Wednesday 25 July 2012

தமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் திரையில் சரித்திரம் படைத்தப் பெண்கள்)


         1940-50களில் தமிழ் திரையுலகின் 'ஸ்டார் மேக்கர்' என்று அழைக்கப்பட்டவர் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும்,தன் இனியக் குரலால் வசியப்படுத்திய இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டுதான் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்து புகழ் பெற்றார்கள்.ஒருமுறை தான் அடுத்ததாக இயக்கப்போகும் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக பிரபல நடிகை எஸ்.பி.எல்.தனலட்சுமி வீட்டிற்கு தன் நண்பருடன் சென்றிருக்கிறார் டைரக்டர் கே.சுப்பிரமணியம்.அங்கு இவர்களுக்கு காபி,பலகாரத்தட்டுகளைக் குனிந்த தலை நிமிராமல் ஒரு பெண் வைத்துவிட்டுப் போனாள்.கொஞ்சம் கருத்த நிறம் ஆனால் வசீகரமான முகம். அந்த இடத்திலே இவரின் கேமரா கண்களால் அந்தப்பெண் களவாடப்பட்டாள். உடனே நண்பரிடம் "என் அடுத்தப் படத்திற்கு இந்தப் பணிப் பெண்ணைத்தான் ஹீரோயினாகப் போடப்போகிறேன்" என்று தீர்க்கமான முடிவுடன் கூறியிருக்கிறார்.

  மறுநாள் கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் அன்றைய புகழ் பெற்ற மேக்கப்மேன் ஹரிபாபாபுவுக்கு டெலிபோன் செய்தார். "ஒரு பெண்ணை அனுப்புகிறேன்.மேக்கப் போட்டு அனுப்புங்கள்" என்றார்.மேக்கப் போடுவதற்குத் தயாராகக் காத்திருந்த ஹரிபாபு,கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார்."யாரம்மா நீ?" என்று விசாரித்தார்."என் பெயர் ராஜாயி.மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்பிரமணியம் சார் என்னை அனுப்பியிருக்கிறார்". அந்தப் பெண் கூறிய பதிலைக் கேட்டதும், ஹரிபாபுவுக்கு மயக்கமே வந்துவிட்டதாம். "சுப்பிரமணியத்துக்கு பைத்தியம் பிடிச்சுடுத்து " என்று கூறி, ஒப்பனை செய்ய மறுத்துவிட்டாராம்.பிறகு கடும் வற்புறுத்தலுக்குப்பின் அரைமனதுடன் அந்தப்பெண்ணுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துள்ளார்.பிறகு பல எதிர்ப்புகளுக்கிடையே அந்தப்பெண்ணை "கச்சதேவயானி" என்ற படத்தில் நடிக்க வைத்தார் சுப்பிரமணியம்.அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய, ஒரே இரவில் புகழின் உச்சத்தை அடைந்திருக்கிறார் ராஜாயி.அந்த ராஜாயிதான் பெயர்மாற்றம் செய்யப்பட்டு அந்தக்கால இளைஞர்கள் பலரின் தூக்கத்தை
க் கெடுத்து கனவுலகில் மிதக்க வைத்த கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி.


   
    ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி படம் வெளியானபோது தமிழ் சினிமாவே அதிர்ந்து போனது என்று அந்தக்கால சினிமா விமர்சகர்கள் சொன்னதாக ஒரு குறிப்பு சொல்கிறது.எந்தவித முகபாவ உணச்சியின்றி வெறும் அள்ளிப்பூசிய நடையுடைய பாவனையோடு தோன்றிய அந்தக்கால நடிகைகளிடையே, குறுகுறுப்பும்,கவர்ச்சிப்பொலிவும்,வசீகரமான முகமும்,சுடர்விடும் நடிப்பும், மனத்தைக் கிறங்கடிக்கும் கொஞ்சும் குரலுடன் தோன்றிய ராஜகுமாரியைப் பார்த்து தமிழமே கிறங்கிக் கிடந்தது என்று அந்தக்கால சினிமாப் பற்றி,பல பல்லுப் போன பெருசுகள் ஜொள்ளுகிறார்கள்.

     தஞ்சையைச் சேர்ந்த கலைக்குடும்பம் ஒன்றில் 1922-ல் பிறந்தவர், டி.ஆர்.ராஜகுமாரி.தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ்பெற்ற இசை(சங்கீத)மேதை.பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவரின் சகோதரர் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா.இவரின் படிப்பு ஆறாவதுதான் என்றாலும் புத்தகங்கள் படிப்பதை பொழுதுப் போக்காகக் கொண்டிருந்தவர்.அந்தக்காலத்தில் புகழ் பெற்றிருந்த எஸ்.பி.எல்.தனலட்சுமி, ராஜகுமாரிக்கு சின்னம்மா.சின்னமாவின் முயற்சியால் சினிமாவுக்கு நடிக்க வந்தபோது அவருக்கு வயது 16.முதல் படம் குமாரகுலோத்துங்கன்.இவர் சிறு வேடங்களேற்று நடித்த முதல் மூன்று படங்களுமே படு தோல்வியடைய,தன் சின்னம்மா வீட்டோடு முடங்கிப்போனார்.அதன் பிறகே குருபார்வை கிடைத்திருக்கிறது.

    கச்சதேவயானிக்குப் பிறகு இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான சதிசுகன்யா,மனோன்மணி,சிவகவி,குபேரகுசேலா,சாலிவாஹன், பிரபாவதி ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைய தமிழின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவாகியிருந்தார்.

    அடுத்ததாக இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைத்து நடித்து 1944 தீபாவளியன்று வெளியாகி மூன்று தீபாவளி கண்ட ஹரிதாஸ்.இதில் தாஸி ரம்பாவாகத் தோன்றி நடித்திருப்பார். எம்.கே.தியாகராஜ பாகவதர் ஹரிதாஸ் வேடத்தில் இருந்து "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்று மாய்ந்து மருகிப் பாடியது தாஸி ரம்பாவாக நடித்த ராஜகுமாரியைப் பார்த்துதான். அடுத்து,வால்மீகி,விஸ்வாமித்ரா, பங்கஜவல்லி, விகடயோகி அவரின் நடிப்புக்கு மேலும் மகுடம் சூட்டியது.

   தமிழ்த் திரையுலகை தனது இனிய குரலாலும் வசீகரமான தோற்றத்தாலும் மயங்க வைத்துக் கொண்டிருந்த அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதருக்குச் சமமானவராக வந்தார் ராஜகுமாரி. அன்றைய முன்னணி நடிகர்களான பாகவதர்,பி.யு.சின்னப்பா,எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம்,ரஞ்சன் ஆகியோருடன் தொடர்ந்து நடித்தார்.இந்தப் பிரபலங்களோடு நடித்தபோது  கிடைத்த புகழும் வரவேற்பும் அவர்களைவிட ராஜகுமாரிக்கு அதிகமாகவே கிடைத்தது.



      டி.ஆர்.ராஜகுமாரியின் திரைவாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றால் அது சந்திரலேகா.தமிழ் திரையுலகில் 'செட்' அமைப்பதில் இது தான் முன்னோடி.இது அப்போதைய பிளாக் பஸ்டர் மூவி. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் சினிமாவில் சிறந்த பத்து படங்களை தேர்வு செய்தால் அதில் 'சந்திரலேகா'விற்கும் ஒரு இடம் உண்டு.இந்தப்படத்தில்,வில்லன் சசாங்கனாக நடித்த ரஞ்சன்,கதாநாயகி சந்திராவாக நடித்த ராஜகுமாரியை பலாத்காரம் செய்யத் தூக்கி அணைப்பார். மயக்கமுற்றவர் போல பாசாங்கு செய்து ராஜகுமாரி ரஞ்சன் மார்பு வழியே தரையில் சரிவார்.மீண்டும் தூக்குவார் ரஞ்சன்.மீண்டும் மார்புறச் சரிவார். மீண்டும்...மீண்டும்..... ரசிகர்கள் இந்த மயக்கக் காட்சியை காணவே தியேட்டரில் திரண்டதாக ஒரு பத்திரிக்கைக் குறிப்பு சொல்கிறது.


(அந்தக் கண்கொள்ளாக் காட்சியை கஷ்டப்பட்டு
த் தேடி இங்கே பகிர்ந்திருக்கிறேன் )...



     எஸ்.எஸ்.வாசன் தயாரித்த இந்தப்படம்,இந்தியிலும் ரீமேக் செய்யப்பட, அங்கேயும் வெற்றிபெற்று ராஜகுமாரிக்கு அகில இந்தியப் புகழைத் தேடித்தந்தது.பிறகு இந்தப்படம் 'மிஸ் சந்திரா' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

     அதைத்தொடர்ந்து கிருஷ்ணபக்தி,பவளக்கொடி,விஜயகுமாரி,இதயகீதம், வனசுந்தரி, தங்கமலை ரகசியம் என்று அவரின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது..

  இவரின் திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் 1954-ல் வெளிவந்த மனோகராவும் ஓன்று.தன் பேனா முனையின் மூலம் தமிழ் சினிமாவின் வசன நடையையே மாற்றியமைத்த கலைஞரின் திரைக்கதை,வசனத்தில் உருவாகி வெள்ளிவிழா கண்ட இந்தப்படத்தில் வசந்தசேனை வேடத்தில் நடித்திருப்பார்..

  அடுத்து,ராஜகுமாரி எம்ஜியாருடன் சேர்ந்து நடித்த பணக்காரி(1953), குலேபகாவலி(1955), புதுமைப்பித்தன்(1957) அனைத்தும் வெற்றிப்படங்களே. சிவாஜியுடன் அன்பு படத்திலும்,தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.பிற்பாடு ஒருசில படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்தார்.

    இதற்கிடையில் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தப்படங்களும் தயாரித்தார்.எம்ஜியார் நடித்த பெரிய இடத்துப்பெண்,பறக்கும் பாவை மற்றும் வாழப்பிறந்தவள் படங்கள் இவர் தயாரிப்பில் வெளிவந்ததுதான்.இம்மூன்று படத்தினையும் இயக்கியது அவரது சகோதரர் டி.ஆர்.ராமண்ணா.


  
    தனது நடிப்புப் பயணத்தை 1963-ல் நிறுத்திக்கொண்ட ராஜகுமாரி,செப்டம்பர் 1999 -ல் தன் மூச்சையும் முழுமையாக நிறுத்திக்கொண்டார்.

    தமிழ் நடிகைகளிலே சினிமா தொழில் நுட்பங்களையும்,நுணுக்கங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்த வெகு சிலரில் டி.ஆர்.ராஜகுமாரியும் ஒருவர். எந்தவித கேமரா கோணங்களில் தனது அழகும்,நடிப்பும் சிறப்பாக வெளிப்படும் என்பதில் அவர் மிகுந்த ஜாக்கிரதையோடு இருந்தார் என்று அவர் காலத்திய ஒளிப்பதிவாளர்களே சொல்லி வியப்பார்களாம். 

  தி.நகரில் சொந்தமாக 'ராஜகுமாரி' என்ற தியேட்டரைக் கட்டினார்.அந்தக் காலகட்டத்தில் நடிகை ஒருவர் சொந்த தியேட்டர் வைத்திருந்தது இவர் ஒருவராகத்தான் இருக்கும். 

 புகழின் உச்சியிலிருந்தபோது,பிரபல கிசுகிசு பத்திரிக்கையாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.கே.டி.யும்,கலைவானரும் சிறைத் தண்டனைப் பெற்றார்கள்.அந்தக் கொலைவழக்கில் ராஜகுமாரியின் பெயரும் கிசுகிசுக்கப்பட்டாலும் இவரின் பெயரோ,புகழோ சேதமடையவில்லை.

  டி.ஆர்.ராஜகுமாரி தனது வசீகரத்தாலும்,இனிய குரலாலும்,நடிப்புத்திறனாலும் தமிழ்நாட்டை கால் நூற்றாண்டு காலம் கிறங்கடித்தவர்.அவரது கவர்ச்சிகரமான பிம்பம் இன்றுகூட வியக்கப்படுகிற ஒன்றுதான். தமிழ் சினிமாவின் நட்ச்சத்திரமாய் ஒளிவீசத்தொடங்கி பிறகு இந்திய சினிமாவிலும் ஒப்பற்ற தாரகையாய்ச் சுடர் வீசிய முதல் நடிகை டி.ஆர்.ராஜகுமாரிதான். அதனால்தான் என்னவோ கனவுக்கன்னி என்ற பட்டம் முதல்முதலாக பத்திரிக்கைகளால் சூட்டப்பட்டது இவருக்குத்தான்.அந்த இமேஜ் குறையாமல் கடைசிவரை மணவாழ்வு காணாமல்,தாய்மை அடையாமல் வாழ்ந்து மறைந்து விட்டார் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி
 
------------------------------------------------------(((((((())))))))))))))))))))))))))-----------------------

17 comments:

  1. ரொம்ப பழசு பாஸ் - எனக்கு எல்லாமே இது புது செய்தி

    ReplyDelete
    Replies
    1. விஷயம் என்னவோ பழசுதான் பாஸ்..ஆனால் வெறும் கவர்ச்சியாலும் கச்சை உடைகளாலும் மட்டுமே இந்தகால கனவுக்கன்னிகள் நிர்ணயிக்கப்படும் தமிழ் சினிமாவில்,கருப்பு வெள்ளை காலத்தில் வெறும் வசீகர நடிப்பால் ஒருவர் இருபத்தைந்து ஆண்டுகள் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார் என்ற ஆச்சர்யமான விசயத்தின் பின்னணியை ஆராய்ந்து எழுதவேண்டும் எனத் தோன்றியது.

      Delete
  2. யாம் பொறக்கறதுக்கு முன்னாடி நடந்த நிகழ்வுகள் - அறிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. நடிக்கவே தெரியாமல் மாமிசப்பிண்டமாய் குண்டு பூசணிக்காய் போல் இருக்கும் நடிகைக்கெல்லாம் கோயில் கட்டும் கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சொந்தக்குரலில் பேசி,பாடி,ஒப்பனையில்லாம் நடித்த நடிகைகளைப்பற்றி நாம் கண்டிப்பாக அறிந்துகொள்ளவேண்டும் பாஸ்..

      Delete
  3. அந்தக் காலத்தின் பலரது கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி...
    நல்ல தொகுப்பு....
    அவரின் கண்கள் மயக்குமே..... கவி பாடுமே....
    பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டதிற்கு நன்றி நண்பரே..

      Delete
  4. எனக்கு பிடிச்ச பழைய நடிகைகளில் இவரும் ஒருவர்! இன்னொருவரை பற்றியும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி... கண்டிப்பாக பிறகு எழுகிறேன்..

      Delete
  5. its a good piece of work.. probably you can try and collate it into a book of tamil cinema history..

    ReplyDelete
    Replies
    1. THANKS FOR YOUR COMMENT YUVA SIR.DEFTLY I'LL TRY TO DO THAT...

      Delete
  6. பல அறிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...கண்டிப்பாக படிக்கிறேன்.

      Delete
  7. கொசுவத்தி ஏற்றிய பதிவு! நம்ம வீட்டில் அக்காக்களுக்கும் அத்தான்களுக்கும் சண்டை வரக்காரணமே இவுங்கதான்:-))))

    போதாக்குறைக்கு எங்க தாய்மாமாக்களின் கூட்டம் வேற தூபம் போடுவாங்க:-)))))

    ReplyDelete
  8. இதே மாதிரி ஒரு கட்டுரை நானும் எழுதி இருக்கிறேன் நண்பரே. ஆனால் உங்கள் கட்டுரையில் தகவல்கள் அதிகம். ராஜகுமாரி நடிப்பில் சிறந்தவர். ஆனாலும் அவர் ஆடையிலும் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அந்த காலத்தில் துணிந்து அந்த மாதிரி ஆடைகள் அணிந்தவர். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பாலாவுக்கு நன்றி.உங்கள் கட்டுரையே ஏற்கனவே படித்திருக்கிறேன்.கனவுக்கன்னி என்ற ரீதியில் உங்கள் கட்டுரை மிக அழகு.நான் அவர் வாழ்க்கையைப்பற்றி எழுதவேண்டும் என எண்ணியதால் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று

      Delete
  9. வருகைக்கு நன்றி...கண்டிப்பாக வாசிக்கிறேன்.

    ReplyDelete