Tuesday 17 July 2012

ஒரு செஞ்சட்டை தோழரின் கொலைவெறியாட்டம்...


சாயம் வெளுத்துபோன கம்யூனிச செங்கொடிகள்
பழனியின் குருதியில்
குளித்து
செஞ்சாயம் பெறுகின்றன...


-முகநூல் நண்பர் ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார்.

ஒரு சில தமிழ் வார்த்தையையே சுத்தமாக உச்சரிக்கத் தெரியாத கிராம ஏழை விவசாயிகளுக்கு, கம்யுனிஸ்ட்..மார்சிஸ்ட் என்னும் சொல் சரளமாக வந்து விழுகிறது என்றால் அது எந்த அளவுக்கு மிக சக்தி வாய்ந்த சொல்லாக அவர்களின் ரத்த அணுக்களோடு இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை உணரமுடியும். நிலச்சுவான்தாரர்களின் அடக்குமுறைக்கு ஆட்பட்டு அடிமைகளாய் வாழ்ந்த தொழிலார்களின் அடிமைச் சங்கிலியை உடைத் தெரிந்ததில் கம்யூனிசிய இயக்கத்திற்கு பெரும்பங்கு உண்டு. 44ஆண்டுகளுக்கு முன் மிராசுதார்களின் உட்சபட்ச கொடுமையான கீழ்வெண்மணியில் 44  பேர் உயிருடன் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்,அவர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. எங்கெல்லாம் தொழிலாளர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்குப் போராட கம்யூனிசிய இயக்கங்களும் வேரூன்றி இருந்தது. "சாணிப்பாலும் சவுக்கடியும் கொடுத்து எங்களை அடிமைப்படுத்திய மேல்தட்டு மக்களே...இனியும் பொறுக்க மாட்டோம்.நீங்கள் அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம்" என்று மேடைகளில் தோழர்கள் முழங்கும் போது நமக்கும் உணர்ச்சி பீறிடும்.தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் நீதிக்காக போராடிய தன்னலமற்ற இயக்கமாக இருந்த கம்யுனிச கட்சிகள் இன்று பதவிக்கும் பணத்துக்கும் ஆட்சியாளர்களின் காலை நக்கும் அளவுக்கு தரம்கெட்டு போய்விட்டது என்பதுதான் மிகப்பெரிய சோகம். 

    நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எங்கள் ஊர் ஊராட்சி மன்றத்தலைவர்,மணல் திருட்டையும் கள்ளச்சாராய விற்பனையையும் தடுத்து நிறுத்தியதற்காக எங்கள் வீட்டருகே திமுக ரவுடிகளால் வெட்டிச்சாய்க்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.அதற்கு எதிர்த் தாக்குதல் செய்யாமல் போராட்டம் மூலம் அவர்களை சிறையிலடைக்கச் செய்தனர் எங்கள் ஊர் தோழர்கள்.     
 

   
     இதற்கெல்லாம் கரும்புள்ளியாய் ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார் ஒரு தோழர்.எதிர்தாக்குதல் நடத்துவதற்கல்ல. நிலஆக்கிரமிப்பு, ரவுடிசம், கொலைமிரட்டல்,அதிகார துஷ்பிரயோகம் என்று ஆளுங்கட்சியினர் அரங்கேற்றும் அத்தனை அராஜகத்தையும் விஞ்சிவிடும் அளவுக்கு ஆட்டம் போட்டவர், கடைசியாக ஒரு கொலைவெறித்தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவாகி விட்டார்.

            பெரியார் தி.க., மாவட்ட அமைப்பாளர் பழனி  கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள இ.கம்யூ. கட்சியின்,தளி எம்.எல்.ஏ.,ராமச்சந்திரன் கடந்து வந்த அரசியல் பாதை இதுதான்...

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த வரகானப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரன்,கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் 1988ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்தார்.அதன்பின்,எல்.எல்.பி.,படிக்க பெங்களூரு சென்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த லகுமையா(இவரும் தேடப்படும் குற்றவாளி) மகள் கல்பனாவை காதலித்து,இரண்டாம் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின்,அவரது வாழ்க்கை ஏறுமுகமானது.மார்க்சிஸ்ட் கட்சியில்,சாதாரண தொண்டராக அரசியல் வாழ்க்கையை துவக்கிய ராமச்சந்திரன்,1997ம் ஆண்டு நாகமங்கலம் ஊராட்சி தலைவரானார்.2002ம் ஆண்டு,கெலமங்கலம் யூனியன் தலைவராக வெற்றி பெற்றார்.             
      

     கடந்த 2006ம் ஆண்டு,சட்டசபை தேர்தலின்போது,தளி தொகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சியில், "சீட்' வழங்கப்படாததால்,லகுமையா தன் மருமகன் ராமச்சந்திரனை சுயேச்சையாக நிறுத்தி வெற்றி பெற செய்தார்.இந்த தேர்தலில்,தமிழகத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ. என்ற பெயரையும் பெற்றார்.பின்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்,அ.தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட ராமச்சந்திரன்,இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து,பின் அரசியல் வாழ்க்கையில் உச்சத்திற்கு சென்ற ராமச்சந்திரன், தற்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் குவாரிகளுக்கு அதிபதியாகியுள்ளார். இவையாவும் இவர் எம் எல் ஏ ஆனபிறகு சேர்த்த சொத்துக்கள்.

    போரா‌‌ட்ட‌ம் எ‌ன்றா‌ல் முத‌லி‌ல் ஓடோடி வருபவ‌ர்க‌ள் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர்தா‌ன். அ‌ப்படி இரு‌ந்தவ‌ர்க‌‌ள் த‌ற்போது அர‌சிய‌ல் தலைவ‌ர்களை கொலை செ‌ய்யு‌ம் அளவு‌க்கு த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் செ‌ன்று ‌வி‌‌ட்டன‌ர்.அதுவு‌ம் ஒரு எ‌ம்.எ‌ல்.ஏ.வே இ‌ப்படி கொலை செ‌ய்ய தூ‌‌ண்டியது அர‌சிய‌‌லி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

கொலையின் பின்னணி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்.... ஆனால் கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்துப் பார்த்தால்,இன்டர்நேசனல் தாதாக்களுக்கே சவால் விடும் வகையில்லவா இருக்கிறது!... துப்பாக்கியால் சுட்டு,அரிவாளால் வெட்டி,கழுத்தை அறுத்து....அப்பப்பா.....!! அங்கு சிந்திய குருதியில்தான் உங்கள் சிவப்பு வர்ணம் மெருகேற்றப்பட்டதா? மொத்தம் இருபத்தியிரண்டு பேர் தலைமறைவாம்..! அதில் எம்எல்ஏ-வும்,அவரின் தம்பி,மாமனாரும் அடக்கம்.தமிழக கம்யுனிசிய வரலாற்றில் அதன் எம் எல் ஏ ஒருவர் கொலை செய்துவிட்டு தலைமறைவானது இதுதான் முதல் முறையென்று நினைக்கிறேன்.பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி கொலைக் குற்றத்தில் பதுங்கி, தலைமறைவு வாழ்க்கை நடத்துவது எவ்வளவு பெரிய இழுக்கு..!!!

     சரி....இதற்கு கட்சி மேலிடம் என்ன நடவடிக்கை எடுத்தது. அம்மாவை பாராட்டி குளிர்விப்பதற்கே அதன் தலைவருக்கு நேரம் போதவில்லை.அவர் எங்கே கட்சியை கவனிக்கப் போகிறார்?.


    முன்பெல்லாம் காவிரி டெல்டா பகுதிகளில் திராவிடக் கட்சிகளின் கொடிகளை விட அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடிகள்தான் பட்டொளி வீசிப் பறக்கும். மாநாடு,போராட்டம்,பந்த் எதுவென்றாலும் அவர்களின் கட்டுக்கோப்பான தன்னலமற்ற ஒற்றுமையே அதன் வெற்றியை பறைசாற்றும். ஆனால் தற்போது கம்யுனிஸ்ட் கட்சிகளை லென்ஸ் வைத்து தேட வேண்டியிருக்கிறது.ஆளுங்கட்சியினரின் பணபலத்துக்கு நிறைய பேர் விலைபோய் கட்சிமாறி விட்டனர்.இதற்கு இவர்களை சொல்லி குற்றமில்லை.. ஒன்றியம்,மாவட்டம்,மாநில தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லோருமே  தடம்மாறிவிட்டதின் பலன்தான் இது. 

2004 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தவுடன் ஜெ வைப்பற்றி தோழர் நல்லக்கண்ணு இவ்வாறு கூறினார்.. "அது ஒரு விசப்பாம்பு... அடித்துப் போட்டுவிட்டோம்..இத்தோடு விட்டுவிடக் கூடாது. குழிதோண்டிப் புதைத்து அதற்கு பாலூற்றும் வரை ஓயக்கூடாது..".. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவர்.எப்போது வேண்டுமானாலும் கூட்டணி மாறலாம்,போயஸ் தோட்டத்து படியைக்கூட மிதிக்க நேரிடலாம். அப்படியிருந்தும் அப்போதைய மக்களின் மனநிலையை அந்தக்கூட்டத்தில் தைரியமாகப் பிரதிபலித்தார். கட்சியின் தன்மானமும் தைரியமும் அவரோடையே போய்விட்டது.

எப்போதே நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே அச்சாரம் போடுகிறார் தா.பாண்டியன். "இந்தியாவை மீட்கும் சக்தியாக ஜெயலலிதா விளங்க வேண்டும்..!!" என்று அவர் அடிவருடுகிறார். ஆனால் கட்சிக்காக உழைத்து இன்னமும் கம்யூனிசிய கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தோழர்களின் எண்ண ஓட்டம் கண்டிப்பாக இதுவாகத்தான் இருக்கும்..." முதலில் கட்சியை தா.பா கையிலிருந்து மீட்கும் சக்தியாக யாராவது வரவேண்டும்."



 ----------------------------------(((((((((((((((((((((((())))))))))))))))))))))))))-----------------------------

9 comments:

  1. இவர்களின் தோழர்கள் கேரளத்தில் நடத்திய கொலைகள் தற்போது வெளிவந்து அதிர்ச்சியில் உறைய வைத்தன, தற்போது இவர்களின் கொட்டம் இதெல்லாம் கம்யூனிசக் கட்சியென்று பேர் வைத்துக் கொண்டு ??!!

    ReplyDelete
    Replies
    1. தலைமையே மதிகெட்டு ஆடுவதால் வந்த விளைவு...பின்னூட்டதிற்கு நன்றி நண்பரே...

      Delete
  2. //தொழிலாளர்களின் நீதிக்காக போராடிய தன்னலமற்ற இயக்கமாக இருந்த கம்யுனிச கட்சிகள் இன்று பதவிக்கும் பணத்துக்கும் ஆட்சியாளர்களின் காலை நக்கும்//

    உண்மை உண்மை

    ReplyDelete
    Replies
    1. இது உண்மை நிலைதான் பாஸ்...மிக்க நன்றி

      Delete
  3. மொத்தத்தில் இந்தியாவில் பழைய மாதிரி கம்யுனிசியம் இல்ல அழிந்து வருவது போல் இருக்கு - நேர்மையானவர்கள் விலகி போகிறார்களோ.....??????

    ReplyDelete
  4. நண்பனே..தமிழ்10ல் இணைத்துள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாலாஜி....

      Delete
  5. யாரைத்தான் நம்புவது?

    ReplyDelete