Sunday 1 January 2012

நீர்ப்பாசனம் தந்த நாகரிகம் !!!

 காவிரி,பாலாறு,முல்லைப் பெரியாறு என்று தண்ணீருக்காக இன்று நாம் கடுமையாகப் போராடிக்கொண்டிருக் கிறோம். இது விவசாயத்திற்கும் குடிநீருக்காக மட்டும்தான் என்றாலும் மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம்.  உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்கிறது. நைல் நதியின் கரையில் அமைந்த எகிப்து நாகரிகமும், மத்திய ஆசியாவில் உள்ள யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் என்ற இரு நதிகளுக்கிடையில் வளர்ந்த சுமேரிய நாகரிகமும் சீனாவின் யாங்ட்ஸே மற்றும் ஹுவாங்ஹோ என்ற ஆற்றுப்படுகைகளில் உருவான சீன நாகரிகமும், சிந்து நதியின் விளைவாக உருவான சிந்து நதி நாகரிகமும் தான்  இதற்கு வரலாற்றுச் சான்று. எழுத்துகளும் மொழிகளும் இங்குதான் உருவானது. காட்டுவாசியாக இருந்த மனிதனை தொழில்,பண்பாடு,கலாச்சாரம் என்று நாகரிக உலகிற்கு மாற்றியப் பெருமை இந்த நாகரிகங்களையேச் சேரும். தொல் பொருள் ஆராய்சியாளர்களையே  ஆச்சர்யப்படவைத்து இன்றைய நவீன நாகரிகத்திற்கே சவால் விடும் இந்த நாகரிகங்கள்  "நாகரிகத்தின் தொட்டில்கள்' என்று அழைக்கப்படுகிறது.

மனித நாகரிக வரலாற்றில் வேளாண்மையே முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணமான தண்ணீரின் மேலாண்மையே மனிதர்களை நாகரிக மனிதர்களாக மாற்றின.பல நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் உருவானதற்கும் இதுவே காரணமாகிறது.

1. நைல்நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம் 


  உலகின் தலைசிறந்த நாகரிகமாகப் போற்றப்படுவது நைல் நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்தான். மனிதனுக்கும், தண்ணீருக்கும் உள்ள உறவை விளக்குவதற்கு எகிப்து நாகரிகத்தைவிட வேறு எதையும் உதாரணமாக சொல்ல முடியாது. நைல் நதி நாகரிகத்தின் கூற்றின் படி எகிப்தியர் முதன் முதலில் நிலைத்து வாழ ஆரம்பித்த இடம் எகிப்து. அதாவது நைல் நதிச் சமவெளி. எகிப்தியர்கள் தங்களை வாழவைத்த தெய்வமாக நைல் நதியைக் கருதுகின்றனர்.எகிப்து நாட்டு மக்களின் வாழ்க்கையும் நைல்நதியையே நம்பியிருந்தது.அதனால்தான் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் "எகிப்து என்பது நைல்நதியின் கொடை' என்று எழுதினர்.

இங்கு கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே  ஒரு சிறந்த நாகரிகம் இருந்தது.'பரோக்கள்' என்று அழைக்கப்படும் ஆட்சியும் நடந்தது. கல்விமுறை, வானநூல், கணிதம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் முதன் முதலில் புகுந்தவர்கள் எகிப்தியர்கள்தான். “இறப்புக்குப் பின் என்ன”? என்ற பெரும் தத்துவத்தை உலகில் முதன் முதலில் எழுப்பியவர்களும் இவர்களே! எகிப்தியவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் தங்கள் சிந்தனைகளையும், அனுபவங்களையும் அழியாமல் பாதுகாக்கவும் முதன் முதலில் எழுத்துக்களைக் கண்டறிந்தனர். இவர்களின் எழுத்து சித்திர வடிவங்களைக் கொண்டது. இவ்வெழுத்துக்களை “ஹிரோகிளிபிக்ஸ்” என்றும் கூறுவர். எகிப்தியவர் முதன் முதலில் பேபரஸ் என்ற நாணல் தண்டிலிருந்து காகிதம் செய்து அவற்றில் எழுதியும் படித்தும் வந்தனர். காகிதத்தில் எழுதும் பழக்கத்தை உருவாக்கியதும் இவர்களே!


நைல்நதி

 

2. சுமேரியர் நாகரிகம் அல்லது மெசபடோமிய நாகரீகம்

யூப்ரடிஸ், டைகரிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா என அழைக்கப் படுகிறது. இங்கு தோன்றிய நாகரிகம்தான் சுமேரிய நாகரிகம்அல்லது மெசபடோமிய நாகரிகம். இங்கும் வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. கி.மு 4000 முதல் கி.மு. 3000 வரை இந்த நாகரிகம் எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் சொல்கிறது. இந்த இரண்டு ஆறுகளையும்  ஆண்டு முழுவதும் நீர்பாசனத்திற்காக  பயன்படுத்தினர். வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மெசபடோமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது. இதன் மூலம், சுமேரியர் நாகரிகத்தைக் கண்டவர்கள் கிரேக்கர்கள் என்பது தெளிவாகிறது.  

முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களையே சாரும். ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் “ஆப்பு” வடிவமான எழுத்துக்களை அமைத்தனர். இவ்வெழுத்து முறைக்கு “கியூனிபார்ம்” என்று பெயர். சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும்,செம்மைப்படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்க ளையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும்  சுமேரியர்களே! இவர்களின் இன்றைய நிலைமை?. ஒருகாலத்தில் சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்த நாடு இப்போது அமைதியை இழந்து அமெரிக்காவின் பிடியில் சிக்கித்தவிக்கும் இராக் நாடுதான் அது...
Tigris and Euphrates Rivers

Tigris and Euphrates Rivers

3. சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம்(Indus valley civilization)இது ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துநதிச் சமவெளியில் தோன்றிய நாகரிகம். இந்நாகரிகத்தின் கதாபாத்திரங்கள் திராவிடர்களே! சிந்து நதிச்சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் படைப்பே! ஆனால் இங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்களா? அல்லது திராவிடர்களா? என்று பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. மற்ற நாகரிகங்களை ஒப்பிட்டு நோக்கும்போது சிந்துவெளி நகரங்களின் அமைப்பு வியப்பூட்டுகிறது. மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இரு நகரங்கள்  தொல்லியல் வல்லுநர்களையே திக்குமுக்காட வைத்தது. 

இது வேறெந்த  நாகரிகத்திலும்  பார்க்க முடியாத அளவிற்கு  பெரிதாக சுமார் 13 லட்சம் சதுர கிலோமீட்டர்  பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இங்கு குளிப்பதற்குத் தனியான அறைகள், கழிவு நீரகற்றல்,வடிகால் அமைப்பு, இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் என்று  நவீன நாகரிகத்திற்கே சவால் விடும் இந்த  சுகாதார அமைப்பு முறைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைகளாகும்.

Sindhu River

 

4. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீனநாகரிகம்

 


 சீன நாட்டையும் மக்களையும் உலகிற்கு அடையாளம் காட்டுவது மஞ்சளாற்றுச் சமவெளி நாகரீகமே! மஞ்சள் நிறமுள்ள வண்டல் மண்ணை அடித்து வந்து பரப்பியதால் 'மஞ்சளாறு' என்று பெயர் பெற்றது. அந்த ஆற்றின் உண்மைப் பெயர் ஹுவாங்ஹி(HUANG HI) ” என்பதாகும். இந்த ஆற்றங்கரையில் தான் சீன நாகரிகம் மலர்ந்தது.சீனர்களின் எழுத்துமுறை, ஓவியங்களை ஒத்து இருந்தது. ஓவிய எழுத்துக்கள் எழுதுவதற்கு தூரிகைகளே பயன்பட்டன.  ஐப்பான், கொரியா, வியட்நாம் போன்ற நாட்டு மொழிகள் சீன மொழியின் அடிப்படையில் அமையப் பெற்றவைகளே!பண்டைக் காலத்தில் சீனர்கள் எழுதுவதற்கு எலும்பைப் பயன்படுத்தினர். பிறகு ஒட்டக முடியினால் ஆன தூரிகைகளைப் பயன்படுத்தினர். இவர்கள் மரப்பட்டைகள், மூங்கில்கள், கந்தல்துணிகள் போன்றவைகளால் காகிதம் செய்யக் கற்றிருந்தனர். மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர்.

சுமேரியர்களைவிட அதிகமாக வெள்ளத்தின் துயரத்துக்கு ஆளானவர்கள் சீனமக்கள் தான் . கடந்த 3000 ஆண்டுகளில் 1500 முறை வெள்ளச்சேதம் விளைவித்த ஹுவாங்ஹி நதியை "சீனாவின் துயரம்' என்றே வரலாறுகள் கூறுகின்றன. 
HUANG HI (மஞ்சளாறு)
  
நதிகளின் மூலம் பாசன வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு மனிதர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டதால்தான் பஞ்சம்,பசி,பட்டினி எல்லாம் நீங்கி நாகரிக வாழ்க்கை வாழ முடிந்தது. காட்டுவாசிகளாக திரிந்த மக்களை ஒன்றிணைத்து கலாச்சாரம்,பண்பாடு மிக்கவர்களாகமாற்றமுடிந்தது. ஆனால் இன்று மக்களை மீண்டும் கற்கால காட்டுவாசிகளாக்க சில கயவர்கள் கங்கணம் கட்டி அலைகிறார்கள். கல்நெஞ்சக்காரர்கள். காணாமல் போய்விடுவார்கள்..

-----------------------------((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))--------------------------

9 comments:

 1. அருமையான பதிவு.... ஏற்கனவே பள்ளிப்பாடங்களில் படித்ததுதான் என்றாலும், நல்லதொரு நினைவூட்டல், நன்றி!

  ReplyDelete
 2. உங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சார்....உங்களைப்பற்றியும் உங்கள் பின்னூட்டத்தையும் 'அட்ரா சக்க' யில் நிறையப் படித்திருக்கிறேன்..

  ReplyDelete
 3. அருமையான பதிவு.... மேலும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்

  ReplyDelete
 4. அருமையான பதிவு.... மேலும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 6. very good. congratulations. continue to help us by your historical knowledge. Thank you

  ReplyDelete