Saturday 17 January 2015

டார்லிங் (விமர்சனம்)

பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, மற்றொரு பெண்ணின் உடலில் புகுந்து தன் சாவுக்குக் காரணமானவர்களை பழிவாங்கும் கதைதான் டார்லிங்.

பிரேமகதா சரித்திரம் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மறு உருவாக்கம் தான் டார்லிங். ஏற்கனவே பல பேய் படங்களில் சொல்லப்பட்ட கதை தானே. புதிதாக என்ன சொல்லப்போகிறார்கள் என்ற சலிப்பு ஆரம்பத்தில் வந்தாலும் மென்மையான திரைக்கதையும், நகைச்சுவை காட்சியமைப்புகளும் படத்தை உற்சாகமாக தூக்கி நிறுத்துகின்றன.

தான் காதலித்த பெண் ஒரு 'ஐட்டம்' என்பதை அறிந்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் தற்கொலைக்கு முயற்சிக் கிறார். அதை, பிரகாஷ்குமாரை ஒருதலையாகக் காதலிக்கும் நிக்கி கல்ரானியும், நண்பன் பாலாவும் தடுக்கிறார்கள். இருப்பினும் தற்கொலை முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறார் ஹீரோ. அவரது தற்கொலை முடிவை மாற்றி நிக்கி கல்ரானியை காதலிக்க வைப்பதற்காக பாலா ஒரு திட்டம் போடுகிறார். பாலாவும் நிக்கியும் வெவ்வேறு சொந்த பிரச்சனைகளில் வெறுப்புற்று அவர்களும் ஹீரோவோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நாடகம் போடுகிறார்கள்.

அதற்காக ஒரு பங்களாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அதே தற்கொலை லட்சியத்தோடு இருக்கும் கருணாவும் இவர்களோடு சேர்ந்துக் கொள்கிறார். அந்த பங்களாவில் ஏற்கனவே ஓசியில் சொகுசாக வாழும் இன்னொரு கோஷ்டி, அங்கு பேய் இருப்பதாக பொய் சொல்லி அவர்களை விரட்டப் பார்க்கிறது. உண்மையிலேயே அந்தப் பங்களாவில் பேய் இருப்பது பிறகு தெரியவருகிறது. அது நிக்கியின் உடலில் புகுந்து தனக்கு நேர்ந்த கொடுமையை ஹீரோவிடம் சொல்கிறது. நிக்கியின் உடலில் புகுந்த அந்த பேயை விரட்ட வேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் கொலைக்குக் காரணமானவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

பிறகு என்ன நடந்தது , அவர்கள் எப்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பதே மீதிப்படம்.

 G.V. பிரகாஷுக்கு இது முதல் படம் என்பதால் நிறைய காட்சிகள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாய்ஸ் மாடுலேஷன் பின்வரும் படங்களில் சரி செய்துவிடுவார். ஆனால் எக்ஸ்பிரஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போலும். தன் காதலி மைக்கில் பாடிக்கொண்டிருக்கும்போது அவர் மீது காதல் கொண்டு ரொமாண்டிக் லுக் விடும் காட்சி ஒன்று. ' ஆத்தா வைய்யும் சந்தைக்கு போகணும் மைக்கை குடு...' என்று கெஞ்சுவதுபோல நிற்கிறார்.

நிக்கியை முத்தமிட முதன்முதலாக அவர் நெருக்கும்போது அவளுக்குள் இருக்கும் பேய் வெளிப்படுகிறது. முகம் கோரமாகி மாறி அந்தரங்கத்தில் மிதக்கிறது. பிரகாஷை ஓங்கி சுவரில் அடிக்கிறது. மனுஷனுக்கு முகத்தில் ஒரு பய உணர்ச்சி இருக்கணுமே.. ம்ஹும்.. ஸ்கூலில வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருக்கும் போது ஒன் பாத்ரூம் வந்தா போகவும் முடியாம, கேக்கவும் முடியாம ஒரு முழி முழிப்போம் பாருங்க.. அப்படி முழிக்கிறார்.

சரி பேயைப் பார்த்தவர் வெளியே வந்து மேட்டரை சொல்வார் என்று பார்த்தால், பாத்ரூல பொட்டுத்துணி இல்லாத குஷ்புவைப் பார்த்த ரஜினி போல திரு திருனு முழிக்கிறார்.(ஒருவேளை பேய் முழி முழிக்கிறான்னு சொல்லுவாங்களே அது இதுதானோ..?) . கடைசியில் உக்கிரமாக மாறவேண்டிய காட்சிக் கூட அவ்வளவு சிறப்பாக இல்லை.  படத்தில் இவரது நடிப்பு முக்கியமான  மைனஸ்.

ஆனால் நிக்கி கல்ரானி செம பர்ஃபார்மன்ஸ். G .V .பி யுடன் ரொமான்ஸ் காட்சியாகட்டும், திடீரென்று பேயாக மாறும் கட்டமாகட்டும் தனக்கான பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார். அடிக்கடி அம்மணி  ஷார்ட்ஸ்-ல்  வந்து நம்ம ஹார்ட் பீட்டை ஏற்றுகிறது.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் படத்தின் நிஜமான ஹீரோ கனாகாணும் காலங்கள் பாலாவும், கருணாஸும் தான். மொத்தப் படத்தையும் அனுமார் மாதிரி இவர்கள் தான் தூக்கி சுமக்கிறார்கள். டைமிங் சென்ஸ் பாலாவுக்கு நன்றாக வருகிறது. சந்தானத்துக்கு போட்டியாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கருணா தானாக கேட்டு நடித்த படமாம் . நீண்ட இடைவேளைக்குப்பின் செம என்ட்ரி. நல்லவேளை இவர் இல்லை என்றால் சூரியை போட்டு உயிரை எடுத்திருப்பார்கள். இணையத்தில் பிரபலமான விஜய் டிவியின் சிரிச்சா போச்சி மேட்டரை ஆங்காங்கே தூவி கிச்சு கிச்சு மூட்டியிருப்பது செம டெக்னிக். இவர்கள் செய்வது அதகளம் என்றால், பேய் விரட்ட 'கோஸ்ட் கோபால்வர்மா ' வாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் அதிரடி பட்டாசு.!. ' ஜெய் சடகோபன் ரமேஷ் ' என்று இவர் வாயைத் திறந்தாலே தியேட்டரே அதிர்கிறது.( பொதுவாக பேய் விரட்ட மனோபாலா தானே வருவார்..?)  
அது என்ன, பேய் என்றால் பெண் மீதுதான் ஏறவேண்டும் (ஐ மீன்.. உடம்புக்குள்) என்கிற சட்டம் ஏதாவது இருக்கிறதா...?  மோனோலிசா படத்திலிருந்து இப்போ வரைக்கு ஒரே மாதிரியாகக் காட்டினால் எப்படி .? 

பாடல்கள் எதுவும் பெரிதாகக் கவரவில்லை. சார் நடிப்புக்கு வந்து விட்டதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் போல. ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துவிட்டார். அழகு தேவதையாக வரும் 'புத்தம் புது காலை' ஸ்ருஷ்டி டாங்கேவை கேரக்டர் சரியில்லாத பெண்ணாகக் காண்பித்திருப்பது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் படத்தின் மைனஸ் என்று சொன்னார்கள். பின்னால் அமர்ந்திருந்த பெண்களும் வாய்விட்டு சிரித்ததை கேட்க முடிந்தது.

சீரியஸாக ஆரம்பிக்கும் நிறைய காட்சிகள் காமெடியில் முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கலகலப்புகாக ஒருமுறை பார்க்கலாம்.

                        ப்ளஸ்                   மைனஸ்
பாலா-கருணா காமெடி G.V. பிரகாஷ் நடிப்பு.
கோஸ்ட் கோபால்வர்மா பாடல்கள்
நிக்கி கல்ரானி அதிக ட்விஸ்ட் இல்லாதது.
திரைக்கதை மற்றும் பின்னணி இசை

15 comments:

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பார்க்கலாம் என்று தான் சார் இருக்கிறேன்...

    ReplyDelete
    Replies

    1. நன்றி சீனு.. மற்ற இரண்டு படங்களை ஒப்பிடும்போது இது பரவாயில்லை என்றே தோன்றுகிறது

      Delete
  5. Replies
    1. மிக்க நன்றி அய்யா..

      Delete
  6. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. எனது தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்..

      Delete
  7. உங்கள் விமர்சனம் செம ரகளை.. ஹாஹாஹா

    ReplyDelete