Monday 14 January 2013

என் உயிர்ப்பொங்கல்.......!


கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிறது பொங்கல் திருநாளைக் கொண்டாடி....!

திரைகடலோடி திரவியம் தேடியதில் நான் தொலைத்த மிகப்பெரிய என் கலாச்சார பொக்கிஷம் இந்த பொங்கல் திருநாள்...!

இதை 'என்' என்று உரிமை கொண்டாடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.நாங்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்ட பண்டிகைப் போல பொங்கல் திருநாள் மீது அப்படி ஒரு ஈடுபாடு.! எங்கள் உயிரோடும் உணர்வுகளோடும் கலந்த அந்த பசுமையான நினைவலைகள் இன்னமும் என் இதய அடுக்குகளில் பொக்கிஷமாக புதைந்திருக்கிறது.

அன்றைய காலக்கட்டத்தில் வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தது எங்கள் கிராமம். காவிரித் தண்ணீர் வங்கக் கடலில் சங்கமிக்கும் முன் தன் கருணைப் பார்வையை கடைசியாக அருளும் திருவாருரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாரணமங்கலம் என்னும் சிற்றூர். என்னை வளர்த்தெடுத்த தாய் மண்!. மொத்தமாக நூறு வீடுகள் கூட இருக்காது.பிரதானத்தொழில் விவசாயம்தான்.

விவசாயத்தையும் பொங்கல் திருநாளையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது.ஒன்றில்லாமல் மற்றொன்றும் இல்லை.எங்களுக்கு பண்டிகை என்றால் அது பொங்கல்தான்.பத்து தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடும்போது கிடைக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு மகிழ்வான, நிறைவான உணர்வைத்தரும் இந்தத் திருநாள்.

இதை வழக்கமான மற்ற பண்டிகைகளைப் போல புத்தாடை,இனிப்பு,பலகாரம்,விடுமுறை,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சம்பிரதாய பண்டிகையாக நாங்கள் கொண்டாடியதில்லை.இதை நிறையக் கட்டங்களாகக் கொண்டாடுவோம்.

எங்கள் ஊரிலுள்ள எல்லோர் சட்டைப்பைகளும் கனப்பது இந்தக் காலத்தில் தான்.பொங்கலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அறுவடை ஆரம்பித்திருக்கும்.விளைச்சலில் எந்தக் காலக் கட்டத்திலும் சோடை போகாதது எங்கள் ஊர்.

சொந்தமாக நிலம் இருப்பவர்களுக்கு சாதாரண மகசூல் என்றாலே நிறையவே பணம் கொழிக்கும்.நான் கேள்விப்பட்ட வரையில் பெரும்பாலும் இருபது வீதத்திற்கு அதிகமாகவே மகசூலைத்தரும் எங்கள் மண். நூறு குழி என்பதை ஒரு 'மா' என்று குறிப்பிடுவார்கள். ஒரு' மா ' விற்கு எத்தனைக் 'களம்' காண்கிறது என்பதே வீதம்.ஒரு களம் என்பது 12 மரக்கால்.

ஆரம்பப்பள்ளி பயிலும் காலக்கட்டம்தான் என் வாழ்க்கையின் வளமான வசந்தகாலங்களாக இன்றுவரை நான் நினைத்துக் கொள்வதுண்டு.கீழத்தெரு,மேலத்தெரு என இரண்டு தெருக்கள் மட்டும்தான்.என் வயதையொத்த நண்பர்கள் பத்து பேருக்கு மேல் இருப்போம்.பாகுபாடுகளையும் வேற்றுமையுணர்வையும் அறியாத பருவம்.பணக்கார வீட்டுப்பிள்ளை,பண்ணையாள் வீட்டுப்பிள்ளை என்ற பாகுபாடுகளெல்லாம் பார்க்காத வயது அது. பக்கத்து ஊர்களில் திருவிழா,கபடி போட்டிகள்,வீடியோ படம் போடுவது என்று எந்த இரவுநேர களியாட்டங்களையும்  நாங்கள் விட்டுவைத்ததில்லை. எங்கே போனாலும் ஒரு செட்டாகத்தாகத் தான் போவது. அடிவாங்கினாலும் மொத்தமாகத்தான் வாங்குவது .

அறுவடைக் காலங்களில் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள்,பண்ணை வேலை செய்பவர்கள், கூலித்தொழிலாளிகள் என எல்லோரிடமும் மட்டமல்ல,எங்களிடமும் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கும்.

எங்களுக்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் இருந்தது.அறுவடைக் காலங்களில் எங்களின் மாலைப்பொழுது முழுவதும் வயல் சார்ந்த இடங்களிலேயே கழியும்.பள்ளி முடிந்தவுடன் புத்தகப்பையை வீட்டினுள் எறிந்துவிட்டு,ஒரே ஓட்டமாக கட்டு(நெற்கதிர் ) அடிக்கும் களத்திற்கு சென்று விடுவோம்.அனேகமாக கட்டு அடித்து முடிந்து நெற்குவியல்களை சாக்குப் பைகளில் அளந்து போடும் நேரமாகத்தான் அது இருக்கும். நாங்களும் வேலை செய்வதுபோல் சாக்குப் பைகளை எடுத்துக் கொடுப்பது,பைகளைப் பிடிப்பது என பாசாங்கு செய்வோம்.வேலை செய்தவர்களுக்கெல்லாம் நெல் அளந்து விட்டு கடைசியாக எங்களுக்கும் ஒரு மரக்கால் நெல் கிடைக்கும். அது கடைசி நேரத்தில் நாங்கள் செய்த ஒத்தாசை(?!)க்குக் கொடுக்கப்படும் கூலி...! அப்படியே கதிரறுத்த வயல்களில் சிதறிக் கிடக்கும் நெற்கதிர்களையும் சேர்த்து பொருக்கி எடுத்தால் ஒன்றரை மரக்கால் தேறும்.

ஒன்றரை மரக்கால் நெல்லின் மதிப்பை சாதரணமாக சொல்லிவிடமுடியாது.கடையில் போட்டால் ஐந்து ரூபாய் கிடைக்கும்.தினமும் பாக்கெட் மணியாக அஞ்சு பைசா ,பத்து பைசா மட்டுமே கிடைக்கும் எங்களுக்கு ஐந்து ரூபாய் என்பது எவ்வளவு பெரிய அமவுண்ட்...!

எங்கள் ஊரில் கடைத்தெருவெல்லாம் கிடையாது.டீ குடிக்க வேண்டுமென்றால் கூட இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மாங்குடி என்ற ஊருக்குத்தான் செல்லவேண்டும்.

தினமும் பள்ளிக்குச் செல்லும்போது மாங்குடி கடைத்தெருவை கடந்துதான் போவோம்.எங்களின் பெருமூச்சுக்கு இலக்காகாத தின்பண்டங்கள் எதுவுமே அந்தக் கடைத்தெருவில் கிடையாது. "பெரியாளாகி வேலைக்குப் போன ஒடனையே டெய்லி கடலை உருண்டையாய் வாங்கு சாப்பிடுனும்டா..." நான் பரோட்டாவும் பூரி செட்டும் டெய்லி வாங்கி சாப்பிடுவண்டா.." நான் போண்டாவும் வடையும்........"  இப்படியாக எங்களின் சிறுவயது வாழ்க்கை இலட்சியங்கள் அந்த ஒரு நாளில் நிறைவேறும்.அப்படி இப்படி சாப்பிட்டாலும் இரண்டு ரூபாய்க்கு மேல போகாது.மீதி மூன்று ரூபாயை பத்திரப்படுத்தி வைப்போம். கிட்டத்தட்ட அறுவடைக் காலங்கள் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்.இந்த இடைவெளியில்தான் பொங்கல் திருநாள் வரும்.

பொங்கலுக்கு எங்கள் ஊரில் நெட்டி மாலை செய்யும் தொழிலும் ஒருபுறம் நடக்கும்.பகலில் விவசாயத் தொழில்.இரவில் நெட்டி மாலைத் தொழில்.குளங்களில் வளரும் நெட்டி என்ற தாவரத்தை வெட்டி,பிறகு அதே குளத்தில் ஊறவைத்து அதன் தோலை உரித்தெடுப்பார்கள்.பின்பு இதை வெயிலில் உலரவைத்து எடுத்தால் பஞ்சை விட லேசான தும்பைப் பூ கலரில் வெண்மையான தண்டுப் பகுதிக் கிடைக்கும்.அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலர் சாயங்களில் முக்கி எடுத்து திரும்பவும் உலரவைப்பார்கள்.பிறகு கற்றாழை நார் அல்லது தாழ நார் கொண்டு மாலையாக கோர்க்கப்படும்.இதில் மாலைக் கோர்ப்பதுதான் சிரமமான விஷயம்.அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமே.! ஒரு சாக்குப் பையில் மொத்தமாகக் கட்டிக் கொடுப்பார்கள். கூடவே நீண்ட ஊசியும், கொத்தாக நாரும்.ஒரு மாலைக்கு 'இவ்வளவு' என்று முன்பே பேசிவிடுவார்கள். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு கொடுத்துவிட வேண்டும். இரவு நேரங்களில் சாப்பாட்டை முடித்துவிட்டு, நிலவு வெளிச்சத்தில் நண்பர்களிடமும் பெருசுகளிடமும் கதைப் பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் மாலைக் கோர்த்த அந்த சந்தோசத் தருணங்கள் இனி எங்கு தேடினாலும் கிடைக்காது.

பொங்கலுக்கு மூன்று  நாட்கள் முன்பே தயாராகிவிடுவோம்.போகி,தைப்பொங்கல்,மாட்டுப்பொங்கல்,காணும் பொங்கல் என வரிசைக் கட்டிவரும்.எங்கள் கிராமம் களைக்கட்டுவது மாட்டுப் பொங்கலில்தான்.மாட்டுப் பொங்கல் அன்று மாடுகள் மட்டுமல்லாது ஆடு,நாய் என 'நான்கு கால்' வீட்டுச் செல்லங்களையும் குளிப்பாட்டி,மாலை, சந்தனம், குங்குமம் சகிதமாக ஜோடித்துப் பொங்கல் கொண்டாடியது இன்னும் நினைவிலிருக்கிறது. 

யாரையோ வதம் செய்ததற்கான நினைவு நாளை எப்படி நமக்கான பண்டிகையாக மாற்றி நாம் கொண்டாடுகிறோமோ அதேப்போல மாட்டுப்பொங்கல் என்ற நாளை அதற்கான பண்டிகையாக உணர்த்தவேண்டும் என்பதற்காக அன்று முழுவதுமே மாடுகளுக்கு ராஜ உபசரிப்பு நடக்கும்.அன்று மட்டும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு மேற்கு எல்லையில் இருக்கும் தோப்புக்கு அழைத்துச் செல்வோம்.எங்கள் வீட்டில் உழவு மாடு,பசுமாடு, எருமை மாடு ,கண்ணுக் குட்டி என பத்து உருப்புடி தேறும்.தெருவில் உள்ள மற்ற வீட்டு மாடுகளையும் மொத்தமாகச் சேர்த்துக் கொண்டு அந்தப் பனிவிழும் அதிகாலையில், முதல் நாள் செய்து மீந்து போன வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கலை ஒரு எவர்சில்வர் தூக்கு வாளியில் கட்டிக்கொண்டு அழைத்துச் செல்வோம்.ஆனால் அன்று மட்டும் ஏனோ  மாடு மேய்ப்பதில் அப்படியொரு ஆத்மதிருப்தி..!

பத்து மணி வாக்கில் எல்லா மாடுகளையும் மொத்தமாகக் கூட்டிக்கொண்டு ஊர் கோயில் குளத்தில் இறக்கிவிடுவோம்.கையில் ஒரு பிடி வைக்கோலை எடுத்துக்கொண்டு குளத்தில் மாட்டோடு மாடாக நீந்தி நன்றாக தேய்த்து குளிப்பாட்டி அவரவர் வீட்டிற்கு கூட்டிச்செல்வோம்.பிறகு மாடுகளுக்கு 'ஸ்பெசல் ஒப்பனை' நடக்கும்.கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி,நெற்றி மற்றும் உடல்பகுதி முழுவதும் சந்தனம் ,குங்குமம், மஞ்சள் தடவி,நெட்டி மாலை,கற்றாளை மாலை,செவந்திப்பூ மாலை,கரும்பு -உடைத்த தேங்காய்-பழங்கள்-வேம்பு இலை ஒன்றாகக் கோர்க்கப்பட்ட மாலை அனைத்தையும் அதன் கழுத்தில் போட்டு திருமணக்கோலத்தில் உள்ள மணப்பெண்ணைப் போல ஜோடித்து ர்வலத்திற்குத் தயார் செய்வோம்.

மாலை கரகாட்டம்,குறவன்,குறத்தி,பபூன் எல்லோரும் முன்னே ஆடிச்செல்ல பின்னே நாங்கள் ஜோடிக்கப்பட்ட மாடுகளை பிடித்துக்கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் பின் தொடர்வோம்.அதிலும் பெரிய கொம்புள்ள திமிரும் காளை மாடுகளை இழுத்துப் பிடித்து அடக்கி,எங்கவூர் பெண்களிடடம் வீரத்தை பறைசாற்ற இளைஞர் பட்டாளம் முண்டியடிக்கும்.நாங்கள் சைடு கேப்புல பக்கத்தில் போற மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட கரும்பு தேங்காய்,பழங்களை உருவி சுவைப்பதில் பிசியாக இருப்போம்.ஒரு வழியாக ஊரைச்சுற்றி வந்து பின்பு கோயிலையும் சுற்றியப்பிறகு பூஜை முடிந்து எல்லா மாடுகளும் அதனதன் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்.

இரவு கரகாட்டத்துடன் குறவன் குறத்தி டான்ஸ் தான் அன்றைய ஹைலைட்.எங்க ஊர்ப்பக்கங்களில் மருவத்தூர் ராமு என்பவர் குறவன் வேடத்திற்கு மிகப்பிரபலம்.மனுஷன் ஆறடி உயரத்தில கருகருனு காளை மாடு சைசுக்கு இருப்பான்.ரெண்டு குறத்தியையும் டெண்டு தொடையிலேயும் தூக்கி வச்சி நின்னானா ஊரே ஆர்ப்பரிக்கும். அவன் ஆடும் ஆட்டத்திற்கு தவில் வித்துவான்கள் ஈடுகொடுக்க முடியாமல் தண்ணி குடிப்பார்கள்.இந்த ஆட்டம் விடிய விடிய நடக்கும்.நாங்கள் முதல் வரிசையில் வரிசையாகத் துண்டை விரித்துப்போட்டு உற்கார்ந்து விசிலடித்து (ஹி..ஹி...குறத்தி ஆடும்போதுதான்)உற்சாகமடைவோம். கடைசியில் களைப்பில் பாதியிலேயே அப்படியே தூங்கிவிடுவோம்.அடுத்த நாள் காலையில்,"டேய்..நேத்தி நைட் நீ தூங்கிக்கிட்டு இருந்தப்போ குறத்தி உன் வாயில குச்சியை விட்டு ஆட்டுனிச்சி தெரியுமா ..".  ."டேய்..குறவன் இவன்  அன்ட்ராயரை அவுத்து விட்டான்டா..." என ஒருவரையொருவர் கிண்டலடித்து மகிழ்வோம்.

அடுத்த நாள் காணும் பொங்கலுக்கு கபடிப்போட்டி நடக்கும்.முதல்பரிசு 333 ரூபாய்.இரண்டாம் பரிசு 222.மூன்றாம் பரிசு 111 என சுற்று வட்டாரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி ரகளைக் கட்டுவோம். கபடியை வெறும் கட்டாந்தரையில் விளையாடிப் பழக்கப்பட்டாலும் அன்று மட்டும் தேங்காய் நார் போட்டு விளையாடுவார்கள்.போட்டியில் பங்குபெறும் அளவுக்கு எங்களுக்கு வயது போதாது என்றாலும் போட்டி முடிந்தபிறகு எங்கள்  வயதையொத்த நண்பர்கள் எல்லாம் நாங்களே டீம் பிரித்து அந்த தேங்காய் நார் களத்தில் ஆசைதீர விளையாடுவோம். அந்தக் களத்தில் விளையாடிப் பார்ப்பதில் எங்களுக்கு அப்படியொரு சுகம்.இத்தோடு அந்த வருடப் பொங்கல் திருநாள் இனிதாக நிறைவடைந்திருக்கும்.  

பிறகு கல்லூரிப்படிப்பு ...சென்னையில் வேலை ..என கொஞ்சம் கொஞ்சமாக என கலாச்சாரப் பிணைப்பும் மண்ணின் மீதிருந்த உறவும் விடுபட ஆரம்பித்தது.கடைசியில் கடல்கடந்து சிங்கப்பூரில் வேலை. வருடாவருடம் பொங்கலன்று வீட்டிற்கு போன் செய்து பேசுவதோடு சரி.பொங்கலைப் பற்றிய நினைவுகள் மெதுவாக மறையத் தொடங்கிய நேரத்தில்தான் எனக்கு இந்த வருடப் பொங்கலை என் பிறந்த மண்ணில் மீண்டும் கொண்டாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.வருடாவருடம் ஊருக்கு வந்தாலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வராத சந்தர்ப்பம் இப்போது முதல் முறையாக அதுவும் எனது இரண்டு வயது மகனோடு வரும்போது வாய்த்திருக்கிறது.

என் பொருளாதார அமைப்பை உயர்த்திக்கொள்ள வெளிநாட்டில் பலவருடங்கள் வேலைப்பார்த்தாலும், சொந்த வீடு,குடும்பம் என தற்காலிகமாக அங்கே செட்டிலானாலும்,இந்தியன் சிட்டிசன்சிப்பை விட்டுட்டு சிங்கப்பூர் சிட்டிசன்னாக மாறினால் நிறைய சலுகைகள் கிடைக்குமே என்று என் நண்பர்கள் வற்புறுத்தினாலும், இன்னமும் என் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு என் மண் மீது எனக்கிருக்கும் தீராக் காதலும், என் மண் எனக்குக் கற்பித்த கலாச்சார மரபுமே காரணம்....!

இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


வணக்கங்களுடன்....
மணிமாறன்.

---------------------------------(((((((((()))))))))))))))--------------------------


11 comments:

 1. கொஞ்சம் பெரிய பகிர்வு என்றாலும் உங்கள் கிராமத்துப்பொங்கல் நினைவுகளை ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. பணம், பொருள்தேடும் அவசரத்தில் எல்லாவற்றையும் மலரும் நினைவுகளாகவே அசை போட வேண்டி இருக்கிறது. என்ன செய்ய. காலத்தின் கோலம்.

  ReplyDelete
  Replies
  1. என் நினைவுகளோடு பயணித்ததற்கு மிக்க நன்றி சகோ...

   Delete
 2. அருமை சார்...இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.........

  ReplyDelete
  Replies
  1. என் நினைவுகளோடு பயணித்ததற்கு மிக்க நன்றி சகோ...

   Delete
 3. கிட்டத்தட்ட இதேமாதிரி கொண்டாட்டங்கள் தான் எனக்கும். இப்போது இது கிட்டாத ஆதங்கங்கள் நிறையவே உண்டு...அதுவும் காணும் பொங்கலன்று நடை பெறும் பானை உடைத்தல், வாழைப்பழம் கவ்வுதல்,தேங்காய் முட்டல் ரொம்பவே பிரசித்தம்... திரை கடலோட ஆரம்பித்த பின் இப்போதெல்லாம் ஸ்டவ் பொங்கலும் வாழ்த்துமாக போகிறது பொங்கல்... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா......

  ReplyDelete
  Replies
  1. என் நினைவுகளோடு பயணித்ததற்கு மிக்க நன்றி ROBERT...

   Delete
 4. //.தினமும் பாக்கெட் மணியாக அஞ்சு பைசா ,பத்து பைசா மட்டுமே கிடைக்கும் எங்களுக்கு ஐந்து ரூபாய் என்பது எவ்வளவு பெரிய அமவுண்ட்...//

  உங்கள் எழுத்துக்களின் மூலம் உங்கள் ஊருக்கே எங்களை அழைத்துச் சென்று விடீர்கள் சார். நிச்சயமாக மண் மனம் மாறாத பதிவு....

  ஊருக்கு வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  இன்னமும் என் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு என் மண் மீது எனக்கிருக்கும் தீராக் காதலும், இந்த வரிகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சீனு...

   Delete
 5. மனம் நெகிழ்கிறது மணிமாறன். அற்புதமான அனுபவங்களை சுவைப்பட சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துகள். இன்னும் சொல்லுங்கள், எங்களின் சிந்தையிலும் நிழலாடுகின்றன இங்கே நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள். மனம் குதூகலிக்கிறது அசைப்போட்டுப்பார்க்கும்போது. நன்றி பகிர்விற்கு

  ReplyDelete
  Replies
  1. என் நினைவுகளோடு பயணித்ததற்கு மிக்க நன்றி சகோ...

   Delete
 6. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி...

  ReplyDelete