Saturday, 26 November 2011

கபடி.... கபடி..... கண்டுபிடி..

வாழ்த்துவோம் ;


காணாமல் போன கபடி விளையாட்டைக் கண்டெடுக்கும் ஓர் முயற்சி :-

நமது இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக  நம் மண்ணின் வீரம் செறிந்த கபடி விளையாட்டின் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றெடுத்திருக்கிறது. இதற்கு முதலில் சிரம் தாழ்த்தி வாழ்த்துச் சொல்வோம்.
    
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான், இலங்கை, தாய்லாந்து, சீனா, இத்தாலி,ஆப்கனிஸ்தான், மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா,  நேபால், நார்வே, ஸ்பெயின்  மற்றும் அர்ஜென்டினா ஆகிய  நாடுகள் பங்கேற்றது. போட்டி மிகக்கடுமையாக இருந்தும் 'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் ' என்று மீண்டும் நிரூபித்து வாகை சூடியிருக்கிறது  நம் இந்திய அணி.

ஆனால், இந்தியா கிரிக்கெட் சாம்பியன் ஆனபோது சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட நம்மவர்கள், இவ்வெற்றியைப்பற்றி சிலாகித்து ஒரு வார்த்தைக்கூட தெரிவிக்காதது வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

கபடி விளையாட்டு என்றால் என்ன...? ஏதோ ரோட்டோரத்தில் டவுசர், பனியனோடு குஸ்தி சண்டைப் போல சகதியில் கட்டிப்புரண்டு உருள்வார்களே அதுவா...? கபடி விளையாட்டைப் பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இப்படித்தான் இருக்கும்...

இந்தியா, கபடி விளையாட்டில்  பெரிய அளவில்  என்ன  சாதித்துவிட்டது..? நிறையப்பேருக்கு தெரிந்திருக்காது. காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள்...

இதோ இந்தியாவின் வெற்றி வரலாறு..





(தகவல்கள் -நன்றி விக்கிப்பீடியா)

கண்ணைக்கட்டுமே.....! குழப்பிக் கொள்ள வேண்டாம்... இதன் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதின் ஆதாரம்தான் மேலே உள்ள தகவல்கள்.

கபடி விளையாட்டு தமிழர்களின்  பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது. நம் கலாச்சாரத்தின் உயிர் செல்கள் ஒவ்வொன்றாய் மரித்து போய் உதிர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், கபடியும் அப்படிப்பட்ட கோமா நிலையில்தான்  ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்கள்... அல்லது அடுத்தத் தலைமுறையில் கபடி நம் பாடப்புத்தகத்தோடு அதன் வரலாற்றை முடித்துக்கொள்ளும்.

கபடியைப் பற்றி ஓர் தவறான புரிதல் நம் சமூகத்தில் நிலவுகிறது. இது நாட்டுப்புறங்களில் விளையாடப்படும் விளையாட்டு போலவும், ஜல்லிக்கட்டுப் போன்ற ஆபத்தான விளையாட்டு போலவும் இதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும் எனவும் மேலெழுந்தவாரியாக ஓர் எண்ணம் சமகால நகரப்புற மக்களிடம் இருக்கிறது. குறிப்பாக படித்தவர்கள் மத்தியில்... 

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சினிமா போஸ்டர்களுக்கு இணையாக கபடிப்போட்டியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும்.முதல் பரிசு ரூ 555.. இரண்டாம் பரிசு ரூ 333..  மூன்றாம் பரிசு ரூ111. ஆனால் இங்கே பரிசுத்தொகை முக்கியமில்லை. விளையாடவேண்டும். ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்.

சிறுவயதில் கபடி எனக்கு உயிர் மூச்சு. எனக்கு தெரிந்த ஒரே விளையாட்டும் அதுதான். பள்ளி முடிந்து வீடு வந்து சேர்வதற்குள் பள்ளியின் விளையாட்டு களத்தில் ஒரு ஆட்டம், ஆற்று மணலில் ஒரு ஆட்டம் என்று இரண்டு ஆட்டம் போட்டுவிடுவோம். இரண்டும் பக்கத்து ஊர் பசங்களுடன். பிறகு வீட்டில் புத்தகப் பையை தூக்கி எறிந்துவிட்டு பக்கத்து தெரு பசங்களுடன் ஒரு ஆட்டம்.

சில நேரங்களில் கால் முட்டி பெயர்ந்து விடும். கைகளில் நெஞ்சில் சிராய்ப்புகள் ஏற்படும். சில நேரங்களில் மண்டை கூட உடையும். அடுத்த நாள் குளத்து தண்ணீரில் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துதான் எங்கெங்கு அடிபட்டிருக்கிறது என்பது தெரியவரும். அதற்காக ஒருபோதும் கவலைப் பட்டதும் இல்லை.  

புழுதி பறக்கும் களத்தில் குருதிச்சொட்ட விளையாடிய நினைவுகள் இன்னும் இருக்கிறது. கோடைக் காலங்களில் இதுதான் எங்கள் பொழுதுப்போக்கு. நாலு பேரு ஒன்னா சேந்தா, நடுவுல ஒரு கோடு  போட்டு , அணிக்கு ரெண்டா பிரிச்சி ஆசையோடு விளையாடிய ஞாபகங்கள்......
            
மண்ணோட வாசமும் ருசியும் ஒன்னா கலந்ததால சோறு தண்ணியும் மறந்து விடும்..சுகமும் துக்கமும் மறத்து  போகும். மட்டையும்  பந்தும் தேவையில்ல..அரைக்கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு.. புல்தரையும் போர்க்களமாகும்...வயல்வெளியும் மைதானமாகும்..   

பள்ளிக்கூடத்தில் அரை பெல் அடிச்சா, அந்த அரை மணி நேரத்திலும் அணி பிரிச்சி  ஒரு ஆட்டம் போடுவோம். முழுப் பரிட்சை  முடிஞ்சா முழுமூச்சா இறங்கிடுவோம்..ஊர் ஊராச்  சுத்தி ஒரு போட்டியும் விடாம களம் கண்டு வெறியோடு வெல்வோம்.
               
இதில் எடைப்பிரிவு இருக்கு." நாங்க விதிமுறையில சொன்ன எடையைவிட இரண்டு கிலோ அதிகம் " னு நடுவர் சொல்வார். விடமாட்டோம். ஒரு வாரம் ஓடினாலும் ரெண்டு கிலோ குறையாது. ஆனாலும் ஏதோ நம்பிக்கையில நாத்து வயல்களுக்கு நடுவே மூச்சிரைக்க ஓடுவோம். ஒரு கிலோ கூடயிருக்குனு நடுவர் சொன்னப்ப, வாய்க்குள்ள  விரலைவிட்டு வாந்தி எடுத்த கதையும் இன்னும் நினைவிலிருக்கு ...  
                   
வெற்றியோ தோல்வியோ ..அதைப்பற்றியெல்லாம் கவலையில்ல.. களமிறங்கி விளையாடுனும். இதுல கிடைக்கும் ஆத்மதிருப்தி  வேறெதிலும் அப்போ கிடைக்காது. கபடியைப் பொருத்தவரையில் மண்ணைக் கவ்வுவதும், மீசையில் மண் ஓட்டுவதும் ,தோல்விக்கான அடையாளம் அல்ல .
 
இப்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால், சின்னப்பசங்க எல்லாம் கையில பேட் பந்தோட சுத்துறாங்க. கேட்டால், லை.'.ப்  ஸ்டைல் மாறிப்போச்சாம்... சொல்றாய்ங்க..
'டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டி ...முதல் பரிசு 5001 ' அப்படின்னுதான் இப்பெல்லாம் போஸ்டர் பார்க்க முடியுது. அதிலும் சினிமாவில கபடியைக் காட்டும் விதம் அதைவிடக்கொடுமை. ஹீரோ ஹீரோயினோட மன்மத விளையாட்டுபோலவும், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் கொடுரமான சண்டை போலவும் (அதுவும் விரலிடுக்குள்ள பிளேடு வச்செல்லாம்......@ கில்லி ) காட்டப்படுகிறது. விதிவிலக்கு 'வெண்ணிலா கபடிக்குழு' ...

கபடியின் பூர்விகம் என்ன ? அதன் விதி முறைகள் என்ன ? கபடி எவ்வாறு விளையாடப்படுகிறது ? என்பதைப்பற்றி(நீங்க விரும்பாவிட்டாலும்) உங்களோட பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்..

கபடியைப்பற்றி அறியாதவர்களுக்கு  எனக்குத்தெரிந்த தகவல்கள் ..

இது தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு...இதன் வயது 4000  வருடங்களுக்கு மேல். அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டுவ என்பது கூடுதல் தகவல். கபடி தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப்படுகிறது. கபடி 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கபடி விளையாட பேட், பந்து, நெட் எதுவும் தேவை இல்ல. நம்ம கட்டுடல் மேனி தான் இதற்கு மூலதனம். மற்ற விளையாட்டுகளில் கை, கால், தலை என்று உடல் உறுப்புகளுக்கு மட்டும் வேலை இருக்கும்.ஆனால் கபடியில் இவைகளோடு சேர்த்து மூச்சுப்பயிற்சியும் தேவை. உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்வதற்குப்பதில் கபடி விளையாடிவிட்டுப் போகலாம்

கபடி என்ற சொல் தமிழிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருள்.

ஆனால் இது ஹிந்தி வார்த்தை எனவும் KABBADI என்றால் மூச்சை விடாமல்  நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)எனவும் கூறுவார்கள்.

இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப  விளையாடப்படுகிறது என்றாலும்  இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .
 
             கபடி        (kabbadi)             ---------------  இந்தியா ,பாகிஸ்தான் 
             ஹடுடு  (hadudu)              ----------------- பங்களாதேஷ் 
            டூ-டூ          (do-do)                ----------------- நேபாளம் 
            குடு           (guddo)               -----------------  ஸ்ரீ லங்கா 
            சடு-குடு   (chado-guddo)   -----------------   மலேசியா 
            டெசிப்      (techib)                 ----------------- இந்தோனேசியா

கபடியின்  வகைகள் ; 

         இந்தியாவில் கபடி மூன்று முறைகளில் விளையாடப்படுகிறது.
     1 . சர்ஜீவ்னி 
     2 . காமினி 
     3 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்)

சர்ஜீவ்னி :
                       தென்னிந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில் விளையாடும் விளையாட்டு.இது கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை.
  •  பாடிச்செல்லும்போது  கபடிக்கபடிக்கபடி......என்று ஒரே மூச்சில  பாடனும்னு    அவசியம் இல்லை.கபடி ..கபடி...கபடி...என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம்  . எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில்  தப்பித்து வரவேண்டும்.
  • ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12  பேர் இருப்பார்கள்.ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.மீதி ஐவரும் ரிசர்வ் .
  • ஆட்டக்காரர்களில் ஒருவர் எதிரணியினரின்   களத்தினுள் நுழைந்து 'கபடி ...கபடி...' என்று பாடியபடி செல்வார்.எதிரணியினரில் யாராவது ஒருவரைத் தொட்டு விட்டு ,மூச்சு விடாமல்,உச்சரிப்பதையும் நிறுத்தாமல் தன்னுடைய களத்திற்கு திரும்பி வந்தால் ,தொடப்பட்ட நபர் 'அவுட் 'ஆகிவிடுவார்.
  • பாடி வருபவரை ஒருவரோ அல்லது ஒட்டுமொத்தமாகவோச் சேர்ந்து  பிடிக்கலாம்.இதை மீறி அவர் தப்பிச் சென்று விட்டால் ,பிடிக்க முயற்சித்த அனைவருமே 'அவுட்' தான்.ஒருவேளை பாடி வருபவரைப் பிடிக்க முயற்சி செய்யும்போது ,பிடிக்க முயல்வோர் யாராவது நடுக்    கோட்டைத் தொட்டாலும் பிடித்தவர் அனைவரும் அவுட் டாக நேரிடும்.
  • எதிரணியில் ஒருவர் வெளியேறும்போது அதற்குக் காரணமாயிருந்த அணிக்கு ஒரு புள்ளி (Point )   வழங்கப்படும்.ஆட முடிவில் அதிக புள்ளிகளைப்பெற்ற அணி வென்றதாக அறிவிக்கப்படும்.
  •  'டாஸ்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம்   .ஆனால் இரண்டாம்பகுதியில்     மாற்றி எடுக்க வேண்டும்.
  •  ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.
  •  பாடி வருபவரின் கை,கால்,இடுப்புப்பகுதிகளை மட்டும் தான் பிடிக்கவேண்டும் .அவர் வாயையும் பொத்தக்கூடாது.மீறிச் செய்தால் அது '.'.பவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும்.  
  • ஒருவர் ,பல முறை ரைடு போகலாம்.ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட்.
  • எதிரணியில் உள்ள அனைவரையும் அவுட் செய்தால்,இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும்.இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள் 
   இப்படி நிறைய ரூல்ஸ் இருக்குங்க...   
   
       மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் . இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு இரு  நடுவர்கள்  தேவை.

ஆடுகளம்:
       ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.
இதுதான் கபடியின் ஆடுகளம்......



சர்ஜீவனி முறையில் விளையாடப்படும்  தமிழ்நாட்டுக் கபடி..(வீடியோ)



ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல...தூள் கிளப்பும் பெண்கள்.....(வீடியோ)




அமர் (பஞ்சாப் ஸ்டைல்):
                   
                                    இது கிட்டத்தட்ட மல்யுத்தம் போன்ற போட்டிதான்.இந்த வித விளையாட்டில்தான் இந்தியா  தற்போது   உலகக்கோப்பையை  வென்றது.    நம்ம  ஊரில்  விளையாடப்படும்  சர்ஜீவினி  முறை கபடிக்கு எல்லா  வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும்  என்றஅவசியம் கிடையாது.  ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம்.( மேலே  நான்காவதாக குறிப்பிட்ட விதிமுறைப்படி).ஆனால் அமர் முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர்  மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் 'தேமே' ன்னு நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். தொடப்பட்டநபர் உடனே மைதானத்தை விட்டு  வெளியே  செல்லவேண்டும்  என்ற அவசியம் கிடையாது. பாடி  வருபவர்  திரும்பிப்  போகும்     வரை   பிடிக்க முயற்சி செய்யலாம். இந்த விதிமுறைதான் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு.
         மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும்.இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு வட்டக்கபடி (CIRCLE KABBADI) என்ற பெயரும் உண்டு.

ஆடுகளம்.....

அமர் முறையில் விளையாடப்படும் பஞ்சாப் ஸ்டைல் கபடி


 பஞ்சாப்பில் நடந்த உலகக் கோப்பையின்  இறுதிப்போட்டி 
                 

நம்ம ஊர் சர்ஜீவ்னி கபடியின் உயிரோட்டமான விசயங்கள் இதில் (அமர்) இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தமே ... ஏதோ  WWE விளையாட்டு பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை..ஒருவேளை இதுதான் கபடியின் பரிணாம வளர்ச்சியோ..  ?

-------------------------------((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))---------------------------

Friday, 25 November 2011

கனிமொழிக்கு ஜாமீன் ....



ப்பாடா....அப்படிஇப்படினு ஒருவழியா கனிமொழிக்கு ஜாமீன் கிடைச்சாச்சு.. இந்தக் கன்னித்தீவு கதை கூட முடிஞ்சுடும் போல. ஆனால் கனிமொழிக்கு எப்பப்பா ஜாமீன் கிடைக்கும்னு பேசப்படாத டீ கடைகளே தமிழ்நாட்டில் இல்லன்னுதான் சொல்லணும். உடன்பிறப்புகளுக்கும் கனிமொழியால் அரசியலுக்கு வந்த குஷ்பு, பூங்கோதை உள்ளிட்ட அடிபொடிகளுக்கும் சந்தோசம்தான். தலைவருக்கும் 'மட்டற்ற மகிழ்ச்சி' 

கலைஞரோட அரசியல் வரலாற்றிலேயே இதுதான் அவருக்கு மோசமான காலகட்டம்னு நினைக்கிறேன். பல அரசியல் தலைகளைப் பாத்தவரு. தலைவரைப் பத்தி எதிர் முகாம்லே.."நாதரித்தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்யிரவராச்சே... கோக்கு மாக்கு வேலையையும் கொஞ்சம் நீக்குபோக்கா செய்யிரவராச்சே... இந்த ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல இப்படி வசமா மாட்டிக்கிட்டாரேனு பேசிகிறாங்க.

திமுகவிற்கும் தன்மானத்திற்கும்  நிறைய தொடர்பு உண்டு. கலைஞரே  'தன்மானத்தலைவர்' என்று அழைக்கப் பட்டவர்தான். அந்தத் தன்மானத்தை விட்டுக்கொடுத்துதான் கனிமொழியை மீட்டெடுத்திருக்கிறார் கலைஞர்.


 குடும்ப அரசியல்தான் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றாலும் குடும்ப ஆதிக்கத்தை விட அதன் அரசியல் தலையீடுதான் தி மு க விற்கு இந்த மரண அடியைக் கொடுத்திருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

2001ல் ஜெயா இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அம்மையாரின் இமேஜ் முதலில் டேமேஜ் ஆனது கலைஞரின் கைதின் போதுதான். ஆனால் இது கலைஞருக்கு மிகப்பெரிய இமேஜ் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.. கலைஞரை எதிர்ப்பதையே தன் மூச்சாகக் கொண்டவர்களைக் கூட அனுதாபப்பட வைத்தது அந்த நள்ளிரவுக்கைது. அதுதான் கலைஞரின் இமேஜின்  உச்சம். அதிலிருந்து அவருக்கு இறங்குமுகம் தான்.அது காங்கிரஸ் உடனான கூட்டணியிலிருந்து   ஆரம்பித்தது.

2004 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், அம்மையாரின் அடாவடித்தனத்தால் அதிமுக வின் முதுகிலிருந்து திமுக வின் முதுகில் ஏறி சவாரி செய்ய எத்தனித்தப்போது அதை திமுவும் ஆமோதித்தது. அதற்கு முக்கியமான காரணம் ஒன்று அப்போது இருந்தது. ராஜீவ்காந்தியின் கொலைக்குப் பிறகு திமுகவிற்கு விடுதலைப் புலிகளின் தொடர்பு+ஈழத்தமிழர்களின் ஆதரவுக்கட்சி என்ற சாயம் பூசப்பட்டிருந்தது. இதைத் துடைத்தொழிப்பதற்கான சந்தர்ப்பமாக திமுக அப்போது பயன்படுத்திக்கொண்டது.  

 சரி..பழையன கழியட்டும்...மத்தியில கிங்மேக்கரா இருந்த கலைஞருக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ யிடமிருந்து தன் அருமை மகளை மீட்க இவ்வளவு போராட்டமா?.. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தப் பிறகு, தலைவர் தடுமாறி, உடன்பிறப்புகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்திய விசயங்கள் என்னன்ன ......
  •  2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்து முடிவு வருவதற்கு  முன் 'மந்திரிசபையில் திமுக சேராது.வெளியிலிருந்து ஆதரவு' னு   வீரமா அறிக்கை விட்டுட்டு, அடுத்த நாளே டெல்லிக்கு பறந்து, கடுமையான பேரத்திற்குப் பின் 'வளமான' துறைகளைப் பெற்றுத் திரும்ப, 'சிதம்பர ரகசியத்தால்' விமானத்  துறை தெலுங்கானா சந்திரசேகரராவுக்கு போக, உடனே 'மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்' னு தலைவர் பல்டி அடிக்க, 'எனக்கு தெலுங்கானா தான் முக்கியம் மந்திரி பதவி தேவையில்ல ' (நோட் திஸ் பாய்ண்ட்) னு அந்த மானஸ்தன் பதவி விலக, அதையும் ஓடிச்சென்று 'லபக்' கிக் கொள்ள, இங்கதான் சரியத்தொடங்கியது தலைவரின் இமேஜ் .(தலைவரின் மனசக் கெடுத்த பாவி யார்னு  தெரியில...)
  • அடுத்து 2006ல நடந்த சட்டமன்றத் தேர்தலில,ஆளே இல்லாத கட்சிக்கெல்லாம் அள்ளிக்கொடுத்துட்டு, தலைவர் அம்போ னு வானத்தைப்போல விஜயகாந்த் ரேஞ்சுக்கு நிக்க,சந்தடி சாக்ல காங்கிரஸ் 40 சீட் க்கு மேல ஜெயிக்க ,வேற வழியில்லாம  காங்கிரசோட கூட்டணி ஆட்சி அமைக்க, அங்கதான் சனியன் சடு குடு ஆட  ஆரம்பித்தது.
  •  வண்டி நல்லாதான் போய்கிட்டிருந்திச்சு... . குடும்ப பிரச்சனையில, 'இந்தியாவிலே நான் தான் டாப் டக்கரு மினிஸ்டர்'னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச தயாநிதி மாறன  தூக்கி கடாசிட்டு அந்த இடத்துக்கு நம்ம ராசாவ போட்டீங்களே...அங்கதான் தலைவரே உங்களுக்கு ஏழரை ஆரம்பிச்சது. 
  • ராசாவுக்கு உள்ளங்கை அரிப்பெடுக்க, அவரும் லைசன்ஸ் தர்றதா சொல்லிட்டு, 'காஞ்ச மாடு கம்புல பூந்த கதையா'கொஞ்சம் (!!!!!) கமிஷன் அடிக்க, அது கனிமொழியின் மேற்பார்வையில் நடக்க,பிறகு 'TRAI' மூலம் மீடியா வுக்கு இந்த விஷயம் லீக் ஆக, என்ன செஞ்சிருக்கணும் தலைவரே ?...குடும்பப் பிரச்சனைக்காக தயாநிதி மாறன ஒரே நாளுல மினிஸ்டர் பதவியிலிருந்து தூக்கி எறிஞ்ச நீங்க ..குற்றமற்றவர்னு  நிருபிக்கும் வரை ராசா அமைச்சர் பதவில் இருக்கமாட்டார் னு அறிவிக்கிறத   விட்டுட்டு 'அவர் தாழ்த்தப்பட்டவர், பழைய முறையில்தான் லைசன்ஸ் கொடுத்தார்,இழப்பு அம்புட்டு இல்ல இம்புட்டுதான்'னு ராசாவுக்கு ஒத்து ஊதுனத பாத்து,குடும்பமே கொள்ளையடிச்சிதுனு பேசுற அளவுக்கு ஆயிடிச்சே தலைவரே....
  •    நம்ம மாநிலத்துக்கு வருவோம். அம்மையாரை விடுங்க.. இந்த  ஈ.கொசு.இளங்கோவனும்,     கைப்புள்ள யுவராஜாவும்,ஏதோ தமிழ்நாட்ல காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்கிறதா நெனச்சிகிட்டு..பேசினப் பேச்சு இருக்கே..நொந்து போகாத திமுக தொண்டனே கிடையாது.அவங்கள அடக்க அட்லீஸ்ட் ஒரு 'கேள்வியும் நானே!பதிலும் நானே!'அறிக்கையாவது விட்டிருக்கலாமே?
  •                  திராவிட உணர்வோடு தனி ஈழ உணர்வையும் தொண்டர்களுக்கு  ஊட்டி வளர்த்த உங்களுக்கு,ஈழப் பிரச்சனையில் ஏன்  இந்தத்  தடுமாற்றம்? அரசியலும் பதவியும் முக்கியம்தான். அதற்காக கொள்கையில் மாற்றம்   வரலாமோ ? முள்ளிவாய்க்கால் பகுதியில்  தமிழினம், சிங்கள வெறியர்களால் ஒடுக்கப்பட்டு சிதைந்துக்  கொண்டிருக்கும்போது..'ஜம்'னு  .'.பிளைட்ஏறி  டெல்லிக்குபேரம்  பேச புறப்பட்டுப் போனீங்களே இது ஓட்டுப் போட்ட   மக்களுக்கு   மகிழ்ச்சியையா   ஏற்படுத்தியிருக்கும்?
  •    டெல்லியில் அன்னையாரின் சகாக்களுடன் சிரித்துக்கொண்டே பேரம் பேசிய  செய்தி TV யில் காண்பிக்க ,கீழே FLASH NEWS ல் PRABHAKARAN DEAD னு ஓட,தொண்டர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?
  • 'ஸ்பெக்ட்ரம் வழக்கு முடியும் வரை அன்னையை சந்திக்க மாட்டேன் ' என்று அறிக்கை விட்டுட்டு ,கடைசியில் கனிமொழியை மீட்டெடுக்க குடும்ப சகிதமாக டெல்லிக்கு சென்று 'இந்தா தாயி ...இதுவரையில் நாங்க கட்டிக் காத்த  ஒட்டுமொத்தத் தன்மானத்தின் மிச்சமீதி..பிடி தாயி..' னு மூட்டைக் கட்டி  கொடுத்துட்டு வந்துட்டிங்களே ....
                       தனியாகஅரசியல் பண்ணுவது என்பது கஷ்டம் தான். வாரிசு அரசியல் என்பது இந்தியாவில் எழுதப்படாத சட்டம்.  இதற்கு    எந்த அரசியல் தலைவரும் விதி விலக்கல்ல. இதற்கு விதை போட்டதே  காங்கிரஸ் தான். ஆனால்  வாரிசு அரசியல் என்பது  வேறு... குடும்ப அரசியல்  என்பதுவேறு... தளபதியை நீங்கள் வாரிசாக உருவாக்கியபோது          ஏற்றுக்கொண்ட  தொண்டர்களின்   மனப்பக்குவம்,   மற்றவர்களை முன்னிறுத்திய போது  ஏற்படாமல் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.
         திமுக வின் வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம்  சந்தித்திருக்கிறது.எந்த ஒரு அனுதாப அலையும் திமுக வை ஆட்சிபீடத்தில் அமர்த்தியதேயில்லை.ஒவ்வொரு முறையும் போராடியே  ஜெயித்திருக்கிறது.அந்தப் போராட்ட உணர்வு உடன்பிறப்புகளிடம் இன்னமும் இருக்கிறது.அரசியலில் நெளிவு சுளிவு,நீக்கு போக்கு எதுவும் இல்லாமல் மக்களின் பிரச்சனைக்காக நேரடியாகப் போராட வேண்டும்.திமுக வை வேரறுக்க இது ஒன்றும் வேலமரம் இல்லை.. லட்சோப லட்ச தொண்டர்கள் எனும் விழுதுகளால் தாங்கிப் பிடிக்கப் படும்  விருச்சிக ஆலமரம்....இதை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்துப் போவார்கள் 
         தமிழுக்காக வாழ்ந்துக் கொண்டிருக்கும் கடைசி அரசியல் தலைவர் நீங்கள் ..உங்கள் காலடித் தடம் நடந்துத் தொடர்ந்து வர லட்சோப லட்ச தொண்டர்கள் உங்கள் பின்னால் இப்பவும் இருக்கிறார்கள் ........
      ...
      ---------------------((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))--------------------
               
                                          
                           
                              
    

Tuesday, 22 November 2011

ஒரு 'சன் TV நேசனின்' புலம்பல்...

  
                           தமிழ் அகராதியில் 'அரட்டை' என்றால் வெட்டித்தனமாக வாயாடிக்கொண்டிருப்பது  என்று சொல்வார்கள்(@ நம்ம அகராதியில ....) அரட்டை அடிக்காதே என்று திட்டுவதும் உண்டு .ஆனால் இதை 'அர்த்தமுள்ள அரட்டை ' என்று தன் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் மாற்றிக்காட்டியவர்  விசு.
       சன் டிவி யில் பத்து வருடத்திற்கு மேல் TRP RATING ல் எக்குத்தப்பாக எகிறிப்போன நிகழ்ச்சி. ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணிக்கு வந்தேமாதரம் பாடலோடு தொடங்கும்போது, சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை எல்லோரையும் TV க்கு முன்னால் கட்டிப்போட்டுவிடும் மேஜிக் இந்த நிகழ்ச்சிக்கு அப்போது இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
    டாக் ஷோ வில் ... தன் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படையாக தன் Slang லே சொன்னால்தான் சொல்லவந்த செய்திக்கு உயிரும் உணர்வும் இருக்கும்... (ஒருவேளை இதனால்தான் கோபியின் "நீயா நானா"  'டாப்'பில் உள்ளது என்று நினைக்கிறேன்)
   இந்த நிகழ்ச்சியை விசு நடத்தும் போது, ரிகர்சல் செய்து நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.ஆனால் TV யில் பார்க்கும் போது அவ்வளவாக தெரியாது. சொல்லக்கூடிய சம்பவங்களும்  மிகைப்படுத்தப்படாமல் இருக்கும். அதிலும் குழந்தைகள் பேசும் போது,அந்த மழழைப்பேச்சும்,முகபாவமும் இன்னும் சுவாரஸ்யமாக  இருக்கும்.
         விசு சன் டிவி யிலிருந்து ஜெயா டிவிக்கு  மாறும்போது... 'பல கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது' என்று கலைஞரே அறிக்கை விடும் அளவுக்கு இந்த SHOW  'டாப்' ல் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
        இப்போது பல கை மாறி T. ராஜேந்தரிடம் ,குரங்கு கையில் சிக்கிய மாலை( ஒரு உவமைக்காகத்தான்  சொன்னேன் ..வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா  அடியேன் பொறுப்பல்ல...)போல் தவித்துக்கொண்டு இருக்கிறது. சினிமாவில்தான் இவர் இம்சை தாங்கமுடியலனா TV யிலயும் வந்து படுத்துகிறார் .
       அரட்டை அரங்கத்திற்கு என்று தனியாக ஒரு பாசை உள்ளது போல..."அய்யா...ஆ....நான் என்ன சொல்ல வரேன்கய்யா”...ஆ...., என்று “அய்யா..ஆ..”. பாசையில்தான் பேசவேண்டுமா  என்ன?..  அதிலும் ஒவ்வொரு வார்த்தைக்கும்?.. .ஆனால் இதை விசு தான் ஆரம்பித்து வைத்தார். ஒருவேளை இந்த பாசைத்தெரிந்தால்தான் சேர்த்துக்கொள்வார்கள் என்னமோ!!!!
   குழந்தைகளை வைத்து கடந்த இரண்டு மாதமாக அரட்டைஅரங்கம் ஒளிப்பரப்பாகிறது. சினிமாவில் மட்டும்தான் அழுதுக்கொண்டே 5 பக்க வசனத்தை மாடுலேஷன் கொஞ்சம் கூட குறையாமல் பேசுவார்கள்  .இதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார் T.R.


    "அய்யா..ஆ எங்க அம்மா பத்துபாத்திரம் தேய்ச்சி என்ன படிக்க வச்சிசியா...எங்க அப்பா...ஆ.. வேற ஒரு பொம்பலையோடு ஒடி போய்ட்டாருயா...  நான்...நைட் எல்லாம் கண்ணு முழிச்சி கஷ்டப்பட்டு படிசேன்யா...அஞ்சாவதுல எங்க ஸ்கூல்ல...(கொஞ்சம் ஹை பிட்சில் ) நான் முதல் மார்க் வாங்கினேன்யா...ஆ."..என்று அந்த சிறுமி போலியாக கதறும்போது....இந்த T .ராஜேந்தரை  ஏன் சிறுவர் வன் கொடுமைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போடக்கூடாது ?..என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.அதிலும் அவர் முகத்தில் ஆஸ்கார் அவார்டு ரேஞ்சுக்கு ஒரு' expression ' கொடுப்பார் பாருங்க....ஒருவேளை 'வீராசாமி' படம் பார்த்தவர்கள் வேண்டுமானால் சகித்துக்கொள்வார்கள், அதுக்கு  இது பரவாயில்லை என்று. மற்றவர்களின் கதி ??
                  
          சன் டிவி ஆரம்பிக்கப்பட்டபோது தொடங்கப்பட்ட எல்லா  நிகழ்சிகளுக்கும்  மூடுவிழா  நடத்தப்பட,  அரட்டைஅரங்கம்மட்டும்தான்உயிரோடுஇருக்கிறது.அந்த உயிர் இப்போது   ஊசலாடிக்கொண்டிருக்கிறது.  இதையும் குழிதோண்டி புதைத்துவிடாமல்,  மீண்டும்  இதற்கு   பழைய  உயிரும்,  உணர்வும்    கொடுப்பதற்க்கான முயற்சியை சன் டிவி எடுக்கவேண்டும் என்பது எங்களைப்போன்ற சன் ரசிகர்களின் ஆசை...........
     

இதுகூட நடக்குமோ???

                
இதுகூட நடக்குமோ???

   பெண் வீட்டார்: இத பாருங்க ...நாங்க மாப்பிளைக்கு வரதட்சனையா பஸ்சுக்கு சீசன் டிக்கெட் ,மாசமாசம் பாலுக்கு பில், இது எல்லாத்தையும் விட கரண்ட் பில்லும் நாங்களே கட்டிடுறோம்....என்ன சந்தோசமா???    
  
   மாப்பிள்ளை  வீட்டார் : நல்லவேளை....எங்கே வரதட்சனையா  100 பவுனு நகையும்,பத்து லட்சம் பணமும் தர போறிங்கனு பயந்துகிட்டு இருந்தோம் .....                 

Monday, 21 November 2011

இப்பத்தான ஆரம்பிச்சிருக்கோம்...

                                                                                                 -விகடன்




 இது இப்படியே போனா...அடுத்த தேர்தலில நாங்க ஓட்ட மாத்தி 'குத்து....குத்துனு...குத்துவோம்....##### அப்பாவி பொதுஜனம்.

ராஜாவின் ராஜ்ஜியம்

         பொதுவாகவே ...இசைக்கென்று ஒரு தனித்துவம் உண்டு....ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எங்கேயோ ஒரு  பாடலைக்கேட்டிருப்போம்.பல வருடங்களுப்பிறகு அந்தப் பாடலைக்  கேட்கும் போது , பழைய நினைவுகள் திரும்ப  வந்து ஒரு இனம் புரியாத சந்தோசத்தைக் கொடுக்கும்.
  
          நான் எட்டாவது முழுப்பரிச்சை முடிந்து எங்க தாத்தா ஊருக்கு போயிருந்த சமயம் ...அப்போ  ராமராஜனோட பாடல்கள் ரொம்பப் பிரபலம்.அங்க இருந்த டேப்  ரெகார்டர்   ' ராசாவே  உன்னை   நம்பி' பாடல்களை  அடிக்கடிக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கு.... ஸ்கூல்  முழுப்பரிச்சை லீவு ன்னாலே குதூகலம்தான் .அதிலேயும் தாத்தா-பாட்டி ஊருக்குப் போறோம் னா அளவிடமுடியாத மகிழ்ச்சிதான்.  இப்ப  அந்த 'ராசாவின் மனசில  இந்த ரோசா உன்னேனப்புதான் ......','வாசலிலே புசணிப்பூ வச்சிப்புட்டா...' பாடல்களை  எங்கேக்  கேட்டாலும் அங்க  இருக்கிற மாதிரி ஒரு.......'.பீலிங் ....( ப்ச்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு .'. பீலிங் )....
இது...  பாட்டுக்கு    உள்ள   மகத்துவமா ? அல்லது  இளையராஜாவின் இசைக்கே  உள்ள கம்பீரமா ?  .  நிற்க..... 
 
      நம்ம ஊர்ல FM   வருவதற்கு முன்பே இங்க (சிங்கப்பூர்ல )  ஒலி-96 .8  னு FMஅலைவரிசை ரொம்பப் பிரபலம். இங்க டிவி பார்க்கிறவர்களை விட   ரேடியோ  கேட்கிறவர்கள்  ரொம்ப அதிகம். அதிலும்   நாம கேட்டே இருக்காத 70 ,80 களில்   வந்த நிறையப் பாடல்களை தேடிப்பிடிச்சிப் போடுவாங்க. இது நம்ம ஊர்லே நடக்காத அதிசயம்.அதிலும் பாடல்களுக்கு சென்சர் போடுறது இங்கதான்னு  நினைக்கிறேன். 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா','கட்டிப்பிடி கட்டிப்பிடிடா' போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடல்களுக்கெல்லாம் இங்குத் தடை. இவர்களின் ஒலிச்சேவை இரவில் தான் தூள் கிளப்பும். நைட் 9  மணிக்கு ஆரம்பித்து காலை 6  மணி  வரை இருக்கும். 60 களில் ஆரம்பித்து லேட்டஸ்ட்  பாடல்கள் வரை இவர்கள் தொகுத்து வழங்கும் அழகே தனி...நம்மவர்கள் இங்கு பெரும்பாலும் நைட் ஷிப்ட் பார்ப்பதால் (நைட் ஷிப்ட் அலவன்ஸ்  இருக்குல ......)அவர்களுக்கு நைட்FMமே துணை. ரேடியோ கேட்காம இங்க நிறைய பேருக்கு வேலையே ஓடாது. அதிலும்' பிரேக் டைம்' ல  ஒரு ' டீ'  யைப்  போட்டுட்டு 'இன்னும் எத்தன நாளைக்குடா  இந்தவாழ்க்கை'னு  கல்யாணமான ஆளுங்க நினைச்சிகிட்டு  இருக்கும் போது,.'கொத்தும் கிளி இங்கிருக்க... கோவைப்பழம் அங்கிருக்க' னு டைமிங் சாங் போட்டு  நோகடிக்கவும் செய்வாங்க.

       பல வருடங்களுக்கு முன்பு...அப்படி ஒரு சந்தர்ப்பத்தில ..அரதூக்கத்தில கேட்ட பாடல்.துயிலையும் மறந்து ரசித்த பாடல் ...இப்பவரைக்கும் என்னோட ஆல் டைம் .'.பேவரைட்.!!. இந்தப்பாட்டுக்காகவே படத்த தேடிப்பிடிச்சிப் பார்த்தேன். இசை, வரிகள் ,குரல், காட்சியமைப்பு என்று அனைத்தும் அமர்க்களப்படுத்தியிருக்கும்..70களில் வந்த 'அவள் அப்படித்தான் ' படத்தில், ராகதேவன் ராஜாவின் இசையில் K.J.யேசுதாஸ் பாடியிருக்கும் இந்த பாடல்,காலங்களை கடந்து இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
        
     இந்தப்பாடலை யார் எழுதியது னு அறிய இணையத்தில் தேடியபோது,நிறைய இடங்களில் கங்கை அமரன் என்றும் ,சில இடங்களில் கண்ணதாசன் என்றும் இருந்தது.70 களில் இளையராஜாவின் இசையில் வந்த நிறைய படங்களில் ..பாடல்-கண்ணதாசன்,உதவி-கங்கைஅமரன் னு இருக்கும். (இ.ராஜாகிட்ட டியூன சுட்ட மாதிரி கவியரசுகிட்ட பாட்ட சுட்டுட்டாரோ ?)

                             பொதுவாகவே ..கவியரசு மற்றும் கவிப்பேரரசு வோட பாடல் வரிகளில மேலோட்டமா ஒரு அர்த்தம் இருக்கும்.அந்த வரிகள திரும்பத் திரும்ப கேட்டால் ,சொல்ல வந்தது வேறு ஒரு அற்புதமான   விஷயமா  இருக்கும்...அது இந்த இரண்டு மகா கவிஞர்களுக்கே உள்ள தனிச்சிறப்பு !!!!...அது போலத்தான் இந்த பாடலில் வரும்,'நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது'.......





உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...



வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நா
ம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

Sunday, 20 November 2011

சிதறல்கள்-1


கடந்த பல வருடங்களாக ப்ளாக் படித்து வந்த எனக்கு, திடீரென்று  எழுதனும்னு  எண்ணம் வந்தபோது 
என் கண்முன்னால   ஐந்து பாலகுமாரன்,பத்து சுஜாதா,பதினைந்து வைரமுத்து தெரிஞ்சாங்க...
ஆனால் எழுதனும்னு ஒக்காந்த போதுதான் என்னையே நான் தேட வேண்டியதாயிச்சு. எழுதறது 
ஒன்னும்  அவ்வளவு   ஈஸி இல்ல போல.சரி..யார் படிக்கிறாங்களோ இல்லையோ நாம திருப்திக்காக எழுதலாமேன்னு ஸ்கரீன வெறிச்சி பாத்துக்கிட்டு இருந்தப்ப 'யாருமே இல்லாத டீ கடையில இப்படி யாருக்காக டீ ஆத்துறீங்க 'னு எங்க 'வீட்ல' (ஹைலைட் பண்ணலனா கோவிச்சுப்பாங்க  ..) மொக்கையா நக்கலடிக்க ....அட விடுங்க பாஸ் ...வாழ்க்கையில நிறைய கஷ்டங்கள்    வரும் (ச்சே..ச்சே..நான் எங்க 'வீட்ட' சொல்லல..) எல்லாத்தையும் சமாளிக்கணும்....

         தமிழ்ல எழுதறதும் கொஞ்சம்  கஷ்டம்தான் .ஏன்னா தப்புக் கண்டு பிடிக்க  நிறையப்பேர்  இருக்காங்க...  சரி.. பேச்சு நடையில எழுதலாம்னு தோனிச்சி... 

தமிழ்ல எழுதும் போது புள்ளி எழுத்துகளில் தான் கொஞ்சம் குழப்பம் வரும். உதாரணத்திற்கு....
                                     
                                  பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
                                  எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?
 

இவை போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள்..ஆனால் சில நேரங்களில் இந்தப் புள்ளி எழுத்துக்களால் அர்த்தங்களே மாறி விடும்....

                                            வேலை செய்தான்
                                            வேலைச் செய்தான்

முதலில் உள்ள வேலை செய்தான் என்பது  பணியைச் செய்தான் என்ற பொருள்பட அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும் கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது. 

(ஸ்கூல்ல Rama killed, Rama  is  killed  ரெண்டும் ஒன்னுதான்னு                 சொல்லி வாத்தியாருகிட்ட  வசமா வாங்கிக் கட்டிக்கிட்ட கதை ஞாபகம் வருது...)

 'ச்'  என்ற ஒரு எழுத்தால் அர்த்தமே மாறி விட்டது. 'ச்ச்ச்ச்ச்....தாங்க  முடியலல?..  

சரி..சரி... இனிமேல் இதுபோல் நடக்காது...(டைட்டில்ல தலைவர் பேரைப் போட்டுட்டு எதுவுமே சொல்லலைனா எப்படி ?...)


---------------------------- ((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))---------------------------------------