கடந்த சில நாட்களாக வித்யாவின் ஆசிட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்து.இருவரும் தீவிரமாக காதலித்ததாகவும், திருமணம் செய்ய வித்யாவின் தாய் மறுத்ததாகவும் அந்த ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால் வித்யாவின் வீட்டிற்கு இன்று (24.02.2013) தொல்.திருமாவளவன் அவர்கள் சென்றபோது பல அதிர்ச்சித் தரத்தக்க தகவல்கள் வித்யாவின் பெற்றோர்,உறவினர்களின் மூலம் வெளிவந்திருக்கிறது.இதற்கு பின்புலமாக ஒரு தலித் பெண் மீது ஏவப்பட்ட வன்முறைத் தாக்குதல் என்றே தோன்றுகிது.
முகநூளில் வெளிவந்த அந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.
வித்யாவிற்கு 22 வயது. ஆசிட் ஊற்றிய விஜய பாஸ்கர் என்ற அந்த கொடுரனின் வயது 37. இதனால் வித்யா பாஸ்கரின் காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். ஆனால் அவன் அந்தப் பெண்ணை விட்டபாடக இல்லை.
வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஸ்கர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவன்.
இதனால் ஒருதலைக் காதலாகவே அவன் அலைந்திருக்கிறான். வயதும் சாதியும் ஒத்துப்போகாத நிலையில் மிகுந்த ஏழ்மையில் வாடிய வித்யா என்ன செய்ய முடியும்...?
வித்யாவின் அப்பா 2000ஆம் ஆண்டு இறந்தபோது வித்யாவிற்கு பத்து வயது மட்டுமே. பிறகு அவரது அம்மா வீட்டு வேலை செய்து தமது மூத்த மகனையும், இளைய பெண்ணான வித்யாவையையும் காப்பாற்றி வந்துள்ளார்.
குடும்பத்தில் கொஞசம் அதிகமாக சம்பாதிக்கும் பெண் வித்யா மட்டுமே. மாத சம்பளம் ரூ-4000.
இவ்வளவு வறுமையில் வாடும் குடும்பத்தை எளிதில் வளைத்துவிடலாம் என்று பாஸ்கர் செய்த சூழ்ச்சி அந்தப் பெண் இணங்க விரும்பவில்லை.
எனவே சம்வத்தன்று வித்யா வேலை செய்யும் இணைய மையத்திற்கு வந்த பாஸ்கர் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்த அவர் மறுக்கிறார். உடனே கையில் மறைத்து வைத்த ஆஸிட்டை எடுத்து வித்யாவின் முகத்தை குறிவைத்து ஊற்ற வித்யா திரும்பிக் கொள்ள முதுகு முழுவதும் ஆசிட்டால் நனைந்து துணி கருகி கீழே விழுகிறது. பின் முன்பக்கம் ஊற்றுகிறான், அதற்குள் ஆசிட் தீர்ந்துவிட தலையை பிடித்து கீழே சிந்தியிருந்த ஆசிட்டில் வித்யாவின் முகத்தை அழுத்தி தரையில் தேய்க்க முகம் முழுதும் வெந்துக் கருகிப் போகிறது.
அடுத்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.உடம்பு முழுதும் ஊற்றிய ஆசிட்டால் உடலின் மேலுள்ள சதைகள் உருகி கரைந்து உதிர்கின்றன, எலுப்புகள் வெளியேத் தெரிய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன, காயங்கள் தீவிரமாகி இன்று காலை 4 மணிக்கு வித்யா மரணத்தைத் தழுவுகிறார்.
ஒரு தலைக் காதலில் வித்யாவைத் மிரட்டி திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்ற அவனின் நம்பிக்கை பொய்த்துவிடுமோ என தெரிந்துக் கொண்ட பாஸ்கர் முழு குடி போதையில் நடத்திய கொடூரமான படுகொலை இது.
தொல்.திருமாவளவன் அவர்கள் மருத்துவமனைக்கும் பின்பு வித்யாவின் வீட்டிற்கும் சென்று பார்க்கும் போது கிடைத்த உண்மைத் தகவல்கள் இவை.
மேலும் மாவட்ட ஆட்சியருடன் அவர் பேசியதும் அவர் உடனே கிளம்பி வந்து மலர் வளையம் வைத்தார். அப்போது வித்யாவின் உடலை வைத்துக் கொண்டே அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன்வைத்தக் கோரிக்கைகள்.
1. வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
2. வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து உரிய இழப்பீட்டினை உடனடியாகத் தரவேண்டும்.
3. வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும்.
4. ஈமச்சடங்கினைச் செய்வதற்கு உடனடி செலவை அரசு ஏற்க வேண்டும்.
5. அதை சிறப்பு வழக்காக எடுத்து உரிய நிவாரணத்தை முதல்வர் வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனடியாக ஈமச்சடங்கிற்கான தொகை வழங்கப்பட்டது. மற்றவை உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
மனசாட்சியுடன் இங்கே எழுப்பப்படும் கேள்விகள்.....
1. டில்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது மனசாட்சியோடு வந்து வீதிக்கு வந்து போராடிய இளைய சமுதாயம் ,விநோதினி ஆசிட் வீச்சில் கொல்லப்பட்டபோது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய தமிழ்நாட்டுப் போராளிகள்,வித்யா ஆசிட் வீச்சின் போதும் அவர் இறந்தபோதும் தமது மனசாட்சியை எங்கே கொண்டுபோய் அடகு வைத்தார்கள்.
2.தலித் இளைஞர்கள்தான் ஜீன்ஸ் போட்டு எங்கள் இனப் பெண்களை மயக்குகிறார்கள் என அறிய கண்டுபிடிப்பை வெளியிட்ட ஜாதி சங்கத் தலைவர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்...?
3.ஒரு காதல் பிரச்னையை சாதித்தீ மூட்டி,அதில் அரசியல் பொடிதூவி வடதமிழகத்தில் பதட்டமான சூழலை ஏற்படுத்திய பிற்போக்குவாதிகள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்.....?
4. இதை எந்த ஊடகமும், சமூக ஆர்வலர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே....ஏன் தலித் என்பதற்காகவா..?
5.முகநூல் உள்ளிட்ட இணைய ஊடகங்களிலும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லையே..?
6.சரியான சிகிச்சையளித்திருந்தால் என் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என அந்த அப்பாவிப் பெண்ணின் தாய் கதறி அழுதாரே...ஏன் அவர் சமூகத்திற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெருவதற்கெல்லாம் தகுதி இல்லையோ..?
இதில் இன்னொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.இந்த சம்பவத்தை அரசியலாக்காமல்,மூன்று ஊரைக் கொளுத்தாமல்,குடிசைகளை எரித்து சாம்பலாக்காமல், பொருட்களைக் கொள்ளையடிக்காமல், அப்பாவி பொதுஜனங்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிக அமைதியாக தனக்கேயுரிய அரசியல் முதிர்ச்சியோடு செயற்பட்ட தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஜாதி சங்கத் தலைவர்களுக்கும் நிச்சயமாக ஒரு முன்னுதாரணம்.
----------------------------------------------(((((((((((((((())))))))))))))---------------------------------