Thursday, 12 January 2012

தைத்திருநாளை புத்தாண்டாக கொண்டாடுவோமே....
     என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல்  நல்வாழ்த்துக்கள்.......


ல்தோன்றி,மண்தோன்றா..மணல் தோன்றா... மரம்தோன்றானு தமிழைப்பற்றி தற்பெருமை பேசுறதுக்காக இத எழுதல. வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதி கண்ட தமிழ், பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூற்றாண்டு வாழும்.
 
எல்லோரும் ஆங்கில புத்தாண்டை  வெகு விமரிசையாக கொண்டாடியிருப்பீங்க. வான வேடிக்கைகள் பட்டய கிளப்பியிருக்கும். முதல் நாளே சரக்கு-சைடுடிஷ் எல்லாம் தயார் பண்ணி தெருமுனை,ரோட்டோரம், மொட்டமாடி என  திடீர் மினிபார்கள் தோன்றி கவுண்டவுனுக்காக காத்திருக்கும்.  தமிழ்நாட்டில் அன்னிக்கு மட்டும் 142 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை ஆகியிருக்காமே...!!!! 

தியேட்டர்களில் ஒரே டிக்கட்டில் மூன்று படங்கள் போடப்பட்டு,கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்பட்டு 'இளமை இதோ இதோ' பாட்டும் 'சொர்க்கம் மதுவிலே' பாட்டும் அன்னிக்கு மட்டும் உயிர்பெற்றிருக்கும்.

மணி 12.00 அடித்தவுடன் எல்லோருடைய முகத்திலும் கோடி ரூபாய் லாட்டரி விழுந்த மாதிரி ரோட்டுல போற வர்றவங்களுக்கெல்லாம் கை கொடுத்து, 'ஹாப்பி நியூ இயர்' வாழ்த்து சொல்லியிருப்போம். அடுத்த நாள் காலை காத்து வாங்குன கோயிலெல்லாம் கூட்டம் அலைமோதியிருக்கும்..  ஒரு நிமி தரிசனத்துக்கு நாலு மணிநேரம் கால்கடுக்க நின்றிருப்போம். 

சரி கொண்டாட வேண்டியதுதான் .. உலகமே உற்சாகத்துல ஊஞ்சல் கட்டி ஆடுறப்ப, நாம மட்டும் என்ன கைகட்டி வேடிக்கையா பார்க்க முடியும்?


டி.வியில காண்பித்தார்கள், ஒவ்வொரு நாடும் எப்படி புத்தாண்டு கொண்டாடுனாங்க என்று. அவங்களுக்கு உள்ள ஒரே புத்தாண்டு;பிரமாண்டமாத்தான்  கொண்டாடுவாங்க. கிரிஸ்த்மஸ், நியூ இயர் என்று  வாரம் முழுக்க கொண்டாடியிருப்பாங்க. சீனாவிலும் கொண்டாடினத காமிச்சாங்க.  ஆனா இன்னும் இரண்டு வாரத்தில் வரப்போற சீனப்புத்தாண்ட இத விட சிறப்பா கொண்டாட இப்பவே தயாராயிட்டங்க. இவங்களும் ஐந்து நாட்கள் கொண்டாடுவாங்க.

    இங்க.. சிங்கப்பூர் சீனர்களில்  பௌத்தர்களும்  கிருஸ்துவர்களும் சமமா இருக்கிறாங்க.ஆனா சீனப் புத்தாண்டுன்னு வந்துட்டா இவங்களுக்கு 'மதம்' ஒரு விஷயமா  தெரியிறதில்ல.... தன் மொழிக்காகவும் நாட்டுக்காகவும்  ஒற்றுமையா கொண்டாடுவதைப் பார்க்கும் போது  நமக்கே கொஞ்சம்  நெருடலாகத்தான் இருக்கும். உலக சீனர்கள் எல்லாம் இந்த பண்டிகையில் தான்  ஓன்று சேர்கிறார்கள். 

      சீனர்களைப் பற்றி   பெருமையாப் பேசுறேன்னு    நெனைக்காதிங்க. அவர்களோட மொழிப்பற்ற நெனச்சா நமக்கே ஆச்சர்யமா இருக்கும். உலகிலே அதிகமான மக்கள் பேசும் மொழி சீன மொழிதான். நாம் பேசும் 'டமிங்கிளத்த' யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். எங்க ஆபிஸ்ல பாஸும் மேனேஜரும் ஆபிஸ் விசமா பேசுனாகூட சீன மொழியில்தான் பேசிக்குவாங்க. இதில் என்ன ஆச்சர்யம் இருக்குனு நெனைக்கிறீங்களா?ஒருமணி நேரம் பேசினாலும் ஒரு ஆங்கில வார்த்தை  கூட இருக்காது. அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு நம்மளால யூகிக்கவே முடியாது. இது அந்த மொழிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை!. 


      இங்கு  தமிழர்கள்  அதிகமா இருந்தாலும், தமிழ் மொழியும் ஒரு ஆட்சி  மொழியாக   இருந்தாலும்  நம்ம   பண்டிகைன்னா...  இங்க தீபாவளி தான். ஒவ்வொரு வருடமும் சீனப் புத்தாண்டுக்கு  நாங்கள் அவர்களுக்கு கோங் சி .'.பா சை ( Gong Xi Fa Cai ) னு  சொல்லி வாழ்த்து தெரிவிப்போம். அதாவது சீன மொழியில் இனிய பத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அர்த்தம். பதிலுக்கு அவங்க தீபாவளிக்கு நமக்கு "ஹாப்பி நியூ இயர்" னு கை  கொடுக்கிறப்ப  அப்படியே  அந்த  கையால  நடு மண்டையில   நச்சுனு  கொட்டுன  மாதிரி  இருக்கும். "இது புத்தாண்டு இல்ல..எங்க ஊர்ல நரகாசுரனு ஒருத்தர் இருந்தாரு".......னு கதையா சொல்ல முடியும்? நாங்களும் 'தேங்க்யு' சொல்லி சமாளிச்சுடுவோம். சீனர்களுக்கு அடுத்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழர்கள் தான்  இருக்கிறார்கள். தமிழ்மணம்  உலகம் முழுவது வீசுகிறது. நம்மவர்களை  ஒன்றிணைக்க   நம் மொழி சார்த்த ஒரு பண்டிகை வேண்டாமா?

       ஆனா நாம உற்சாகமா கொண்டாடுற நியூ  இயர்  உருவான கதைய கேளுங்க....இந்த காலண்டர் யார் யார் கையில் சிக்கி சின்னா பின்னாமாச்சினு   பாருங்க....  
 
 •  காலண்டரை   கண்டு பிடிச்சதே கிரேக்கர்கள் தான். கை விரல்களின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிட்டு வந்ததால்,இவர்கள் பத்து மாதங்களாகத்தான் ஒரு ஆண்டை பிரித்திருந்தார்கள். இப்போது நாம் குத்தாட்டம் போடும் ஜனவரியும்,பிப்ரவரியும் அப்போ கிடையாது..மார்ச் முதல் டிசம்பர் வரைதான் இருந்தது..
 • பிறகு இது ரோமானியரின் கைக்கு போனது.தற்போது உள்ள காலண்டரின் அமைப்பு இவர்கள் போட்ட விதையிலிருந்துதான் வந்தது.   இவர்கள்தான் ஜனவரியையும்,  பிப்ரவரியையும்  முறையே 11 , 12  வது மாதங்களாக சேர்த்தனர்.ஒரு வருடத்திற்கு 365நாட்கள் என்று கணக்கிட்டு, நாட்களை பிரிக்கும் போது முதல் மாதமான மார்ச்சுக்கு 31 நாட்களும்,பிறகு அடுத்தடுத்து 30, 31 என்று பிரிக்க ..கடைசியில் பாவம் பிப்ரவரிக்கு 28நாட்கள்தான் எஞ்சியது. பிறகு கி.மு 46ல் ஜூலியஸ் சீசரின் கையில் சிக்கியவுடன், ஜனவரியும், பிப்ரவரியும் முதல் இரண்டு மாதங்களானது.இது ஜூலியன் காலண்டர் என்று அழைக்கப்பட்டது. இதில் இன்னொரு விஷயம் இருக்கு..ஜூலியஸ் சீசரின் பெயரில் அழைக்கப்பட்ட ஜூலையும், அகஸ்டஸ் என்ற மன்னன் பெயரில் அழைக்கப்பட்ட ஆகஸ்ட்டும் அடுத்தடுத்து வருவதால் ஒருத்தருக்கு 30 இன்னொருவருக்கு 31  வைத்தால் சரியிருக்காது என்று இரண்டுக்குமே 31 நாட்களை வைத்து விட்டார்கள். இத்தோடு விடவில்லை.. லத்தின் மொழியில் Septem-என்றால் ஏழு, Octo- என்றால் எட்டு, Novem -என்றால் ஒன்பது, Decem-என்றால் பத்து. இவர்களால் மாற்றியமைக்கப்பட்ட காலண்டரில் இவைகள்   எல்லாமே இரண்டு  மாதங்கள்  பின்நோக்கி  தள்ளப்பட்டன. இந்த காலண்டர் கிபி 1582  வரை பின்பற்றப் பட்டது...

 •  .
     பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படிஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து ஏசுகிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே கிபி 1582ல் கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்கள். இது ஜூலியன் காலாண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது இதில் இன்னொரு கூத்தும் நடந்தது.இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் 10 நாட்கள் அதிகமாகி இன்னொரு சிக்கல் வந்தது. இந்திய வரைபடத்தில் இருந்து எப்படி அத்திப்பட்டி காணாமல் போனதோ.அதே போல் இதை சரி செய்ய  1582ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 5-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை உள்ள 10நாட்கள் காலாண்டரிலிருந்தே நீக்கப்பட்டது.அதன் பிறகே லீப் வருடத்தைக் கணக்கிட புதியமுறை கையாளப்பட்டது.  அந்தப் புதிய முறை கிரகோரியன் நாள்காட்டி (Gregorian Calendar) என்று அழைக்கப்படலாயிற்று....
Pope Gregory XIII
 • இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில்(இந்தியா உட்பட) கிபி1752-ம் ஆண்டில் இருந்துதான்  ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது.
 
  சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள் ஆகிறது. இந்த வானவியல் உண்மையை  மட்டும் அடிப்படையாகக் கொண்டு,மாதங்களும், கிழமைகளும், நாட்களும் அவரவர் வசதிற்கேற்ப வகுக்கப்பட்டது தான் இப்போது நாம் பின்பற்றும்  கிரகோரியன் காலண்டர் (Gregorian Calendar). அவர்கள் ஜனவரி1 தான் புத்தாண்டு என்றால் .. அதுதான் நமக்கும் புத்தாண்டு... ஏப்ரல் 1 என்று கூட பிறகு மாற்றப்படலாம். அதற்கும் நாம் தயாராக இருப்போம்.     ஆனால் தமிழ் புத்தாண்டை தை முதல் நாளுக்கு மாற்றினால் மட்டும் கொதித் தெழுவோம்.  சித்திரையில் இருக்கும் புத்தாண்டை எத்தனை பேர் கொண்டாடுகிறோம். அன்று ஒரு நாள்  பொது விடுமுறை. வீட்டில் படுத்து ஒய்வு எடுப்பதைத் தவிர வேறென்ன செய்வோம்?  அக்னி  வெய்யில்  அனலாய் அடிக்க,நஞ்சை நிலங்கள் வறண்டுபோய் உழவுக்கு ஒய்வு கொடுக்கும் நேரமது. சித்திரையில் குழந்தை பிறக்கக்கூடாது என்பதால் தான்  ஆடியில் 'தள்ளி' வைக்கிறார்கள் என்று கூட சொல்வார்களே...

      சித்திரை தான்  தமிழின் முதல்மாதம் என்பதற்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்லப்படுகிறது...பன்னிரெண்டு ராசிகளுள் முதல் ராசியான மேச  ராசி சித்திரையில்தான் சங்கமிக்குதாம்.

    சித்திரை புத்தாண்டு என்பது அறுபது ஆண்டுகளின் சுழற்சியே… இதில் “பிரபவ முதல் அட்சய” வரை அறுபது பெயர்கள் இருக்கின்றன… இவற்றில் ஒன்றுகூட தமிழ்ப்பெயர் இல்லையே…தமிழ்ப்பெயரே இல்லாத ஆண்டுகள்  எப்படி தமிழாண்டு தொடக்கம் ஆனது!!?இந்த அறுபது ஆண்டு முறையின் விளக்கத்தைக் கேட்டால் ஆபாசக்கதையை அல்லவா சொல்கிறார்கள்..அப்படி என்றால் இடைப்பட்ட காலத்தில் இறக்குமதியாகி தமிழன் கொண்டாட தொடங்கிய “பண்டிகை” தான் இந்த சித்திரை ஆண்டு பிறப்பா?.

    தமிழ் மாதங்களில் சித்திரையைவிட 'தை' க்குதான் அதிக சிறப்பு.'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பழ மொழியே இருக்கிறது. தமிழையும் உழவையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.தமிழகத்தின் பிரதான தொழில் விவசாயம்தான்.பயிர் செய்த நெற்மணிகளை அறுவடை செய்து செல்வங்களாக வீட்டிற்கு கொண்டு வரும் மாதம் இது.இந்த தை முதல்  நாளில் தான் உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் பொங்கல்விழா கொண்டாடப் படுகிறது. இத்திருநாளில் தான் தமிழின் பெருமையை உலகுக்குச் சொன்ன வான் புகழ் வள்ளுவன் பிறந்த தினமும் வருகிறது.தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் இப்போதுதான் நடத்தப் படுகிறது.
 .


 
ஏன்... பழைய சாஸ்திரங்களில்  கூட  தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் உத்தராயணம் என்று சொல்லக் கூடிய தேவர்களின் பகல் பொழுது என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.    இதை அறிவித்தது திமுகவோ கலைஞரோ அல்ல.  மறைமலை அடிகள் தலைமையில், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தபிள்ளை, வெங்கசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர்கள், 1921ம் ஆண்டு,சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து  எடுத்த முடிவு.


 கடந்த 1939ல், திருச்சியில் நடந்த அகில இந்திய தமிழர் மாநாடு, சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், ஈ.வெ.ரா., கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன், கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், திரு.வி.க., மறைமலை அடிகள், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.அந்த  மாநாடும், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு; பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்று தீர்மானித்தது.இவர்கள் அன்று முன் மொழிந்ததை கலைஞர்  கடந்த  ஆட்சியில் வழி மொழிந்திருக்கிறார்.


புரட்சிக்கவி பாரதிதாசன் கூட பொங்கி எழுந்தாரே!.............

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"     என்று......

  ஆனால் அரசியல் காற்புணர்ச்சியில் தமிழ் மட்டும் தப்புமா என்ன? இன்று...தமிழ்  புத்தாண்டு மீண்டும் சித்திரைக்கே துரத்தப்பட்டது..
  
                  உலகில்   பைபிளுக்கு அடுத்து அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்த திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவர் பிறந்த தினத்தை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடினால்..இதைவிட அவருக்கு நாம் செய்யும் சிறப்பு வேறெதுவும்  இல்லை... திருவள்ளுவர் நாள்காட்டியை பின்பற்றுவதில் ஒரு சில நடைமுறை   சிக்கல்  இருக்கலாம்..ஆனால் அவர் பிறந்த தினத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் நமக்கு என்ன  சிரமம்   இருக்க போகிறது?

     நம் இந்தியாவில் தீபாவளி,கிறிஸ்துமஸ்,ரன்ஜான் போன்ற சமய ரீதியான பண்டிகைகள்தான் ரொம்ப சிறப்பா கொண்டாடப் படுகிறது.இங்கு  மொழிகள் இணைகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.. ஆனால் மொழி ரீதியான பண்டிகை கொண்டாடினால் 'மதங்கள்' இணையுமே! உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க இது வழி செய்யுமே!!

         இதோ... ஓரிரு நாளில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள போகிறோம்..அப்படியே தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் சேர்த்து சொல்வோமே!!! ......
 
(நன்றி கூகிள் படங்கள்)                       
------------------------------------------((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))----------------------------    

4 comments:

 1. காலண்டர் பத்தின விளக்கம் தெரிந்தது,..இப்போ நாம எந்த புத்தாண்டை கொண்டாடுவது ..?

  ReplyDelete
  Replies
  1. @கோவை நேரம்..வருகைக்கு ரொம்ப நன்றி நண்பரே...திருவள்ளுவர் நாட்காட்டியைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் அவர் பிறந்த தினத்தை ஏன் தமிழ் புத்தாண்டாக கொண்டாடக்கூடாது? என்பது என் மனதில் தோன்றிய சிறு ஆதங்கம்....

   Delete
 2. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடப்படுவதற்கான காரணம் ஜோதிட ரீதியானது மட்டுமல்ல. வானவியல் ரீதியானது. அந்த மாதத்தில்தான் சூரியன் உச்ச பலத்தில் இருக்கிறது என்பது வானவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. சூரியக் குடும்பத்தின் உள்ள கிரகங்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சூரியனே முதல் காரணமாக உள்ளதால் அதற்கு மரியாதை செலுத்தும் பொருட்டு சூரியன் உச்சத்திற்கு வரும் மாதத்தில் பழந்தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினர். சிலப்பதிகாரத்தில் சித்திரை விழாக்கள் பற்றிச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

  சித்திரை மாதத்தில் கொண்டாட்டங்கள் ஒன்றும் இல்லை என்பது தவறான கூற்று. சித்திரை முதல் நாள் வீடுகளில் விருந்து சமைத்து உண்கிறோம். கோவில்களில் சிறப்பு வழிபாடு, பஞ்சாங்கம் படிப்பது நடக்கிறது. சித்திரை மாதத்தில்தான் பல கோவில் திருவிழாக்கள் நடக்கின்றன.

  அறுபது ஆண்டுகளுக்குப் பின் உள்ள தத்துவம் வேறு. அறுபது வருடத்திற்கு ஒருமுறை உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்று நம்பப்பட்டது. ஒவ்வொரு வருடப் பெயரும் உலகம் அறுபது வருடத்தில் கடந்து போகும் நிலைகளைக் குறிக்கிறது. அதற்கு சொல்லப்படும் கதை முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அந்த தத்துவம் முட்டாள்தனமானதல்ல. பொதுவாகப் புராணக் கதைகளில் மறைந்திருக்கும் பொருள் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். ஒரு சுவாரசியத்திற்காகவும், எளிமைக்காகவும் சொல்லப்படுபவற்றை அப்படியே பிடித்துக் கொள்ளக் கூடாது.

  இந்த முறை வியாழன் கிரகத்தின் சுற்றை அடிப்படையாகக்
  கொண்டது. வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வர பன்னிரண்டு வருடங்களாகிறது. அது ஐந்து முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் அறுபது வருடங்களில் அது இருக்கும் நிலையைப் பொறுத்து பூமியில் நிலநடுக்கங்கள், வெள்ளம் ஆகியவை ஏற்படுகிறது என்று கணிக்கப்பட்டது. இந்த செய்திகளை வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு செல்ல இத்தகைய அறுபது வருட முறை உருவாக்கப்பட்டது.

  இத்தனையாவது வருடம் என்பதை எப்படிக் கணக்கிடுவது என்று கேட்கலாம். அதற்குத்தான் யுகக் கணக்கு இருக்கிறது. இது கலியுகத்தில் 5112 வது வருடம். இது மத நம்பிக்கையின் அடிப்படையிலானது. இதற்கு மட்டும் திருவள்ளுவர் பிறப்பை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். திருவள்ளுவர் பற்றி இன்றும் ஆணித்தரமான வரலாறு இல்லை. அவரைப் பற்றிச் சொல்லப்படும் பல விடயங்கள் ஊகங்களாகவே உள்ளன. அப்படி இருக்கையில் சூரியனின் அடிப்படையில் புத்தாண்டை வரையுறுத்த பழைய முறையே சிறப்பானதாகும்.

  தைமாதத்தின் சிறப்பு வேறு வகையானது. அறுவடை நடக்கும் சமயமாக இருப்பதால் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை வருடப் பிறப்பாக இருந்ததாக இலக்கிய ரீதியான சான்றுகள் இல்லை. அரசியல் ரீதியாக சில
  அறிஞர்களும், கலைஞர்களும் சொன்னார்கள் என்பதற்காக அதைப் பின்பற்றுவது சரியான
  முறையாக இருக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நீ........ண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி Jagannath

   முதலில் உங்களுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

   தமிழ் மாதங்களை மாற்றுவது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஓன்று என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்..கிராமப் புறங்களில் தமிழ் மாதங்கள்தான் பின்பற்றப்படுகிறது.பயிர் செய்யும் காலம்,நேரம்,அறுவடைக் காலம் எல்லாமே தமிழ் மாதத்தை வைத்துதான் கணக்கிடுகிறார்கள்...   //சிலப்பதிகாரத்தில் சித்திரை விழாக்கள் பற்றிச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. //   தமிழ் புத்தாண்டு எப்போது கொண்டாடப்படவேண்டும் என்பது இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது.தொல்காப்பியமும் ,அகப்பொருள் விளக்கமும்,திவாகர நிகண்டும் ஆவணி மதம்தான் முதல் மாதம் என்று சொல்கிறது.

   “மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்

   பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்” எனச் சூடாமணி நிகண்டு கூட ஆவணித் திங்கள்தான் முதலில் தொடங்கியது என்று சொல்கிறது.


   நம் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்னமும் ஆவணி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது...இதற்கு சொல்லப்படும் காரணம் ..ஆவணிக்கு சொந்தமான ராசி சிம்மம்.சிம்மத்திற்கு சொந்த வீடு ஞாயிறு(சூரியன்).இந்த ஞாயிறு குடியிருக்கும் ஆவணியை புத்தாண்டாகக் கொண்டாடுவதாக சொல்கிறார்கள்.அப்படிஎன்றால் எந்த மாதத்தை கொண்டாடுவது?


   நம் முன்னோர்கள் வகுத்த தேவரின் பகல் என்பது நில இயல்- வான இயல் உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்களே...இதில் தை தானே முதல் மாதமாக வருகிறது...

   மேலும்...

   பொங்கல் பண்டிகையோடு வரும் திருவள்ளுவர் நாளில் புத்தாண்டு என்பது பெரியார்,திரு.வி.க, பாரதிதாசன் போன்றோர்களின் மனதில் உதித்த ஒரு முற்போக்கு சிந்தனையே!.தமிழ் வருடங்களின் பின்னால் சொல்லப்படும் கதைகள் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவையாக இருக்கிறதே...

   ஆனால் பொங்கல் பண்டிகையை தமிழ்க் கிருஸ்துவர்கள் கூட அந்தோனியார் பொங்கலாக கொண்டாடுகிறார்களே! ...

   ஆங்கில புத்தாண்டு,சீனப்புத்தாண்டு போல் தமிழ் புத்தாண்டை சமய வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?.

   Delete