Wednesday 16 May 2012

திருப்பியடி-சிறுகதை

"ஏண்டி...சனியம்புடிச்ச நாயே...எத்தன தடவ சொல்றது...மீன் கொழம்பு காரமா வையுன்னு..எடுத்து மூஞ்சிலே ஊத்துறம்பாரு.." கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் கோவிந்தன்.அவன் வாயிலிருந்து தெறித்த எச்சியில் அழுகிய பழ நாற்றம் அடித்தது.அந்த மதிய நேரத்திலும் குடித்திருந்தான்.
     
கோவிந்தன் கார்பெண்டர் வேளையில் கைதேர்ந்தவன்.ஆனால் அந்தத் தொழிலை  தொடர்ச்சியாகச் செய்ய இன்னும் தேரவில்லை.

"இல்லப்பா...உனக்கு வாயில புண்ணு வந்திருக்கிறதா கோமதி சொன்னா.. அதான் காரம் கம்மியா வச்சேன்.." தன் ஒரே செல்ல மகனின் கோபத்தை சாந்தப்படுத்தினாள் அந்தத் தாய்.

கோபத்தில் எதுவேண்டுமானாலும் செய்வான் கோவிந்தன் என்பதை உணர்ந்த அவனின் ஐந்து வயது மகன் மாதவன்,தன் பாட்டியின் மடியின் தஞ்சமடைந்திருந்தான்.

போகாத பொழுதை ராணிமுத்து புத்தகத்தைப் படித்துப் போக்கிக்கொண்டிருந்தாள் கோவிந்தனின் மனைவி கோமதி.

இரண்டு வருடமாக காச நோயால் அவதிப்பட்டுவரும் கோவிந்தனின் அப்பா அந்தக் குடிசையின் ஒரு மூலையில் கிடந்த கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தார்.மகனின் கோபத்தை ஒருபுறம் உணர்ந்திருந்தாலும் தனக்கு தேவையானதின் அவசியத்தைத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

"தம்பி...மாத்திரை வாங்கியாரச்சொன்னேனே...வாங்கியாந்...க்..க்.. " அதற்கு மேல் வெளிவந்த வார்த்தைகள், அவரின் கடுமையான இருமலுக்குக் கட்டுப்பட்டது.

"ஏன்...மாத்திரை சப்டலனா செத்தாப் போயிடப் போற?...ஒனக்கு ஒரு எழவு வர மாட்டேங்குதே..." எரிச்சலோடு கத்தினான் கோவிந்தான்.

"ஏம்மா...இந்தாள வெளியத்தான படுக்கச்சொன்னேன்...சாப்டர நேரத்தில லொக்கு..லொக்கு னு இருமிக்கிட்டே கெடக்கு சனியன்"  தன் தாயிடம் மீண்டும் எரிந்து விழுந்தான்.

        தவு திறக்கப்படும் சத்தம் கேட்டு பழைய நினைவிகளிலிருந்து மீண்டு வந்தார் கோவிந்தன்.வேகமாக உள்ளே வந்த மாதவன் தன் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு சாப்பிட உட்காந்தான்.அந்த வீட்டின் மூலையில் அதே கட்டிலில் கோவிந்தன்.சில வருடங்களுக்கு  முன் குடி போதையில் தச்சுவேலை செய்து கொண்டிருந்தபோது பெரிய ஆணி ஓன்று இவரின் வலது காலை பதம் பார்த்திருந்தது.அது சீழ் பிடித்து நெறிகட்டிவிட,வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலே முடங்கிப்போனார் கோவிந்தன்.சில நாட்களாகத் தான் கொஞ்சம் ஊன்றி ஊன்றி நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

 இலவச வண்ணத் தொலைக்காட்சியில் சீரியலின் அரிதாரம்பூசிய அழுகையில் ஆழ்ந்து மூழ்கியிருந்தாள் நிறைமாத கர்ப்பிணியான மாதவனின் மனைவி செல்வி.

"அப்பாவ...போற வழியில பெரியாஸ்பத்திரியில கொஞ்சம் இறக்கி விட்டுட்டு போறியா " தன் மகனுக்கு சாப்பாட்டை பரிமாறிக்கொண்டே மெதுவாகக் கேட்டாள் மாதவனின் தாய் கோமதி...

"ஏன்...அந்தாளுக்கு காலு மொத்தமா வெளங்காமலையா  போச்சி.அவர நடந்துப் போகச்சொல்லு"

எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த கோமதி மீண்டும் மெல்லிய குரலில் தயங்கியபடி கேட்டாள்.

"தம்பி..எனக்கு கொஞ்ச நாளா கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதுய்யா.கண் ஆஸ்பத்திரி கூட்டிபோகச் சொன்னேனே...எப்பக் கூட்டிட்டுப் போற."

"எல்லாத்துக்கும் என்னையே எதிர்பாக்காத..ஏன் நீயும் கெளம்பி போக வேண்டியதுதானே...சும்மா சாப்பிடுற நேரத்தில தொன தொனன்னுட்டு..."

"அதுல்லப்பா...அதுக்கு 500  ரூவா வேணும்மா.அதான்.."  அச்சத்துடனே கேட்டாள் கோமதி.

"இங்க பணம் என்ன மரத்திலையா காய்க்குது...இல்ல நீயும் உன் புருசனும் எனக்கு சொத்து சேத்து வச்சிருக்கீங்களா..." அவனின்  முகம் சிவந்தது.

"அப்ப... காசுக்கு நாங்க எங்கப்பா போறது.....? "

"எங்கயாச்சும் போய்த் தொலைங்க..." சாப்பிட்டத் தட்டை விசிறி எறிந்து விட்டு சட்டையை மாற்றி புறப்பட்டான் மாதவன்.

"ச்சே..வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்லை..ரெண்டு கிழங்களும் கெடந்துட்டு என் உசுர வாங்குது. இதுங்களுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது." கத்திக் கொண்டே வெளியேறினான் மாதவன்.

கட்டிலில் படுத்திருந்த கோவிந்தன் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டு புறப்படுவதைக் கவனித்த கோமதி சற்றுப் பதட்டமானாள்.

"எங்க கெளம்பிட்டீங்க .."

"பக்கத்துத் தெரு மாரிமுத்து எதோ செக்யுரிட்டி வேலை இருக்கிறதா சொன்னான்.அதான் போயி என்னான்னு கேட்டுட்டு வாறேன்."

"என்ன சொல்றீங்க...இந்த நிலமையில உங்களால வேலையெல்லாம் செய்ய முடியுமா?..புள்ள எதோ சொல்லிட்டானு இப்படியா பன்றது?..என்னதான் சொன்னாலும் அவன் நம்ம புள்ளைங்க..."

"நம்ம புள்ள...நம்ம புள்ள.. போதும்டி எல்லாம். ஒத்தப் புள்ளனு  செல்லம் கொடுத்து வளத்ததாலதான் இன்னிக்கி அப்பன் ஆத்தாவ மதிக்க மாட்டேங்கிறான்.அன்னிக்கி எங்க அப்பன் ஆத்தா செல்லம் கொடுக்காம என்ன அடிச்சி வளத்திருந்தாங்கனா,எனக்கு நல்லது கெட்டது எதுன்னு தெரிஞ்சிருக்கும்.பாவம்...வயசான காலத்தில அவங்களுக்கு கஞ்சி கூட ஊத்தாம பட்டினி போட்டிருக்கேன்.அவங்க எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கனு இப்பப் புரியுதுடி.அந்தப் பாவம் தாண்டி இப்ப நம்மள இப்படிவந்து படுத்துது. புள்ளைங்களுக்கு சொத்து சேத்து வைக்கலனாலும் பரவாயில்ல.கட்டுப்பாட்டோட வளர்த்திருக்கணும். அன்னிக்கி என் அப்பன் ஆத்தாள திட்டினதப் பாத்து இன்னிக்கி நம்மள திட்டுறான்.நாளைக்கு பொறக்கப் போற கொழந்தை இதப் பார்த்து வளந்ததுனா,பிற்பாடு அதுவும் இப்படிதான் பேசும்.நம்ம அடுத்த தலைமுறைக்கு காசு பணம் சேத்து வைக்கலனாகூட பரவாயில்ல..அவங்களுக்கு தவறான முன்னுதாரணமா நாம இருந்திடக்கூடாது.இப்ப நாம பன்ற தப்புக்கு தண்டனையா அடுத்தத் தலைமுறை நம்மள திருப்பியடிக்கும். என் ஒடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் நான் என் சொந்தக் காலில்தான் நிக்கப்போறேன்." தீர்க்கமாக பேசிவிட்டு வெளியேறினார் கோவிந்தன்.

--------------------------------------------((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))------------------

2 comments:

  1. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ......

    கதை சொன்ன விதம் பிடிச்சிருக்கு

    என்ன பாஸ் கதை எல்லாம் அசத்துங்க

    ReplyDelete
  2. மிக மிக நன்றி நண்பா....

    ReplyDelete