Saturday 6 July 2013

சண்டைக்காரி..(சிறுகதை மாதிரி)


பிஸ் முடிந்து,வீட்டு வாசலில் பைக்கை அணைத்தபோது வழக்கமாக வரவேற்கும் உமாவைக் காண வில்லை.வழக்கமாக என்பது வாரத்திற்கு மூன்று நாட்களாகக் கூட இருக்கலாம். மதியம் கூட சந்தோசமாகத் தான் பேசினாள். அதற்குள் என்ன ஆயிற்று..?

அவள் விருப்பப்படியே திருமணம் முடித்த கையோடு தனிக்குடித்தனம் வந்தாயிற்று."நமக்குள்ள நல்ல அன்டர்ஸ்டேன்டிங் வரவேண்டாமா " என்கிற பொய்யான அவள் வாதத்திற்கு செவி சாய்த்தது முதல் தவறு. பிறகு அதுவே இருவருக்குள்ளும் விடை தெரியா குழப்பங்களை உருவாக்கி,தொட்டதுக்கெல்லாம் ஒரு விவாதம், பட்டதுக்கெல்லாம் ஒரு சண்டை என முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெற்றோர்களுடன் சேர்ந்து வசிக்கும் போது அவர்களின் அறிவுரைகள் அலுப்புத்தட்டினாலும் ,பெரியவர்கள் முன்னால்  சண்டை போடக்கூடாது என்கிற குறைந்த பட்ச அறிவும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கும். கணவன்- மனைவி விவாதத்தில்,சுதியை ஏற்றிக்கொண்டே சென்றால் தன் கருத்து ஏற்கப்படும் தவறான சிந்தனைதான் கை ஓங்கும் அளவுக்கு சில நேரங்களில் கொண்டுசெல்கிறது. பரஸ்பர கை ஓங்குதல்(!) கூட சாத்தியமாகிறது.

எதிலும் அவளுக்கு குறை வைக்கவில்லை. தன் பெற்றோர்களும் திருமணமான புதிதில் கஷ்டப்பட்டு பிறகு நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் தான் என்பதை எந்தப்பெண்ணும் உணர்வதில்லை. கடைசியாக தன் பிறந்த வீட்டில் எந்த சுகவாசத்தை அனுபவித்தோமோ ,அதையே திருமணமான புதுதில் கணவனிடம் எதிர்பார்க்கும் பொழுது தான் பிரச்சனைக்கான ஆரம்ப
ப்புள்ளி இடப்படுகிறது.

இந்த ஆறுமாத திருமண வாழ்க்கையில் உமாவின் கோபம், கேட் வாசலிலேயே எனக்கு உணர்த்திவிடும். அதுதான் கோபத்தை வெளிக்காட்ட அவள் கையாளும் முதல் உத்தி.பைக்கை நிறுத்திவிட்டு ஹாலில் நுழைந்தேன். வந்ததை கவனித்திருப்பாள் போல. நொடிக்கொருமுறை டிவியில் சானல் மாறிக்கொண்டு இருந்தது. இது இரண்டாவது உத்தி.  நல்லவேளை அந்த ரிமோட்டுக்கு வாயில்லை.

அடுத்தடுத்த உத்தி இன்னும் அகோரமாக இருக்கும் என்பதால் உடனடியாக யுத்தக்களத்தில் நிராயுத பாணியாகக் குதிக்க முடிவு செய்தேன்...

"என்ன... மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க போல..." அவளின் முகத்தை பார்க்காமல், சட்டையை ஹாங்கரில் மாட்டியவாறு கேட்டேன்.

பதில் இல்லை. மாறாக சானல் வேகமாக மாறிக்கொண்டிருந்தது.கொஞ்சம் பொறுமை காத்தேன்.சிறிது இடைவெளிக்குப் பின் அந்த வார்த்தை வந்து விழுந்தது..

"கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு..."  கடைசியில் 'உங்களுக்கு' என முடித்ததால் ஓரளவு மரியாதையாகவே உணர்ந்தேன்.

'கரெக்ட்..உன்னை கல்யாணம் பண்ணின பிறகுதான் எனக்கு அந்த சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு ..' என சொல்ல வாயெடுத்து உதட்டோடு நின்றுவிட, மீண்டும் பொறுமை காத்தேன்..

"ஆமா..காலையில கந்தசாமி மாமாகிட்ட என்ன பேசுனீங்க..." நேராக விசயத்திற்கு வந்தாள்.

இப்பொழுதுதான் உணர்ந்தது எனக்கு. காலையில் வாக்கிங் செல்லும்போது இரண்டு வீடு தள்ளியிருக்கும் கந்தசாமி சாரும் என் கூட வருவார். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவ்வப்போது வீட்டில் நடக்கும் சண்டைகளைப் பற்றி அவரிடம்  சொல்வேன்.இதை யாரோ ஒட்டுக்கேட்டு நான் இல்லாத நேரத்தில் உமாவிடம் வத்தி வைத்திருக்கிறார்கள்.

" நான் என்ன சொன்னேன்..? "

"அதெல்லாம் எனக்குத் தெரியாது..நமக்குள்ள நடக்கிற சண்டையைப் பத்தி அவர்கிட்ட சொன்னதா கேள்விப் பட்டேன்.. உண்மையா..? "

" ஆமா எப்பவாச்சும் சொல்வேன்..அதில என்ன தப்பு..?

"என்ன தப்பா..? கால்யாணம் ஆனா புதுசில என்ன சொன்னீங்க..நமக்குள்ள எந்த சண்டை வந்தாலும் வெளிய யார்கிட்டேயும் சொல்லக் கூடாது.குறிப்பா ரெண்டு வீட்டுக்கும் தெரியக்கூடாது. நாமே பிரச்சனையைப் பேசித் தீத்துக்கனும்னு சொன்னீங்களா இல்லையா...? "

"ஆமா சொன்னேன்.."

" அப்புறம் எப்படி நீங்க மட்டும் வெளிய சொல்றீங்க.. நீங்க மட்டும் ரொம்ப  நல்லவரு.நான் சண்டை
க்காரி அப்படித்தானே...? அப்போ..அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட இனிமே நானும் சொல்றேன்..உங்களுக்கு ஒருத்தர் இருக்கார்னா எனக்கு நாலு பேர் இருக்காங்க.."

" புரியாம பேசாத உமா..நான் கந்தசாமி சார்கிட்ட சொல்றேனா,அவர் நம்ம மீது எப்போதும் ரொம்ப அக்கறையா இருக்கிறவரு.அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் அப்படியா.."

" சரிங்க அவர் நல்லவராகவே இருக்கட்டும்..அதுக்காக நம்ம குடும்ப சங்கதியெல்லாம் அவர்கிட்ட ஏன் டிஸ்கஸ் பண்ணனும்.."

" உமா..கல்யாணம் முடிஞ்ச கையோட நாம தனிக்குடித்தனம் வந்துட்டோம்.. நமக்குள்ள நடக்கிற சண்டையில் சமாதானம் பண்ண கூட யாரும் கிடையாது.கோபத்தில, யார் மேல தப்புனு தெரியாம நிறைய நாள் சண்டைப் போட்டிருக்கோம்.அப்படியே தப்பு யார் மேலனு தெரிந்தாலும் ரெண்டு பேருக்குமே ஒத்துக்க மனசு வரமாட்டேங்குது. கந்தசாமி சாரோட நாலு மகன்களுக்கும் கல்யாணம் பண்ணிவச்சி எல்லோரும் நல்ல நிலைமையில இருக்காங்க.. அவர்கிட்ட நம்ம பிரச்சனையைப் பத்தி சொன்னா,அனுபவ முதிர்ச்சியால நல்ல அறிவுரை சொல்றாரு.."

"சரிங்க.. அவரை மட்டும் எப்படி ரொம்ப....."

" நல்லவர்னு நம்புறேன்னு சொல்ல வர்றியா..? . கரெக்ட்டுதான். முத
ன் முதல்ல ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்கன்னு அவர் என்கிட்டே கேட்டப்போ, அப்போதைக்கு நடந்த ஒரு பிரச்சனையை நான் சொன்னேன். அவர் நெனச்சிருந்தா நீங்க செஞ்சதுதான் சரி..உங்க ஒஃய்ப் கிட்டதான் தப்பு இருக்குனு சொல்லியிருப்பார். எல்லோரும் அப்படித்தான் சொல்வாங்க.ஆனா டக்குனு என் மேலதான் தப்புனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. எனக்கு ஆரம்பத்தில கோபம் வந்தது. ஆனா அவர், 'தம்பி..இவ்வளவு நாள் பாசத்தோட வளர்த்த பெத்தவங்களை விட்டுட்டு நீயே கதின்னு அந்த பொண்ணு வந்திருக்கு. ஆரம்பத்தில புது சூழல் அவுங்களுக்கு பிடிக்காம போகலாம்.நிறைய குழப்பங்கள் வரலாம்.அதுமாதிரியான நேரங்களில நாம அவுங்களை அரவனைச்சுதான் போகனுமே தவிர இன்னும் கோபம் வருகிற மாதிரி சண்டையிடக் கூடாது 'னு சொன்னார். மொத தடவை  உங்க வீட்டுக்கு வந்தப்போ,உங்க அப்பா அம்மா என்னை சரியா கவனிக்கலன்னு உன்கிட்ட சண்டைப் போட்டேன். ஆனா போன தடவை வந்தப்போ அமைதியா இருந்துட்டு வந்தேனே அதுக்கு காரணம் கந்தசாமி சார்தான்...." சொல்லிகொண்டே போக, டிவியில் கொஞ்ச நேரமாக ஒரே சானல் ஓடுவதை அப்போதுதான் கவனித்தேன்..

" சரி...டெய்லி வாக்கிங் போறீங்க..நம்ம வீட்டு வழியா போனீங்கனா,தினமும் ரெண்டு பேரும் காப்பி சாப்பிட்டு அப்படியே வாங்கிங் போகலாமே..."  மொத்தமாக சமாதானம் அடைந்திருந்தாள் உமா..! ஹி.. ஹி.. அம்புட்டுதேன் ..கதை முடிஞ்சது..
 - மணிமாறன் 
11 comments:

 1. சிறுகதை மாதிரி...என்ன மாதிரி? எதார்த்தமான நல்ல சிறுகதைங்க. இனிமே, ‘மாதிரி’ சேர்க்காதீங்க.

  ReplyDelete
 2. மிக்க நன்றி காமக் கிழத்தன் சார் ..

  ReplyDelete
 3. நல்ல அறிவுரை (கந்தசாமி) கதை...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன்...

   Delete
 4. பரஸ்பர கை ஓங்குதல்(!) கூட சாத்தியமாகிறது.// அய்யையோ ரொம்ப டெரர்ரா இருப்பாங்க போல இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா.. இது சும்மா சாம்பிள்தான்...மெயின் பிக்சர் இன்னும் மோசமாக இருக்கும்..நன்றி..

   Delete
 5. நல்லாருக்கு சார்... மனைவியை இப்படித்தான் சமாதானப்படுத்தணும் போல...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்கஸ்கூல் பையன்....

   Delete
 6. செம கதைதான், இந்த பொண்ணுங்களே இப்பிடிதால் போல.......!

  ReplyDelete