Friday, 12 December 2014

லிங்கா...

லிங்கா படத்தின் கதை சம்மந்தமாக நடந்துவந்த வழக்கின் நேற்றைய தீர்ப்புக்காக பட வெளியீட்டை சற்று தாமதப்படுத்தியிருக்கிறார்கள் போல. நேற்று மாலையே இங்கு வெளியாகவேண்டிய படம். பிற்பகல் நான்கு மணிக்கு ரிசர்வேசன் என்று ஒட்டியிருந்தார்கள். நான்கு மணியிலிருந்து வரிசை நீள ஆரம்பித்துவிட்டது. ஐந்து மணிக்குத்தான் டிக்கெட் என்றார்கள். இன்னும் இந்தியாவிலிருந்து பாஸ்வேர்டு வரவில்லை என்றார்கள். பிறகு ஆறு என்றார்கள். ஏழு மணியாகலாம் அதுவும் உறுதியாக சொல்லமுடியாது என்றார்கள். எப்படி இருந்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ஷோ என்றார்கள். மறுநாள் வேலை. ஆனாலும் இவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கிடையில் மூன்று மணிநேரம் பொறுமை காத்து கியூவில் நின்றார்கள். அதில் நிறையப்பேர் பெண்கள். எப்படியும் டிக்கெட் வாங்கிவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டு நகரப் போவதாகக் கங்கணம் கட்டி நின்றார்கள். எல்லாமே சூப்பர்ஸ்டார் என்கிற மந்திரச்சொல்லுக்காக. ஒரு நடிகரின் படத்தை முதல்நாள் முதல் ஷோவே பார்க்கவேண்டும் என்கிற ஆர்வ மிகுதியில் ஆண் ரசிகர்களுக்கு இணையாக பெண்களும் காத்திருந்த காட்சியை இப்போதுதான் காண்கிறேன்.

போகட்டும். இனி, தமிழ்த்திரையுலகின் ஒரே  சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா எப்படி..?

முதலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் கதையைத்தான் ரஜினியிடம் சொல்லியிருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். படம் நிகழ்காலத்தைத் தொட்டுச்செல்ல வேண்டும் என்பதால் தாத்தா -பேரன் என ஜல்லியடித்து, முத்து படத்தின் கதையை கொஞ்சம் டிங்கரிங் செய்து லிங்காவாக உருவாக்கி யிருக்கிறார் இயக்குநர்.

ரஜினி எதற்காக இந்த ' டேம் ' கதையை தேர்ந்தெடுத்திருப்பார்.? ஒருவேளை கத்தி படம் மீத்தேன் பிரச்சனை யைப்பற்றி பேசி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தமிழர்களின் மற்றொரு வாழ்வாதார பிரச்சனையான அண்டை மாநிலங்களுடான அணைப்பிரச்சனையைப் பற்றி பேச நினைத்திருக்கலாம். நல்ல விசயம்தான். ஆனால் அதில் உள்ள அரசியலைப் பற்றி கொஞ்சமாவது பேசவேண்டாமா..?

சரி பென்னிகுயிக்கின் கதை என்று முடிவாயிற்று. அந்த அணைக்கு ஒரு பெயர் வைக்க வேண்டாமா...? முல்லைப் பெரியாறு என வைத்தால் கேரளா கலெக்சன் போய்விடும்.காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதைப் பற்றி பேசினால் கர்நாடக கலெக்சன் படுத்துவிடும். பாலாற்றைப் பற்றி பேசினால் ஆந்திராவில் ஓடாது. அதனால் பட்டும் படாமல் பேசியதால் என்னவோ படமும் நம் மனதில் பட்டும் படாமல் நிற்கிறது.சரி கதைக்கு வருவோம்.

சோலையூரில் உள்ள அணையின் ஸ்திரத்தன்மையை சோதிக்க வரும் அதிகாரி பொன்வண்ணனிடம் அணை மோசமாக இடியும் தருவாயிலில் உள்ளது என பொய் சான்று அளிக்கும்படி அந்த ஊர் எம்பியான ஜெகபதிபாபு மிரட்டுகிறார். அவர் மறுக்கவே கொலை செய்யப்படுகிறார்.சாகும் முன் ஊர் பெரியவரான கே.விஸ்வநாத்- திடம் அந்த அணைக்கு பக்கத்தில் இருக்கும் கோயிலை திறந்தால் மட்டுமே இவ்வூரை காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.

அந்தக் கோயிலைத் திறக்கவேண்டுமானால் அதைக் கட்டிய லிங்கேஷ்வரனின் பேரன்தான் வரவேண்டும் என அந்தப் பெரியவர் விரும்புகிறார்.  அந்தப் பேரன்தான் லிங்காவான ரஜினி. அவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தன் பேத்தி அனுஷ்காவிடம் ஒப்படைக்கிறார். ரஜினியோ தன் சகாக்களான சந்தானம், கருணாகரன், பாலாஜி இவர்களுடன் உலகமகா திருடர்களாக இருக்கிறார்.

அவர்களை ஒருவழியாக கண்டுபிடித்து கூட்டிவருகிறார் அனுஷ்கா. அவர்களோ அந்தக் கோயிலில் உள்ள மரகத லிங்கத்தை அபேஸ் பண்ண திட்டம் போட்டு மாட்டிக்கொள்கிறார்கள்.அப்புறமென்ன, லிங்காவான ரஜினி யார் என்பதை நீண்ட நெடிய பிளாஸ் பேக்கில் கே.விஸ்வநாத் விவரித்து சொல்ல வழக்கம் போல ஹீரோ திருந்துகிறார்.

அதில்தான் பென்னிகுயிக்கின் கதை வருகிறது. லிங்கேஸ்வரன் வெளிநாட்டில் சிவில் எஞ்சினியரிங் மற்றும் ஐசிஎஸ் படித்துவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கலெக்டராக நியமிக்கப் படுகிறார். அவர் ஆட்சிக்குற்பட்ட சோலையூரில் தண்ணீரைத் தேக்கும் அணையில்லாமல் வெள்ளத்தினாலும் கடும் வறட்சியினாலும் மக்கள் அவதிப்படுவதை கண்டு அங்கு அணை கட்ட முயற்சி செய்கிறார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ அதற்கு அனுமதியளிக்க மறுக்கவே தனது கலெக்டர் உத்தியோகத்தை ராஜினாமா செய்து தன் சொந்த செலவில் மக்கள் சக்தியைக் கொண்டு அந்த அணையைக் கட்டுகிறார் லிங்கேஸ்வரன்.

அந்த அணையைக் கட்டிவிட்டால் லிங்கேஸ்வரன் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக ஆகிவிடுவாரோ என்று அவருக்கு நிறைய இடையூறுகள் தருகிறது பிரிட்டிஷ் அரசாங்கம். அதையும் வெற்றிகரமாக சமாளித்து கட்டி முடிக்கிறார் லிங்கேஸ்வரன். இறுதியில் தன் நயவஞ்சகத்தால் அவ்வூர் மக்கள் மத்தியில் தவறான செய்தியைப் பரப்பி லிங்கேஷ்வரனை ஊரைவிட்டே துரத்துகிறார் ஒரு வெள்ளைகார துரை. பிறகு மக்கள் உண்மையை உணர்ந்து அவரை தெய்வமாக போற்றுகிறார்கள். இது பிளாஷ்பேக்

அந்த அணை தற்போது பழுதடைந்துள்ளது என சொல்லி பராமரிப்பு செலவாக பல கோடியை சுருட்ட திட்டமிடுகிறார் சமகால அரசியல்வாதியான ஜகபதி பாபு. அதை எவ்வாறு பேரன் லிங்கா முறியடிக்கிறார் என்பதை ரஜினிக்காக ஒரு தடவை தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.   


கதை என்னவோ ரஜினிக்கு சவாலானதுதான். ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை விட்டு அவர் விலகும் போது அவர் ரசிகர்களே ஏற்றுக்கொள்ளாமல் படுதோல்வியை அளித்த வரலாறு நிறைய இருக்கிறது. இதுவும் அதுபோல ஒரு முயற்சிதான்.

60 வயதைக் கடந்த ரஜினியா அது..? ஓபனிங் சாங்கில் சும்மா விளையாண்டிருக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டாரின் இளமை துள்ளல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்திவிடுமா..?

படத்தின் முதல் சொதப்பல் திரைக்கதைதான். அதிலும் அந்த பிளாஷ்பேக். பொதுவாக பிளாஷ்பேக்கில் சொல்லவேண்டிய விஷயத்தை காட்சிகளால் சுருங்கச்சொல்லி மனதில் நிறையச்செய்வார்கள். இதில் அணைகட்டும் விஷயத்தை இவ்வளவு நீ.....ட்டி முழக்கி சொல்லவேண்டுமா..? 1939-ல் அந்த சம்பவங்கள் நடப்பதாக காண்பிக்கிறார்கள். அதற்கு நான்கைந்து பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் குதிரைகளை மட்டும் காண்பித்தால் போதுமா...? அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிகை அலங்காரம்,உடை , பேசும் மொழி எல்லாமே தற்போதைய காலகட்டத்தில் இருப்பது போல் உள்ளதே... சூப்பர் ஸ்டார் படம் என்பதால் காட்சிகளின் நம்பகத்தன்மை அவ்வளவு முக்கியமில்லையோ..?

லலிதா ஜுவல்லர்ஸ் கடையிலிருந்து மரகதம் பதித்த நெக்லசை ரஜினி திருடுவதாக ஒரு காட்சி. நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார்கள் போல. திடீர் செக்யூரிட்டியாக சந்தானம் அங்கு பணிபுரிபவர்களிடம் சகஜமாக பேசுகிறார். ஒருவருக்கும் சந்தேகம் இல்லை. 70 வருடங்கள் மூடப்பட்ட கோயிலினுள்ளே விளக்கு எரிய எண்ணெயும் பூஜிக்க பூக்களும் கிடைக்கிறது. ரஜினி படம் என்பதால் லாஜிக்கை பற்றி ஒரு பய கேள்வி கேட்கக் கூடாது என நினைத்திருக்கிறார்கள்.

பொதுவாக தலைவர் படங்களில் ஆரம்பத்தில் ஆட்டோகாரனாகவோ, பால்காரனாகவோ அல்லது கூலித் தொழிலாளியாகவோ இருந்து, பின்பு பெரிய தொழிலதிபராக உயருவதுபோல் கதையமைப்பு இருந்தால் இறுதிக் காட்சியில் மீண்டும் பழைய நிலையிலேயே இருப்பதுதான் தனக்கு திருப்தி என்பதுபோல காட்சி அமைத்துக் கொள்வார். அதற்காக இதில் திருடனாக இருந்து ராஜாவாக உயர்பவர் கடைசியில் கைதியாக செல்வதுபோல் காட்சியமைக்கவேண்டுமா..?

படத்தின் சண்டைக்காட்சிகள் இன்னொரு சொதப்பல். ரயிலில் நடக்கும் சண்டைகாட்சி கார்ட்டூன்(அனிமேசன்) ரகம். அதிலும் ஸ்லோ மோசனில் இன்னும் கொடுமையாக உள்ளது. இறுதிகாட்சியில் தெலுங்கு சினிமாவோ தோற்றுவிடும் அளவுக்கு ரஜினியை வைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள்.

நண்பா பாடல் மட்டும் பரவாயில்லை. மற்ற பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. ரஜினி-ஏ.ஆர் ரகுமான் காம்பிநேசனில் பாடல்கள் சொதப்பியது இந்தப்படத்தில் தான் என்று நினைக்கிறேன்.

படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக மனதில் நிற்பவர்கள் கலை இயக்குனரும் சந்தானமும்.அந்தக் கால அரண்மனை, பிரிட்ஷ்காரர்களின் பங்களா, பிரும்மாண்ட அணை என அனைத்தையும்  கலை நுணுக்கத்துடன் செதுக்கியிருக்கிறார் சாபு சிரில். அதேப்போல் ரத்னவேலுவின் ஒளிப்பதிவும். டாப் ஆங்கிளில் அணையையும் அதிலிருந்து சீறிப் பாயும் தண்ணீரையும் அட்டகாசமாக படம்பிடித்திருக்கிறார்.பொதுவாக சூப்பர் ஸ்டாரின் படங்களில் ஒவ்வொரு பிரேமிலும் அவர் தனியாக மிளிர்வார். அதுதான் அவரது ரசிகர்களை உற்சாக கூத்தாட வைக்கும். இதில் ஒவ்வொரு பிரேமிலும் அவர் இருக்கிறாரே தவிர அவரது எனர்ஜி, மாஸ், ஸ்டைல் எதையும் காணோம். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு ஆளுமையை இயக்குநர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

படம் ஆரம்பிக்கும்போது எனது பக்கத்து சீட்டில் இரு ரசிகர்கள் விசிலடித்து சீட்டின் மேல் ஏறி நின்றெல்லாம் ஆடினார்கள். படம் முடிந்தவுடன் 'பாஸ் படம் முடிந்துவிட்டது எழுந்திரியுங்கள்' என எழுப்பிவிட்டு வந்தேன்.

தியேட்டருக்கு வெளியே சூப்பர் ஸ்டார் படத்திற்கு முன்பு கேக் வெட்டி சிலர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். படத்திலும் கோ இன்சிடென்ஸாக ரஜினி கேக் வெட்டும் காட்சி ஓன்று வருகிறது. தியேட்டரில் பாதிக்கும் மேற்பட்டோர் எழுந்து நின்று கைதட்டினார்கள். சூப்பர் ஸ்டார் மக்கள் மனங்களில் நிரந்தரமாக ஏற்படுத்திய பிம்பம் அப்படி. வாழ்த்துக்கள் தலைவா...!

ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காவும் ஒருதடவை பார்க்கலாம் (வேறென்ன..அப்படித்தான் முடிக்கணும்)

                        ப்ளஸ்                   மைனஸ்
 இளமை துள்ளலான ரஜினி நீட்டி முழக்கி சொன்ன பிளாஷ் பேக்
ஒளிப்பதிவு நம்பமுடியாத  சண்டைக்காட்சிகள்

கலை(சாபு சிரில் ) திரைக்கதை , பாடல்கள்

சந்தானம் டைரக்சன்


------------------------------------------------------------x --------------------------------------------------------

12 comments:

 1. வணக்கம்
  லிங்காபடம் பற்றி தங்களின் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. படத்தை இன்று பார்க்கிறோம்...பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன்

   Delete
 2. என்னது எழுப்பி விட்டு வந்தீர்களா...?

  ReplyDelete
  Replies
  1. மிட் நைட் ஷோ . ஒருவேளை அதனால் தூங்கியிருக்கலாம் (ஹி..ஹி..இப்போதைக்கு இப்படித்தான் சமாளிக்கவேண்டும்)

   Delete
 3. ரஜினிக்காக கண்டிப்பா படம் பார்ப்பேன் அண்ணே....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்கூல் பையன்..

   Delete
 4. இது போன்ற கதை அமைப்பு உள்ள படத்தை ரஜினி ஒத்துக் கொண்டது ஆச்சர்யம்தான்.அரசியல் கருதி பல காம்ப்ரோமைஸ் செய்தே ஆக வேண்டும் ஆறு மாதத்தில் எடுக்கப் பட்டது என்ற கே.எஸ்.ஆர். அப்போதே கொஞ்சம் டவுட்டாகத் தான் இருந்தது. ரஜினிக்காக பார்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி டி.என்.முரளிதரன்

   Delete
 5. எப்படியாயிருந்தாலும் படம் ஒடிடும்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி செங்கதிரோன்

   Delete
 6. விமர்சனத்துக்கு நன்றி.அவரவர் பார்வைகள்(ரசனை) வேறுபடும்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி Yoga.S

   Delete