மன்னர்கள் காலத்துக் கதை. ஒரு ஊர்ல... என ஆரம்பிக்கலாம் என்றுதான் ஆசை. ஆனால் என்ன செய்வது, கதை மாந்தர்களை மட்டும் சொல்லிவிட்டு மீதியை அப்புறம் சொல்கிறேன் என்றால் எப்படி இருக்கும்...?
நள்ளிரவுக்காட்சி என்பதால் இடைவேளை விடாமல் படத்தை ஓட்டியிருக்கிறார்கள். போர்க்கள காட்சிகளு- க்குப் பிறகு சத்தியராஜ் முக்கியமான ட்விஸ்ட் ஒன்றை சொல்கிறார்... அட என்று நிமிர்த்து உட்கார்ந்த நேரத்தில் தியேட்டரில் மின் விளக்கை போட்டார்கள். இண்டர்வல் பிளாக் சூப்பர்ரா இருக்குப்பா என நினைத்துக் கொண்டிருந்தால், படம் முடிந்துவிட்டது கிளம்புங்க என்கிறார்கள்.
கதையில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்காமல், தத்ரூப காட்சிகளாலும் பிரமிப்பூட்டும் போர்க்கள பிரும்மாண்டத்தினாலும் மட்டுமே என்னைப் போன்ற ஓர் சராசரி சினிமா ரசிகனை திருப்தி படுத்திவிட முடியுமா என்கிற கேள்வி, படம் முடிந்தவுடன் என்னைப் போல் நிறைய பேரின் மனத்துக்குள் எழுந்திருக்- கலாம்.
பொதுவாக இரண்டாம் பாகம் என்று வருகிறபொழுது , முதல் பாகத்தில் ஒரு கதையை சொல்லி , அதன் திரைக்கதையில் நிறைய முடிச்சுகளை வைத்து அதே பாகத்தில் அம்முடிச்சுகளை அவிழ்த்து சுபம் என்று முடிப்பார்கள். இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான ஒரே ஒரு 'லீட்' மட்டும் வைத்து படத்தை ' தொடரும் ' என்றும் முடிப்பார்கள். ஆனால் பாகுபலியில் இடைவேளையோடு எழுந்து வந்தது போன்ற உணர்வு .
பொதுவாக விமர்சனம் எழுதும்போது கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திவிட்டு, பாதி கதையை சொல்லி, முக்கிய திருப்பங்களை சொல்லாமல் ' மீதியை திரையில் காண்க ' என முடிப்பது தொன்று தொட்டு திரை விமர்சகர்களால் பின்பற்றப்படும் நடைமுறை.. ஆனால் இதில் அவர்கள் சொன்னதே பாதி கதைதான் என்பதால் அதை அப்படியே சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.
பாகுபலி பாகம் 1-ன் மையக்கதை " 25 வருடங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு, அடிமைப்போல சிறைவைக்கப் பட்டிருக்கும் ஒரு அரசியை அவளது மகன் மீட்டு வருவது..." . கிட்டத்தட்ட எம்ஜியாரின் அடிமைப்பெண் படத்தின் ஒன் லைன்.
# ரம்யாகிருஷ்ணன் தனது முதுகில் பாய்ந்த அம்பைப் பொருட்படுத்தாமல் ஒரு குழந்தையைக் காப்பற்ற தப்பித்து ஓடுகிறார். இறுதியில் குழந்தையை பழங்குடி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அக்குழந்தை வளர்ந்து பிரபாஸ் ஆகிறது.
# நாட்டுக்கு எதிராக போராடும் ஒரு போராளிக்குழுவில் தமன்னா இருக்கிறார். அரசி தேவசேனாவை மீட்க வேண்டும் என்பது அவர்களது லட்சியம்.
# அரண்மனை வளாகத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு அடிமைப் பெண்ணாக முடங்கிக் கிடக்கிறார் அனுஷ்கா. அவரது அடிமைத்தளையை உடைத்தெறிய தைரியமில்லாத குற்ற உணர்ச்சியில் சத்யராஜ்.
இம்மூன்றுக்கும் முடிச்சி போடவேண்டும். பிறகு அம்முடிச்சிகளை அவிழ்க்க வேண்டும். இதுதான் பாகுபலி படத்தின் கதை.
தமன்னா மீது கொண்ட காதலால் யாரென்றே தெரியாமல் அனுஷ்காவை மீட்டு வருகிறார் பிரபாஸ்.. பிறகு அவர்தான் பிரபாஸின் அம்மா எனத் தெரியவருகிறது. அப்படியானால் பிரபாஸ்...?. பிளாஷ்பேக் விரிகிறது...
மலைகளுக்கு உச்சியில் மகிழ்மதி என்றொரு தேசம்.
மகேந்திரன் என்னும் பேரரசன் ஆட்சி செய்து வந்தான். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவர் பிங்கால தேவன்(நாசர்) கை ஊனமான மாற்றுத் திறனாளி. இவரது மனைவி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்). இளையவர் மதிகூர்மையும், வீரமும் செறிந்த தீரேந்திரன்(பிரபாஸ்).
அரசரின் மறைவுக்குப் பின்னர் , மூத்தவர் பிங்கால தேவருக்கு கிடைக்க வேண்டிய அரசர் பட்டம், மதிகூர்மை உடைய இளையவர் தீரேந்திரனுக்குக் கிடைக்கிறது. தனது ஊனத்தினால் தான் அரசாட்சி செய்யும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என்கிற தவறான சிந்தனை, மூத்தவர் பிங்கால தேவனின் மனதில் வஞ்சத்தை விதைக்கிறது. அரசர் பதவி தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனது வாரிசு அரியணையில் அமரவேண்டும் என்கிற வெறி, நயவஞ்சக சூழ்ச்சி செய்ய அவரைத் தூண்டுகிறது.
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அரசர் தீரேந்திரன் இறந்துவிடுகிறார். அந்த நேரத்தில் மூத்தவரின் மனைவி சிவகாமி தேவிக்கும் இளையவரின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. இரண்டும் ஆண் குழந்தைகள். இளையவரின் மனைவி பிரசவிக்கும் போது இறந்து விட்டதாக செவிலித்தாய் சொல்கிறாள்.
மன்னர் இறந்த துயரத்தில் அரண்மனையே பொலிவிழந்து துக்கத்தில் மூழ்கிவிட, ஆட்சியைக் கைப்பற்ற உள்ளடி வேலைகள் நடக்கிறது. அதை ஆயுதங்களை நிர்வகிக்கும் தனது விசுவாசி கட்டப்பா (சத்யராஜ்) உதவியுடன் முறியடிக்கிறார் சிவகாமிதேவி. வேறுவழியில்லாமல் அவரே அரியணையில் ஏறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.ஆனால் அவர் ஆட்சி செய்யாமல் இளையவாரிசை இளவரசனாக்க முடிவு செய்கிறார். இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பிங்காலதேவன், தமது மகனை இளவரசனாக்கும் படி கேட்டுக் கொள்கிறார்.
ஆனால், இதை சிவகாமி தேவி மறுக்கிறார். இரண்டு புதல்வருக்கும் அரியணையில் ஏறும் தகுதி இருக்கிறது. பிற்காலத்தில் இருவரில் வீரத்தில் சிறந்தவன் எவனோ..மக்கள் மனதில் நிற்பவன் எவனோ.., அவனே ஆட்சிக் கட்டிலில் அமரட்டும்.. இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம் என்று ஆணையிடுகிறார்.
மூத்தவர் பிங்கால தேவனின் மகன்தான் பல்வாள் தேவன்(ரானா). இறந்துபோன அரசன் தீரேந்திரனின் மகன் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்). இருவருமே சிறுவயதிலிருந்தே வீரத்தில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் விவேகம் என வருகிறபோது பல்வாள் தேவனைவிட பாகுபலி ஒரு படி மேலே நிற்கிறார்.
இருவரும் வீரமிக்க ஆண்மகனாக வளர்ந்து நிற்கும் வேளையில் காலகேயர்கள் என்கிற அரக்கர்கள் போர் தொடுத்து வரப் போவதாக செய்தி வருகிறது. மகிழ்மதி தேசத்தையும் அதன் மானத்தையும் காக்கும் பொறுப்பு இருவருக்கும் வருகிறது. இருவரில் யார் மிகப்பெரிய வீரன் என்று சோதனை செய்யும் சந்தர்ப்பமாகவும் அது அமைகிறது.
தன் மகனுக்கு முடிசூடுவதற்கு சரியான தருணத்திற்காக காத்திருந்த பிங்காலதேவன் 'முடியை முடிப்பவன் முடி. காலகேய தலைவனை எவன் கொல்கிறானோ அவனுக்கே மகிழ்மதியின் அரியாசனம்' என சொல்கிறார். அதை சிவகாமிதேவியும் ஆமோதித்து படைகளை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்துத் தருமாறு உத்தரவு இடுகிறார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிங்கால தேவன் தனது மகனுக்கு நவீன ஆயுதங்களையும், பாகுபலிக்கு கோட்டையைத் தகர்க்கும் கலன்களை மட்டும் கொடுக்கிறார்.
போர் ஆரம்பமாகிறது. நவீன ஆயுதங்களைக் கொண்டு எதிரிகளை பல்வாள்தேவன் துவம்சம் செய்ய, தனது சாதூர்யத்தால் புதிய யுத்தியை பயன்படுத்தி எதிரி படைவீரர்களை வீழ்த்துகிறார் பாகுபலி. ஒரு கட்டத்தில் காலகேய படைகள் மகிழ்மதி படைகளைப் பின்வாங்க செய்து கோட்டையை நோக்கி முன்னேறி வருகிறது. தோல்வியின் விளிம்பில் மகிழ்மதி படை. கடைசியாக தங்களது பிரம்மாஸ்திரம்மான திரிசூல வியூகத்தை கையில் எடுக்கிறார்கள் பல்வாள்தேவனும் பாகுபலியும்.
காலகேய படைத்தலைவனை வீழ்த்த, பல்வாள்தேவனும் பாகுபலியும் இருமுனைத் தாக்குதலைத் தொடுக்கின்றனர். திரிசூல வியூகத்தால் நிலைகுலைந்துபோன காலகேய தலைவன், மகிழ்மதி நாட்டு மக்களை மனிதக் கேடையங்களாக நிறுத்துகிறான். எப்படியாவது காலகேய தலைவனின் தலையை எடுத்துவிட்டு அரியணையில் ஏறவேண்டும் என்கிற வெறியில் தனது நாட்டு மக்களின் உயிரை துச்சமாக மதித்து முன்னேறுகிறான் பல்வாள்தேவன். ஆனால், தன் மக்களைக் காப்பாற்றிய பிறகே காலகேய தலைவனை வீழ்த்தவேண்டும் என்று புதுயுத்தி வகுக்கிறான் பாகுபலி. இறுதியில் காலகேய தலைவனுக்கும் பாகுபலிக்கும் கடுமையான நேரடியுத்தம் நடக்கிறது. இதில் காலகேய தலைவன் தோல்வியடைந்து சாகும் தருவாயிலில், பல்வாள்தேவன் முந்திக்கொண்டு கடைசி அடியை அடித்து காலகேய தலைவனை கொன்றுவிடுகிறான்.
காலகேய தலைவனை கொன்றது தன் மகன்தான் என்று சொல்லி அரசனாக கட்டளையிடும்படி தன் மனைவி சிவகாமி தேவியை கேட்கிறான் பிங்கால தேவன். ஆனால் சிவகாமியோ, " எதிரிகளை வீழ்த்துபவன் போர்ப் படைத் தலைவன், ஆனால் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுபவன் தான் நாட்டின் அரசன். அதனால் பாகுபலியே இந்நாட்டின் அரசன் " என்று ஆணையிடுகிறார்.
இது ஃபிளாஷ்பேக்..
இதில் நான்கு தலைமுறை வருகிறது. குழம்பியவர்களுக்காக (நான் உட்பட) ஒரு சமூக சேவை. :-)
ஃபிளாஷ்பேக்கை சொல்வது பாகுபலியின் விசுவாசியான கட்டப்பா.. அப்படியானால் பாகுபலியைக் கொன்றது யார் என்று கேட்க, ' நான் தான்...! ' என்கிறார் கட்டப்பா. படம் முடிகிறது.
தேவசேனாவை எதற்காக சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள் ..?
பல்வாள்தேவன் எப்படி அரசனானான் ..?
சிவகாமி தேவி எதற்காக குழந்தையைக் காப்பாற்ற போராடவேண்டும்..? அவர் மீது அம்பெய்தியது யார்..?
தமன்னா யார்..? எதற்காக போராளியானார் ..? இப்படி நிறைய புதிர்களுக்கு விடை சொல்லாமல் அடுத்தப் பாகத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.
குழப்பத்தோடு நாமும் வெளிவருகிறோம். பொதுவாக இதுபோன்ற விடையில்லா புதிர்களை தொலைக்காட்சி தொடர்களில்தான் வைப்பார்கள், அடுத்த எபிசோடை பார்க்க வேண்டும் என்பதற்காக. பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் போல.
படத்தின் கதையை உருவாக்கும் போதே அதன் காட்சிப் பிம்பங்களை கற்பனையில் ஓடவிட்டு பார்த்திருப்பார் இயக்குனர் ராஜ்மௌலி. ஏற்கனவே ட்ரிபிள் ஹாட்ரிக் அடித்தவர். சினிமா உலகில் யாருமே செய்யாத மகத்தான சாதனை இது. அந்த நம்பிக்கைதான் இப்படியொரு பிரும்மாண்டமான படத்தை எடுக்கும் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. சோழர்களின் மிச்ச எச்சத்தை கண்டுபிடிக்கிறேன், வேறு ஒரு உலகத்தை காண்பிக்கிறேன் என்று வெறும் ஜிகினா வேலைப்பாட்டை செய்துவிட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரசனை போதவில்லை என்று ஜல்லியடிக்கும் தற்குறி ராகவன்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.
இத்தனை வருடம் உழைப்பு என்று புலம்புகிறார்கள். ஆனால் அந்த உழைப்பினால் வெளிவந்த வியர்வை சரியான தளத்தின் மீது சித்தப்பட்டிருக்கிறதா என்பதுதான் இங்கு முக்கியம். ராஜ்மௌலியின் உழைப்பு வீணாகப் போகவில்லை. இந்தியாவே ஒரு தென்னிந்திய மொழி திரைப்படத்திற்காக காத்துக் கிடந்தது பாகுபலிக்காகத்தான். எனக்குத் தெரிந்தவகையில் சிங்கையில் எந்திரனுக்கு அடுத்து அதிக திரைகளில் வெளியிடப்பட்டது பாகுபலிதான்..
ஆரம்பத்தில் வெள்ளுடை தரித்த தேவதை போல அறிமுகமாகும் அந்த அருவிக்காட்சியே இது உள்ளூர் சினிமா அல்ல, உலக சினிமா என்பதை உணர்த்துகிறது. அருவிக்காட்சி, அரண்மனை, காட்டெருமை, பிரும்மாண்ட சிலை, போர்க்களக் காட்சிகள் என எல்லாவற்றிலும் 'CG' புகுந்து விளையாடியிருக்கிறது. இந்திய சினிமாவில் இந்தளவுக்கு தத்ரூபமான நேர்த்தியான 'CG' யை இதுவரைப் பார்த்ததில்லை.
கதாபாத்திரத் தேர்வு கூட அமர்க்களம். யாரிடமும் மிகை நடிப்பு இல்லை. பிரபாஸ்- ரானா இருவரும் அப்படியே பொருந்திப் போகிறார்கள். ஆனால் இவர்களை விட அமர்க்களப் படுத்தியிருப்பது சத்யராஜும் ரம்யா கிருஸ்ணனும். கட்டாப்பா என்று ரம்யாகிருஷ்ணன் கர்ஜிக்கும் போது மின்னல் வேகத்தில் வாளோடு பாய்ந்து வரும் அந்த ஒரு காட்சி மெய் சிலிரிக்க வைத்தது. வாள் சண்டையில் பின்னி எடுக்கிறார். அரசிக்கே உள்ள கம்பீரம் ரம்யா கிருஷ்ணனின் குரலிலும் முகத்திலும்." இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்.." என்று சொல்கிறபோது 'உத்தரவு அரசியாரே' என்று நம்மையே சொல்ல வைக்கிறது. வசனங்கள் நச் என்றெல்லாம் சொல்லமுடியாது... ஆனால், உறுத்தாத வசனங்களுக்கு உத்திரவாதம் கார்க்கி வைரமுத்து.
இறுதியில் நடக்கும் போர்க்கள காட்சி, அதற்கான வியூகம் எல்லாமே இந்திய சினிமாவுக்கு புதிது. அவ்வளவு பேரை கட்டி மேய்ப்பதே பெரிய சவாலான விசயம்தான். ஒரு நிஜப் போர் எப்படியிருக்கும் என்பதை கண்முன் காட்டிய அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ராயல் சல்யூட். குறிப்பாக ஸ்டண்ட் பீட்டர் ஹெயின், ஒளிப்பதிவாளர் கே.செந்தில்குமார், விஷுவல் எஃபெக்ட் ஸ்ரீநிவாஸ் மோகன்..
இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று கேட்க வைக்கிறது, தமன்னாவை பெண் போராளியாகப் பார்க்கும் போது. நிச்சயம் நடிப்பில் அவருக்கு இது அடுத்தக்கட்டம். கிளாமராக கிளுகிளுப்பேற்றியவரை வாள் ஏந்தும் போராளியாகப் பார்க்கும் பொழுது ஆச்சர்யம் வரத்தானே செய்யும்..!
இப்படி நிறைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனாலும் குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டம் ஆரம்பத்தில் இருந்திருக்காது என நினைக்கிறேன். ஒருவேளை பட்ஜெட் எகிறிப்போனதால் எடுத்த முடிவாக இருக்கலாம். அதற்காகத்தான் முதல் பாதியை முடிந்தவரை இழுத்திருக்கிறார்கள்.
படத்தில் முக்கியமான குறை மரகதமணி. ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் ஒரு படைப்புக்கு இசை எவ்வாறு இருக்கவேண்டும்..? பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பெரிய இடையூறு. பின்னணி இசைகூட முதல் பாதியில் சொதப்பல்தான். இரண்டாம் பாதியில் சமாளித்திருக்கிறார்.
பிரபாஸ்- ரானா இருவரையும் ஒப்பிட்டால் ரானாவே முந்துகிறார். அவர் பாத்திரத்திற்கேற்ற வில்லத்தனம், வெறி, கோபம் எல்லாம் அச்சு அசலாக கண்களில் தெரிகிறது. பிரபாஸ் , ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ஈர்ப்பும் போர்க்கள காட்சிகளில் கொஞ்சம் விறைப்பும் காட்டியிருக்கலாம்.
தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி அனுஷ்காவை இந்தக் கோலத்திலா பார்க்கவேண்டும்.. அய்யகோ.. ! மேக்கப் போடாமலே அழகாக இருக்கும் தலைவியின் முகத்தில் எதையோ ஒட்டி அவரை கிழவியாக்க முயற்சி செய்த ராஜ்மவுலிக்கு தமிழக அனுஷ்கா பேரவையின் சார்பாக கடும் கண்டனங்கள். அடுத்த பாகத்தில் அனேகமாக அனுஷ்காவைச் சுற்றிதான் கதை நகரும் போல தெரிகிறது.
மற்ற குறைகள் என்றால் முதலில் சொல்லியதுதான்.. கதை முடிவில்லாமல் அந்தரங்கத்தில் தொங்குகிறது.. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
பாகுபலி -கொண்டாடப்பட வேண்டிய படம்..!