளை அங்கேயே புதைத்துவிட்டு  பணியைத் தொடர்ந்தார் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அது போலவே இதில் லிங்கேஸ்வரன் பல சவால்களை எதிர்கொள்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது பிரிட்டிஷ் அரசாங்கம். இதில் அவர்களை வில்லன்கள் போல் சித்தரிப்பதில் கூட லாஜிக் பார்க்கவில்லை. ஆனால் தமிழத்தின் மிக முக்கியமான ஒரு பிரச்னையை தொட்டுவிட்டு அதில் உள்ள அரசியலை துளி கூட பேசாமல் போனால் எப்படி..?

1979 ஆம் ஆண்டிலிருந்தே அணை திடமாக இல்லை, அதனால் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கும் கேரள அரசுக்கு, அணையின் ஸ்திரத்தன்மையை நிரூபிப்பதிலே தமிழக அரசின் தாவு தீர்ந்து போய்கொண்டிருக்கிறது. இதைத்தான் லிங்கா படத்தின் ஆரம்ப காட்சியில் காண்பிக் கிறார்கள். அணை திடமாக இல்லை என்று சர்டிஃபிகேட் கொடுக்கும்படி வில்லன் மிரட்டுகிறார். ஆனால் உண்மையிலேயே அணை திடமாகத்தான் உள்ளது என்கிறார் பொன்வண்ணன். இதில் வில்லனை கேரள அரசின் குறியீடாகத்தான் காண்பிக்கிறார் இயக்குனர். அப்படியே நூல் பிடித்தது போல் செல்ல வேண்டியது தானே...?

படத்தின் ஆரம்பத்தில் இந்தப்படம் முல்லைப் பெரியாறு கட்டிய பென்னி குயிக்கின் கதை என்று தைரியமாக சொல்ல வேண்டியதுதானே. அப்படி சொன்னால் கேரளாவை வில்லனாக சித்தரிப்பது போல் ஆகிவிடும். அங்கிருந்து வரும் 4 கோடி கலெக்சன் கட்டாகிவிடும். ஏன் மலையாளப் படத்தில் தமிழர்களை வில்லனாக சித்தரிக்க வில்லையா..? பெரும்பாலான மோகன்லால் படங்களில் வில்லன்கள் தமிழ் பேசுவார்களே.. இதே முல்லைப் பெரியாறு பிரச்சனையை மையமாக வைத்துத்தானே சோஹன் ராய் என்ற மலையாளி DAM999 என்ற படத்தை எடுத்து நாம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை எல்லாம் நக்கலடித்தார். அந்த தைரியம் கூட இவர்களுக்கு இல்லையே.

மீத்தேன் திட்டத்தைப் பற்றி காவிரி டெல்டா விவசாயிகளுக்கே சரியான புரிதல் கிடையாது. ஏன் அத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட திமுக அரசுக்கே அதிலுள்ள சாதக பாதங்களைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு அடிப்படை அறிவு கிடையாது. ஆனால் மீத்தேன் பற்றிய விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் பரப்பியது கத்தி படம் இல்லையா..? சுட்ட கதைதான் என்றாலும் அரசியல் ரீதியான எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் கதையில் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாமல் பிரச்சனையின் தீவிரத்தை உள்ளபடியே சொன்னதால்தானே தல ரசிகர்களும் அப்படத்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

நீங்கள் எடுத்தது தமிழ் படம்தானே. அதில் தமிழ் நாட்டுப் பிரச்சனையைப் பற்றி தைரியமாக பேச தில் இல்லை என்றால் என்னா ம@#$துக்கு இந்த டேம் கதையை எடுக்கனுங்கிறேன்..?

நம்ம தலைவரின் தைரியத்தை குசேலன் படத்தின் போதே பார்த்தாச்சு. ஒக்கேனக்கல் பிரச்சனை தொடர்பாக தமிழ்த் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர் உணர்ச்சி வசப்பட்டு வாட்டாள் நாகராஜனை மைக்கில் வெளுத்து வாங்கினார். பிறகு, குசேலன் படம் கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இழப்பு சில கோடிகள் தான், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார். கடைசியில் என்ன நடந்தது ..? கன்னட டிவிகளில் கதறிக் கதறி மன்னிப்பு கேட்டாரே ஞாபகம்  இருக்கா..?  

 ஒரு 'சின்ன மேட்டரை' சொல்லி ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்களை சாதிய ரீதியாக ஒருவரால் பிரிக்க முடிகிறது. அப்படி பிரிந்து கிடக்கும் இந்தியர்களை, முதலியார்கள் யாரும் வரவேண்டாம், நாயுடு, செட்டியார், கவுண்டர், கீழ் சாதி, மேல்சாதி, இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் யாரும் வரவேண்டாம். உடம்பில் இந்திய ரத்தம் ஓடுறவன் மட்டும் வாங்கடா என்கிறார் ரஜினி. ஒட்டு மொத்த சாதி வெறியையும் தூக்கி எறிந்துவிட்டு இந்தியன் என்கிற ஒரு புள்ளியில் எல்லோரும் இணைவதாகக் காட்டியிருக்கிறார்கள். இவ்வளவு சின்ன டயலாக்குல இவ்ளோப் பெரிய விஷயம் பொதிந்து கிடப்பது இப்பத்தான்யா தெரியுது. இது தெரியாமத்தான் பெரியார் அத்தனை வருஷம்  கஷ்டப்பட்டிருக்கிறார்.

லிங்கா படம் திரைக்கதை, காட்சியமைப்பு, இசை , நடிப்பு , வசனம், இயக்கம் என எல்லா வகைகளிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுப் படம் என்று மட்டும் சொல்லாதீர்கள். கருத்தியல் ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் லிங்கா படு தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

Friday, 12 December 2014

லிங்கா...

லிங்கா படத்தின் கதை சம்மந்தமாக நடந்துவந்த வழக்கின் நேற்றைய தீர்ப்புக்காக பட வெளியீட்டை சற்று தாமதப்படுத்தியிருக்கிறார்கள் போல. நேற்று மாலையே இங்கு வெளியாகவேண்டிய படம். பிற்பகல் நான்கு மணிக்கு ரிசர்வேசன் என்று ஒட்டியிருந்தார்கள். நான்கு மணியிலிருந்து வரிசை நீள ஆரம்பித்துவிட்டது. ஐந்து மணிக்குத்தான் டிக்கெட் என்றார்கள். இன்னும் இந்தியாவிலிருந்து பாஸ்வேர்டு வரவில்லை என்றார்கள். பிறகு ஆறு என்றார்கள். ஏழு மணியாகலாம் அதுவும் உறுதியாக சொல்லமுடியாது என்றார்கள். எப்படி இருந்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ஷோ என்றார்கள். மறுநாள் வேலை. ஆனாலும் இவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கிடையில் மூன்று மணிநேரம் பொறுமை காத்து கியூவில் நின்றார்கள். அதில் நிறையப்பேர் பெண்கள். எப்படியும் டிக்கெட் வாங்கிவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டு நகரப் போவதாகக் கங்கணம் கட்டி நின்றார்கள். எல்லாமே சூப்பர்ஸ்டார் என்கிற மந்திரச்சொல்லுக்காக. ஒரு நடிகரின் படத்தை முதல்நாள் முதல் ஷோவே பார்க்கவேண்டும் என்கிற ஆர்வ மிகுதியில் ஆண் ரசிகர்களுக்கு இணையாக பெண்களும் காத்திருந்த காட்சியை இப்போதுதான் காண்கிறேன்.

போகட்டும். இனி, தமிழ்த்திரையுலகின் ஒரே  சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா எப்படி..?

முதலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் கதையைத்தான் ரஜினியிடம் சொல்லியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். படம் நிகழ்காலத்தைத் தொட்டுச்செல்ல வேண்டும் என்பதால் தாத்தா -பேரன் என ஜல்லியடித்து, முத்து படத்தின் கதையை கொஞ்சம் டிங்கரிங் செய்து லிங்காவாக உருவாக்கி யிருக்கிறார் இயக்குநர்.

ரஜினி எதற்காக இந்த ' டேம் ' கதையை தேர்ந்தெடுத்திருப்பார்.? ஒருவேளை கத்தி படம் மீத்தேன் பிரச்சனை யைப்பற்றி பேசி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தமிழர்களின் மற்றொரு வாழ்வாதார பிரச்சனையான அண்டை மாநிலங்களுடான அணைப்பிரச்சனையைப் பற்றி பேச நினைத்திருக்கலாம். நல்ல விசயம்தான். ஆனால் அதில் உள்ள அரசியலைப் பற்றி கொஞ்சமாவது பேசவேண்டாமா..?

சரி பென்னிகுயிக்கின் கதை என்று முடிவாயிற்று. அந்த அணைக்கு ஒரு பெயர் வைக்க வேண்டாமா...? முல்லைப் பெரியாறு என வைத்தால் கேரளா கலெக்சன் போய்விடும்.காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதைப் பற்றி பேசினால் கர்நாடக கலெக்சன் படுத்துவிடும். பாலாற்றைப் பற்றி பேசினால் ஆந்திராவில் ஓடாது. அதனால் பட்டும் படாமல் பேசியதால் என்னவோ படமும் நம் மனதில் பட்டும் படாமல் நிற்கிறது.



சரி கதைக்கு வருவோம்.

சோலையூரில் உள்ள அணையின் ஸ்திரத்தன்மையை சோதிக்க வரும் அதிகாரி பொன்வண்ணனிடம் அணை மோசமாக இடியும் தருவாயிலில் உள்ளது என பொய் சான்று அளிக்கும்படி அந்த ஊர் எம்பியான ஜெகபதிபாபு மிரட்டுகிறார். அவர் மறுக்கவே கொலை செய்யப்படுகிறார்.சாகும் முன் ஊர் பெரியவரான கே.விஸ்வநாத்- திடம் அந்த அணைக்கு பக்கத்தில் இருக்கும் கோயிலை திறந்தால் மட்டுமே இவ்வூரை காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.

அந்தக் கோயிலைத் திறக்கவேண்டுமானால் அதைக் கட்டிய லிங்கேஷ்வரனின் பேரன்தான் வரவேண்டும் என அந்தப் பெரியவர் விரும்புகிறார்.  அந்தப் பேரன்தான் லிங்காவான ரஜினி. அவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தன் பேத்தி அனுஷ்காவிடம் ஒப்படைக்கிறார். ரஜினியோ தன் சகாக்களான சந்தானம், கருணாகரன், பாலாஜி இவர்களுடன் உலகமகா திருடர்களாக இருக்கிறார்.

அவர்களை ஒருவழியாக கண்டுபிடித்து கூட்டிவருகிறார் அனுஷ்கா. அவர்களோ அந்தக் கோயிலில் உள்ள மரகத லிங்கத்தை அபேஸ் பண்ண திட்டம் போட்டு மாட்டிக்கொள்கிறார்கள்.அப்புறமென்ன, லிங்காவான ரஜினி யார் என்பதை நீண்ட நெடிய பிளாஸ் பேக்கில் கே.விஸ்வநாத் விவரித்து சொல்ல வழக்கம் போல ஹீரோ திருந்துகிறார்.

அதில்தான் பென்னிகுயிக்கின் கதை வருகிறது. லிங்கேஸ்வரன் வெளிநாட்டில் சிவில் எஞ்சினியரிங் மற்றும் ஐசிஎஸ் படித்துவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கலெக்டராக நியமிக்கப் படுகிறார். அவர் ஆட்சிக்குற்பட்ட சோலையூரில் தண்ணீரைத் தேக்கும் அணையில்லாமல் வெள்ளத்தினாலும் கடும் வறட்சியினாலும் மக்கள் அவதிப்படுவதை கண்டு அங்கு அணை கட்ட முயற்சி செய்கிறார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ அதற்கு அனுமதியளிக்க மறுக்கவே தனது கலெக்டர் உத்தியோகத்தை ராஜினாமா செய்து தன் சொந்த செலவில் மக்கள் சக்தியைக் கொண்டு அந்த அணையைக் கட்டுகிறார் லிங்கேஸ்வரன்.

அந்த அணையைக் கட்டிவிட்டால் லிங்கேஸ்வரன் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக ஆகிவிடுவாரோ என்று அவருக்கு நிறைய இடையூறுகள் தருகிறது பிரிட்டிஷ் அரசாங்கம். அதையும் வெற்றிகரமாக சமாளித்து கட்டி முடிக்கிறார் லிங்கேஸ்வரன். இறுதியில் தன் நயவஞ்சகத்தால் அவ்வூர் மக்கள் மத்தியில் தவறான செய்தியைப் பரப்பி லிங்கேஷ்வரனை ஊரைவிட்டே துரத்துகிறார் ஒரு வெள்ளைகார துரை. பிறகு மக்கள் உண்மையை உணர்ந்து அவரை தெய்வமாக போற்றுகிறார்கள். இது பிளாஷ்பேக்

அந்த அணை தற்போது பழுதடைந்துள்ளது என சொல்லி பராமரிப்பு செலவாக பல கோடியை சுருட்ட திட்டமிடுகிறார் சமகால அரசியல்வாதியான ஜகபதி பாபு. அதை எவ்வாறு பேரன் லிங்கா முறியடிக்கிறார் என்பதை ரஜினிக்காக ஒரு தடவை தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.   


கதை என்னவோ ரஜினிக்கு சவாலானதுதான். ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை விட்டு அவர் விலகும் போது அவர் ரசிகர்களே ஏற்றுக்கொள்ளாமல் படுதோல்வியை அளித்த வரலாறு நிறைய இருக்கிறது. இதுவும் அதுபோல ஒரு முயற்சிதான்.

60 வயதைக் கடந்த ரஜினியா அது..? ஓபனிங் சாங்கில் சும்மா விளையாண்டிருக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டாரின் இளமை துள்ளல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடுமா..?

படத்தின் முதல் சொதப்பல் திரைக்கதைதான். அதிலும் அந்த பிளாஷ்பேக். பொதுவாக பிளாஷ்பேக்கில் சொல்லவேண்டிய விஷயத்தை காட்சிகளால் சுருங்கச்சொல்லி மனதில் நிறையச்செய்வார்கள். இதில் அணைகட்டும் விஷயத்தை இவ்வளவு நீ.....ட்டி முழக்கி சொல்லவேண்டுமா..? 1939-ல் அந்த சம்பவங்கள் நடப்பதாக காண்பிக்கிறார்கள். அதற்கு நான்கைந்து பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் குதிரைகளை மட்டும் காண்பித்தால் போதுமா...? அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிகை அலங்காரம்,உடை , பேசும் மொழி எல்லாமே தற்போதைய காலகட்டத்தில் இருப்பது போல் உள்ளதே... சூப்பர் ஸ்டார் படம் என்பதால் காட்சிகளின் நம்பகத்தன்மை அவ்வளவு முக்கியமில்லையோ..?

லலிதா ஜுவல்லர்ஸ் கடையிலிருந்து மரகதம் பதித்த நெக்லசை ரஜினி திருடுவதாக ஒரு காட்சி. நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார்கள் போல. திடீர் செக்யூரிட்டியாக சந்தானம் அங்கு பணிபுரிபவர்களிடம் சகஜமாக பேசுகிறார். ஒருவருக்கும் சந்தேகம் இல்லை. 70 வருடங்கள் மூடப்பட்ட கோயிலினுள்ளே விளக்கு எரிய எண்ணெயும் பூஜிக்க பூக்களும் கிடைக்கிறது. ரஜினி படம் என்பதால் லாஜிக்கை பற்றி ஒரு பய கேள்வி கேட்கக் கூடாது என நினைத்திருக்கிறார்கள்.

பொதுவாக தலைவர் படங்களில் ஆரம்பத்தில் ஆட்டோகாரனாகவோ, பால்காரனாகவோ அல்லது கூலித் தொழிலாளியாகவோ இருந்து, பின்பு பெரிய தொழிலதிபராக உயருவதுபோல் கதையமைப்பு இருந்தால் இறுதிக் காட்சியில் மீண்டும் பழைய நிலையிலேயே இருப்பதுதான் தனக்கு திருப்தி என்பதுபோல காட்சி அமைத்துக் கொள்வார். அதற்காக இதில் திருடனாக இருந்து ராஜாவாக உயர்பவர் கடைசியில் கைதியாக செல்வதுபோல் காட்சியமைக்கவேண்டுமா..?

படத்தின் சண்டைக்காட்சிகள் இன்னொரு சொதப்பல். ரயிலில் நடக்கும் சண்டைகாட்சி கார்ட்டூன்(அனிமேசன்) ரகம். அதிலும் ஸ்லோ மோசனில் இன்னும் கொடுமையாக உள்ளது. இறுதிகாட்சியில் தெலுங்கு சினிமாவோ தோற்றுவிடும் அளவுக்கு ரஜினியை வைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள்.

நண்பா பாடல் மட்டும் பரவாயில்லை. மற்ற பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. ரஜினி-ஏ.ஆர் ரகுமான் காம்பிநேசனில் பாடல்கள் சொதப்பியது இந்தப்படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக மனதில் நிற்பவர்கள் கலை இயக்குனரும் சந்தானமும்.அந்தக் கால அரண்மனை, பிரிட்ஷ்காரர்களின் பங்களா, பிரும்மாண்ட அணை என அனைத்தையும்  கலை நுணுக்கத்துடன் செதுக்கியிருக்கிறார் சாபு சிரில். அதேப்போல் ரத்னவேலுவின் ஒளிப்பதிவும். டாப் ஆங்கிளில் அணையையும் அதிலிருந்து சீறிப் பாயும் தண்ணீரையும் அட்டகாசமாக படம்பிடித்திருக்கிறார்.



பொதுவாக சூப்பர் ஸ்டாரின் படங்களில் ஒவ்வொரு பிரேமிலும் அவர் தனியாக மிளிர்வார். அதுதான் அவரது ரசிகர்களை உற்சாக கூத்தாட வைக்கும். இதில் ஒவ்வொரு பிரேமிலும் அவர் இருக்கிறாரே தவிர அவரது எனர்ஜி, மாஸ், ஸ்டைல் எதையும் காணோம். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு ஆளுமையை இயக்குநர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

படம் ஆரம்பிக்கும்போது எனது பக்கத்து சீட்டில் இரு ரசிகர்கள் விசிலடித்து சீட்டின் மேல் ஏறி நின்றெல்லாம் ஆடினார்கள். படம் முடிந்தவுடன் 'பாஸ் படம் முடிந்துவிட்டது எழுந்திரியுங்கள்' என எழுப்பிவிட்டு வந்தேன்.

தியேட்டருக்கு வெளியே சூப்பர் ஸ்டார் படத்திற்கு முன்பு கேக் வெட்டி சிலர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். படத்திலும் கோ இன்சிடென்ஸாக ரஜினி கேக் வெட்டும் காட்சி ஓன்று வருகிறது. தியேட்டரில் பாதிக்கும் மேற்பட்டோர் எழுந்து நின்று கைதட்டினார்கள். சூப்பர் ஸ்டார் மக்கள் மனங்களில் நிரந்தரமாக ஏற்படுத்திய பிம்பம் அப்படி. வாழ்த்துக்கள் தலைவா...!

ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காவும் ஒருதடவை பார்க்கலாம் (வேறென்ன..அப்படித்தான் முடிக்கணும்)

                        ப்ளஸ்                   மைனஸ்
 இளமை துள்ளலான ரஜினி நீட்டி முழக்கி சொன்ன பிளாஷ் பேக்
ஒளிப்பதிவு நம்பமுடியாத  சண்டைக்காட்சிகள்

கலை(சாபு சிரில் ) திரைக்கதை , பாடல்கள்

சந்தானம் டைரக்சன்


------------------------------------------------------------x --------------------------------------------------------

Monday, 1 December 2014

சார்லஸ் டார்வினுக்கே சவால்விடும் தமிழக மங்குனிகள் (சும்மா அடிச்சு விடுவோம்..)

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ சயன்ஸ் வாத்தியார் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பாடம் நடத்திட்டு இருந்தாரு. குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதற்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

உடனே நான் எழுந்திருச்சி, 'குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதா சொல்றீங்களே சார்.. இப்போது ஏன் எந்த குரங்கிலிருந்தும் மனிதன் தோன்றவில்லை' என்று கேட்டேன். உடனே அடி பின்னி எடுத்திருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க.அதுதான் இல்லை. இதுபோல கிறுக்குத்தனமா கேள்வி கேட்டாலும் வாத்தியார் பையன் என்பதால் மன்னிச்சு விட்டுடுவாங்க.

" அது வந்து... அப்படியெல்லாம் யார் சொன்னது...நம்ம ஊர்ல இல்ல.. ஆனா ஆப்ரிக்கானு ஒரு நாடு இருக்கு. அங்க எல்லாம் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிகிட்டுதான் இருக்கான்.." என்று அளந்து விட்டாரு. அப்போ எல்லாம் கேரளாவே வெளிநாடுனு நம்பிகிட்டு இருந்த நேரம். நானும் 'அப்படியா சார்' என்று கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டேன்.

இப்போ அந்த வாத்தியாரை நேரில் பார்த்தேனா, 'சார்.. ஆறாப்பு படிக்கிறப்போ  குரங்கிலிருந்து ஏன் மனிதன் தோன்றவில்லை என கேள்வி கேட்டேன் தெரியுமா சார். அதுக்கான பதில் கிடைச்சிட்டு சார். வர்ற வழியில உங்க பையனை பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்திடுச்சி' என சொல்லலாம்னு இருக்கேன்.

பிளஸ் 2 படிக்கும்போது விலங்கியல் ஆசிரியர் சரியான விளக்கம் கொடுத்தாரு. சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான் உட்பட அனைத்து குரங்கு வகைகளுக்கும் மனித இனத்திற்கும் சேர்த்து ஒரே மூதாதையர்தான். அந்த மூதாதையரிடமிருந்து வெவ்வேறு கிளைகளாக பிரிந்ததுதான் இவைகள். அதனால் பல நூற்றாண்டுகளு க்கு பிறகு வேண்டுமானால் தற்போதைய குரங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு அமைப்புடைய குரங்கு உருவாகுமே தவிர மனிதன் உருவாக மாட்டான் என்றார்.

அன்று அவர் சொன்ன விஷயத்தை முகநூலில் பாபு என்கிற நண்பர் படம் வரைந்து எளிமையாக விளக்கியிருந்தார்.
 
அப்படியானால் மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டதா..? அப்போது அடைந்த பரிணாம மாற்றங்கள் தற்போது ஏன் நிகழவில்லை. ஆதலால்,குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பதெல்லாம் கட்டுக்கதை என்று ஆதாம் ஏவாள் கோஷ்டி ஓன்று சண்டைக்கு வரும். இது எப்படி இருக்கிறது என்றால் உலகம் ஒரு உருண்டை. அதன் மேல்பரப்பில்தான் நாம் இருக்கிறோம் என்று முதலில் கேள்விப்பட்டபோது, "ஹை .. அப்படினா நாம வழுக்கி விழுந்துவிட மாட்டோமா.." என்று கேட்க தோன்றியது போல் இருக்கிறது.

பரிணாம மாற்றம் என்பது ஒரே இரவில் நடப்பது அல்ல. ஆயிரம் வருடங்கள் ஆகலாம் . பல மில்லியன் வருடங்கள் கூட ஆகலாம்.சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப படிப்படியாக மாற்றங்கள் நிகழும். ஒரு உயிரினத்தின் பண்புகள் தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலமாக கடத்திச்செல்லும் போது தேவை கருதியோ, சூழல் கருதியோ அல்லது மரபணுப் பிழைகள் மூலமாகவோ காலப்போக்கில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக பரிணாம மாற்றம் என்பது இயற்கைத் தெரிவமைப்பு (Natural Selection), தகவமைவு (Adaptation) மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றம்(Mutation), மரபணுப் பிறழ்வு நகர்வு (Genetic Drift) மூலமாகவும் அமைவதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்து இங்குள்ள சில விலங்கினங் களை ராக்கெட் மூலம் அங்கே விட்டுவிட்டு வந்தால் சில நூறு வருடங்களில் வேறொரு வடிவத்தில் பரிணாம மாற்றம் அடையலாம். ஆனால் மனித இனத்துக்கு சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் மனிதன் எப்போதும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்.மாறாக,அந்தச் சுற்றுச்சூழலையே தனக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்வான்.

அது கிடக்கட்டும். உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்கிற டார்வினின் பரிணாமக் கொள்கை தமிழ் நாட்டில் மட்டும் ரிவேர்சாகிப் போனதாக பேசிக்கொள்கிறார்களே.. அது உண்மைதானா...?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tribute to Maestro Ilayaraja

இப்படி ஒரு தலைப்பில் சென்னையில் உள்ள Muzik Lounge School Of Audio Technology என்ற இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து இளையராஜாவின் சில பாடல்களை ரீமிக்ஸ் செய்து YOUTUBE -ல் பதிவேற்றியுள்ளனர். முத்துமணி மாலை..., கண்ணன் வந்து பாடுகிறான்.. என்று இரு பாடல்களைத்தான் கேட்டேன். கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூறு தடவையாவது கேட்டிருப்பேன் ..Wow..! Really it was mesmerising...! இசை, காலம் கடந்து நிற்கும் என்பார்கள். ராகதேவன் இளையராஜா பல யுகங்கள் கடந்து நிற்பார்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


"எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா....

"எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..."

இந்த இரு பாடல்களையும் கேட்டிருக்கிறீர்களா என எழுதினால் அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து வந்து உதைத்துவிட்டு போவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டுமே ராகதேவனின் மாஸ்டர் பீஸ். 

ஒன்று வாலி மற்றொன்று பஞ்சு அருணாசலம் எழுதியது என நினைக்கிறேன். இரண்டுமே மெலடிகளின் உச்சம். நான் இங்கே சொல்ல வருவது இசையைப் பற்றியல்ல. பாடல் வரிகளைப் பற்றியது.

இந்த வரிகளுக்கு இசையோடு சேர்ந்து அழகு சேர்ப்பது எந்தன் என்கிற வார்த்தை. எந்தன் என்றால் என்ன..? 

'எனது'.. 'என்னுடைய' என்று அர்த்தமா..? 

அதுதான் இல்லை. 'எந்தன்' என்ற வார்த்தையே தமிழில் கிடையாது என்கிறார்கள் தெரியுமா..? எனக்கும் தெரியாது. சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். அது எந்தன் கிடையாது. என்றன் என்பதே சரியான வார்த்தை.  

என் + தன் = என்றன்.
உன் + தன் = உன்றன்.  

"என்றன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா...." என்று பாடினால் அவ்வளவு மென்மையாக இருக்காது அல்லவா.. அதனால் என்றன் என்பதை எந்தன் என்று மாற்றிவிட்டார்கள் போலும்.  

காலங்காலமாக தமிழ் சினிமாவில் நமது மொழியை வளர்க்க(!) பாடலாசியர்கள் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிய உதாரணம் து.  உடனே அதற்குக் காரணம் இளையராஜாதான்.  அவர்தான் பாடலாசிரியரை மெட்டுக்கு தகுந்த மாதிரி வார்த்தையை மாற்றச்சொல்லியிருக்கிறார் என்று பேஸ்புக் பேக் ஐடி மாதிரி திடீர் அறச்சீற்றம் அடைய வேண்டாம்.

 "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.." என்று எம்.எஸ்.வி இசையில் வாலியும்,   "என் வாழ்வில் நீ வந்தது விதியானால்.. நீ எந்தன் உயிர் அன்றோ...!" என்று கண்ணதாசனும்,'எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ..'என்று  T.ராஜேந்தரும்,  " நீ தானே எந்தன் பொன்வசந்தம்......" என்று வைரமுத்துவும் ஏற்கனவே எழுதிவிட்டு போயிருக்கிறார்கள். 

சரி..அதுக்கு இப்போ என்னனு கேட்கிறீங்களா.. ஒன்னுமில்ல.. ஆனா ஒரு விஷயம்.

" என்ற வீட்டு பொண்ணு உன்ற வீட்டு மருமவளா வர கொடுத்து வச்சிருக்கனும்ங்க...." என்று கோயம்பத்தூர் காரங்க பேசும் பாசையை இனி யாரும் கிண்டல் பண்ணாதீங்க.

" என்றன் வீட்டு பொண்ணு உன்றன் வீட்டு மருமவளா வர கொடுத்து
வச்சிருக்கனும்ங்க...." என்று சுத்தமான தமிழில்தான் அவர்கள் பேசுகிறார்கள்.




Saturday, 29 November 2014

காவியத்தலைவன்..( கொஞ்சம் பொறுமை வேணும்.)

ரு நாடக சபா கம்பெனியில் யார் காவியத் தலைவன்(ராஜபார்ட்) என்பதில் இரு நடிகருக்குள் நடக்கும் ஈகோ அரசியலே காவியத்தலைவன்.

அதற்கு முன், மாற்று சினிமா எடுக்கிறேன் என்று கதை சொல்லவரும் உதவி இயக்குனர்களின் உழைப்பைத் திருடி ,கொரியன் படத்திலிருந்து ஒரு சீன், ஈரானிய படத்திலிருந்து ஒரு சீன், ஹாலிவுட் படத்திலிருந்து ஒரு சீன் என காட்சிகளை உருவி காவியம் படைத்ததாகப் பீற்றிக்கொள்ளும் சமகால இயக்குனர்கள் மத்தியில் நம் மண்ணின் வாசம் நிறைந்த கதைக்களத்தில் காவியம் படைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் வசந்தபாலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முழுக்கதையும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சினிமா அறிமுகமாகாத,மேடை நாடகங்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நடக்கிறது.

நாசரின் ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவில் அனாதைகளாக கோமதி நாயகமும் (பிருத்விராஜ்), காளியப்பனும்(சித்தார்த்தும்) சிறுவயதில் சேர்கிறார்கள். நாசரிடம் நடிப்புக்கலையைக் கற்று சிறுசிறு வேடங்களில் நடிக்கிறார்கள். அதே நாடக குரூப்பில் ராஜபார்ட்டாக பொன்வண்ணன் நடிக்கிறார். நாசருக்கும் பொன்வண்ணனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொன்வண்ணன் அக்குழுவை விட்டு வெளியேறிவிட அடுத்த ராஜபார்ட் யார் என்பதில் சித்தார்த்துக்கும் பிருத்விராஜுக்கும் போட்டி நிலவுகிறது .

குருசாமி சிவதாஸ் சுவாமி(நாசர்)யின் சாய்ஸ் சித்தார்த்தாக இருக்க, அதுவரை உடன்பிறவா தம்பியாக பழகி வந்த சித்தார்த்தை பகையாளியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார் பிருத்வி. இதற்கிடையில் ஜமீன்தாரின் பெண்ணுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர, அதை நாசரிடம் சமயம் பார்த்து வத்தி வைக்கிறார் பிருத்வி. அதனால் நாடக சபாவை விட்டே சித்தார்த்தை விலக்கி வைப்பதாக நாசர் முடிவெடுக்க, வேற வழி தெரியாமல் அப்பெண்ணை மறந்துவிடுவதாக நாசரிடம் சத்தியம் செய்து திரும்பவும் அக்குழுவில் இணைந்தது எடுபிடி வேலைகள் செய்கிறார் சித்தார்த். தன் இத்தனை நாள் கனவான ராஜபார்ட் வேடம் நயவஞ்சகத்தின் மூலம் பிருத்விக்கு கிடைக்கிறது.

சித்தார்த் காதலால் களங்கப்பட்ட(!) நாசரின் நாடகசபா அவ்வூரைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு கிளம்புகிறது.காதலனைப் பிரிந்த ஜமீன்தார் மகள் தற்கொலை செய்துகொள்ள, வெகுண்டெழுகிறார் சித்தார்த். தன் குருவான நாசர் மீது சினம் கொண்டு சாபம் விட அவர் இறந்துவிடுகிறார். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடக சபாவை பிருத்விராஜ் 'டேக்ஓவர்' செய்கிறார். அதன்பின்பு, அதுநாள் வரை உதட்டில் சகோதரனாகவும் உள்ளத்தில் எதிரியாகவும் பாவித்து வந்த சித்தார்த்தை, அந்நாடக சபாவை விட்டே துரத்துகிறார் பிருத்வி. இப்படி நாடக சபாவினுள் நடக்கும் அரசியலைப் பேசிச் செல்கிறது முதல் பாதி.

பிறகு இருவரும் சேர்ந்தார்களா என்பதை இரண்டாம்பாதியில் இன்னும் இழுவையாக இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.
முக்கால்வாசி படம் வரை ஒரு நாடகக் கம்பெனிக்குள் நடக்கும் அரசியலையே அரைத்துக் கொண்டேயிருக்க, இப்போ இந்தப்படம் மூலம் இயக்குனர் என்னதான் சொல்ல வருகிறார் என்று நாம் குழம்பும் நேரத்தில், சுதேசி இயக்கம், விடுதலைப் போராட்டம் என்று வேறு ஒரு ட்ராக்கில் கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.

ராஜபார்ட்டாக வரும் பொன்வண்ணன் கனகச்சிதம்.ஆனால் அவருக்கடுத்து அமுல்பேபியான சித்தார்த்துக்குத் தான் அவ்வேடம் மிகச்சரியாக பொருந்துகிறது என நாசர் கண்டுபிடிப்பது மிகப்பெரிய நெருடல். ஆனால் ரசிகனின் தேர்வு என்னவோ பிரித்விராஜாகத்தான் இருக்கும். ராஜபார்ட் வேடத்திற்கு உடல்மொழியைவிட, வசன உச்சரிப்பை விட கம்பீரமான தோற்றம் மிக முக்கியம் அல்லவா..?  வட்டமுகம், பெருத்த விழிகள் முக்கிய பிளஸ் பாய்ன்ட் அல்லவா..? ஒட்டுமீசை வைத்து,லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சித்தார்த் வரும்போது பெண்ணுக்கு ஆண்வேடம் போட்ட மாதிரியே தெரிகிறார்.  ஆனால் காதலியிடம் ரொமான்ஸ் செய்வது, அவர் இறந்தவுடன் துடித்தழுவது, நாசரிடம் கெஞ்சுவது, இறுதிக் காட்சியில் சுடவந்த பிருத்வியின் மனதை மாற்றுவது என்று நிறையக் காட்சிகளில் செம்மையாக ஸ்கோர் செய்கிறார் சித்தார்த். தமிழில் அவருக்கு இது முக்கியமான படம்.

அனைத்து தகுதிகளிருந்தும் தான் புறக்கணிக்கப்படுகிறோமே என்கிற ஆதங்கத்தை தன் கண்களாலே பதிவு செய்யும் பிரித்விராஜ் அட்டகாசம். வசன உச்சரிப்பு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதோடு இலவச இணைப்பாக ஒட்டிக்கொண்டு வரும் மலையாள வாடைதான் நெருடுகிறது.வேதிகாவுக்கு இடைவேளைக்குப் பிறகுதான் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அதில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

சிங்கம்புலியும் தம்பி ராமையாவும் இருந்தும் காமெடிக்கு ஏன் இப்படியொரு பஞ்சம்...? இடைவேளைக்குப் பிறகு கிருஷ்ணன் வேடத்திலிருக்கும் பிருத்வி,மன்சூர்அலிகானை அடிக்கும்போது 'நானும் உன்னை அடிச்சிடுவேன். ஆனா நீ என் கண்ணுக்கு கிருஷ்ணர் மாதிரி தெரிகிற' என்று திருப்பி சொல்லும்போது தியேட்டரில் சிரிப்பலை கேட்கிறது. அப்பாடா இப்பயாவது எங்களை சிரிக்க விட்டீங்களே என்கிற பெருமூச்சின் வெளிப்பாடுதான் போல.

நீண்ட இடைவேளைக்குப் பின் நாசர் என்கிற சிங்கத்துக்கு கறிவிருந்து வைத்திருக்கிறார்கள். அளவான, நேர்த்தியான நடிப்பு..!. சிவதாஸ் ஸ்வாமியாகவே வாழ்ந்திருக்கிறார்.முன்பாதி முழுவதும் நாசர் ராஜாங்கமே நடப்பதால் மற்றவர்களுக்கு பின்பாதியில்தான் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.


பாடல்கள் ஏற்கனவே விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமடைத்துவிட்டதால் பாடல் காட்சிகளின் போது வெளியே பாப்கார்ன் விற்பனை கொஞ்சம் மந்தம்தான். 'ஏய் மிஸ்டர் மைனர்' ,'யாருமில்லா' பாடல்கள் திரும்ப கேட்க வைப்பவை.

ஒரு நாடக சபாவுக்குள் நடக்கும் அரசியலை நுட்பமாக அலசியிருப்பதால் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். நாடகம் என்கிற கலை வடிவத்தில் நாட்டுப்பற்றையும் விடுதலை வேட்கையும் எவ்வாறு அக்காலத்தில் புகுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்பதை நம் கண்முன்னே காட்சிப்படுத்திய விதத்தில் வசந்தபாலனுக்கு பெரிய பொக்கேயே பரிசளிக்கலாம். ஆனால் இரண்டரை மணி நேரம் ரசிகனுக்கு  ஒரு நாடகக் கொட்டகைக்குள் உட்காந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது எவ்வகையில் நியாயம்...? இது ஒரு பீரியட் படம் போலதான். அதில் சராசரி ரசிகனை உள்ளிழுக்க வேண்டுமென்றால் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைக்க வேண்டும் அல்லவா.. ஆமை வேகத்தில் நகருகிறது. அதிலும் இடைவேளைக்குப் பிறகு சுதேசி நாடகம்,விடுதலைப் போராட்டம் அன்று அவிழ்த்துவிட்ட காளைபோல தறிகெட்டு ஓடுகிறது திரைக்கதை.

கதை நடக்கின்ற காலகட்டத்தில் உள்ள வாகனங்கள், ஆடைகள், வசிப்பிடங்கள் என அத்தனையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.மின்சாரமில்லாத காலகட்டம் என்பதால் மின்சாரக்கம்பிகள்,தெருவிளக்குகள் எதுவுமே கேமரா வளையத்துக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். கலை இயக்குனருக்கு பாராட்டுகள். இதையெல்லாம் விட சவாலான விஷயம் மின்சார விளக்கு வெளிச்சம் இல்லாமல் வெறும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் மட்டும் நடந்த அக்கால நாடகத்தை திரையில் கொண்டுவருவது. துல்லியம்மாக பதிவு செய்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதேபோல் 40 களில் வந்த திரைப்படங்களில் பயன்படுத்திய இசைக்கருவிகளைக்கொண்டு  பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்பை செய்து நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்ற இசைப்புயலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஆனால் இவையெல்லாம் ஒரு சராசரி ரசிகனை திருப்திப் படுத்திவிடுமா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. எப்படியிருந்தாலும்  தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது நம்பிக்கை வைத்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் பயணித்திருக்கும் இயக்குனர் வசந்தபாலனை ஒரு முறை கைதட்டி ஊக்கப்படுத்தலாம்...!

                        ப்ளஸ்                   மைனஸ்
நாசரின் நடிப்பு ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை
கிளைமாக்ஸ் நாடகத்தன்மை
இசை நகைச்சவை வறட்சி
ஒளிப்பதிவு அழுத்தமில்லாத கதை

நம்ம பார்வையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்...


Saturday, 22 November 2014

நாய்கள் ஜாக்கிரதை....

பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றும் போராட்டத்தில் வில்லனின் தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் சிபி. அதற்குப் பழிதீர்க்கும் விதமாக சிபியின் மனைவியையேக் கடத்துகிறது அக்கும்பல். கடத்தப்பட்ட தன் மனைவியை ஒரு நாயின் உதவியுடன் ஹீரோ மீட்பதே நாய்கள் ஜாக்கிரதை படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பின் சொந்த தயாரிப்பில் போலிஸ் கான்ஸ்டபிளாக களம் இறங்கியிருக்கிறார் சிபி. "நடப்பது நடக்கட்டும். கிடைப்பது கிடைக்கட்டும். நான் ரொம்ப துணிஞ்சவண்டா..." என்ற பாடலின் பின்னணியில் அறிமுகமாகும்போதே அடுத்த இன்னிங்க்ஸ்-க்கு தயாராகிவிட்டதை உணர்த்துகிறார்.

எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ வீரரை  ராணுவம் மீட்கும்வரை காவல் காக்கும் இடோ என்ற Belgian Shepherd நாய்தான் படத்தின் ஹீரோ.அதன் அறிமுகமும் அசத்தலாகத்தான் இருக்கிறது.பிறகு தமிழ்நாட்டுக்கு வரும்போது 'சுப்ரமணி' யாக மாறி ராமநாராயணன் குரூப்பில் சேர்ந்துவிடுகிறது .

ஒரு மிலிட்டரி நாயைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பது தமிழ் சினிமாவில் ஒரு வியத்தகு முயற்சி. இப்படிப்பட்ட துப்பறியும் கதையில் திரைக்கதைதானே இரண்டாவது ஹீரோ. ஆனால் சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட சுலபமாகக் கணிக்க முடிகிறது.  உயிருக்குப் போராடும் ஹீரோயினை ஒரு நாய் தன் மதிக்கூர்மையாலும் மோப்ப சக்தியாலும் கண்டுபிடிப்பதாக நகரும் கதையின் ஒவ்வொரு சீனையும் எப்படிக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்..?. நிறைய லாஜிக் ஓட்டைகள்.

ஒரு military-trained நாயைப் பற்றிய படம் என்று ஏற்கனவே நிறைய பில்டப் கொடுத்திருந்தார்கள். சமீபத்தில் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடுபாடுகளில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்ட ஒரு நாயைத் தத்தெடுப்பதாக விளம்பரம் வேறு செய்தார்கள். தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் செல்லப் பிராணிகளையும் விலங்குகளையும் வைத்து பல காவியங்களை(!)ப் படைக்க வல்லவர் ராமநாராயணன் மட்டும்தான் என்பது தமிழ்கூறும் சினிமா உலகம் அறிந்ததே. அவர் பாணி செயற்கைத்தனமானது. இது ராமநாராயணன் படத்திற்கும் ஹாலிவுட் படத்திற்கும் இடையில் தொங்கி நிற்கிறது.

ஒரு விளம்பரம்...!?
மயில்சாமி வளர்க்கும் லேடி டாக்குடன் காதல் கொண்டு காரில் சல்சா செய்வது, சிபியின் மேலே படுத்து விளையாடுவதை பக்கத்துவீட்டு ஆண்டி வக்கிரமாக கற்பனை செய்வது போன்ற காட்சிகள் மிலிட்டரி நாயின் கம்பீரத்தையே குறைத்துவிடுகிறது. மிலிட்டரி / போலிஸ் நாய்கள் எவ்வாறு தயார் படுத்தப்படுகிறது என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும்  முக்கியமானது. சூழ்நிலையைப் பொறுத்து மாறும் நாயின் முக பாவனைகள், அங்க அசைவுகள் எல்லாவற்றையும் நுட்பமாகப் படம்பிடித்திருக்க வேண்டாமா...?

ஒரு மிலிட்டரி ஆபிசரின் வீட்டில் வளரும் அந்த நாய் எதிர்பாராத விதமாக சிபியுடன் ஐக்கியமாகிறது. பொதுவாக நாய்களை வெறுக்கும் சிபி எந்த காரணத்திற்காக அந்த நாயுடன் இவ்வளவு அன்யோன்யமானார் என்பதை சொல்லவில்லை.சிபி செகண்ட் ஹீரோ என்பதால் அவரை இவ்வளவு சப்பையாக காட்டியிருக்க வேண்டுமா.? வில்லனிடம்" உன் தம்பியை வேணும் என்றே கொல்லவில்லை... அவனா செத்துட்டான். என் மனைவியை எங்கே ஒளிச்சி வச்சிருக்க" என  கெஞ்சும் போது உண்மையிலேயே அவர் போலிஸ்காரரா என்கிற சந்தேகம் வலுக்கிறது. கடைசியில் நாய் சாகும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியில் கொஞ்சமாவது தன் மனைவி கடத்தப்பட்ட விசயத்தில் காண்பித்திருக்கலாம் சிபி..

(ஹீரோயின் பெயரை கூகுள்ள போட்டு தேடினப்போ கிடைச்சது..ஹி..ஹி உடனே ஃபிரேம் போட்டுட்டேன்.  அம்மணி தாராளமா நடிக்கிற டைப் தான் போல. இவிங்கதான் யூஸ் பண்ணிக்கல.)
அதுசரி, முழுவதும் மூடப்பட்ட, காற்று புகமுடியாத ஒரு சவப்பெட்டியில் ஆறுமணி நேரம் மூச்சு விடலாம் என்கிற அபத்தம் இருக்கட்டும், வெப் கேமராவில் மிகத்துல்லியமாக படம் தெரியுமளவுக்கு வெளிச்சம் ஏது..? அவ்வளவு கிளியராக வாய்ஸ் கேட்குமா..?  மண்ணில் புதைக்கப்பட்டப் பிறகும் அந்த மலையில் வெப் கேமரா இவ்வளவு தெளிவாக வேலை செய்கிறது என்பதே ஆச்சர்யம்தான். அந்த வில்லன் கோஷ்டி எதற்காக பெண்களைக் கடத்தி வெப் கேமரா பொருத்தி உயிரோடு புதைக்கிறார்கள் என்பதை கடைசி வரை சொல்லவே இல்லை.

பொதுவெளியில் பட்டப்பகலில் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு வில்லன் குரூப் ஹீரோயினைக் கடத்துவது, போலீசைக் கண்டு ஓடுவது எல்லாமே செயற்கைத்தனமாக இருக்கிறது. அது எப்படி அச்சம்பவங்கள் நடக்கும் போது எந்த சலனமுமே இல்லாமல் மக்கள் போகிறார்கள் என்பது தெரியவில்லை. வில்லனாக வரும் பாலாஜி வேணுகோபால் ஆரம்பத்தில் கொடூர வில்லன் போல பில்டப் கொடுத்து  கடைசியில் நாயிக்குப் பயந்து ஓடும்போது அக்மார்க் காமடியனாகிறார்.

சிபிக்கு துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டால் சிறுவர்கள் போல பயப்படும் வினோத நோய் இருப்பதாக ஆரம்பத்தில் சொல்கிறார்கள்(அதை வில்லன் குரூப் கண்டுபிடிப்பதுதான் செம காமெடி). அதை வைத்து கிளைமாக்சில் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் எனப் பார்த்தால் வில்லன் கிண்டல் செய்வதோடு அவ்விசயம் முடிந்துவிடுகிறது.ஹீரோவை வில்லன் சுடும்போது குறுக்கே ஓடிவந்து குண்டுகளை தன் உடலில் வாங்கிக் கொள்ளும் எம்ஜியார் காலத்து டெக்னிக்கை எப்பப்பா விடப்போறீங்க..? நாய்க்குக் கூட அப்படி சீன் வைக்கணுமா..?

ஹீரோயின் யாரோ அருந்ததியாம். எந்தப்பக்கம் பார்த்தாலும் மொக்கையாகத்தான் இருக்கிறார். இவர்தான் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்தின் ஹீரோயினா..?

உள்ளே நுழையாதீர்கள். நாய்கள் இருக்கிறது.மீறி வந்தால் கடிச்சி வச்சிடும் என்பதின் குறியீடுதானே ' நாய்கள் ஜாக்கிரதை'..!  அதை நமக்குத்தான் சொல்கிறார்கள் போல. வித்தியாசமான முயற்சிதான். போரடிக்காமல் செல்லவேண்டும் என்பதற்காக நிறைய கத்தரி போட்டு இரண்டுமணி நேரத்திற்கும் குறைவாக எடிட் செய்திருக்கிறார்கள். அந்த விசயத்தில் ஓரளவு ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், காட்சிகள் மட்டுமல்ல இறுதியில் தன் எஜமானரைக் காப்பாற்ற உயிர்விடும் அந்த நாய் கூட மனதில் நிற்கவில்லை.



  

Thursday, 20 November 2014

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவது எப்படி..?



ரே நாளில் உலக ஃபேமஸ் ஆவது எப்படி..? ரொம்ப சிம்பிளான விசயம்ங்க..

நம் சமூகத்தின் ஏதோ ஒரு சந்து பொந்தில் வாழும் விளிம்பு நிலை மனிதர் நீங்கள். யாருக்கும் உங்களைத் தெரியாது. தெரு நாய் கூட உங்களை மதிக்காது என வைத்துக்கொள்வோம்

ஆனால் ஒரே நாளில் இந்த உலகமே உங்களைப்பற்றி பேசும். சிறார்கள், மாணவர்கள் எல்லாம் "சார்" என்று மரியாதையோடும், பெரியவர்கள் எல்லாம் "தம்பி" என்று பாசத்துடனும் அழைப்பார்கள். மாணவ சமுதாயமே உங்கள் பின்னால் திரளும். ஏழைகளுக்கு அடுத்த எம்ஜியார் நீங்கள் தான். அரசு ஊழியர்கள் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுவார்கள். ஊடகங்கள்,தொலைக்காட்சி எல்லாம் உங்களைப் பற்றியே பேசும். அரசியல்வாதிகளுக்கும்,  கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் நீங்க சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள்.

இப்படியெல்லாம் நடக்கணும்னா ஏதாவது புரட்சி செய்யணும் அல்லது போராட்டம் நடத்தனும் அல்லது தீவிரவாதியாக மாறணும் அப்படித்தானே... என நீங்கள் கேட்க வருவது புரிகிறது. அதுதான் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்னே ஒன்னுதான்... வாயால வடை சுடனும்..!

தெளிவாகச் சொல்கிறேன். அக்கம் பக்கத்தில் ஏதேனும் அநீதிகள் நடப்பதுபோல் உங்கள் ஞானக் கண்களுக்குத் தெரிந்தால் உடனே அதை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் ஆக பதியுங்கள். அல்லது சமூகத்தை திருத்துகிறேன் என்று ஏதாவது நாலு ஐடியா கொடுங்கள். உடனே உங்கள் பெயர் இந்தியா முழுவதும் பரவும்.

இந்த ரோடு ஏன் இப்படி குண்டும் குழியா இருக்கு தெரியுமா...? ரோடு போடுற கான்ட்ராக்டர் சரியில்லை. இந்த பைப்பில் ஏன் தண்ணீர் வரவில்லை தெரியுமா..? தண்ணீர் டேங் பைப்பை இன்னும் யாரும் திறக்கல.. தெருவிளக்கு ஏன் எரியமாட்டேங்குது தெரியுமா..லைட் பியூஸாகி விட்டது. இந்த பஸ் ஏன் ஆக்சிடெண்ட் ஆகுது தெரியுமா..?  டிரைவர் சரியில்லை. அதனால் தினமும் டியூட்டிக்கு செல்லும்முன் ஒரு மருத்துவரை வைத்து ஓட்டுனர்களை சோதிக்கணும். இப்படிப்பட்ட சமூக விழிப்புணர்வு ஐடியாக்களை, நாலு பேரைக் கூப்பிட்டு தெரு முக்குல கூட்டம் போட்டு சொல்லுங்க. அப்புறம் பாருங்கள் .

எல்லோரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி,'இப்படி ஒரு அறிவாளியைத்தான் நாங்க தேடிகிட்டு இருந்தோம். இவ்வளவு நாளா நீ எங்க இருந்த ராசா...' என்று உங்களை ஆரத்தழுவிக் கொள்வார்கள். 'இம்பூட்டு  நாளா மூடிக்கிடந்த எங்கள் அறிவுக்கண்ணை சாவி இல்லாமலே திறந்து விட்டியே தம்பீ...'  என்று பெக்கர் முதல் கலெக்டர் வரை உங்கள் காலில் விழுவார்கள். 'இந்தத் தம்பி சொன்னது என்னிக்கு நடக்குதோ அன்னிக்குத் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைச்ச மாதிரி..'  என்று சொச்ச நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் தியாகிகள் எல்லாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

இவ்வளவு ஏன் நீங்கள் பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது.

என்ன...சொந்த மானிட்டராக இருந்தாலும் பரவாயில்லை, பொளிச்னு துப்பிடலாம்னு தோணுமே. எனக்கும் அப்படித்தான் தோணிச்சி, ஜெய்ஹிந்த்-2 படத்தை பார்த்தபோது...! .


ஒரு நாய் அனாதையா செத்துக்கிடக்கிறத பார்த்தவுடனையே அர்ஜுனுக்கு ஜென்டில்மேன், முதல்வன் படம் ஞாபகத்துக்கு வந்திடும். உடனே "மனுசனா பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கணும். வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்" னு சொல்லிட்டு கிளம்புவாரு. ஏதோ புரட்சி பண்ணப்போறாரு என்று பார்த்தால் இணையத்துல எதைஎதையோ தேடுவாரு. முடிவில ஹீரோயின் சைலண்டா வந்து 'இது மட்டும் நடந்திருச்சுன்னா இந்தியா வல்லரசு ஆகிடும்' என்பாங்க.

ரமணா பாணியில ஏதோ நடக்கப் போகுதுன்னு சீட் நுனி வரை நகர்ந்து  சீரியஸா கவனிச்சா, பிரஸ்ஸை கூப்பிட்டு, "தனியார் பள்ளிகளை எல்லாம் தேசியமயமாக்கனும்" னு வடை சுடுவாரு. அதற்கடுத்து நடக்கும் பாருங்க கொடுமை....! அவர் சொன்னது இந்தியா பூரா பரவி எல்லோரும் அபிமன்யு சொன்னது மட்டும் நடந்துட்டா இந்தியா அப்படியாகிடும்..இப்படியாகிடும்னு பில்டப் கொடுப்பாணுக.. இவ்வளவு நாளா எல்லோரும் அடிமுட்டாளா இருந்திருக்கோம் போல. அட இதைக்கூட மன்னித்து விடலாம். ஜெயில்ல இரண்டு கைதிகள்  அர்ஜுனைப் பார்த்து,"டிவியில பாத்தேன் தலைவா. சோக்கா பேசின..","தம்பி நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி.."என்று சொல்லும்போது வரும் பாருங்க ஒரு கோபம்.. தட் அவரே குண்டு வைப்பாராம் அவரே எடுப்பாராம் மொமென்ட்..!

ஏம்பா இந்தியாவில உள்ளவங்க எல்லாம் இந்த அளவுக்குக் கூட சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா.. தினமும் டிவியில விவாதம் என்கிற பெயரில் ஆளுக்கொரு ஐடியா சொல்றாங்க.. அவர்கள் எல்லாம் உலக பேமஸ் ஆகிடுறாங்களா என்ன..? அப்படிப் பார்த்தா நீயா நானா கோபியும் மனுஷ்யப் புத்திரனும் இந்நேரம் ஐநா சபை வரை போயிருக்க மாட்டாங்களா.. என்ன லூசுத்தனமான கான்செப்ட் அது..?  டிராபிக் ராமசாமிக்கே ஃபைனப் போட்டு ஆஃப் பன்ற ஊருய்யா இது.

எப்பவோ போட்ட டீ -யை இப்போ வந்து எதுக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்துறேன்னு கேக்கிறீங்களா.. ?  இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன். "ஜெய்ஹிந்த்-2 படத்தை பிரதமருக்கு போட்டுக் காண்பிப்பேன்.." என்று அண்ணாத்தே அர்ஜூன் பேட்டி  கொடுத்திருந்தார்.  அதனாலதான் இவ்வளவு ஆத்த வேண்டியிருக்கு.

பாவம் அவரே பேக்கேஜ் டூர்ல ஒவ்வொரு நாடா சுத்திப் பாக்கப் போயிருக்கார். அதிலும் கேமராவைத் தேடித்தேடி போஸ் கொடுத்தே டயர்டா போயி வருவாரு. வந்த உடனே படத்தை போட்டு காண்பித்து ஏன்யா அவரை இன்னும் டயர்டா ஆக்கணும்..?


ஜெய்ஹிந்த் வெளிவந்த 1994 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்ப எந்தப் படமும் சிக்காததால் வேறு வழியில்லாமல் அப்படம் தேர்வானது. வித்தியாசமான கவுண்டமணி-செந்தில் காமெடி டிராக், ரகளையான(ஹி..ஹி..) ரஞ்சிதா என்கிற கமர்சியல் கலவைகள் நிறைந்திருந்தாலும் patriotism என்கிற விஷயம் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தது பாராட்டும்படி இருந்தது . எப்படா இது மண்டையப் போடும் என்று எரிச்சல் ஏற்படுத்தும் மனோரமாவின் போர்சனைத் தவிர படம் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஜெய்ஹிந்த்-2 வில் கான்செப்ட்டும் காமெடியும் மொக்கை, ஹீரோயின் சப்பை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். சுவாரஸ்யமாகப் போகவேண்டிய திரைக்கதையை இப்படி தலைகீழாகத் திருப்பி  சொதப்பியிருக்கிறார்களே..!

திரைக்கதையைப் பற்றி அவ்வளவு நுட்பமாக எனக்குத் தெரியாது. இணையத்தில் உள்ள திரைக்கதைப் புலிகள் யாராவது சொல்லட்டும். இந்தப் படத்தில் மூன்று முக்கிய சம்பவங்கள் நடக்கிறது. அதைப் பின்னித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்

1. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பீஸ் கட்ட முடியாமல் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொள்கிறது.

2. அதனால் பாதிக்கப்பட்ட அர்ஜுன் பிரஸ்மீட் வைத்து ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறார். நாடு முழுதும் அது காட்டுத்தீயாகப்(!) பரவுகிறது.

3. நீதி கிடைக்காததால் வெளிநாட்டில் பயிலும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளைக் கடத்துகிறார்.

இம்மூன்று சம்பவங்களும் இதே வரிசைப்படி நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படியே ரிவர்ஸில் அமைத்திருந்தால்...!

1. வெளிநாட்டில் படிக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வாரிசுகளை அர்ஜுன் கடத்துகிறார். அது இந்தியா முழுமையும் பரபரப்பான செய்தியாகிறது. யார் கடத்தினார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்று மீடியாக்கள் அலசுகிறது.

2.கடத்திய அர்ஜுன் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இந்தியாவே அந்த பிரஸ்மீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

3. எதற்காகக் கடத்தினார் என்று சொல்வதற்கு முன், ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொள்ளும் பிளாஸ்பேக்கை அவிழ்க்கிறார். அதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அதன்பிறகு அந்த தேசியமயமாக்கல், இன்னபிற சமாச்சாரங்களை எல்லாம் சொல்கிறார்.

அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுபோல் காண்பித்தால், சொல்ல வந்த விஷயம் இன்னும் வீரியமாக இருக்கும், படமும் விறுவிறுப்பாக இருக்கும். ரமணா படத்தின் திரைக்கதையும் கிட்டத்தட்ட அப்படிப் பட்டதுதானே..


ஒரு ஏழ்மையான குடும்பம். அவர்கள் படிக்கும் காலத்தில் வசதிகள் இல்லாததால் படிப்பறிவு இல்லாமல் கூலிவேலை செய்துவருகின்றனர் . அதனால் தன் ஒரே மகளை எப்படியாவது கஷ்டப்பட்டு தனியார் பள்ளியில் படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பவேண்டும் என்று அக்குழந்தையின் அப்பா ஆசைப்படுகிறார். அதற்காக கண்டவன் காலில் விழுந்து (LKG அட்மிசனுக்காக!) பணம் புரட்டுகிறார். பணப் பற்றாக்குறையால் தன்  கிட்னியையே விற்கிறார்.அப்படியும் பணம் பற்றாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். (அந்தக் குழந்தை பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைத்தால்தான் படிப்பேன் என அடம்பிடித்ததா என்ன..அதை எதுக்குய்யா கொல்லனும்..?.) ஜென்டில்மேன் படத்தின் பிளாஸ்பேக் ஞாபகம் வருது இல்லையா..? 

இந்தப் படத்தில் அர்ஜுன் சொல்லும் அந்த 'கான்செப்ட்' ,  நடைமுறை சாத்தியமில்லை. அதனால் அதை விட்டுவிடுவோம். ஆனால் அந்த சோக சம்பவம் மூலம் அர்ஜுன் என்ன சொல்ல வருகிறார்..?. தனியார் பள்ளியில்தான் நல்ல கல்வி கிடைக்கிறது. சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளியில் சேர்த்தால்தான் உயர்ந்த உத்தியோகத்துக்கு போக முடியும். அதற்காக கிட்னியைக் கூட விற்கலாம்.

ஒருவேளை, அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்...? பிரைவேட் ஸ்கூல் LKG  சீட்டுக்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது என்றால் நாமதான் அறிவுகெட்ட தனமா நம்ம பிள்ளையை கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைத்துவிட்டோம் போல என நினைக்கத் தோன்றாதா ?

இப்படி ஒரு மொக்கை கான்செப்ட் உள்ள படத்தைப் போட்டுக் காட்டுறேன் என்று  பிரதமர் ஆபிஸ் பக்கம் போனால் செக்யூரிட்டியே காரித்துப்பிடுவான்.



Monday, 17 November 2014

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா தலித் சமூகத்தினர்...?


சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் புரட்சி கார்டூனிஸ்ட் என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டு இணைய ரவுடியாக வலம்வரும் கார்டூனிஸ்ட் பாலா என்பவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலைஞரின் காலைப் பிடித்துத் தொங்குவது போல கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்...

இங்கு 'இணைய ரவுடி' என்கிற பதத்தை எதற்காக பயன்படுத்தியிருக்கிறேன் என்பது  அவரின் பேஸ்புக் டைம்லைனோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  பேஸ்புக் உள்ளிட்ட இணைய சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களை நக்கடித்து நிறைய நிலைத்தகவல்கள், போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அது இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கும் கட்டற்ற எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.  

வெளிநாட்டில் இருந்துகொண்டு தன் சுய விவரங்கள் எதையும் வெளிப்படுத்தாத இணையப் போராளிகள்  இதில் கைத்தேர்ந்தவர்கள். இந்திய அரசியல் தலைவர்களை 'மிக மிக நாகரிகமான' முறையில் அவர்கள் விமர்சிக்கும் முறை, எதையும் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லும் நம்மையே சில நேரங்களில் சூடேற்றிவிடும். அவர்களுக்கென்று தனி கூட்டமே இருக்கும். " நெத்தியடி... அருமை நண்பரே... எவ்வளவு கழுவி ஊத்தினாலும் அவங்களுக்கு புத்தி வராது தலைவா ...." இது மாதிரி கமெண்டுகள் பொங்கி வழியும். சரி நம் தரப்பு நியாயங்களை சொல்லலாம் என்று சில நாகரிகமான எதிர்வினைகளை மேற்கொண்டால் அவ்வளவுதான். ஏழு தலைமுறையை இழுத்து திட்டுவார்கள். அந்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதையும் சமாளித்துத் தொடர்ந்தால் உடனே நம்மை பிளாக் செய்து விடுவார்கள். எதிர்கருத்துகளை ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ளத் தயங்கும் அவ்வகையான இணையப் போராளிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை இந்த கார்டூனிஸ்ட் பாலா .

தமிழ் பேஸ்புக்கை பொறுத்த வரையில் அதிகம் பேரை பிளாக் செய்தவர்களில் முதலில் இருப்பவர் இந்த பாலாவாகத்தான் இருக்கும். பிளாக் செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நியாயமான எதிர்கருத்துகளை நாகரிகமான முறையில் மேற்கொண்டவர்கள். பிளாக் செய்யப்பட பிறகு " இதைத்தான் பாலாவிடம் கேட்டேன்.. உடனே என்னை பிளாக் செய்துவிட்டார்.." என்று பலர் நிலைத்தகவல் பதிந்ததை ஆரம்பத்திலிருந்து பேஸ்புக்கை கவனித்து வருபவர்கள் உணரமுடியும். அவர் பணிபுரியும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் அந்த பிளாக் லிஸ்டில் உள்ளடக்கம் என்பது பாலாவின் நேர்மைக்கு மற்றொரு சான்று.

ஊடக செய்தி வடிவங்களில் கார்ட்டூன் மிகப் பலம் வாய்ந்தது. நூறு பேர் சேர்ந்து உரக்கச்சொல்லி புரியவைக்கும் ஓர் செய்தியை ஒரே ஒரு கார்ட்டூன் தெளிவாகச் சொல்லிவிடும். அதன் பலமே இவரை இணைய ரவுடியாக வளம் வர செய்திருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு என்று ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. அதை தனக்கான எல்லையாக அவர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, என் எல்லையை யாரும் நிர்ணயிக்க முடியாது என்கிற திமிர்த்தனத்தில் நாகரிகத்தின் எல்லையை கடந்துவிடுபவர்களைத்தான் இணைய ரவுடி என குறிப்பிட்டுள்ளேன்.

சரி விசயத்திற்கு வருவோம்.

திருமாவை கலைஞரின் காலைப்பிடித்துத் தொங்குவது போல் கார்ட்டூன் போட்டு கேவலப் படுத்துகிறார் இந்த பாலா. உடனே அவர் நட்பில் இருக்கும் சிலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அதற்கெல்லாம் மதிப்பளிப்பவாரா இந்த பாலா..? பிறகு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொறுப்பில் இருக்கும், பேஸ்புக்கிலும் ஊடகங்களிலும் இயங்கி வரும் ஆளூர் ஷானவாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த கார்ட்டூனை நீக்கும்படி கேட்கிறார். இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகியிருக்கும் பாலா இதெற்கெல்லாம் செவி சாய்ப்பவரா என்ன .? உடனே அவர் டைம் லைனில் ஆளூர் ஷானவாஸ்-சை தன் வழக்கமான நக்கல் பாணியில் கண்டித்து ஒரு நிலைத்தகவல் பதிகிறார். அதனைத் தொடர்ந்து கண்டனங்களும் வசவுகளும் அவர் டைம்லைனில் வரிசை கட்டுகிறது.



அதன் பிறகுதான் அவருள்ளே ஒளிந்திருக்கும் சாதிப்பூனை எட்டிப் பார்க்கிறது. "தலித் என்றால் விமர்சனம் செய்யக்கூடாதா..தலித்தை விமர்சனம் செய்தால் மட்டும் இவர்களுக்கு எதற்கு கோபம் வருகிறது...  தலித் கேடயத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கப்படாதா .." என்று வரிசையாக நிலைத்தகவல்கள் பதிந்து ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தன் வக்கிர கணைகளை வீசிக்கொண்டிருக்கிறார்.

அய்யா இணைய ரவுடியே... தலித் மக்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று யார் சொன்னது...?  தலித் சமூகத்தினர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா..? அல்லது எதிர்வினையாற்றுபவர்கள் யாராவது ஒருவர், ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று கேட்டார்களா..? அப்படி இல்லாதபோது தலித் தலித் என்று வரிக்கு வரி எழுதி எதற்காக அச்சமூகத்தின் வெந்த புண்களில் வேல் பாய்ச்ச வேண்டும்..?

உங்கள் வழிக்கே வருகிறேன்.  ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் ஒரு தலித் தான். தலைவர் கூட ராசா தலித் என்பதால் தான் அவர்மீது வழக்கு போடுகிறார்கள் என்று அறிக்கைவிட்டு பின்பு வாங்கிக் கட்டிக்கொண்டது நாடே அறியும். அப்படிப்பட்ட ராசாவுக்கு எதிராக இணையத்தில் எவ்வளவு கேவலமான விமர்சனங்கள் வந்தன..!. அருவருக்கத்தக்க போர்ட்டூன்கள், கார்ட்டூன்கள் வந்தன...! ஏன் நீங்களே எவ்வளவு நக்கலடித்து கார்ட்டூன்கள் வரைந்து கலைஞர் எதிர்ப்பாளர்களின் லைக்கை லம்பாக அள்ளினீர்கள். அப்போது எவராவது வந்து ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று உங்களுடன் வாதம் செய்தார்கள்..?

இதே திருமாவளவன் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் இணையத்தில் வரவில்லையா..? கலைஞரின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் கைக்குலுக்கிவிட்டு பிறகு தமிழ்நாடு திரும்பியவுடன் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டபோது இணையத்தில் திருமாவளவனை துவைத்து எடுக்கவில்லையா...? அப்போதெல்லாம் ஒரு தலித்தை எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வரிந்துக் கட்டிக்கொண்டு வந்தார்களா...?

அதற்கெல்லாம் வராத எதிர்வினைகள் இந்தக் கார்ட்டூனுக்கு வருகிறது என்றால், அச்சமூகத்தின் வலியை புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத நீயெல்லாம் என்னய்யா பிரபல கார்டூனிஸ்ட்.?.

அவர்கள் எதிர்வினையாற்றிய விதம் தவறுதான். ஆனால் அவர்கள் கோபத்தின் பின்னால் உள்ள வலியைப் புரிந்துகொள்ளாத உம்மைப் போன்றவர்கள் சமூகக் கருத்தைப் பரப்புகிறேன் என கிளம்புவது வேடிக்கையாக இல்லையா..? குறைந்த பட்சம், நான் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்று ஒரு விளக்கப் பதிவாவது உன்னால் போடமுடிகிறதா...?

தலித்தையோ அல்லது சிறுபார்மையினரையோ விமர்சிக்கும் முன்,கொஞ்சம் சென்சிடிவான விசயமாச்சே.. அரசியல் ரீதியான விமர்சனமாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதை உணராத நீயெல்லாம் என்னய்யா ஜெர்னலிஸ்ட்..?

ஒரு தலைமுறைக்கு முன்பு விழிப்புணர்வும் படிப்பறிவும் மட்டுமல்லாது  அதற்கான வழிகாட்டுதலும் தலைவனும் இல்லாமல் ஒடுங்கி வாழ்ந்த சமூகம் அது. பெரியார், அம்பேத்கார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் சீரிய முயற்சியினால் ஏதோ இப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைத்து உயரிய பதவிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் பெரும்பகுதியினர் இன்னமும் ஆதிக்கசாதியினரின் அச்சுறுத்தலுக்கு அடங்கித்தான் வாழவேண்டிய சூழலில் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஓர் இயக்கத்தை உருவாக்கி அதற்கு தலைவனாக திருமாவளவன் இருக்கிறார். அவரின் தலைமையை ஒட்டுமொத்த தலித் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி அவர் மீதுள்ள மரியாதை எவரிடத்திலும் குறையவில்லை.

மீண்டும் அந்த இணைய ரவுடியைப் பார்த்து கேட்கிறேன். திருமாவளவன் கலைஞரின் காலைப் பிடிப்பது போல வரைந்த உனது கார்ட்டூன் எந்த உள்நோக்கமும் இல்லாதது என்றால், அதற்கு வரும் எதிர்வினைகளை அவரது கட்சி சார்ந்த கண்டனங்களாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.. அதை விடுத்து தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாதா... தலித் என்றால் பெரிய கொம்பா என்கிற ரீதியில் தொடரும் உமது பதிவுகள், உண்மையிலேயே அச்சமூகத்தினரை கேவலப்படுத்தும் நோக்கிலே அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறதே..!

இன்னமும் அவர்களின் உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் ஒரு தலித்தாகப் பிறந்து பாருங்கள். அப்போதாவது அவர்களின் வலி உங்களுக்குப் புரியும்.

ஒரு பின் குறிப்பு.

பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் புலம்பித்தள்ளிய அந்தப் பதிவில் சென்று.." தலித்..தலித் என்று வரிக்கு இரண்டுதடவை நீங்கதானே சார் சொல்றீங்க..தலித் என்றால் விமர்சனம் செய்யக் கூடாது என்று யார் சொன்னது.. ஆ. ராசா மீது வராத விமர்சனமா..? அப்போது எத்தனை தலித்துகள் கண்டனம் தெரிவித்தனர்....." என்கிற ரீதியில் மிகுந்த மரியாதையாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். இந்தப் பதிவு எழுதுவதற்கு முன்பு வரை அவருடன் தொடர்பில் இருந்தேன். எழுதி முடிக்கும் தருவாயில் சென்று பார்த்தால் அன்போடு என்னை பிளாக் செய்திருக்கிறார். மிகுந்த மரியாதையுடன் கமெண்ட் போட்டால் அவருக்கு பிடிக்காது போல.. என்னை எல்லாம் அடிச்சி நீங்க இணைய ரவுடியாக ஃபார்ம் ஆகுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது பாலா சார்.