Saturday 22 November 2014

நாய்கள் ஜாக்கிரதை....

பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றும் போராட்டத்தில் வில்லனின் தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் சிபி. அதற்குப் பழிதீர்க்கும் விதமாக சிபியின் மனைவியையேக் கடத்துகிறது அக்கும்பல். கடத்தப்பட்ட தன் மனைவியை ஒரு நாயின் உதவியுடன் ஹீரோ மீட்பதே நாய்கள் ஜாக்கிரதை படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பின் சொந்த தயாரிப்பில் போலிஸ் கான்ஸ்டபிளாக களம் இறங்கியிருக்கிறார் சிபி. "நடப்பது நடக்கட்டும். கிடைப்பது கிடைக்கட்டும். நான் ரொம்ப துணிஞ்சவண்டா..." என்ற பாடலின் பின்னணியில் அறிமுகமாகும்போதே அடுத்த இன்னிங்க்ஸ்-க்கு தயாராகிவிட்டதை உணர்த்துகிறார்.

எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ வீரரை  ராணுவம் மீட்கும்வரை காவல் காக்கும் இடோ என்ற Belgian Shepherd நாய்தான் படத்தின் ஹீரோ.அதன் அறிமுகமும் அசத்தலாகத்தான் இருக்கிறது.பிறகு தமிழ்நாட்டுக்கு வரும்போது 'சுப்ரமணி' யாக மாறி ராமநாராயணன் குரூப்பில் சேர்ந்துவிடுகிறது .

ஒரு மிலிட்டரி நாயைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பது தமிழ் சினிமாவில் ஒரு வியத்தகு முயற்சி. இப்படிப்பட்ட துப்பறியும் கதையில் திரைக்கதைதானே இரண்டாவது ஹீரோ. ஆனால் சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட சுலபமாகக் கணிக்க முடிகிறது.  உயிருக்குப் போராடும் ஹீரோயினை ஒரு நாய் தன் மதிக்கூர்மையாலும் மோப்ப சக்தியாலும் கண்டுபிடிப்பதாக நகரும் கதையின் ஒவ்வொரு சீனையும் எப்படிக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்..?. நிறைய லாஜிக் ஓட்டைகள்.

ஒரு military-trained நாயைப் பற்றிய படம் என்று ஏற்கனவே நிறைய பில்டப் கொடுத்திருந்தார்கள். சமீபத்தில் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடுபாடுகளில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்ட ஒரு நாயைத் தத்தெடுப்பதாக விளம்பரம் வேறு செய்தார்கள். தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் செல்லப் பிராணிகளையும் விலங்குகளையும் வைத்து பல காவியங்களை(!)ப் படைக்க வல்லவர் ராமநாராயணன் மட்டும்தான் என்பது தமிழ்கூறும் சினிமா உலகம் அறிந்ததே. அவர் பாணி செயற்கைத்தனமானது. இது ராமநாராயணன் படத்திற்கும் ஹாலிவுட் படத்திற்கும் இடையில் தொங்கி நிற்கிறது.

ஒரு விளம்பரம்...!?
மயில்சாமி வளர்க்கும் லேடி டாக்குடன் காதல் கொண்டு காரில் சல்சா செய்வது, சிபியின் மேலே படுத்து விளையாடுவதை பக்கத்துவீட்டு ஆண்டி வக்கிரமாக கற்பனை செய்வது போன்ற காட்சிகள் மிலிட்டரி நாயின் கம்பீரத்தையே குறைத்துவிடுகிறது. மிலிட்டரி / போலிஸ் நாய்கள் எவ்வாறு தயார் படுத்தப்படுகிறது என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும்  முக்கியமானது. சூழ்நிலையைப் பொறுத்து மாறும் நாயின் முக பாவனைகள், அங்க அசைவுகள் எல்லாவற்றையும் நுட்பமாகப் படம்பிடித்திருக்க வேண்டாமா...?

ஒரு மிலிட்டரி ஆபிசரின் வீட்டில் வளரும் அந்த நாய் எதிர்பாராத விதமாக சிபியுடன் ஐக்கியமாகிறது. பொதுவாக நாய்களை வெறுக்கும் சிபி எந்த காரணத்திற்காக அந்த நாயுடன் இவ்வளவு அன்யோன்யமானார் என்பதை சொல்லவில்லை.சிபி செகண்ட் ஹீரோ என்பதால் அவரை இவ்வளவு சப்பையாக காட்டியிருக்க வேண்டுமா.? வில்லனிடம்" உன் தம்பியை வேணும் என்றே கொல்லவில்லை... அவனா செத்துட்டான். என் மனைவியை எங்கே ஒளிச்சி வச்சிருக்க" என  கெஞ்சும் போது உண்மையிலேயே அவர் போலிஸ்காரரா என்கிற சந்தேகம் வலுக்கிறது. கடைசியில் நாய் சாகும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியில் கொஞ்சமாவது தன் மனைவி கடத்தப்பட்ட விசயத்தில் காண்பித்திருக்கலாம் சிபி..

(ஹீரோயின் பெயரை கூகுள்ள போட்டு தேடினப்போ கிடைச்சது..ஹி..ஹி உடனே ஃபிரேம் போட்டுட்டேன்.  அம்மணி தாராளமா நடிக்கிற டைப் தான் போல. இவிங்கதான் யூஸ் பண்ணிக்கல.)
அதுசரி, முழுவதும் மூடப்பட்ட, காற்று புகமுடியாத ஒரு சவப்பெட்டியில் ஆறுமணி நேரம் மூச்சு விடலாம் என்கிற அபத்தம் இருக்கட்டும், வெப் கேமராவில் மிகத்துல்லியமாக படம் தெரியுமளவுக்கு வெளிச்சம் ஏது..? அவ்வளவு கிளியராக வாய்ஸ் கேட்குமா..?  மண்ணில் புதைக்கப்பட்டப் பிறகும் அந்த மலையில் வெப் கேமரா இவ்வளவு தெளிவாக வேலை செய்கிறது என்பதே ஆச்சர்யம்தான். அந்த வில்லன் கோஷ்டி எதற்காக பெண்களைக் கடத்தி வெப் கேமரா பொருத்தி உயிரோடு புதைக்கிறார்கள் என்பதை கடைசி வரை சொல்லவே இல்லை.

பொதுவெளியில் பட்டப்பகலில் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு வில்லன் குரூப் ஹீரோயினைக் கடத்துவது, போலீசைக் கண்டு ஓடுவது எல்லாமே செயற்கைத்தனமாக இருக்கிறது. அது எப்படி அச்சம்பவங்கள் நடக்கும் போது எந்த சலனமுமே இல்லாமல் மக்கள் போகிறார்கள் என்பது தெரியவில்லை. வில்லனாக வரும் பாலாஜி வேணுகோபால் ஆரம்பத்தில் கொடூர வில்லன் போல பில்டப் கொடுத்து  கடைசியில் நாயிக்குப் பயந்து ஓடும்போது அக்மார்க் காமடியனாகிறார்.

சிபிக்கு துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டால் சிறுவர்கள் போல பயப்படும் வினோத நோய் இருப்பதாக ஆரம்பத்தில் சொல்கிறார்கள்(அதை வில்லன் குரூப் கண்டுபிடிப்பதுதான் செம காமெடி). அதை வைத்து கிளைமாக்சில் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் எனப் பார்த்தால் வில்லன் கிண்டல் செய்வதோடு அவ்விசயம் முடிந்துவிடுகிறது.ஹீரோவை வில்லன் சுடும்போது குறுக்கே ஓடிவந்து குண்டுகளை தன் உடலில் வாங்கிக் கொள்ளும் எம்ஜியார் காலத்து டெக்னிக்கை எப்பப்பா விடப்போறீங்க..? நாய்க்குக் கூட அப்படி சீன் வைக்கணுமா..?

ஹீரோயின் யாரோ அருந்ததியாம். எந்தப்பக்கம் பார்த்தாலும் மொக்கையாகத்தான் இருக்கிறார். இவர்தான் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்தின் ஹீரோயினா..?

உள்ளே நுழையாதீர்கள். நாய்கள் இருக்கிறது.மீறி வந்தால் கடிச்சி வச்சிடும் என்பதின் குறியீடுதானே ' நாய்கள் ஜாக்கிரதை'..!  அதை நமக்குத்தான் சொல்கிறார்கள் போல. வித்தியாசமான முயற்சிதான். போரடிக்காமல் செல்லவேண்டும் என்பதற்காக நிறைய கத்தரி போட்டு இரண்டுமணி நேரத்திற்கும் குறைவாக எடிட் செய்திருக்கிறார்கள். அந்த விசயத்தில் ஓரளவு ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், காட்சிகள் மட்டுமல்ல இறுதியில் தன் எஜமானரைக் காப்பாற்ற உயிர்விடும் அந்த நாய் கூட மனதில் நிற்கவில்லை.  

6 comments:

 1. வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்

   Delete
 2. வாங்க பாஸ் மீண்டும் ஒரு விம்ர்சனப்பகிர்வுடன் வலையில் சந்திப்பது மகிழ்ச்சி. இப்போது படம் பார்க்கும் நேரம் இல்லை.காசும் மிச்சம் உங்கள் பதிவை படித்த பின்!!!

  ReplyDelete
  Replies
  1. நமக்கும் பொழுது போக வேணாமா பாஸ் :-)..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. ஹா... ஹா... நல்ல விமர்சனம்...
  இந்த அம்மணி காட்டுக்குள் பிரசன்னாவை தேடிப் போகும் குரூப்போடு ஒரு படத்தில் ஆட்டம் போடுவார். அதில் ஒரு பாட்டு சீன் இது...

  ReplyDelete
  Replies
  1. அந்தப் படம் இன்னும் பாக்கல பாஸ்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி -'பரிவை' சே.குமார்

   Delete