Wednesday 6 June 2012

மனைவி போனால் என்ன? மச்சினிச்சி இருக்கே.!!! வெளங்குமாயா இந்தக் கலாச்சாரம்?    
  இப்போதெல்லாம் தினசரி செய்திகளைப் படித்தாலே தலையே சுத்துதடா சாமி...சமூகம்,அரசியல்,சினிமா தொடர்புடைய  செய்திகளைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துத் தொலைக்கிறது,நம் கலாச்சார சனாதனத்தை கட்டுடைக்கும் சில நிகழ்வுகள். அது சரி,கலாச்சாரம் என்பது என்ன?அதன் வரையறைதான் என்ன? நமக்குக் கற்பிக்கப்பட்ட கலாச்சார விழுமியங்கள் நம்மைக் கட்டுப்படுத்துகிறதா?

           விஞ்ஞானமும்,தொழில் நுட்பமும் அதி அற்புத வளர்ச்சி கண்டுள்ள இந்த யுகத்தில் நம் கலாச்சார கட்டமைப்பின் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம்கூட ஏற்படலாம்.இங்கே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம் அதைத்தான் உணர்த்துகிறது.

     கள்ளத்தொடர்பு,தகாத உறவு,கண்ணியமற்ற நடத்தை,கட்டுப்பாடற்ற வாழ்க்கை இவைகளின் மூலம் உருவாகும் பிரச்சனைகள்,இதன் இறுதி வடிவமாய் விழும் உயிர்ப்பலிகள் எல்லாமே ஊடகங்கள் மூலம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.இது மிகப்பெரிய கலாச்சார சீர்கேடு என்று அதே ஊடகத்தாலும் சமூக அக்கறையுடைய சில ஆர்வலர்களாலும் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டாலும்,இது எனது தனிப்பட்ட விஷயம் என்று உதாசீனப்படுத்தும் தறுதலைகள் இருக்கும் வரை இதற்கு முற்றுப்புள்ளி மட்டுமல்ல,முதல் புள்ளி கூட வைக்க முடியாது.

    'கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக்கொலை....' 'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கழுத்து நெரித்துக் கொலை....' 'மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி...' ஏதோ கவிதை போல் எதுகை மோனையோடு மேலே சொல்லப்பட்டவை யாவும், சர்வ சாதரணமாக நம் நாட்டில் நடக்கும் சம்பிரதாயம் போன்ற நிகழ்வுகள். இச்சம்பவங்கள் எல்லாமே காவல்துறை மூலம் ஊடகத்திற்கு தெரியப்படுத்தப் படுவதால்,நிச்சயமாக இது  வழக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது மட்டும் ஊர்ஜிதமாகிறது.  

   ஆனால் நம் சமூகத்தால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஊடகங்களின் பார்வைக்கு வெறும் செய்தியாக மட்டும் போன ஒரு சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது இதுதான்.நம் நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது போல் கலாச்சாரத்திருத்தம் என்று ஏதாவது வந்துவிடுமோ?
      
   இப்படி என்னை ஆதங்கப்பட வைத்த சம்பவம் இதுதான்."காதலனுடம் அக்கா ஓடிப்போனதால் மணப்பெண்ணான தங்கை." எப்போதாவது நடக்கும் இந்தச்சம்பவம் தற்போது அடிக்கடி நடக்கிறது.நேற்று வேலூரில் நடந்திருக்கிறது இந்தச் சம்பவம்.ஓடிப்போன அந்தப் பெண்ணின் வயது 17. பலிகடாவாக்கப்பட்ட அவள் தங்கையின் வயது 13.எட்டாம் வகுப்பு படிக்கிறாராம்.திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு இவளது அக்கா,காதலனுடம் ஓடிப்போய் விட்டாளாம்.
     
       கிராமங்களில்,திருமணத்திற்கு முதல் நாளோ அல்லது சில நாட்களுக்கு முன்போ இவ்வாறு நடந்தால்,உடனே ஊர் பஞ்சாயத்து ரகசியமாகக் கூட்டப்படும்.சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் கூட தீர்த்து வைக்க முடியாத வழக்குகள் எல்லாம் கனநேரத்தில் இங்கே பைசல் பண்ணப்படும்.இது மாதிரி சம்பவங்களுக்கு எல்லாம் ஒரே தீர்ப்புதான்.இந்த பஞ்சாயத்தாரின்  தீர்ப்பாக, ஓடிப்போனவளின் குடும்பத்தில் அடுத்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு,தன் அக்காவுக்கு கணவராக வரவேண்டியவரிடம் சேர்ந்து வாழ ஆயுள் தண்டனை வழங்கப்படும்.  

     ஏதோ 25 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த வழக்குக்கு தீர்ப்பு கிடைத்தது போல் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டு,அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள்.இது கிராமங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும்.

 சரி....தண்டிக்கப்பட்ட அந்தப்பெண் என்ன மனநிலையில் இருப்பார்? உடலாலும் உள்ளத்தாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு முழுமையாக தயாராகி இருப்பாளா? நேற்று வரை தன் அக்காவின் கணவர் என்ற மதிப்பில் வைத்துப்  பார்க்கப்பட்டவரை,இன்று கணவர் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க முடியுமா? அந்தப் பெண்ணுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லையா? ஒருவேளை அவள் மனதில் கட்டியிருந்த,எதிர்காலத்தைப்பற்றி மிகப்பெரியக் கோட்டை சிதறி விடாதா? தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் தங்கை தனக்கு மகள் ஸ்தானமல்லவா? அவளுடன் எப்படி படுக்கையை பகிர்ந்துக்கொள்வது?..இது போன்று எழும் வினாக்கள் எல்லாமே "மானம் மரியாதை" என்கிற ஒரே விசயத்திற்காக குழிதோண்டி புதைக்கப்படுகிறது.

     மற்ற கலாச்சார சீர்கேடுக்கெல்லாம் கொதித்தெழும் ஊடகங்கள்,பெற்றோர்களின் சம்மதத்துடன் நடந்தாலும்,இந்த நிகழ்வுகளை ஒரு செய்தியாக பத்திரிகைகளில் வெளியிடாமல்,ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற ரீதியில் ஏன் வன்மையாக கண்டிக்கக்கூடாது? என்பதுதான் என்னுளிருக்கும் ஆதங்கம்.

6 comments:

 1. இந்த காலகட்டதிக்கு வேண்டிய பதிவு

  ReplyDelete
 2. கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 3. உங்களுக்கு மச்சினி இல்லையா? அதுதான் கோவமா?

  ReplyDelete
 4. உங்கள் வலைபதிவை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் பார்த்து கருத்திடவும்
  http://blogintamil.blogspot.in/2012/06/5.html

  ReplyDelete
 5. என்ன செய்வது இது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லையே நண்பா

  ReplyDelete