Tuesday, 27 January 2015

ஐ VS திருநங்கைகள் சில விளக்கங்களும், கேபிள் சங்கருக்கு சில கேள்விகளும்...


அறச்சீற்றம்(!) தொடர்கிறது....
படத்தில் திருநங்கைகளை வக்கிரமாகக் காட்சிப்படுத்தியது தொடர்பாக கடந்த பதிவில் எழுதியிருந்தேன். பலருக்கு அதில் உடன்பாடு இல்லை போலும். இணையத்தில் திருநங்கைகளுக்கு ஆதரவாக வந்த பதிவுகளை விட அவர்களை விமர்சனம் செய்து வந்த பதிவுகள்தான் அதிகம்.

ஒரு பெண் பதிவர் எழுதிய பதிவைப் படித்தேன். நம் சமூகம் எவ்வளவு தட்டையான சிந்தனையமைப்பு உடையது என்பதை அவரது பதிவையும் அதற்கு ஆதரவாக வந்த சில கருத்துகளையும் படித்தபோது உணர முடிந்தது.

திரைப்படங்களில் பெண்களை கெட்டவர்களாக, கொடுமைக்காரியாக சித்தரிக்கும் சில படங்களை குறிப்பிட்டு அதற்கெல்லாம் பெண்களாகிய நாங்கள் போராட்டம் நடத்தினோமா என்கிற ரீதியில் வினா எழுப்பியிருந்தார். அதேப்போல் சினிமாவில் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் போராட்டம் நடத்தினால் சினிமாவே எடுக்க முடியாது என்கிற ரீதியிலும் சிலர் கருத்துகளை சொல்லியிருந்தார்கள்.

அவர்களின் சிந்தனையை தஞ்சாவூர் கல்வெட்டில்தான் செதுக்கி வைக்கவேண்டும்..!.

திருநங்கைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சினிமாவில் ஏதாவது ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ அல்லது அந்த அமைப்பின் தலைவர்களையோ, பகடி செய்தோ அல்லது விமர்சித்தோ காட்சிகள் வந்தாலோ அல்லது வரலாம் என்கிற ஊகம் இருந்தாலோ ஒரு பெருங்கூட்டமே திரண்டு அப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. வழக்கு போட்டு தடை வாங்குகிறது. இறுதியில் அந்தப் படைப்பாளி பணிந்து போகிறார்.

ஆனால் திருநங்கைகள் பாவப்பட்டவர்கள். ஒன்றிணைந்து போராடிப் பார்த்தார்கள். யாரும் கண்டுகொள்ள வில்லை. குறைந்த பட்சம் இயக்குனர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்கள் . மிரட்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகினர். கடைசியில் எந்த நீதியும் கிடைக்காமல் பின்வாங்கிவிட்டனர். பாவம், அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே வழக்குப் போட்டு தடை வாங்கத் தெரியவில்லை. படத்தை எங்களுக்கு போட்டுக் காட்டிய பிறகே வெளியிடவேண்டும் என்று சாதூர்யமாக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் நடுத்தெருவுக்கு இழுக்கத் தெரியவில்லை.

முன்பெல்லாம்  திருநங்கைகளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கும். அதைவிடவும்  கடுங்கோபம் வரும்.ஆணாகப்பிறந்த இவர்கள் ஏன் பெண்ணாக மாறவேண்டும்?.ஆணாகவே இருந்து தொலையவேண்டியது தானே. செக்ஸில் ஈடுபாடு இல்லையென்றால் திருமணம் செய்யாமலே இருந்துவிட வேண்டியது தானே. எதற்கு குறியறுத்து இச்சமூகத்தில் தங்களை மூன்றாம் பாலினித்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்?

பிறகுதான் தெளிந்தேன். அது படைத்தவனின் திருவிளையாடல் என்று... அவர்களின் தலைவிதி கருவிலே எழுதப்படுகிறது என்று... குரோமோசோம்களின் குறைபாடுகளால் கரு உருவாகும்போதே மூன்றாம் பாலினம் என்கிற முகவரியை கொடுத்துவிடுகிறான் பிரம்மன். ஆனால் அது வெளிப்படுவது ஏனோ பருவ வயதில் தான்.
சொல்லப்போனால் திருநங்கைகளும் ஒரு மாற்றுத் திறனாளிதான். பிறக்கும் போதே மூளை வளர்ச்சி இல்லாமலோ அல்லது உறுப்புகள் ஊனமாகவோ பிறக்கும் குழந்தைகள் மீது நமக்கு பரிதாபம் வருகிறது. சமூகத்தில் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டால் நமக்கு கோபம் வருகிறது. அதற்கு, நாளை நமக்கும் இதே போல குழந்தை பிறக்கலாம் என்கிற அச்ச உணர்வு கூட காரணமாக இருக்கலாம். அதே போல் இப்படியும் நடக்கலாம். நாளை நமக்குப் பிறக்கும் குழந்தை ஒரு திருநங்கையாகக் கூட  இருக்க வாய்ப்பிருக்கிறது. உடல் ஊனமாகப் பிறப்பதற்கான நிகழ்தகவு 1/100 என்றால், திருநங்கையாகப் பிறப்பதற்கு நிகழ்தகவு 1/1000... அவ்வளவுதான் வித்தியாசம்.

திரைப்படத்தில் பெண்கள் மட்டும் இழிவுபடுத்தப் படவில்லையா என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரம்யா கிருஷ்ணனோ அல்லது வடிவுக்கரசியோ வில்லியாக நடிக்கும் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவரும்போது, நாம் பார்க்கும் பெண்களையெல்லாம் அந்த கேரக்டர்களின் நகலாக நினைத்து பார்ப்பதில்லை.ஏன்,பெண்கள் வில்லியாக நடிக்கும் காட்சிகளை பெண்களே ரசிக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் 'ஐ' போன்ற ஒரு படத்தை ஓர் திருநங்கை பார்த்துவிட்டு உடன்பார்த்தவர்களின் நக்கல், நையாண்டிகளுக்கு ஆளாகாமல் குறைந்த பட்சம் அவர்களின் குரூர பார்வையில் சிக்காமல் தப்பித்து வர முடியுமா...? ஒரு பெண்ணை தவறானவளாகக் காண்பித்தால் அந்தப் பாத்திரத்தை மட்டுமே தவறாக நினைக்கும் நம் சிந்தனை, ஒரு திருநங்கையை தவறாக காட்சிப்படுத்தினால் அச்சமூகத்தையே கேலியாகப் பார்க்கும் அளவுக்கு செல்கிறதே அது ஏன்..?

கட்டுமஸ்தான உடலமைப்பு உடைய ஒருவன், உடல் ஊனமுற்ற ஒருவனைப் பார்த்து 'ஏய்..நொண்டி' என கூப்பிடுகிறான். அப்போது அந்த மாற்றுத்திறனாளி கடும் சினத்துடன் 'என்னை ஏன் நொண்டி என கூப்பிட்டாய்' என்று சண்டைக்கு வருகிறான். அதற்கு அவன் ' என்னைக் கூடத்தான் பாடிபில்டர் எனக் கூப்பிடுகிறார்கள்.. அதற்காக நான் கோபப்பட்டேனா..' என பதிலளிக்கிறார். உங்கள் தர்க்கப்படி அவன் சொல்வது சரிதானே.  ஆனால் நம் மனது அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே ஏன்..?.

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த நம்மை பகடி செய்வதையும், பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறந்தவர்களை பகடி செய்வதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் நம் தட்டையான சிந்தனையை மாற்றத்தான் திருநங்கைகள் தங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப் படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். அவர்களின் போராட்டம் குறைந்த பட்சம் அச்சமூகத்தின் மீது நாம் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தையாவது மாற்ற வேண்டும்..!

ஷங்கர் போன்ற பிரும்மாண்ட இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்னவோ ஓஜஸ் ரஜானி போன்றோருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர் சார்ந்த சமூகம் கொதிப்படைந்து போராட்டம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, வெகு இயல்பாக 'அப்படியெல்லாம் ஐ படத்தில் திருநங்கைகள் கொச்சைபடுத்தப் படவில்லை' என்று சொன்னதுதான் விக்ரம் உடலில் வைரஸ் செலுத்தியதை விடக் கொடுமையான விஷயம்.

<<<<<<<<<<<<<<<<<<<<------- &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ------->>>>>>>>>>>>>>>>>>

அன்புள்ள கேபிள் சங்கர் அவர்களே..
                                               
இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதும் என்னைப்போன்ற கத்துக் குட்டிகளின் மானசீக குருவும், எட்டுத் திக்கும் தகவல் திரட்டி, ராப்பகலா உருட்டி புரட்டி கஷ்டப்பட்டு பிளாக்ல பதிவு போட்டா நூறு ஹிட்ஸ் கூட தாண்டாத எங்களுக்கு, ஒரே நாளில் ஆயிரம் ஹிட்ஸ் வாங்குவது எப்படி என்கிற சூட்சமத்தை சொல்லிக் கொடுத்த ஆசானும், சினிமா விமர்சனம் எழுதுங்க..அதுவும் FDFS எழுதுங்க. ஒரே நாளில் பிரபலமாகி விடலாம் என்கிற பிளாக் சீக்ரட்டை பட்டவர்த்தனமாக போட்டுடைத்த பழம்பெரும் பதிவருமாகிய கேபிள் சங்கர் அவர்களே..

" சுப்புடுகள் எல்லாம் கச்சேரி செய்யலாமா..?" என்ற வினா உங்கள் மீது வீசப்பட்ட பொழுது, யதார்த்த சினிமாவை தமிழ்த் திரையுலக்கு அறிமுகப்படுத்திய மகேந்திரனே, இயக்குநர் ஆவதற்கு முன்னால் துக்ளக்கில் சினிமா விமர்சனம் எழுதியவர்தானே.. ஏன் இன்னொரு மகேந்திரனாக நீங்கள் இருக்கக் கூடாது என்கிற வினாவை நானே எழுப்பி விடை தேடிக்கொண்டேன்.

இப்படிப்பட்ட சூழலில்....  இணைய ஊடகத்திலிருந்து திரை ஊடகத்துக்கு பயணம் செய்யும் உங்களின் முதல் கலைப் படைப்பை உங்கள் ரசிகனாக முன்னிருக்கையில் குடும்பத்துடன் அமர்ந்து திரையில் காண ஆவலாக இருந்தேன். அதுமட்டுமல்ல.. அப்படைப்பை  எக்காரணம் கொண்டும் திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கக் கூடாது என்கிற கோட்பாட்டுடன் இருந்தேன். தயாரிப்பாளர் சிங்கப்பூர்வாசி என்பதாலும் உங்களுக்கும் சிங்கப்பூருக்கும் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பு இருப்பதாலும் கண்டிப்பாக தொட்டால் தொடரும் படம் சிங்கப்பூரில் வெளியாகும் என நம்பிக்கையோடு இருந்தேன்.

என் நம்பிக்கைக்கு மகுடம் வைத்தாற்போல்,சிங்கப்பூரின் பரபரப்பான தேக்கா மார்கெட்டில் முதன்முறையாக ஒரு சினிமா போஸ்டர் ஓட்டப்பட்டிருப்பதை கண்டேன். அது 'தொட்டால் தொடரும்'படத்தின் போஸ்டர். 

ஆனால் படம் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தால் திரையில்தான் என்ற வைராக்கியத்தில் இருப்பதால், இதற்காக 30 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்து பார்க்கக் கூடிய சூழலில் நான் இல்லை.மலேசியாவிலும் ரிலீஸ் ஆனதாக தெரியவில்லை. பாடாவதி படங்களை முதல்நாளே பார்க்கும் எனக்கு கேபிள்ஜியின் படத்தை பார்க்கவே முடியாதபடி ஆகிவிடுமோ என்கிற கவலை வாட்டுகிறது. தவிரவும், இந்த வார எனது 'கடமையை'  செய்ய முடியாமல் அறச்சீற்ற பதிவுகள் எழுதும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன். இதற்கிடையில் இன்னும் சில நாட்களில் வழக்கமாக இணையத்தில் உங்களின் கலைப்படைப்பு வெளியாகலாம். அப்படிப்பட்ட சூழலில் என்ன முடிவு எடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது... என் குழப்பத்திற்கு என்னதான் முடிவு..?

இப்படிக்கு....

FDFS ஓவர்சீஸ் விமர்சன கம்பெனி..

12 comments:

 1. அறச்சீற்றம் அவசியமே!
  தம1

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா..

   Delete
 2. யாரையும் கேலி செய்வது தவறானதே! அதுவும் உடல் குறைபாட்டை கொச்சை படுத்துவது தவறானது! அறச்சீற்றத்திற்கு எனது ஆதரவும் உண்டு!

  ReplyDelete
  Replies

  1. இறக்க குணமே இல்லாவதர்களைப் பற்றி என்ன சொல்வது..? நன்றி சுரேஷ்

   Delete
 3. ஐ : விசயம் விஷம் என்பதில் சந்தேகமில்லை...

  உங்கள் குழப்பம் விரைவில் தீர்ந்து, கடமை தொடரட்டும்...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. பதிவு போட்ட அடுத்த நாளே இங்க படத்தைப் போட்டுடாங்க.. :-) நன்றி DD

   Delete
  2. அப்போ விமர்சனம் எங்கேய்யா?

   Delete
  3. ஹி..ஹி.. போடனும் தல..

   Delete
 4. ஷங்கர் போன்ற பிரும்மாண்ட இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்னவோ ஓஜஸ் ரஜானி போன்றோருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர் சார்ந்த சமூகம் கொதிப்படைந்து போராட்டம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, வெகு இயல்பாக 'அப்படியெல்லாம் ஐ படத்தில் திருநங்கைகள் கொச்சைபடுத்தப் படவில்லை' என்று சொன்னதுதான் விக்ரம் உடலில் வைரஸ் செலுத்தியதை விடக் கொடுமையான விஷயம்.

  CORRECT

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி சார்..

   Delete
 5. Nil Gavani Sol - Episode 11 - June 08, 2014 -இதில் கூட திருநங்கைகள் தங்களுக்கு என்ன தேவை, என உருக்கமாக கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால்
  தொடர்ந்தும் அவர்கள் காயத்தில் அமிலமிடுவதாகவே இருக்கிறது. அவர்களைப் புகழவும் வேண்டாம் இகழவும் வேண்டாம்.
  அவர்கள் பாட்டுக்கு வாழவிடுங்கள்.
  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரின் தகமைகளைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது.
  இவ்வளவு இடரிலும், புறக்கணிப்பிலும் அவர்கள் எவ்வளவு சாதித்துள்ளார்கள்.
  இப்போ எனக்கு நினைவுக்கு வருவது, " நன்மை செய்ய வேண்டிய நாம் நன்மை செய்யாவிடினும், தீமையாவது செய்யாதிருப்போம்.
  அவர்களை துன்பம், மன உளைச்சல் அவர்களுக்கே! அவர்களை துன்புறுத்துவதை நிறுத்துவோம்.
  மிருகங்களிடம் காட்டும் அனுதாபத்தைக் கூட அவர்களிடம் காட்ட மறுப்பது கொடுமை என்பதை உணர்வோம்.


  ReplyDelete
 6. அவசியமான அறச்சீற்றம்..

  ReplyDelete